பழைய ஏற்பாடு 2022
மார்ச் 21–27. யாத்திராகமம் 1–6: “நான் எனது உடன்படிக்கையை நினைவுகூர்ந்திருக்கிறேன்”


“மார்ச் 21–27. யாத்திராகமம் 1–6: ‘நான் எனது உடன்படிக்கையை நினைவுகூர்ந்திருக்கிறேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“மார்ச் 21–27. யாத்திராகமம் 1–6” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

மோசேயும் எரியும் புதரும்

மோசேயும் எரியும் புதரும்–ஹாரி ஆன்டர்சன்

மார்ச் 21–27

யாத்திராகமம் 1–6

“நான் எனது உடன்படிக்கையை நினைவுகூர்ந்திருக்கிறேன்”

ஒரு ஜெபத்துடன் உங்கள் படிப்பைத் தொடங்கி, யாத்திராகமம் 1–6லுள்ள உங்கள் வாழ்க்கைக்கும், தேவ ராஜ்யத்தில் உங்கள் சேவைக்கும் பொருத்தமான செய்திகளைக் கண்டுபிடிக்க உதவி கேட்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

எகிப்தில் வசிப்பதற்கான அழைப்பு யாக்கோபின் குடும்பத்தை உண்மையில் காப்பாற்றியது. ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, “யோசேப்பை அறியாத” அவர்களின் சந்ததியினர் ஒரு புதிய பார்வோனால் அடிமைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்(யாத்திராகமம் 1:8). அவருடைய உடன்படிக்கை ஜனங்களாகிய அவர்களுக்கு தேவன் ஏன் இதை அனுமதித்தார் என்று இஸ்ரவேலர் ஆச்சரியப்படுவது இயல்பாக இருந்திருக்கும். அவர் அவர்களுடன் செய்த உடன்படிக்கை அவருக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் இன்னும் அவருடைய ஜனங்களாக இருந்தார்களா? அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அவரால் பார்க்க முடிந்ததா?

இதே போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்த நேரங்களும் இருக்கலாம். எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தேவனுக்குத் தெரியுமா? என நீங்கள் ஆச்சரியப்படலாம். உதவிக்காக என் வேண்டுகோள்களை அவரால் கேட்க முடியுமா? எகிப்திலிருந்து இஸ்ரவேல் விடுதலையான யாத்திராகமத்தில் உள்ள கதை இதுபோன்ற கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்கிறது: தேவன் அவருடைய ஜனங்களை மறக்கவில்லை. நம்முடனான அவரது உடன்படிக்கைகளை அவர் நினைவுகூர்கிறார், அவற்றை அவருடைய நேரத்திலும், வழியிலும் நிறைவேற்றுவார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:68 பார்க்கவும்). “ஓங்கிய கைகளால் உங்களை மீட்பேன்,” அவர் அறிவிக்கிறார். “[உங்கள்] சுமைகளை நீக்கி, உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான்” (யாத்திராகமம் 66–7).

யாத்திராகமம் புத்தகத்தைப்பற்றிய கண்ணோட்டத்திற்கு “Exodus, book of” in the Bible Dictionary பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 1–2

இயேசு கிறிஸ்து என் விடுவிப்பவர்.

யாத்திராகமம் புத்தகத்தில் உள்ள மைய கருப்பொருளில் ஒன்று, தம் ஜனத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க தேவனுக்கு வல்லமை இருக்கிறது என்பதாகும். யாத்திராகமம் 1ல் விவரிக்கப்பட்டபடி, இஸ்ரவேலரின் சிறைத்தனம் பாவம் மற்றும் மரணத்தினிமித்தம் நாம் எதிர்கொள்கிற சிறைத்தனத்தின் அடையாளமாக பார்க்கப்படலாம். (2 நேபி 2:26–27; 9:10; ஆல்மா 36:28 பார்க்கவும்). இஸ்ரவேலரை விடுவிப்பவரான மோசே இயேசு கிறிஸ்துவின் ஒரு மாதிரியாக அல்லது பிரதிநிதித்துவமாக பார்க்கப்படலாம். (யாத்திராகமம் 18:18–19; 1 நேபி 22:20–21 பார்க்கவும்). மனதில் இந்த ஒப்புமைகளுடன், யாத்திராகமம் 1–2 வாசிக்கவும். உதாரணமாக, மோசே மற்றும் இயேசு இருவரும் சிறு பிள்ளைகளாக மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுவதை நீங்கள் கவனிக்கலாம் (யாத்திராகமம் 1:222:10; மத்தேயு 2:13–16 பார்க்கவும்) இருவரும் தங்கள் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு வனாந்தரத்தில் நேரத்தை செலவிட்டார்கள் (யாத்திராகமம் 2:15–22; மத்தேயு 4:1–2 பார்க்கவும்). ஆவிக்குரிய சிறைத்தனத்தைப்பற்றி யாத்திராகமத்திலிருந்து வேறு என்ன உள்ளுணர்வுகளைக் கற்றுக்கொள்கிறீர்கள்? மீட்பரின் விடுவித்தலைப்பற்றி?

D. Todd Christofferson, “Redemption,” Liahona, May 2013, 109–12 ஐயும் பார்க்கவும்.

கூடைக்குள் குழந்தை மோசே

கோரைப் புற்களிடையே மோசே, © Providence Collection/licensed from goodsalt.com

யாத்திராகமம் 3–4

தம்முடைய வேலையைச் செய்ய தாம் அழைப்பவர்களுக்கு தேவன் வல்லமை அளிக்கிறார்.

மோசேயை ஒரு சிறந்த தீர்க்கதரிசியாக, தலைவராக இன்று நாம் அறிவோம். ஆனால் கர்த்தர் முதலில் அவனை அழைத்தபோது மோசே தன்னை அந்த வகையில் பார்க்கவில்லை. “பார்வோனிடத்திற்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும் நான் எம்மாத்திரம்?” என மோசே வியந்தான்.”(யாத்திராகமம் 3:11). ஆயினும், மோசே உண்மையில் யாராயிருந்தான், அவன் யாராக முடியும் என்று கர்த்தர் அறிந்திருந்தார். யாத்திராகமம் 3–4 வாசிக்கும்போது, கர்த்தர் மோசேக்கு எவ்வாறு உறுதியளித்தார், அவனது அக்கறைகளுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதைக் கவனிக்கவும். நீங்கள் போதுமானவராக இல்லை என்று உணரும்போது, உங்களை ஊக்குவிக்கும் எதை இந்த அதிகாரத்தில் நீங்கள் காண்கிறீர்கள்? கர்த்தர் தம்முடைய சித்தத்தைச் செய்ய அதிக வல்லமையுடன் தம் ஊழியர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்? (மோசே 1:1–10, 24–39; 6:31–39, 47 பார்க்கவும்). தேவன் தன் வேலையை நீங்கள் அல்லது மற்றவர்கள் மூலம் செய்வதை எப்போது பார்த்தீர்கள்?

மோசேயின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப்பற்றி மேலும் அறிய, Bible Dictionary or Guide to the Scriptures “Moses” பார்க்கவும்.

யாத்திராகமம் 5–6

கர்த்தருடைய நோக்கங்கள் அவருடைய சொந்த நேரத்திலேயே நிறைவேறும்.

தேவன் கட்டளையிட்டபடியே மோசே பார்வோனுக்கு முன்பாக தைரியமாகச் சென்றாலும், அவனிடம் இஸ்ரவேலரை விடுவிக்கச் சொன்னாலும், பார்வோன் மறுத்துவிட்டான். உண்மையில், அவன் இஸ்ரவேலரின் வாழ்க்கையை கடினமாக்கினான். தேவன் சொன்னதை மோசே செய்துகொண்டிருந்தாலும் கூட ஏன் காரியங்கள் நடக்கவில்லை என்று மோசேயும் இஸ்ரவேலரும் ஆச்சரியப்பட்டிருக்கலாம் ( யாத்திராகமம் 5:22–23 பார்க்கவும்).

நீங்கள் தேவனின் சித்தத்தைச் செய்கிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா, ஆனால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காணவில்லையா? மோசேயின் விடாமுயற்சிக்குதவ கர்த்தர் சொன்னதைத் தேடி, யாத்திராகமம் 6:1–8 பரிசீலிக்கவும். அவருடைய சித்தத்தைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு கர்த்தர் உங்களுக்கு எவ்வாறு உதவினார்?

யாத்திராகமம் 6:3

யேகோவா யார்?

யேகோவா, இயேசு கிறிஸ்துவின் பெயர்களில் ஒன்றாகும், மேலும் அது அநித்தியத்துக்கு முந்தைய இரட்சகரைக் குறிக்கிறது. தீர்க்கதரிசிகளான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் இந்த பெயரால் கர்த்தரை அறிந்தார்கள் என்பதை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது (யாத்திராகமம் 6:3, அடிக்குறிப்பு c பார்க்கவும்). வழக்கமாக, பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்” என்ற சொற்றொடர் தோன்றும்போது, அது யேகோவாவைக் குறிக்கிறது. யாத்திராகமம் 3:13–15ல், “இருக்கிறவராக இருக்கிறேன்” எனும் தலைப்பு யேகோவாவுக்கு ஒரு குறிப்பாகும் (மேலும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:1; 39:1 பார்க்கவும்).

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 1–2 .இஸ்ரவேலருக்காக ஒரு விடுவிப்பவரை எழுப்புவதற்கான தேவ திட்டத்தில் பல பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். குடும்பமாக நீங்கள் சிப்பிராள், பூவாள் என்னும் மருத்துவச்சிகளைப்பற்றி வாசிக்கலாம் (யாத்திராகமம் 1:15–20); மோசேயின் தாய் யோசேபெத், அவனது சகோதரி மிரியம், (யாத்திராகமம் 2:2–9; எண்ணாகமம் 26:59); பார்வோனின் குமாரத்தி (யாத்திராகமம் 2:5–6, 10); மோசேயின் மனைவி சிப்போராள் (யாத்திராகமம் 2:16–21). இந்த பெண்கள் தேவனின் திட்டத்தை எவ்வாறு விருத்தி செய்தார்கள்? அவர்களின் அனுபவங்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை எவ்வாறு நினைவூட்டுகின்றன? பெண் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களின் படங்களையும் நீங்கள் சேகரித்து அவர்களைப்பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். நீதியுள்ள பெண்களால் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்? “A Plea to My Sisters” (Liahona, Nov. 2015, 95–98) என்னும் தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தி உங்கள் கலந்துரையாடலோடு சேரலாம்.

யாத்திராகமம் 3:1–6.மோசே எரியும் புதரை நெருங்கியபோது, பயபக்தியின் அடையாளமாக தனது காலணிகளை அகற்றும்படி கர்த்தர் சொன்னார். பரிசுத்தமான இடங்களுக்கு நாம் எவ்வாறு பயபக்தியைக் காட்ட முடியும்? உதாரணமாக, கர்த்தருடைய ஆவியானவர் வாழக்கூடிய பரிசுத்தமான இடமாக நமது வீட்டை உருவாக்க நாம் என்ன செய்ய முடியும்? பிற பரிசுத்தமான இடங்களில் நாம் எவ்வாறு அதிக பயபக்தியைக் காட்ட முடியும்?

யாத்திராகமம் 4:1–9.மோசேயை அனுப்பியதை இஸ்ரவேல் புத்திரருக்குக் காண்பிப்பதற்கான அடையாளங்களாக மூன்று அற்புதங்களைச் செய்ய மோசேக்கு கர்த்தர் வல்லமை அளித்தார். இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த அடையாளங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?

யாத்திராகமம் 5:2. கர்த்தரை “அறிவது” என்பதன் அர்த்தம் நமக்கு என்னவாக இருக்கக்கூடும்? நாம் அவரை எவ்வாறு அறிந்துகொள்வது? (எடுத்துக்காட்டாக, ஆல்மா 22: 15–18 பார்க்கவும்). அவருடனான நமது உறவு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நம் விருப்பத்தை எவ்வாறு பாதிக்கிறது? (யோவான் 17:3; மோசியா 5:13 ஐயும் பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Reverence Is Love,” Children’s Songbook, 31.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

ஒரு ஆய்வு குறிப்பிதழை வைத்திருங்கள். நீங்கள் படிக்கும்போது வரும் எண்ணங்கள், யோசனைகள், கேள்விகள் அல்லது பதிவுகள் ஆகியவற்றை எழுத ஒரு குறிப்பிதழ் அல்லது குறிப்பேட்டை பயன்படுத்துவது உங்களுக்கு உதவிகரமாயிருக்குமென நீங்கள் காணக்கூடும்.

பார்வோனின் குமாரத்தி குழந்தை மோசேயைக் கண்டுபிடித்தல்

பார்வோனின் குமாரத்தியால் மோசே கோரைப் புதருக்குள் கண்டுபிடிக்கப்பட்டான்–ஜார்ஜ் சோப்பர்