“அத்தியாயம் 3: பாடம் 2—பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டம்” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 3: பாடம் 2,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 3: பாடம் 2
பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டம்
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் ஆத்துமாவின் முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறது. சுவிசேஷத்தின் மூலம், நமது தெய்வீக அடையாளத்தையும், தேவனின் குழந்தைகளாகிய நமது நித்திய திறனையும் பற்றி அறிந்து கொள்கிறோம். சுவிசேஷம் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது மற்றும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் அர்த்தத்தைக் கண்டறிய உதவுகிறது. சுவிசேஷத்தின்படி வாழ்வது, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும்போது நாம் வளரவும் வலிமையைக் கண்டறியவும் உதவுகிறது.
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு சிறந்ததை விரும்புகிறார், மேலும் அவருடைய மிகப்பெரிய ஆசீர்வாதங்களை நமக்கு வழங்க விரும்புகிறார், அவை அழியாமை மற்றும் நித்திய ஜீவன் (மோசே 1:39; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும்). அவர் நம்மை நேசிப்பதால், இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு அவர் ஒரு திட்டத்தை வழங்கியுள்ளார். வேதங்களில், இந்தத் திட்டம் இரட்சிப்பின் திட்டம், மகிழ்ச்சியின் மாபெரும் திட்டம் மற்றும் மீட்பின் திட்டம் என்று அழைக்கப்படுகிறது (ஆல்மா 42:5, 8, 11, 13, 15, 16, 31ஐப் பார்க்கவும்).
தேவனின் திட்டத்தில், நாம் ஒவ்வொருவரும் அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கை, பிறப்பு, பூலோக வாழ்க்கை, இறப்பு மற்றும் இறப்புக்குப் பின் வாழ்க்கை வழியாக பயணம் செய்கிறோம். இந்தப் பயணத்தின் போது தேவன் நமக்குத் தேவையானதை வழங்கியுள்ளார், இதனால் நாம் இறந்த பிறகு, இறுதியில் அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்பலாம் மற்றும் மகிழ்ச்சியின் முழுமையைப் பெறலாம்.
“தேவனின் திட்டத்துக்கு இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். இயேசு தனது பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நாம் ஒவ்வொருவரும் அழியாமை மற்றும் நித்திய ஜீவனைப் பெறுவதை சாத்தியமாக்கினார்.
பூமியில் நாம் வாழும் காலத்தில், நமது அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையை நாம் நினைவில் கொள்வதில்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. எவ்வாறாயினும், நமது நித்திய பயணத்தின் இந்த பகுதிகளைப் பற்றி தேவன் பல சத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும், வரவிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றிய நம்பிக்கையைப் பெறுவதற்கும் இந்த சத்தியங்கள் போதுமான அறிவை நமக்கு அளிக்கின்றன. இந்த அறிவு பூமியில் இருக்கும் போது நம்மை வழிநடத்தும் ஒரு பரிசுத்த பொக்கிஷம்.
கற்பித்தலுக்கான ஆலோசனைகள்
இந்தப் பிரிவு உங்களுக்குக் கற்பிக்கத் தயாராவதற்கு ஒரு மாதிரி குறிப்பை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய கேள்விகள் மற்றும் அழைப்புகளின் எடுத்துக்காட்டுகளும் இதில் அடங்கும்.
நீங்கள் கற்பிக்கத் தயாராகும்போது, ஒவ்வொருவரின் சூழ்நிலையையும் ஆவிக்குரிய தேவைகளையும் ஜெபத்துடன் கருத்தில் கொள்ளுங்கள். எது கற்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்யுங்கள். மக்கள் புரிந்து கொள்ளாத சொற்களுக்கு அர்த்தம் சொல்ல தயாராகுங்கள். பாடங்களை சுருக்கமாக வைத்திருக்க நினைவில் வைத்து, உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதைத் திட்டமிடுங்கள்.
நீங்கள் கற்பிக்கும்போது பயன்படுத்த வசனங்களைத் தேர்ந்தெடுங்கள். பாடத்தின் “கோட்பாட்டு அடித்தளம்” பிரிவில் பல உதவிகரமான வசனங்கள் உள்ளன.
நீங்கள் கற்பிக்கும்போது என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் கொடுக்க அழைப்புகளைத் திட்டமிடுங்கள்.
தேவனின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை வலியுறுத்துங்கள், நீங்கள் கற்பிப்பதைப் பற்றிய உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
15—25 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்
இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றி கற்பிக்க பின்வரும் கொள்கைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் இந்த குறிப்புக்குப் பிறகு வழங்கப்படுகிறது.
அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கை: தேவனின் நோக்கம் மற்றும் நமக்கான திட்டம்
-
நாம் அனைவரும் தேவனின் ஆவிக்குழந்தைகள். அவர் நம்மை தம் சாயலில் படைத்தார்.
-
நாம் பூமியில் பிறப்பதற்கு முன்பு தேவனுடன் வாழ்ந்தோம். நாங்கள் அவருடைய குடும்ப உறுப்பினர்கள். அவர் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார், நேசிக்கிறார்.
-
இந்த வாழ்விலும் நித்தியத்திலும் நமது மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவன் ஒரு திட்டத்தை வழங்கியுள்ளார்.
-
நமது அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையில், நாம் தேவனின் திட்டத்தைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தோம். நமது நித்திய முன்னேற்றத்தில் அடுத்த படியை எடுக்க முடியும்படிக்கு இது பூமிக்கு வருவதைக் குறிக்கிறது.
-
“தேவனின் திட்டத்துக்கு இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். நாம் அழியாமையையும் நித்திய ஜீவனையும் பெறுவதை அவர் சாத்தியமாக்குகிறார்.
சிருஷ்டிப்பு
-
தேவனுடைய வழிநடத்துதலின் கீழ், இயேசு கிறிஸ்து பூமியை சிருஷ்டித்தார்.
ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி
-
ஆதாமும் ஏவாளும் பூமிக்கு வந்த தேவனுடைய ஆவிக் குழந்தைகளில் முதன்மையானவர்கள். தேவன் அவர்களின் சரீரத்தை சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார்.
-
ஆதாமும் ஏவாளும் மீறினார்கள், தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், தேவனின் பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
-
வீழ்ச்சிக்குப் பிறகு, ஆதாமும் ஏவாளும் அநித்தியமானார்கள். அநித்தியமானவர்களாக, அவர்கள் கற்றுக் கொள்ளவும், முன்னேறவும், குழந்தைகளைப் பெறவும் முடிந்தது. அவர்கள் துக்கத்தையும், பாவத்தையும், மரணத்தையும் அனுபவித்தார்கள்.
-
வீழ்ச்சி மனிதகுலத்திற்கு முன்னோக்கிய ஒரு படியாக இருந்தது. வீழ்ச்சி, நாம் பூமியில் பிறந்து பரலோக பிதாவின் திட்டத்தில் முன்னேறுவதை சாத்தியமாக்கியது.
பூமியில் நமது வாழ்க்கை
-
தேவனின் திட்டத்தில், மாம்ச உடல்களைப் பெறவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் நாம் பூமிக்கு வர வேண்டியிருந்தது.
-
பூமியில், நாம் விசுவாசத்தில் நடக்க கற்றுக்கொள்கிறோம். இருப்பினும், பரலோக பிதா நம்மைத் தனியாக விட்டுவிடவில்லை. அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்ப நமக்கு உதவுவதற்கு அவர் பல வரங்களும் வழிகாட்டுதல்களும் வழங்கியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி
-
நாம் ஒவ்வொருவரும் பாவம் செய்கிறோம், நாம் ஒவ்வொருவரும் இறப்போம். தேவன் நம்மை நேசிப்பதால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்காக தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார்.
-
இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, நம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட முடியும். நாம் மனந்திரும்பும்போது நம் இருதயங்கள் சிறப்பாக மாற்றப்படும். இது தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பவும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெறுவதையும் சாத்தியமாக்குகிறது.
-
இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பூரணப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம்.
-
இயேசு கிறிஸ்து ஆறுதலையும், நம்பிக்கையையும், குணப்படுத்துதலையும் தருகிறார். அவருடைய பாவநிவாரண பலியே அவருடைய அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். வாழ்க்கையில் அநீதியான அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்.
ஆவி உலகம்
-
நமது உடல் இறக்கும் போது, நமது ஆவி, ஆவி உலகில் தொடர்ந்து வாழ்கிறது. இது உயிர்த்தெழுதலுக்கு முன் கற்றல் மற்றும் ஆயத்தத்துக்கான தற்காலிக நிலை.
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆவி உலகில் கற்பிக்கப்படுகிறது, மேலும் நாம் தொடர்ந்து வளரவும் முன்னேறவும் முடியும்.
உயிர்த்தெழுதல், இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல்
-
ஆவி உலகில் நாம் வாழ்ந்த பிறகு, உயிர்த்தெழுதல் என்பது நமது நித்திய பயணத்தின் அடுத்த படியாகும்.
-
உயிர்த்தெழுதல் என்பது நமது ஆவி மற்றும் உடலை மீண்டும் இணைப்பதாகும். நாம் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம் மற்றும் பூரணமான மாம்ச சரீரத்தைப் பெறுவோம். நாம் என்றென்றும் வாழ்வோம். இது இரட்சகரின் பாவநிவிர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலால் சாத்தியமாக்கப்பட்டது.
நியாயத்தீர்ப்பும் மகிமையின் ராஜ்ஜியங்களும்
-
நாம் உயிர்த்தெழுப்பப்படும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு நியாயாதிபதியாக இருப்பார். மிகக் குறைவான விதிவிலக்குகளுடன், தேவனின் குழந்தைகள் அனைவரும் மகிமையின் ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவார்கள்.
-
நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டாலும், நாம் அனைவரும் ஒரே நித்திய மகிமையைப் பெற மாட்டோம். பூலோகத்திலும் ஆவி உலகத்திலும் நம்முடைய விசுவாசம், கிரியைகள் மற்றும் மனந்திரும்புதலின்படி இயேசு நம்மை நியாயந்தீர்ப்பார். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் தேவனின் முன்னிலையில் வாழத் திரும்பலாம்.
நீங்கள் மக்களிடம் கேட்கக்கூடிய கேள்விகள்
பின்வரும் கேள்விகள் நீங்கள் மக்களிடம் என்ன கேட்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தவும் ஒரு நபரின் தேவைகள் மற்றும் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும்.
-
வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
-
எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது?
-
என்ன சவால்களில் தேவன் உங்களுக்கு உதவ வேண்டும்?
-
நீங்கள் சந்தித்த சவால்களில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
-
இயேசு கிறிஸ்துவைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவருடைய வாழ்க்கை மற்றும் ஊழியம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது?
நீங்கள் கொடுக்கக்கூடிய அழைப்புகள்
-
நாங்கள் கற்பித்தது உண்மை என்பதை அறிய உதவும்படி தேவனிடம் ஜெபத்தில் கேட்பீர்களா? (பாடம் 1ன் கடைசிப் பாகத்தில் உள்ள “கற்பித்தல் உள்ளுணர்வுகள்: ஜெபம்” பார்க்கவும்.)
-
நாங்கள் கற்பித்ததைப் பற்றி மேலும் அறிய இந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுடன் சபைக்கு வருவீர்களா?
-
நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அது தேவனுடைய வார்த்தை என்பதை அறிய ஜெபிப்பீர்களா? (குறிப்பிட்ட அத்தியாயங்கள் அல்லது வசனங்களை நீங்கள் பரிந்துரைக்கலாம்.)
-
நீங்கள் இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி ஞானஸ்நானம் பெறுவீர்களா? (இந்தப் பாடத்திற்கு உடனடி முந்திய “ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுவதற்கான அழைப்பு” பார்க்கவும்.)
-
எங்கள் அடுத்த வருகைக்கான நேரத்தை தீர்மானிக்கலாமா?
கோட்பாட்டு அடித்தளம்
சுவிசேஷத்தைப் பற்றிய உங்கள் அறிவையும் சாட்சியத்தையும் பலப்படுத்த படிக்கவும், கற்பிக்க உங்களுக்கு உதவவும், இந்தப் பகுதி உங்களுக்குக் கோட்பாடு மற்றும் வசனங்களை வழங்குகிறது.
அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கை: தேவனின் நோக்கம் மற்றும் நமக்கான திட்டம்
நாம் தேவனின் பிள்ளைகள், நாம் பிறப்பதற்கு முன்பே அவருடன் வாழ்ந்தோம்
நமது ஆவிகளுக்கு, அவர் பிதாவாயிருக்கிறார். நாம் உண்மையில் அவருடைய பிள்ளைகள், அவருடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் தேவனின் குழந்தையாக ஒரு தெய்வீக இயல்பு உள்ளது. இந்த அறிவு கடினமான காலங்களில் நமக்கு உதவுவதோடு, சிறந்தவர்களாக மாற நம்மை ஊக்குவிக்கும்.
நாம் பூமியில் பிறப்பதற்கு முன்பு தேவனுடன் அவருடைய ஆவி குழந்தைகளாக வாழ்ந்தோம். நாங்கள் அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
“நாம் அனைவரும் இப்போதும் என்றென்றும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான அடையாளம் உள்ளது, அதை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது, மேலும் நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் நித்தியத்தில் ஆவிக்குரிய வேர்களைக் கொண்ட தேவனின் மகன் அல்லது மகளாக எப்போதும் இருக்கிறீர்கள்.
“… இந்த உண்மையைப் புரிந்துகொள்வதாலும்—உண்மையில் அதைப் புரிந்துகொள்வதாலும், அதைத் தழுவுவதாலும்—வாழ்க்கையை மாற்றுவதாக இருக்கிறது. உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு அசாதாரண அடையாளத்தை இது உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் அதற்கும் மேலாக, அது உங்களுக்கு அதிகமான மதிப்பை கொடுக்கிற உணர்வையும், உங்கள் எல்லையற்ற தகுதியின் உணர்வையும் தர வேண்டும். இறுதியாக, அது உங்களுக்கு வாழ்க்கையில் தெய்வீக, உன்னத மற்றும் தகுதியான நோக்கத்தை வழங்குகிறது (M. Russell Ballard, “Children of Heavenly Father” [Brigham Young University devotional, Mar. 3, 2020], 2, speeches.byu.edu).
நாம் பூமிக்கு வரத் தேர்ந்தெடுத்தோம்
நம்முடைய பரலோக பிதா நம்மை நேசிக்கிறார், நாம் அவரைப் போல் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். அவர் மகிமைப்படுத்தப்பட்ட மாம்ச சரீரத்தைக் கொண்ட மேன்மைப்பட்டவர்.
நமது அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையில், நாம் அவரைப் போல ஆக வேண்டும் என்று தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை அறிந்தோம். அவரது திட்டத்தின் ஒரு பகுதி என்னவென்றால், நாம் நமது பரலோக வீட்டை விட்டு வெளியேறி, மாம்ச சரீரங்களைப் பெற பூமிக்கு வருவோம். தேவனின் பிரசன்னத்தை விட்டு விலகிய நேரத்தில் நாம் அனுபவத்தைப் பெற்று விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் தேவனுடன் வாழ்ந்ததை நினைவில் கொள்ள மாட்டோம். இருப்பினும், நாம் அவருடன் வாழத் திரும்புவதற்குத் தேவையானதை அவர் வழங்குவார்.
சுயாதீனம், அல்லது சுதந்திரம் மற்றும் தேர்ந்தெடுக்கும் திறன், நமக்கான தேவனின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும். நமது அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையில், நாம் ஒவ்வொருவரும் தேவனின் திட்டத்தைப் பின்பற்றி பூமிக்கு வருவதைத் தேர்ந்தெடுத்தோம், அதனால் நமது நித்திய முன்னேற்றத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். நாம் இங்கே இருக்கும்போது, வளர்வதற்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டோம். எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதையும் புரிந்துகொண்டோம். நாம் சோதனை, பாடுகள், துக்கம் மற்றும் மரணத்தை அனுபவிப்போம்.
பூமிக்கு வருவதைத் தேர்ந்தெடுத்ததில், தேவனின் அன்பிலும் உதவியிலும் நாம் நம்பிக்கை வைத்தோம். நம்முடைய இரட்சிப்புக்கான அவரது திட்டத்தில் நாம் நம்பிக்கை வைத்தோம்.
நம்மை மீட்பதற்காக பரலோக பிதா இயேசு கிறிஸ்துவை தேர்ந்தெடுத்தார்.
“தேவனின் திட்டத்துக்கு இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். பூமிக்கு வருவதற்கு முன், நாம் சுயமாக தேவனின் பிரசன்னத்திற்கு திரும்ப முடியாது என்பதை அறிந்தோம். பரலோக பிதா தம்முடைய முதற்பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைத் தேர்ந்தெடுத்து, நாம் அவரிடம் திரும்பி நித்திய ஜீவனைப் பெறுவதை சாத்தியமாக்கினார்.
இயேசு மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அவர் பூமிக்கு வந்து தம்முடைய பாவநிவாரண பலியின் மூலம் நம்மை மீட்க ஒப்புக்கொண்டார். அவருடைய பாவநிவர்த்தியும் உயிர்த்தெழுதலும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்ற உதவும்.
சிருஷ்டிப்பு
பரலோக பிதாவின் திட்டம் பூமியின் சிருஷ்டிப்புக்காக வழங்கப்பட்டது, அங்கு அவருடைய ஆவி குழந்தைகள் மாம்ச சரீரங்களைப் பெற்று அனுபவத்தைப் பெறுவார்கள். நாம் முன்னேறவும் தேவனைப் போல் ஆகவும் பூமியில் நம் வாழ்க்கை அவசியம்.
பரலோக பிதாவின் வழிநடத்துதலின் கீழ், இயேசு கிறிஸ்து பூமியையும் அனைத்து உயிரினங்களையும் படைத்தார். பரலோக பிதா பின்னர் தனது சொந்த சாயலில் ஆணும் பெண்ணும் படைத்தார். சிருஷ்டிப்பு என்பது தேவனின் அன்பின் வெளிப்பாடாகும், மேலும் நாம் வளர வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் வெளிப்பாடாகும்.
ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி
வீழ்ச்சிக்கு முன்பு
ஆதாமும் ஏவாளும் பூமிக்கு வந்த பரலோக பிதாவின் ஆவிக் குழந்தைகளில் முதன்மையானவர்கள். தேவன் அவர்களின் உடல்களை தம் சாயலில் படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார். தோட்டத்தில் அவர்கள் வெகுளிகளாக இருந்தனர், தேவன் அவர்களின் தேவைகளை வழங்கினார்.
ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் இருந்தபோது, நன்மை தீமை அறியும் மரத்தின் பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்று தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் தோட்டத்தில் இருக்க முடியும். இருப்பினும், அநித்தியத்தின் எதிர்ப்பு மற்றும் சவால்களில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலம் அவர்களால் முன்னேற முடியாது. அவர்கள் துக்கத்தையும் வலியையும் அனுபவிக்க முடியாததால் மகிழ்ச்சியை அறிய முடியாது.
தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் சோதித்தான், அவர்கள் அதைச் செய்யத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் தேர்வின் காரணமாக, அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தேவனின் பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
வீழ்ச்சிக்குப் பிறகு
வீழ்ச்சிக்குப் பிறகு, ஆதாமும் ஏவாளும் அநித்தியமானார்கள். இனியும் வெகுளியான நிலையில் இல்லாமல், நன்மை தீமை இரண்டையும் புரிந்து அனுபவித்தார்கள். அவைகளுக்கு இடையே தேர்வு செய்ய அவர்கள் தங்கள் சுயாதீனத்தைப் பயன்படுத்தலாம். ஆதாமும் ஏவாளும் எதிர்ப்பையும் சவால்களையும் எதிர்கொண்டதால், அவர்களால் கற்றுக்கொண்டு முன்னேற முடிந்தது. அவர்கள் துக்கத்தை அனுபவித்ததால், அவர்களால் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடிந்தது. (2 நேபி 2:22–25 பார்க்கவும்.)
ஆதாமும் ஏவாளும் தங்களுடைய கஷ்டங்கள் இருந்தபோதிலும், அநித்தியமானவர்களானதை ஒரு பெரிய ஆசீர்வாதமாக உணர்ந்தார்கள். அவர்கள் குழந்தைகளைப் பெறுவது ஒரு ஆசீர்வாதம். இது, தேவனின் மற்ற ஆவி பிள்ளைகள் பூமிக்கு வருவதற்கும், சரீரங்களைப் பெறுவதற்கும் வழிவகுத்தது.
வீழ்ச்சியின் ஆசீர்வாதங்களைப் பற்றி, ஆதாம் மற்றும் ஏவாள் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஏவாள் சொன்னாள், “எங்களுடைய மீறுதல் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் ஒருபோதும் [குழந்தைகள்] பெற்றிருக்க மாட்டோம், நன்மை தீமையை, நாங்கள் ஒருபோதும் அறிந்திருக்கமாட்டோம், எங்களுடைய மீட்பின் சந்தோஷத்தையும் கீழ்ப்படிபவர்கள் யாவருக்கும் தேவன் கொடுக்கும் நித்திய ஜீவனையும் அறிந்திருக்க மாட்டோம்.(மோசே 5:11; மற்றும் வசனம் 10 பார்க்கவும்).
பூமியில் நமது வாழ்க்கை
“நான் ஏன் இந்த பூமியில் இருக்கிறேன்?” என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். நமது நித்திய முன்னேற்றத்திற்கான தேவனின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாக பூமியில் நமது வாழ்க்கை உள்ளது. நமது இறுதி நோக்கம், தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கும் மகிழ்ச்சியின் முழுமையைப் பெறுவதற்கும் தயாராக இருப்பது ஆகும். பூமியின் வாழ்க்கை இதற்கு நம்மை தயார்படுத்தும் சில வழிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
மாம்ச சரீரம் பெறுங்கள்
பூமிக்கு வருவதன் ஒரு நோக்கம், நமது ஆவி வசிக்கக்கூடிய ஒரு மாம்ச சரீரம் பெறுவதாகும். நமது உடல்கள் தேவனின் பரிசுத்தமான, அற்புதமான சிருஷ்டிகள். மாம்ச சரீரங்களால், நம் ஆவிகளால் முடியாத பல விஷயங்களை நாம் செய்யவும், கற்றுக்கொள்ளவும் மற்றும் அனுபவிக்கவும் முடியும். நாம் ஆவிகளாய் இருக்கும்போது அடைய முடியாத விதங்களில் நாம் முன்னேறலாம்.
நம் உடல்கள் அநித்தியமானதால், நாம் வலி, நோய் மற்றும் பிற சோதனைகளை அனுபவிக்கிறோம். இந்த அனுபவங்கள் பொறுமை, மனதுருக்கம் மற்றும் பிற தெய்வீக குணங்களைக் கற்றுக்கொள்ள உதவும். அவை மகிழ்ச்சிக்கான நமது பாதையின் ஒரு பகுதியாக இருக்கலாம். செய்ய கடினமாக இருக்கும்போது சரியானதைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் விசுவாசம், நம்பிக்கை மற்றும் தயாளம் ஆகியவை நம் குணத்தின் பாகங்களாக மாறும்.
சுயாதீனத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்
அநித்தியத்தின் மற்றொரு நோக்கம், நமது சுயாதீனத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது—சரியானதைத் தேர்ந்தெடுப்பது. தேவனைப்போல ஆவதற்கு, நமது சுயாதீனத்தை ஞானமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம்.
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் சரியானதை நமக்குக் கற்பிக்கிறார்கள் மற்றும் மகிழ்ச்சிக்கு நம்மை வழிநடத்த கட்டளைகளை வழங்குகிறார்கள். சாத்தான் நம்மைத் தவறு செய்யத் தூண்டுகிறான், அவனைப் போலவே நாமும் துர்பாக்கிய நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான எதிர்ப்பை நாம் எதிர்கொள்கிறோம், இது நமது சுயாதீனத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு அவசியமானது (2 நேபி 2:11 பார்க்கவும்).
நாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதால், நாம் வளர்ந்து, அவருடைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நாம் கீழ்ப்படியாதபோது, அவரிடமிருந்து விலகி, பாவத்தின் விளைவுகளைப் பெறுகிறோம். சில நேரங்களில் அது வேறுவிதமாக தோன்றினாலும், பாவம் இறுதியில் மகிழ்ச்சியற்ற நிலைக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்களும் பாவத்தின் விளைவுகளும் உடனடியாகத் தெரிவதில்லை அல்லது வெளியில் தெரிவதில்லை. ஆனால் அவை உறுதியாக இருக்கின்றன, ஏனென்றால் தேவன் நீதிபரர்.
நாம் நம்மால் முடிந்ததைச் செய்தாலும், நாம் எல்லாரும் பாவஞ்செய்து, “தேவமகிமையற்றவர்களாகிறோம்” (ரோமர் 3:23). இதை அறிந்த பரலோக பிதா நாம் மனந்திரும்புவதற்கு ஒரு வழியைக் கொடுத்தார், அதனால் நாம் அவரிடம் திரும்ப முடியும்.
மனந்திரும்புதல், நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை நம் வாழ்வில் கொண்டுவருகிறது (ஏலமன் 5:11 பார்க்கவும்). நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி மற்றும் பரிசுத்த ஆவியின் வரத்தின் மூலம் நாம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம் (3 நேபி 27: 16–16 பார்க்கவும்). மனந்திரும்புதலின் மூலம், நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். நம்முடைய பரலோக பிதாவிடம் திரும்பும் பாதை நமக்குத் திறக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அவர் இரக்கமுள்ளவர். (பாடம் 3 இல் “மனந்திரும்புதல்” பார்க்கவும்.)
விசுவாசத்தால் நடக்க கற்றுக்கொள்ளுங்கள்
இந்த வாழ்க்கையின் மற்றொரு நோக்கம் பரலோக பிதாவிடமிருந்து பிரிவதன் மூலம் மட்டுமே வரக்கூடிய அனுபவத்தைப் பெறுவதாகும். நாம் அவரைப் பார்க்காததால், நாம் விசுவாசத்தில் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (2 கொரிந்தியர் 5:6–7 பார்க்கவும்).
இந்தப் பயணத்தில் தேவன் நம்மைத் தனியாக விடவில்லை. அவர் நம்மை வழிநடத்தவும், பலப்படுத்தவும், பரிசுத்தப்படுத்தவும் பரிசுத்த ஆவியை வழங்கியுள்ளார். அவர் வேதங்கள், தீர்க்கதரிசிகள், ஜெபம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.
நம்முடைய பூலோக அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியும்—மகிழ்ச்சி மற்றும் துக்கங்கள், வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள்—தேவனிடம் திரும்பி வருவதற்கு நாம் தயாராகும் போது வளர உதவும்.
இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி
ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியின் காரணமாக, நாம் அனைவரும் பாவத்திற்கும் மரணத்திற்கும் உட்பட்டுள்ளோம். பாவம் மற்றும் மரணத்தின் விளைவுகளை நாமே வெல்ல முடியாது. நம்முடைய பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டத்தில், வீழ்ச்சியின் விளைவுகளைச் சமாளிக்க அவர் ஒரு வழியை வழங்கியுள்ளார், அதனால் நாம் அவரிடம் திரும்ப முடியும். உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன், அவர் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராகவும் மீட்பராகவும் தேர்ந்தெடுத்தார்.
இயேசு கிறிஸ்து மட்டுமே பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்க முடியும். அவர் நிதர்சனமான தேவ குமாரன். அவர் தனது பிதாவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். பரலோக பிதாவின் சித்தத்தைச் செய்ய அவர் தயாராகவும் சித்தமாகவும் இருந்தார்.
இரட்சகரின் பாவநிவர்த்தி கெத்செமனேயில் அவரது துன்பம், சிலுவை மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு துன்பப்பட்டார், ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் அவர் இரத்தம் வடித்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18 பார்க்கவும்).
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மனித வரலாற்றில் மிகவும் மகிமை மிக்க நிகழ்வு. இயேசு தனது பாவநிவாரண பலியின் மூலம் பிதாவின் திட்டத்தை செயல்படுத்தினார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி இல்லாமல் நாம் உதவியற்றவர்களாக இருப்போம், ஏனென்றால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நாமே நம்மைக் காப்பாற்ற முடியாது (ஆல்மா 22:12–15 ஐப் பார்க்கவும்).
நமது இரட்சகரின் தியாகம் அவருடைய பிதாவின் மீதும் நமக்கும் உள்ள அன்பின் உச்ச வெளிப்பாடாகும். கிறிஸ்துவின் அன்பின் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” நமது புரிதலை மிஞ்சும் (எபேசியர் 3:18; வசனம் 19ஐயும் பார்க்கவும்).
இயேசு கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்றார்
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவருடைய ஆவி அவருடைய உடலிலிருந்து பிரிக்கப்பட்டது. மூன்றாவது நாளில், அவரது ஆவியும் அவரது உடலும் மீண்டும் ஒன்றிணைந்தன, மீண்டும் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. அவர் பலருக்கு தோன்றினார், அவர் மாம்சம் மற்றும் எலும்புகள் கொண்ட அழியாத உடலைக் கொண்டிருப்பதாக அவர்களுக்குக் காட்டினார். ஆவியும் உடலும் மீண்டும் ஒன்றிணைவது உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது.
அநித்தியர்களாக நாம் ஒவ்வொருவரும் இறப்போம். இருப்பினும், இயேசு மரணத்தை வென்றதால், பூமியில் பிறந்த ஒவ்வொரு நபரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் ஒரு தெய்வீக வரம், இரட்சகரின் இரக்கம் மற்றும் மீட்கும் கிருபையின் மூலம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பூரணப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம். இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால், பரலோகபிதாவுடன் எதிர்கால வாழ்வுக்கான அனைத்து நம்பிக்கையையும் மரணம் முடிவுக்குக் கொண்டுவரும் ( 2 நேபி 9:8–12 பார்க்கவும்).
நம்முடைய பாவங்களிலிருந்து நாம் சுத்திகரிக்கப்படுவதை இயேசு சாத்தியமாக்குகிறார்
கிறிஸ்துவின் மூலம் நாம் பெறக்கூடிய நம்பிக்கையைப் புரிந்து கொள்ள, நீதியின் நியாயப்பிரமாணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே நமது செயல்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் மாறாத சட்டம். தேவனுக்குக் கீழ்ப்படிவது நேர்மறையான விளைவுகளையும், கீழ்ப்படியாமை எதிர்மறையான விளைவுகளையும் தருகிறது. (ஆல்மா 42:14–18 பார்க்கவும்.) நாம் பாவம் செய்யும்போது, நாம் ஆவிக்குரிய விதமாக அசுத்தமாகிவிடுகிறோம், மேலும் எந்த அசுத்தமான காரியமும் தேவனின் பிரசன்னத்தில் வாழ முடியாது ( 3 நேபி 27:19 பார்க்கவும்).
இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் போது, அவர் நம் இடத்தில் நின்று, துன்பப்பட்டு, நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை செலுத்தினார் (3 நேபி 27:16-20 பார்க்கவும்). தேவனின் திட்டம் இயேசு கிறிஸ்து நமக்காக பரிந்து பேசும் வல்லமையை அளிக்கிறது—நமக்கும் நீதிக்கும் இடையில் நிற்க (மோசியா 15:9 பார்க்கவும்). இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, நாம் மனந்திரும்புவதற்கு விசுவாசத்தை கடைப்பிடிக்கும்போது, அவர் நமக்காக இரக்கத்தின் உரிமைகளை கோர முடியும் (மரோனி 7:27; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3–5 பார்க்கவும்). “இப்படியாக இரக்கம் நியாயத்தின் தேவைகளை நிவர்த்தியாக்கி, [நம்மை] பாதுகாப்பெனும் கரங்களால் அரவணைக்கிறது.”(ஆல்மா 34:16).
இரட்சகரின் பாவநிவர்த்தி மற்றும் மனந்திரும்புதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே நாம் தேவனுடன் வாழத் திரும்ப முடியும். நாம் மனந்திரும்பும்போது, நாம் மன்னிக்கப்பட்டு ஆவிக்குரிய விதமாக சுத்திகரிக்கப்படுகிறோம். நம்முடைய பாவங்களுக்கான குற்றச் சுமையிலிருந்து விடுபடுகிறோம். காயப்பட்ட நமது ஆத்துமாக்கள் குணமாகும். நாம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறோம் (ஆல்மா 36:24 பார்க்கவும்).
நாம் பரிபூரணமற்றவர்களாக இருந்தாலும், மீண்டும் குறையக்கூடும் என்றாலும், நம்மில் தோல்வி, குறைபாடு அல்லது பாவம் இருப்பதை விட இயேசு கிறிஸ்துவில் அதிக கிருபையும், அன்பும், இரக்கமும் இருக்கிறது. நாம் அவரிடம் திரும்பி மனந்திரும்பும்போது தேவன் நம்மை அரவணைக்க எப்போதும் தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் (லூக்கா 15:11–32 பார்க்கவும்). “நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது” (ரோமர் 8:39)
நம்முடைய வலிகளையும், துன்பங்களையும், பலவீனங்களையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டார்
இயேசு கிறிஸ்து தனது பாவநிவாரண பலியில் நம்முடைய வலிகள், துன்பங்கள் மற்றும் பலவீனங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக, “தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று அவர்” அறிந்திருக்கிறார் (ஆல்மா 7:12; வசனம் 11ஐயும் பார்க்கவும்). “என்னிடத்தில் வாருங்கள்” என்று அவர் அழைக்கிறார், மேலும் நாம் அப்படிச் செய்யும்போது, அவர் நமக்கு ஓய்வு, நம்பிக்கை, வலிமை, முன்னோக்கு மற்றும் குணப்படுத்துதலைத் தருகிறார் (மத்தேயு 11:28; வசனங்களையும் 29–30 பார்க்கவும்).
நாம் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவநிவிர்த்தியையும் நம்பியிருக்கையில், நம்முடைய சோதனைகள், வியாதிகள் மற்றும் வலிகளை தாங்கிக்கொள்ள அவர் நமக்கு உதவுவார். நாம் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் ஆறுதலால் நிரப்பப்படலாம். வாழ்க்கையில் அநீதியான அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்.”
ஆவி உலகம்
“நான் இறந்த பிறகு என்ன நடக்கும்?” என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இரட்சிப்பின் திட்டம் இந்த கேள்விக்கு சில முக்கியமான பதில்களை வழங்குகிறது.
மரணம் என்பது நமக்கான கடவுளின் “இரக்கமுள்ள திட்டத்தின்” ஒரு பகுதியாகும் (2 நேபி 9:6). நமது இருப்பின் முடிவை விட, மரணம் என்பது நமது நித்திய முன்னேற்றத்தின் அடுத்த படியாகும். தேவனைப் போல் ஆக, நாம் மரணத்தை அனுபவித்து, பின்னர் பூரணப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த சரீரங்களைப் பெற வேண்டும்.
நமது உடல் இறக்கும் போது, நமது ஆவி, ஆவி உலகில் தொடர்ந்து வாழ்கிறது. இது உயிர்த்தெழுதல் மற்றும் இறுதி நியாயத்தீர்ப்புக்கு முன் கற்றல் மற்றும் ஆயத்தத்தின் தற்காலிக நிலை. பூலோக வாழ்க்கையின் நமது அறிவு நம்மிடம் இருக்கிறது.
ஆவி உலகில், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த மக்கள் “நீதிமான்களின் ஆவிகள் பரதீசு என்றும், இளைப்பாறும் நிலையென்றும், சமாதான நிலையென்றும் அழைக்கப்படுகிற மகிழ்ச்சி நிலையினுள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.” (ஆல்மா 40:12). சிறு குழந்தைகளும் இறக்கும் போது பரதீசுக்குள் வரவேற்கப்படுகிறார்கள்.
சொர்க்கத்தில் உள்ள ஆவிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் துக்கங்களிலிருந்து சமாதானமாக இருக்கும். அவர்கள் தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தொடர்வார்கள், தேவனுடைய பணியைச் செய்வார்கள், மற்றவர்களுக்கு ஊழியம் செய்வார்கள். அவர்கள் தங்கள் பூலோக வாழ்க்கையில் அதை பெறாதவர்களுக்கு சுவிசேஷத்தைக் கற்பிப்பார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:32–37, 57–59 பார்க்கவும்).
ஆவி உலகில், பூமியில் சுவிசேஷத்தைப் பெற முடியாதவர்கள் அல்லது கட்டளைகளைப் பின்பற்றாதவர்கள் சில வரம்புகளை அனுபவிப்பார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:6–37; ஆல்மா 40:6–14 பார்க்கவும்). இருப்பினும், தேவன் நீதியும் இரக்கமும் உள்ளவராக இருப்பதால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பினால், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மீட்கப்படுவார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:58; மேலும் பார்க்க 138:31–35; 128:22). அவர்கள் சமாதானத்தின் பரதீசுக்குள் வரவேற்கப்படுவார்கள். அநித்தியம் மற்றும் ஆவி உலகில் அவர்கள் செய்த தேர்வுகளின் அடிப்படையில் அவர்கள் இறுதியில் மகிமையின் ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவார்கள்.
நாம் உயிர்த்தெழும் வரை ஆவி உலகில் இருப்போம்.
உயிர்த்தெழுதல், இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதல்
உயிர்த்தெழுதல்
தேவனின் திட்டம் நாம் வளர்ந்து நித்திய ஜீவனைப் பெறுவதை சாத்தியமாக்குகிறது. ஆவி உலகில் நாம் வாழ்ந்த பிறகு, உயிர்த்தெழுதல் அந்த வளர்ச்சியின் அடுத்த படியாகும்.
உயிர்த்தெழுதல் என்பது நம் உடலையும் ஆவியையும் இணைப்பதாகும். நாம் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம். இது இரட்சகரின் பாவநிவிர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலால் சாத்தியமாக்கப்பட்டது. (ஆல்மா 11:42–44 பார்க்கவும்.)
நாம் உயிர்த்தெழுப்பப்படும்போது, நாம் ஒவ்வொருவரும் ஒரு பரிபூரணமான உடலைப் பெறுவோம், வலி மற்றும் நோய் இல்லாமல். நாம் அழியாமல் இருப்போம், என்றென்றும் வாழ்வோம்.
இரட்சிப்பு
நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதால், நாம் அனைவரும் சரீர மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவோம்—அல்லது இரட்சிப்பைப் பெறுவோம். இந்த வரம் இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் நமக்கு வழங்கப்படுகிறது.
நீதியின் சட்டம் நம் பாவங்களுக்குத் தேவைப்படும் விளைவுகளிலிருந்து நாம் இரட்சிக்கப்படலாம் அல்லது இரட்சிப்பைப் பெறலாம். நாம் மனந்திரும்பும்போது இயேசு கிறிஸ்துவின் தகுதி மற்றும் இரக்கத்தின் மூலம் இந்த வரம் சாத்தியமாகும். (ஆல்மா 42:13–15, 21–25 பார்க்கவும்.)
மேன்மையடைதல்
மேன்மையடைதல், அல்லது நித்திய ஜீவன், பரலோக ராஜ்யத்தில் மகிழ்ச்சி மற்றும் மகிமையின் மிக உயர்ந்த நிலை. மேன்மையடைதல் என்பது நிபந்தனைக்குட்பட்ட வரம். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “அந்த தகுதியான நிபந்தனைகளில், கர்த்தரில் நம்பிக்கை, மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியைப் பெறுதல் மற்றும் ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பது ஆகியவை அடங்கும்” (“Salvation and Exaltation,” Liahona, May 2008, 9).
மேன்மையடைதல் என்பது நித்திய குடும்பங்களில் என்றென்றும் தேவனுடன் வாழ்வதாகும். தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிந்து, அவர்களைப் போல் ஆகி, அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை அனுபவிப்பது.
நியாயத்தீர்ப்பும் மகிமையின் ராஜ்ஜியங்களும்
குறிப்பு: மகிமையின் ராஜ்யங்களைப் பற்றி முதலில் கற்பிக்கும்போது, ஒரு நபரின் தேவைகள் மற்றும் புரிதலுக்கு ஏற்ப அடிப்படை மட்டத்தில் கற்பிக்கவும்.
நாம் உயிர்த்தெழுப்பப்படும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு நீதியும் இரக்கமுமுள்ள நியாயாதிபதியாக இருப்பார். மிகக் குறைவான விதிவிலக்குகளுடன், நாம் ஒவ்வொருவரும் மகிமையின் ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவோம். நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டாலும், நாம் அனைவரும் ஒரே நித்திய மகிமையைப் பெற மாட்டோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:22–24, 29–34; 130:20–21; 132:5).
தங்கள் பூலோக வாழ்க்கையில் தேவனுடைய நியாயப்பிமாணங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு கீழ்ப்படிய வாய்ப்பில்லாத நபர்களுக்கு ஆவி உலகில் அந்த வாய்ப்பு வழங்கப்படும். இயேசு ஒவ்வொரு நபரையும் அவரது விசுவாசம், செயல்கள், ஆசைகள் மற்றும் அநித்தியம் மற்றும் ஆவி உலகில் மனந்திரும்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்பளிப்பார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:32–34, 57–59 பார்க்கவும்).
வேதங்கள் சிலஸ்டியல், டிரஸட்ரியல் மற்றும் டிலஸ்டியல் ராஜ்யங்களைப் பற்றி போதிக்கிறது. அவை ஒவ்வொன்றும் தேவனின் அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, சுவிசேஷத்தின் நியமங்களைப் பெற்று, தங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடித்து, பரிசுத்த ஆவியைப் பெற்று, இறுதிபரியந்தம் நிலைத்திருப்பவர்கள் பரலோக ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள். இந்த ராஜ்யத்தில் தங்கள் பூலோக வாழ்வின் போது சுவிசேஷத்தைப் பெற வாய்ப்பில்லாதவர்களும் அடங்குவார்கள், ஆனால் “தங்களுடைய முழு இருதயங்களோடும் அதை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள்” மற்றும் ஆவி உலகில் அவ்வாறு செய்தார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:8; வசனம் 7ஐயும் பார்க்கவும். ) பொறுப்பேற்கும் வயதுக்கு முன் (எட்டு வயது) இறந்த குழந்தைகளும் சிலஸ்டியல் இராஜ்ஜியத்தில் இரட்சிக்கப்படுவார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:10 ஐப் பார்க்கவும்).
வேதங்களில், சிலஸ்டியல் இராஜ்ஜியம் சூரியனின் மகிமை அல்லது பிரகாசத்துடன் ஒப்பிடப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:50–70 பார்க்கவும்.)
“இவர்கள் மாம்சத்தில் இயேசுவின் சாட்சியைப் பெறாதிருந்து பின்னர் அதைப் பெற்றுக்கொண்டவர்கள்.” கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் டிரஸ்ட்ரியல் ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:74). இயேசுவைப் பற்றிய சாட்சியில் வீரம் காட்டாதவர்களுக்கும் இதுவே உண்மை. இந்த ராஜ்யம் சந்திரனின் மகிமையுடன் ஒப்பிடப்படுகிறது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:71–80 பார்க்கவும்.)
இந்த வாழ்க்கையில் மனந்திரும்பாமல் அல்லது ஆவி உலகில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பாவங்களில் தொடர்ந்தவர்கள் டிலஸ்டியல் ராஜ்யத்தில் தங்கள் வெகுமதியைப் பெறுவார்கள். இந்த ராஜ்யம் நட்சத்திரங்களின் மகிமைக்கு ஒப்பிடப்படுகிறது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:81–86 பார்க்கவும்.)
குறுகியது முதல் நடுத்தர பாட குறிப்பு
உங்களுக்கு ஒரு சிறிது நேரம் மட்டுமே இருந்தால், நீங்கள் ஒருவருக்கு என்ன கற்பிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு பின்வரும் குறிப்பாகும். இந்த குறிப்பைப் பயன்படுத்தும் போது, கற்பிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் பாடத்தில் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கற்பிக்கும்போது, கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் செவிகொடுங்கள். தேவனிடம் எப்படி நெருக்கமாக வளருவது என்பதை மக்கள் அறிய உதவும் அழைப்புகளை கொடுக்கவும். ஒரு முக்கியமான அழைப்பு அந்த நபர் உங்களை மீண்டும் சந்திப்பதற்கானதாகும் . பாடத்தின் நீளம் நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் நீங்கள் செவிகொடுக்கும் விதத்தைப் பொறுத்தது.
3–10 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்
-
நாம் அனைவரும் தேவனின் ஆவிக்குழந்தைகள். நாங்கள் அவருடைய குடும்ப உறுப்பினர்கள். அவர் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார், நேசிக்கிறார்.
-
இந்த வாழ்விலும் நித்தியத்திலும் நமது மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவன் ஒரு திட்டத்தை வழங்கியுள்ளார்.
-
தேவனின் திட்டத்தில், மாம்ச உடல்களைப் பெறவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் நாம் பூமிக்கு வர வேண்டியிருந்தது.
-
“தேவனின் திட்டத்துக்கு இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். நாம் நித்திய ஜீவனைப் பெறுவதை அவர் சாத்தியமாக்குகிறார்.
-
பிதாவின் வழிகாட்டுதலின் கீழ், இயேசு பூமியை சிருஷ்டித்தார்.
-
பூமியில் நமது அனுபவங்கள், தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்புவதற்குத் தயாராவதற்கு நமக்கு உதவுவதாகும்.
-
நாம் ஒவ்வொருவரும் பாவம் செய்கிறோம், நாம் ஒவ்வொருவரும் இறப்போம். தேவன் நம்மை நேசிப்பதால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்காக தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார்.
-
வாழ்க்கையில் அநீதியான அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்.
-
நமது சரீரம் இறக்கும் போது, நமது ஆவி தொடர்ந்து வாழ்கிறது. இறுதியில் நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பூரணப்படுத்தப்பட்ட, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம்.
-
நாம் உயிர்த்தெழுப்பப்படும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு நியாயாதிபதியாக இருப்பார். மிகக் குறைவான விதிவிலக்குகளுடன், தேவனின் குழந்தைகள் அனைவரும் மகிமையின் ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவார்கள். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் தேவனின் முன்னிலையில் வாழத் திரும்பலாம்.