“ஆவியால் கற்பியுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும் (2022)
“ஆவியால் கற்பியுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்
ஆவியால் கற்பியுங்கள்
ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் தம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி இரட்சகர் கட்டளையிட்டபோது, “நீங்கள் எதைச் சொன்னாலும் சகல காரியங்களிலும் சாட்சி கொடுப்பதில் பரிசுத்த ஆவி பொழியப்படும்” என்று அவர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100:8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:15–17; 50:17–22 ஐயும் பார்க்கவும்). நீங்கள் உட்பட சுவிசேஷத்தைக் கற்பிக்கும் அனைவருக்கும் இதே வாக்குறுதி பொருந்தும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்பிக்கும் போது, உங்களுக்கு வழிகாட்டவும், நீங்கள் கற்பிப்பவர்களின் மனங்களுக்கும் இருதயங்களுக்கும் சத்தியத்தைப்பற்றி சாட்சியமளிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உங்களுடனே இருக்க முடியும். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2 பார்க்கவும்). நீங்கள் கற்பிக்கும்போது நீங்கள் தனியாக இல்லை, ஏனெனில் “பேசுகிறவர் நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்” (மாற்கு 13:11).
பரிசுத்த ஆவியே உண்மையான போதகர். எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மனித ஆசிரியராலும் சத்தியத்திற்கு சாட்சி கொடுப்பதிலும், கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுப்பதிலும், இருதயங்களை மாற்றுவதிலும், உலகத்தின் எந்த ஆசிரியரும் அவருடைய பாத்திரத்தை மாற்ற முடியாது. ஆனால் ஆவியால் கற்றுக்கொள்ள தேவனின் பிள்ளைகளுக்கு உதவுவதில் எல்லா ஆசிரியர்களும் கருவிகளாக இருக்க முடியும்.
ஆவிக்குரிய விதமாக போதிக்க இரட்சகர் தம்மை ஆயத்தப்படுத்தினார்
அவருடைய ஊழியத்துக்காக ஆயத்தம் செய்ய “தேவனோடிருக்கும்படியாக” இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் செலவழித்தார் (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 4:1 [ மத்தேயு 4:1ல், அடிக்குறிப்பு b]). ஆனால் அவரது ஆவிக்குரிய ஆயத்தம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. சாத்தான் அவரைச் சோதித்தபோது, அவருக்குத் தேவைப்படும்போது பொக்கிஷமாக வைத்திருந்த “ஜீவ வார்த்தைகளை” “அந்த மணிநேரமே” அவரால் பெற முடிந்தது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85). ஆவிக்குரிய விதமாக கற்பிக்க உங்களை ஆயத்தப்படுத்த உங்கள் சொந்த முயற்சிகளைப்பற்றி சிந்தியுங்கள். உங்கள் ஆவிக்குரிய ஆயத்தத்தில் இரட்சகரின் முன்மாதிரியை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதைப்பற்றி மத்தேயு 4:1–11 லிருந்து நீங்கள் என்னகற்றுக்கொள்கிறீர்கள்?
ஆவியானவர் உண்மையான ஆசிரியர் மற்றும் மனமாற்றத்தின் உண்மையான ஆதாரம். வல்லமையான சுவிசேஷ போதனைக்கு ஒரு பாடத்தை ஆயத்தம் செய்வது மட்டுமல்ல, நீங்கள் கற்பிக்கத் தொடங்கும் முன் ஆவிக்குரிய விதமாக உங்களை நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆவிக்குரிய விதமாக தயாராக இருந்தால், நீங்கள் கற்பிக்கும் போது ஆவியின் வழிகாட்டுதலைக் கேட்டு பின்பற்றவும் முடியும். உங்கள் கற்பித்தலில் பரிசுத்த ஆவியை அழைப்பதற்கான வழி, அவரை உங்கள் வாழ்க்கையில் அழைப்பதாகும். இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றவும், உங்கள் முழு இருதயத்தோடும் அவருடைய சுவிசேஷத்தின்படி வாழவும் விடாமுயற்சியுடன் முயற்சி செய்வதும் இதில் அடங்கும். நம்மில் யாரும் இதைச் சரியாகச் செய்யாததால், ஒவ்வொரு நாளும் மனந்திரும்புவதை இது குறிக்கிறது.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: கற்பிக்க ஆவிக்குரிய விதமாக உங்களை தயார்படுத்துவது என்றால் என்ன அர்த்தம்? ஆவிக்குரிய விதமாக உங்களை ஆயத்தப்படுத்தும் விதத்தை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்? உங்கள் கற்பித்தலில் ஆவிக்குரிய ஆயத்தம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
வேதங்களிலிருந்து: எஸ்றா 7:10; லூக்கா 6:12; ஆல்மா 17:2–3, 9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:21; 42:13–14
மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரட்சகர் எப்போதுமே ஆயத்தமாயிருந்தார்
ஜெப ஆலயத் தலைவனான யவீரு, மரிக்கும் நிலையில் இருந்த தனது மகளுக்கு உதவுமாறு இயேசுவின் பாதத்தில் விழுந்து கெஞ்சினான். இயேசுவும் அவருடைய சீஷர்களும் நெரிசலான தெருக்களில் யவீரின் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று இயேசு நின்றார். “என்னைத் தொட்டது யார்?” அவர் கேட்டார். இது ஒரு வித்தியாசமான கேள்வியாகத் தோன்றியது, மக்கள் நெரிசலில், அவரை யார் தொடவில்லை? ஆனால் அந்த திரளான கூட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தேவையுடனும், அவர் வழங்கிய குணப்படுத்துதலைப் பெற விசுவாசத்துடனும் யாரோ அவரை அணுகியதை இரட்சகர் உணர்ந்தார். யவீருவின் மகளைப் பார்க்க இன்னும் நேரம் இருக்கும். ஆனால் முதலில் அவர் தம் ஆடையைத் தொட்ட பெண்ணிடம், “மகளே, திடன்கொள்: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார் (லூக்கா 8:41–48 பார்க்கவும்).
ஒரு ஆசிரியராக, சில சமயங்களில் நீங்கள் கற்பிக்க ஆயத்தம் செய்து வைத்திருந்ததை முடிக்க அவசரப்படக்கூடும். அது முக்கியமானதாக இருந்தாலும், உங்கள் அவசரத்தில் நீங்கள் கற்பிக்கும் ஒருவரின் அவசரத் தேவையை தற்செயலாகக் கடந்து செல்லாமல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கற்பிக்க ஆயத்தப்படும்போது நீங்கள் தேடும் ஆவிக்குரிய வழிகாட்டுதலுடன், நீங்கள் கற்பிக்கும்போது பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலையும் தேடுங்கள். கற்பவர்களின் தேவைகள், கேள்விகள் மற்றும் ஆர்வங்கள் குறித்து விழிப்புடன் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் கற்பித்த ஒன்றைக் கற்பவர் எவ்வாறு பெறுகிறார் அல்லது புரிந்துகொள்கிறார் என்பதை பகுத்தறிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவுவார். சில நேரங்களில், உங்கள் திட்டங்களை மாற்றும்படி அவர் உங்களைத் தூண்டலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தலைப்பில் நீங்கள் நினைத்ததை விட அதிக நேரத்தைச் செலவிடுவது அல்லது இப்போது கற்பவர்களுக்கு மிகவும் முக்கியமான விஷயத்திற்கு ஆதரவாக சில கலந்துரையாடல்களை பிற்காலத்துக்காக விட்டுவிட உங்களுக்கு உணர்த்தப்படலாம்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: ஒரு கற்பவராக உங்கள் தேவைகளை பெற்றோர் அல்லது மற்ற ஆசிரியர் அறிந்திருப்பதாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? ஒரு பாடத்தை முடிப்பதை விட அவர்கள் கற்றுக்கொள்வதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பது நீங்கள் கற்பிப்பவர்களுக்கு தெரியுமா? உங்கள் ஆர்வத்தை எவ்வாறு நீங்கள் சிறப்பாகத் தெரிவிக்கலாம்?
வேதங்களிலிருந்து: 1 பேதுரு 3:15; ஆல்மா 32:1–9; 40:1; 41:1; 42:1
பரிசுத்த ஆவியால் கற்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மக்களுக்கு இரட்சகர் வழங்கினார்
இயேசுவின் காலத்தில் அவர் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்வது பலருக்கு கடினமாக இருந்தது, ஆனால் ஏராளமான கருத்துக்கள் இருந்தன. அதற்கு அவர்கள் “சிலர் உம்மை யோவான்ஸ்நானன்” என்றும் “சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்” என்றார்கள். ஆனால் பின்னர் இயேசு ஒரு கேள்வியைக் கேட்டார், அது மற்றவர்களின் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் இருதயங்களுக்குள் பார்க்கும்படி சீஷர்களை அழைத்தது: “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” அவர்கள் தங்கள் பதிலை “மாம்சத்திலும் இரத்தத்திலும்” இருந்து அல்ல, மாறாக நேரடியாக “பரலோகத்திலிருக்கிற என் பிதாவிடமிருந்து” கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பரிசுத்த ஆவியின் தனிப்பட்ட வெளிப்பாடான இந்த வகையான சாட்சியாலேயே, “நீர், ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுருவால் அறிவிக்க முடிந்தது. (மத்தேயு 16:13–17 பார்க்கவும்).
பிற்காலங்களில் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருக்க, நீங்கள் கற்பிக்கும் மக்களுக்கு சத்தியம் குறித்த ஆவிக்குரிய சாட்சி தேவைப்படும். நீங்கள் அதை அவர்களுக்கு கொடுக்க முடியாது, ஆனால் நீங்கள் அவர்களை அழைக்கலாம், ஊக்குவிக்கலாம், உணர்த்தலாம் மற்றும் அதைத் தேட கற்றுக்கொடுக்கலாம். சுவிசேஷத்தைக் கற்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் நீங்கள் தெளிவாக்கலாம். உதாரணமாக, நீங்கள் உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் கற்றுக்கொள்ளுதலின் சூழலைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு அறையில் நாற்காலிகள் அமைப்பது போன்ற எளிமையான ஒன்று அல்லது கற்பவர்களுடன் நீங்கள் வாழ்த்துவது மற்றும் பழகும் விதம் ஆகியவை கற்பவர்களின் அனுபவத்திற்கு ஆவிக்குரிய தொனியை அமைக்கிறது. நீங்கள் கற்பிக்க ஆவிக்குரிய விதமாக ஆயத்தம் செய்வது போல், கற்பதற்கு தங்களை ஆவிக்குரிய விதமாக ஆயத்தப்படுத்த கற்பவர்களை நீங்கள் அழைக்கலாம். அவர்கள் கொண்டு வரும் ஆவிக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும்பற்றி சாட்சியமளிக்கும் ஆவியை உணருவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வழங்கலாம். அவர்களுக்கு அந்த சாட்சி ஒரு “கற்பாறையாக” மாறும், “பாதாளத்தின் வாசல்கள் [அவர்களை] மேற்கொள்ளுவதில்லை” (மத்தேயு 16:18).
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதற்கான ஆவிக்குரிய சூழலுக்கு என்ன பங்களிப்பை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்? அதிலிருந்து எது விலகச் செய்கிறது? பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் கற்பிக்கும் மக்கள் கற்றுக்கொள்ள எது உதவுகிறது? நீங்கள் மிக அடிக்கடி கற்பிக்கும் பின்னணியைப்பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அங்கிருக்கும்போது, எப்படி உணர்கிறீர்கள்? ஆவியானவரை அங்கு இருக்கும்படி நீங்கள் எவ்வாறு மிகத் திறம்பட அழைக்கலாம்?
வேதங்களிலிருந்து: லூக்கா 24:31–32; யோவான் 14:26; 16:13–15; மரோனி 10:4–5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:16–17; 50:13–24
தனிப்பட்ட வெளிப்பாட்டைத் தேட, அடையாளம் காண மற்றும் செயல்பட பிறருக்கு இரட்சகர் உதவினார்
கர்த்தர் நம்முடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார், அவர் நம்முடன் தொடர்பு கொள்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 1829 ம் ஆண்டில், ஆலிவர் கௌட்ரி என்ற 22 வயதான பள்ளி ஆசிரியர், எவரும் பெறக்கூடிய தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறக்கூடிய தைரியமான, உற்சாகமான கோட்பாட்டைப்பற்றி கற்றுக்கொண்டார். ஆனால் நம்மில் பலர் கேட்டதைப் போன்ற கேள்விகள் அவரிடம் இருந்தன: “கர்த்தர் உண்மையில் என்னிடம் பேச முயற்சிக்கிறாரா? அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்?” இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஆலிவரை ஆவிக்குரிய தேடலின் தனிப்பட்ட தருணத்தைப்பற்றி சிந்திக்கும்படி இயேசு கிறிஸ்து அழைத்தார். “உனது மனதிற்குள் நான் சமாதானத்தைப் பேசவில்லையா?” அவர் கேட்டார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:21–24 பார்க்கவும்). பின்னர், ஆவியானவர் தன்னிடம் பேசக்கூடிய மற்ற வழிகளைப்பற்றி ஆலிவருக்கு அவர் கற்றுக் கொடுத்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3; 9:7–9 பார்க்கவும்; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–14 ஐயும் பார்க்கவும்).
ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி அடிக்கடி மறந்திருக்கும் உலகில் வாழும், நம் அனைவருக்கும் ஆவியின் குரலை அடையாளம் காண உதவி தேவை. ஆவியானவரை நாம் அறியாமலே உணர்ந்திருக்கலாம். ஆவியானவரை எவ்வாறு தேடுவது, அவருடைய செல்வாக்கை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் அவர் நமக்குத் தரும் தூண்டுதலின்படி செயல்படுவது போன்றவற்றைப்பற்றி நாம் அனைவரும் அதிகமாய்க் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கற்பிக்கும்போது, ஆவியானவர் தொடர்புகொள்ளும் வழிகளையும் அவர் அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொண்டார் என்பதையும் கண்டுபிடிக்க, கற்றுக்கொள்பவர்களுக்கு உதவுங்கள். ஒரு ஆசிரியராக நீங்கள் வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று, தனிப்பட்ட வெளிப்பாட்டின் வாழ்நாள் தேடுதலில் முன்னேற்றத்தைக் காண கற்பிப்பவர்களுக்கு உதவுவதாகும்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெற கற்றுக்கொள்ளுதல் ஏன் முக்கியமானது? வெளிப்பாட்டைத் தேடுவது மற்றும் அங்கீகரிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள யாராவது உங்களுக்கு எப்போதாவது உதவியிருக்கிறார்களா? பரிசுத்த ஆவியிடமிருந்து வெளிப்பாட்டைத் தேடவும், அடையாளங்காணவும், செயல்படவும் நீங்கள் கற்பிப்பவர்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
வேதங்களிலிருந்து: கலாத்தியர் 5:22–23; ஆல்மா 5:45–47; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:61; 121:33; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:8–20
தான் போதித்தவர்களுக்கு இரட்சகர் சாட்சியமளித்தார்
போதித்தல் மற்றும் ஊழியம் செய்தலின் விசேஷித்த ஒரு மென்மையான தருணத்தில், தனது சகோதரன் மரித்துப்போயிருந்த தனது தோழி மார்த்தாளை இயேசு ஆறுதல்படுத்த முயன்றார். “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்ற நித்திய சத்தியத்தின் எளிய சாட்சியை அவளுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.(யோவான் 11:23). அவருடைய சாட்சி மார்த்தாளைத் தன் சொந்த சாட்சியைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்”(யோவான் 11:24). யோவான் 11:25–27ல் இந்த மாதிரி எவ்வாறு மீண்டும் வருகிறதென்பதைக் கவனியுங்கள். இரட்சகரின் முன்மாதிரியில் உங்களைக் கவர்ந்தது எது? சுவிசேஷ சத்தியங்கள்பற்றிய சாட்சியத்தைப் பகிர்வது ஏன் கற்பித்தலில் முக்கிய பகுதியாகும்?
உங்கள் சாட்சியம் நீங்கள் கற்பிப்பவர்கள் மீது வல்லமைவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது ஆற்றொழுக்காக அல்லது நீண்டதாக இருக்க தேவையில்லை. “நான் எனது சாட்சியத்தை பகிர விரும்புகிறேன்” என்று ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களுக்குத் தெரிந்ததை சாதாரணமாக பகிர்ந்து கொள்ளுங்கள். சத்தியத்தின் ஒரு சாட்சியம் நேரடியாகவும் இருதயப்பூர்வமாகவும் இருக்கும்போது மிகவும் வல்லமையாயிருக்கும். உங்கள் வாழ்வில் இரட்சகர், அவருடைய சுவிசேஷம் மற்றும் அவருடைய வல்லமையைப்பற்றி அடிக்கடி சாட்சி கூறுங்கள், மேலும் நீங்கள் கற்பிப்பவர்களையும் அவ்வாறே செய்யும்படி ஊக்குவியுங்கள். சில சமயங்களில் மிகவும் சக்திவாய்ந்த சாட்சி பகரப்படுவது ஆசிரியரால் அல்ல, ஆனால் ஒரு சக கற்பவரால் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: சாட்சியமளிக்கும் ஒருவரின் வல்லமைவாய்ந்த செல்வாக்கை விளக்கும் உதாரணங்களை வேதங்களில் தேடுங்கள். அந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஒருவரின் சாட்சியத்தால் நீங்கள் எப்போது ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் சாட்சியைப் பகிர்வது நீங்கள் கற்பிப்பவர்களை எவ்வாறு செல்வாக்கடையச் செய்துள்ளது? இது எவ்வாறு உங்களை செல்வாக்கடையச் செய்துள்ளது?
வேதங்களிலிருந்து: அப்போஸ்தலர் 2:32–38; மோசியா 5:1–3; ஆல்மா 5:45–48; 18:24–42; 22:12–18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:13–14; 62:3