2021
ஞானஸ்நானம் பெறுமாறு தேவன் நம்மிடம் சொன்னார்
பெப்ருவரி 2021


“ஞானஸ்நானம் பெறுமாறு தேவன் நம்மிடம் சொன்னார்,” லியஹோனா, பெப்ருவரி 2021

லியஹோனா மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2021

ஞானஸ்நானம் பெறுமாறு தேவன் நம்மிடம் சொன்னார்

தேவனின் அதிகாரமுள்ள ஒருவரால் ஞானஸ்நானம் பெற இயேசு கிறிஸ்து ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி நம்மிடம் நிறைய விவரங்கள் இல்லை என்றாலும், அவர் சுமார் 30 வயதில் ஞானஸ்நானம் பெற்றார் என்பது நமக்குத் தெரியும் ( லூக்கா 3:23 பார்க்கவும்). அவருடைய முன்மாதிரியிலிருந்து ஞானஸ்நானத்தைப்பற்றி நாம் கற்றுக்கொள்ளும் சில விஷயங்கள் இங்கே உள்ளன.

ஒவ்வொரு நபருக்கும்

நாம் போதுமான வயதாகி, சரி, தவறு என்ற வித்தியாசத்தை சொல்லும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தால், நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:42 பார்க்கவும்). இயேசு பரிபூரணராக இருந்தார், ஆனால் தேவனின் கட்டளைகளைப் பின்பற்ற ஞானஸ்நானம் பெற அவர் தெரிந்துகொண்டார் (மத்தேயு 3:13–17; 2 நேபி 31:7 பார்க்கவும்). ஏற்கனவே மரித்தவர்கள் கூட ஞானஸ்நானத்தை ஏற்க முடியும். ஆலயங்களில் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் அதை அவர்களுக்கு வழங்குகிறோம். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:15–18 பார்க்கவும்.)

படம்
ஞானஸ்நானம்

அதிகாரத்தால் நடத்தப்படுகிறது

இயேசு யாரோ ஒருவரால் ஞானஸ்நானம் பெறவில்லை. அவர் குறிப்பாக தேவனிடமிருந்து ஆசாரியத்துவ அதிகாரம் பெற்ற அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய யோவானிடம் சென்றார். இயேசு மரித்து அவருடைய சீஷர்கள் கொல்லப்பட்ட பிறகு, அந்த ஆசாரியத்துவ அதிகாரம் பூமியிலிருந்து இழக்கப்பட்டது. பின்னர், 1829 ஆம் ஆண்டில், யோவான் ஸ்நானன் ஜோசப் ஸ்மித்துக்குத் தரிசனமாகி தேவனின் பெயரில் ஞானஸ்நானம் பெற அவருக்கு அதிகாரம் அளித்தான். அந்த மறுஸ்தாபிதத்தின் காரணமாக, இன்று நாம் அதே அதிகாரத்தால் ஞானஸ்நானம் பெறலாம்.

படம்
ஆரோனிய ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம்

இரு தரப்பு வாக்குத்தத்தம்

ஞானஸ்நானத்தில் நமக்கும் தேவனுக்கும் இடையில் இரு தரப்பு வாக்குத்தத்தம் அல்லது உடன்படிக்கை அடங்கியிருக்கிறது. நாம் வாக்களிக்கிறோம்:

  1. கிறிஸ்துவின் நாமத்தை நாம் மீது தரித்துக்கொள்ள.

  2. அவரை எப்போதும் நினைத்திருக்க.

  3. அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள.

பதிலுக்கு, அவருடைய ஆவி எப்போதும் நம்முடன் இருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் அளிக்கிறார். திருவிருந்து ஜெபங்களின் வார்த்தைகள் ஒவ்வொரு வாரமும் இந்த உடன்படிக்கையை நினைவூட்டுகின்றன. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்.)

படம்
திருவிருந்து கூட்டத்தில் குடும்பம்

பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது ஞானஸ்நானத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பரிசுத்த ஆவியானவர் புறாவின் வடிவத்தில் தோன்றினார் ( 2 நேபி 31:8 பார்க்கவும்). இன்று, ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, திடப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய சுத்திகரிப்பு வரத்தைப் பெற அழைக்கப்பட்ட ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள் என்பது இதன் பொருள் (2 நேபி 31:17 பார்க்கவும்). பரிசுத்த ஆவியானவர் ஆபத்தைப்பற்றி நம்மை எச்சரிக்கலாம், நமக்கு ஆறுதல் அளிக்கலாம், நல்ல தீர்மானங்களை எடுக்க வழிகாட்டலாம், தேவ அன்பை உணர நமக்கு உதவலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:6 பார்க்கவும்).

படம்
பெண் திடப்படுத்தப்படுதல்

நாம் எப்போதும் மனந்திரும்ப முடியும்

நாம் தவறுகளைச் செய்வோம் என்று தேவன் அறிவார். நம்முடைய சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நாம் பாவம் செய்து, நம்முடைய ஞானஸ்நான வாக்குறுதிகளை மீறி வாழ்வோம். ஆகவே அவர் நம் ஒவ்வொருவருக்கும் மனந்திரும்ப வாய்ப்பு அளிக்கிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:13 பார்க்கவும்.) ஒவ்வொரு நாளும் மன்னிப்பு கேட்கவும், ஏதேனும் தவறுகளைச் சரிசெய்யவும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும். நாம் ஜெபிக்கலாம் மற்றும் தேவனின் மன்னிப்பைக் கேட்கலாம். பின்னர், நாம் ஒரு தாழ்மையான இருதயத்துடன் திருவிருந்தை எடுக்கும்போது, பரிசுத்த ஆவியானவரை நம்முடன் வைத்திருக்க முடியும் (3 நேபி 18:11 பார்க்கவும்).

படம்
படுக்கையருகில் பெண் ஜெபித்தல்

ஞானஸ்நானத்தைப்பற்றி வேதம் என்ன சொல்கிறது?

ஞானஸ்நானத்திற்குத் தயாராவதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25 பார்க்கவும்).

எட்டு வயதுக்கு குறைவானவர்கள் ஞானஸ்நானம் பெறத் தேவையில்லை ( மரோனி 8பார்க்கவும்).

நாம் ஞானஸ்நானம் பெறும்போது, “துயரப்படுபவர்களுடன் துயரப்படவும்; ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும், சதா காலங்களில் எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனின் சாட்சிகளாக நிற்க” நாம் வாக்களிக்கிறோம்( மோசியா 18:9).

அச்சிடவும்