“கருத்தாய் கற்குமாறு அழையுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும் (2022)
“கருத்தாய் கற்குமாறு அழையுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்
கருத்தாய் கற்குமாறு அழையுங்கள்
இரட்சகர் தண்ணீரின் மேல் நடப்பதைப் பார்ப்பது நிச்சயமாக பிரமிப்பாக இருந்தது. ஆனால் பேதுருவுக்கு அது போதுமானதாயில்லை. இரட்சகர் செய்ததை அவன் செய்ய விரும்பினான், அவர் இருந்த இடத்தில் இருக்கவும், அதே அனுபவத்தை தானும் பெறவும் விரும்பினான். அவரை நோக்கி, “நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்” என்றான். ஒரு எளிய அழைப்புடன் அவர் பதிலளித்தார்: “வா”. அதனுடன், பேதுரு படகின் பாதுகாப்பிலிருந்து குதித்து, சீஷத்துவம் என்பது ஒரு செயலற்ற அனுபவம் அல்ல என்பதை நமக்குக் காட்டினான் (மத்தேயு 14:24–33 பார்க்கவும்). அதற்கு கிறிஸ்துவில் விசுவாசமும் விடாமுயற்சியும் தேவை. ஆனால் அது இரட்சகருடன் நடப்பதன் செழுமையான வெகுமதியையும் தருகிறது.
“வா” “வந்து பாருங்கள்.” “என் பின்னே வா” “நீயும் போய் அந்தப்படியே செய்” (மத்தேயு 14:29; யோவான் 1:39; லூக்கா 18:22; 10:37). தம் ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்து, இரட்சகர் தம்மைப் பின்பற்றுபவர்களை அவர் வழங்கிய சத்தியங்களையும், வல்லமையையும், அன்பையும் தாங்களே அனுபவிக்கும்படி அழைத்தார். உண்மையில் கற்றுக்கொள்ளுதல் இதுதான் என்பதால் அவர் இதைச் செய்தார். இது செவிசாய்ப்பது அல்லது வாசிப்பது மட்டுமல்ல; அது மாறுதல், மனந்திரும்புதல் மற்றும் முன்னேறுதல். இரட்சகரின் வார்த்தைகளில், கற்றுக்கொள்ளுதல் “படிப்பதினாலும் விசுவாசத்தினாலும்” வருகிறது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:118; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது). விசுவாசம் என்பது நாம்தாமே செயல்படுவதை உள்ளடக்கியது, வெறுமனே செயல்படுத்துவது அல்ல (2 நேபி 2:26 பார்க்கவும்).
இரட்சகரின் முன்மாதிரியை நாம் பின்பற்றும்போது, நாம் கற்பிப்பவர்களைக் கேட்கவும், தேடவும், தட்டவும், பின்னர் கண்டுபிடிக்கவும் அழைக்கிறோம். (மத்தேயு 7:7–8 பார்க்கவும்). அந்த அழைப்பை நாமே ஏற்றுக்கொள்கிறோம். ஒன்றாக, கிறிஸ்துவில் நம்முடைய சொந்த விசுவாசம் மற்றும் விடாமுயற்சியின் மூலம், அவருடன் நடப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாமே அறிந்து கொள்வோம்.
தங்கள் கற்றுக்கொள்ளுதலுக்கான பொறுப்பை ஏற்க மற்றவர்களுக்கு இரட்சகர் உதவினார்
சமுத்திரங்களை பாதுகாப்பாக கடக்கும் படகுகளை உருவாக்குவது எவருக்கும் கடினமான பணியாக இருக்கும். படகுகளின் வடிவம் மற்றும் அவை எவ்வாறு காற்றோட்டமாக இருக்கும் என்பதைப்பற்றிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டு. யாரேதின் சகோதரன் “கர்த்தருடைய கரத்தால் தொடர்ந்து வழிநடத்தப்பட்டான்” (ஏத்தேர் 2:6). ஆனால், படகுகளில் வெளிச்சம் கொடுப்பதைப்பற்றி யாரேதின் சகோதரன் கேட்டபோது கர்த்தர் எப்படி பதிலளித்தார் என்பதைப்பற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? (ஏத்தேர் 2:22–25 பார்க்கவும்). இந்த விதத்தில் அவனுடைய விசுவாசத்தைப் பிரயோகிக்க யாரேதின் சகோதரன் அழைப்பின் மூலம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டான்? (ஏத்தேர் 3:1–16 பார்க்கவும்).
கற்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களையும் அவர்களுக்குச் சொல்வது எளிதாகத் தோன்றலாம். இருப்பினும், மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் அறிவுரை கூறினார்: “நமது நோக்கம் ‘நான் அவர்களுக்கு என்ன சொல்வது?’ என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் ‘நான் அவர்களை என்ன செய்ய அழைக்க முடியும்? அவர்கள் பதிலளிக்க விருப்பமாயிருந்தால், பரிசுத்த ஆவியானவரைத் தங்கள் வாழ்க்கையில் அழைக்கத் தொடங்குவார்கள் என்று நான் என்ன உணர்த்தப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியும்?’” (evening with a General Authority, Feb. 7, 2020, broadcasts.ChurchofJesusChrist.org).
தங்கள் கற்றலுக்கான பொறுப்பை கற்பவர்கள் ஏற்க அவர்களை நீங்கள் எவ்வாறு அழைக்கமுடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, அவர்களின் சொந்தக் கேள்விகளைக் கேட்க, பதில்களைத் தேட, சிந்திக்க, மற்றும் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள அல்லது பதிவுசெய்ய அவர்களை நீங்கள் அழைக்கலாம். அவர்கள் செய்யும்போது, அவர்கள் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்வார்கள், தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியங்களைக் கண்டுபிடிப்பார்கள், மேலும் இந்த சத்தியங்களுடன் தங்கள் சொந்த அனுபவங்களைப் பெறுவார்கள். நம்முடைய சொந்த கற்றலுக்கு நாம் பொறுப்பேற்கும்போது, ஜோசப் ஸ்மித் செய்தது போல், “நான் நானாகவே கற்றுக்கொண்டேன்” என்று சொல்லலாம் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:20).
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: கற்பவர்கள் தங்கள் கற்றலில் செயலற்றவர்களாக இருப்பதை விட சுறுசுறுப்பாக இருப்பது ஏன் முக்கியம்? தங்களின் கற்றலுக்கு பொறுப்பேற்க நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம்? இதைச் செய்ய ஆசிரியர்கள் உங்களுக்கு எப்படி உதவினார்கள்? மக்கள் தாங்களே கற்றுக்கொள்வதற்கு எங்கு அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு, நீங்கள் வேதங்களிலிருந்து என்ன உதாரணங்களைச் சிந்திக்கலாம்? நீங்கள் கற்பிக்கும் விதத்தை இந்த உதாரணங்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
வேதங்களிலிருந்து: 1 நேபி 11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:7–8; 58:26–28; 88:118–125; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:11–20
இரட்சகருடைய வார்த்தையைப் படிப்பதால் அவரை அறிந்துகொள்ள மற்றவர்களை அவர் ஊக்குவித்தார்
கடைசி நாட்களில் இரட்சகர் தம் சபையை அதிகாரப்பூர்வமாக ஒழுங்கமைக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவர் தம் ஊழியர்களிடம் சொன்னார், “எழுதப்பட்டவைகளை நம்புங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:3). உண்மையில், அவர்கள் கிட்டத்தட்ட மொழிபெயர்த்து முடித்த, மார்மன் புஸ்தகத்தில், எப்படி ஞானஸ்நானம் கொடுப்பது, எப்படி திருவிருந்தை நிர்வகிப்பது மற்றும் பிற மதிப்புமிக்க விவரங்கள் உட்பட, பணிக்கான உதவிகரமான அறிவுரைகள் இருந்தன. ஆனால் இரட்சகர் தம்மைக் கேட்பதற்கும் அவரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்வதற்கும் தம்முடைய வெளிப்பாடுகளை ஒரு வாய்ப்பாக அவருடைய ஊழியர்கள் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அதே வெளிப்பாட்டில், அவர் அவர்களிடம், “[இந்த வார்த்தைகளை] உங்களிடம் பேசுவது எனது குரலே; … ஆகவே, நீங்கள் எனது குரலைக் கேட்டதாகவும், எனது வார்த்தைகளை அறிந்ததாகவும் நீங்கள் சாட்சியமளிக்கலாம்” என சொன்னார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:35–36).
நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி சிந்தியுங்கள். வேதப் படிப்பை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அந்த விஷயத்தில், நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்? இது தினசரி கடமையை விட மேலானதா? நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, இரட்சகர் உங்களிடம் நேரடியாகப் பேசுவதை நீங்கள் உணர்கிறீர்களா? தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “அவருக்குச் செவிகொடுக்க நாம் எங்கு செல்லலாம்? நாம் வேதங்களிடத்தில் செல்லலாம். … தேவனுடைய வார்த்தையில் தினசரி மூழ்குவது ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பதற்கு முக்கியமானது, குறிப்பாக எழுச்சி அதிகரித்து வரும் இந்த நாட்களில். நாம் தினமும் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிக்கும்போது, நாம் எதிர்கொள்வோம் என ஒருபோதும் நாம் நினைக்காத கஷ்டங்களுக்கு எப்படி பதிலளிப்பது” என கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குச் சொல்லும் (“Hear Him,” Liahona, May 2020, 89). நீங்கள் கற்பிக்கும்போது, அவரைப்பற்றிய வசனங்கள் அல்லது உண்மைகளைக் கண்டறிவது மட்டுமல்லாமல், அவரைக் கண்டுபிடிப்பதில், இரட்சகரைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் வேதங்களைப் படிக்க கற்பவர்களை ஊக்குவிக்கவும். வேதங்களில் ஒவ்வொரு நாளும் கர்த்தரின் குரலைக் கேட்பது வாழ்நாள் முழுவதும் கருத்தாய், சுதந்திரமான சுவிசேஷம் கற்றலுக்கு அடித்தளமாக உள்ளது.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: உங்கள் சொந்த வேதம் படிக்கும் பழக்கங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். தேவ வார்த்தையைப் படிப்பது அவருடனான உங்கள் உறவை எவ்வாறு பலப்படுத்தியது? உங்கள் படிப்பை மேம்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? தேவனுடைய வார்த்தையை கருத்தாய் தவறாமல் படிக்க மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உணர்த்துவீர்கள்? அவர்கள் செய்யும்போது, அவர்கள் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்?
வேதங்களிலிருந்து: யோசுவா 1:8; 2 தீமோத்தேயு 3:15–17; 2 நேபி 32:3; யாக்கோபு 2:8; 4:6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:16
கற்றுக்கொள்ள ஆயத்தமாகுமாறு மற்றவர்களை இரட்சகர் அழைத்தார்
சிறந்த விதைகள் கூட கடினமான, கல் அல்லது முட்கள் நிறைந்த நிலத்தில் வளர முடியாது. அதேபோல், மிகவும் மதிப்புமிக்க மற்றும் விசுவாசத்தை ஊக்குவிக்கும் கோட்பாடு கூட அதைப் பெறத் தயாராக இல்லாத ஒரு இருதயத்தை மாற்ற வாய்ப்பில்லை. இது ஒரு விதைப்பவன், விதைகள் மற்றும் பல்வேறு நிலைமையுள்ள மண்ணைப்பற்றிய இரட்சகரின் உவமையின் செய்தியின் ஒரு பகுதியாகும். “நல்ல நிலத்தில்”, ஆவிக்குரிய கற்கள் மற்றும் முட்களிலிருந்து மென்மையாக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்ட இருதயத்தில், தேவனின் வார்த்தை நல்ல கனிகள் தருகிறது. (மத்தேயு 13:1–9, 18–23 பார்க்கவும்).
ஆவிக்குரிய ஆயத்தம் முக்கியமானது, உங்களுக்கும் நீங்கள் கற்பிக்கும் நபர்களுக்கும் முக்கியமானது. அப்படியானால், தேவனுடைய வார்த்தைக்கு “நல்ல நிலமாக” இருக்க நம் இருதயங்களை ஆயத்தப்படுத்துவதற்கு நாம் எவ்வாறு உதவுவது? பின்வரும்ஆயத்தக் கொள்கைகளைக் கருத்தில் கொள்ளுங்கள், அதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தலாம் மற்றும் நீங்கள் கற்பிப்பவர்களின் வாழ்க்கையில் ஊக்குவிக்கலாம். நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைக் கண்டறிய ஜெபியுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவருடைய பிரசன்னத்தை அழைக்கும் விதத்தில் வாழுங்கள். தினமும் மனந்திரும்புங்கள். நேர்மையான கேள்விகளைக் கேட்பதன் மூலம் கற்றுக்கொள்ள உங்கள் விருப்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை பதில்களுக்கு வழிநடத்துவார் என்ற விசுவாசத்துடன் தேவனுடைய வார்த்தையைப் படிக்கவும். அவர் உங்களுக்கு எதைக் கற்பித்தாலும் அதற்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவும்.
இந்த வழியில் கற்பவர்கள் கற்றுக் கொள்ளத் தயாராகும்போது, அவர்கள் பார்க்க ஆவிக்குரிய கண்களும், கர்த்தர் அவர்களுக்குத் தெரிந்ததைக் கேட்பதற்கான காதுகளும் இருக்கும். (மத்தேயு 13:16 பார்க்கவும்).
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: கற்றுக்கொள்ள உங்களை ஆயத்தப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தையை நீங்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை உங்கள் ஆயத்தம் எவ்வாறு பாதிக்கிறது? கற்றுக்கொள்ள ஆயத்தமாகுமாறு மற்றவர்களை நீங்கள் எவ்வாறு உணர்த்தலாம்? சுவிசேஷத்தின் சத்தியங்களை அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்பதில் என்ன வித்தியாசத்தை அது ஏற்படுத்த முடியும்?
வேதங்களிலிருந்து: ஏனோஸ் 1:1–8; ஆல்மா 16:16–17; 32:6, 27–43; 3 நேபி 17:3
அவர்கள் கற்றுக் கொண்டிருக்கும் சத்தியங்களைப் பகிர்ந்து கொள்ள மற்றவர்களை இரட்சகர் ஊக்குவித்தார்
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கர்த்தர் அவனை அழைத்தபோது, “நான் பேசுவதில் தாமதமாக இருக்கிறேன்” என்று ஏனோக்கு புலம்பினான். ஆனால், கர்த்தரின் வேலைக்காரனுக்குப் பேச்சுத்திறன் ஒருபோதும் தேவையாக இருந்ததில்லை. அதற்குப் பதிலாக, வாயைத் திறக்க போதுமான விசுவாசம் இருந்தால், வார்த்தைகள் வரும் என்று கர்த்தர் ஏனோக்குக்கு வாக்குறுதி அளித்தார். “நான் உனக்கு பேச்சைக் கொடுப்பேன்,” என அவர் சொன்னார் (மோசே 6:31–32). ஏனோக்கு விசுவாசத்தைப் பிரயோகித்தான், கர்த்தர் அவன் மூலமாக மிகவும் வல்லமையுள்ள, அவைகள் மக்களை நடுங்கச் செய்த வார்த்தைகளால் உண்மையாகவே பேசினான் (மோசே 6:47 பார்க்கவும்). உண்மையில், பூமியையே அவை நடுங்கச் செய்தன. மலைகள் ஓடிப்போயின, ஆறுகள் தங்களின் பாதைகளைவிட்டு விலகின; தேவ ஜனங்களுக்கு தேசங்கள் பயந்தன, “தேவன் அவனுக்குக் கொடுத்த பாஷையின் வல்லமை மிகுதியாயிருந்ததால், ஏனோக்கின் வார்த்தை மிகுந்த வல்லமையாயிருந்தது.” (மோசே 7:13).
தம்முடைய தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, நாம் அனைவரும் அவருடைய வார்த்தையைப் பேசுவதற்கு வல்லமை பெற்றிருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் கற்பிப்பவர்கள் உட்பட நம் அனைவருக்கும் அவர் அதை விரும்புகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:20–21 பார்க்கவும்). நமது வார்த்தைகள் மலைகளை நகர்த்தவோ அல்லது நதிகளை திசை திருப்பவோ முடியாது, ஆனால் அவை இருதயங்களை மாற்ற உதவ முடியும். அதனால்தான், இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும்பற்றி கற்றுக்கொள்பவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியமானது. இதைச் செய்வது அவர்கள் கற்பிக்கப்பட்ட சத்தியங்களை உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவும். மற்ற பின்னணிகளில் சத்தியங்களைப் பகிரும் அவர்களின் திறனில் நம்பிக்கையைப் பெறவும் இது உதவும்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: நீங்கள் ஒருவருடன் ஒரு சுவிசேஷ சத்தியத்தைப்பற்றி பேசிய நேரத்தைப்பற்றி சிந்தியுங்கள். அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? யாரோ ஒருவர் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொள்ள தைரியமாக இருந்ததற்கு நீங்கள் எப்போது நன்றியுடன் இருந்தீர்கள்? நீங்கள் கற்றுக்கொடுக்கும் நபர்கள் தாங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களைப்பற்றி பேசுவதற்கான வாய்ப்புகளிலிருந்து எவ்வாறு பயனடைவார்கள்? அவர்களுக்கு என்ன வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க முடியும்?
வேதங்களிலிருந்து: ஆல்மா 17:2–3; மரோனி 6:4–6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85; 88:122; 100:5–8
தாம்போதித்ததின்படி வாழ மற்றவர்களை இரட்சகர் அழைத்தார்
“உங்கள் வெளிச்சம் மனுஷர்களுக்கு முன்பாக பிரகாசிக்கக்கடவது.” “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்.” “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” “இடுக்கமான வாசல் வழியே உட்பிரவேசியுங்கள்.” (மத்தேயு 5:16, 44; 7:7, 13.) இரட்சகரின் முழு பூலோகத்துக்குரிய ஊழியத்திலும் மிகவும் முக்கியமான, மறக்கமுடியாத அழைப்புகளில் சில, கலிலேயா கடலை நோக்கியிருந்த ஒரு மலைப்பகுதியில் அவர் தம் சீஷர்களுக்குக் கற்பித்தபோது பேசப்பட்டது. இரட்சகரின் நோக்கம் வாழ்க்கையை மாற்றுவதாக இருந்தது, அவருடைய இறுதி அழைப்பின் மூலம் தெளிவாக்கப்பட்டது: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனை கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது).
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மழை பெய்து வெள்ளம் வந்து காற்று வீசுகிறது. கற்பவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் எல்லா சோதனைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டுமானால், சுவிசேஷத்தைப்பற்றிக் கற்பது போதாது. அதனால்தான், அவர்கள் கற்றதன்படி எவ்வாறு வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள கற்பவர்களை அழைக்க நாம் தயங்கக்கூடாது. மற்றவர்களின் சுயாதீனத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், நமது பல அழைப்புகள் பொதுவானதாக இருக்கும்: “நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?” எப்போதாவது நமது அழைப்புகள் இன்னும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்: “நீங்கள் முயற்சி செய்ய விரும்பும் இரட்சகரின் ஒரு பண்பைத் தேர்ந்தெடுப்பீர்களா?” பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைக் கேட்கவும், அடையாளம் காணவும், பகிர்ந்து கொள்ளவும் கற்பவர்களுக்கு நீங்கள் வாய்ப்புகளை வழங்கும்போது, அவர்கள் என்ன தனிப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை அவர் அவர்களுக்குக் கற்பிப்பார். கற்பவர்கள் தாங்கள் கற்றதைச் செயல்படுத்தும்போது, அவர்களைப் பின் தொடரும் ஆசீர்வாதங்களைக் கருத்தில் கொள்ள உதவுங்கள், மேலும் கடினமாக இருந்தாலும் அவர்களைத் தொடர ஊக்குவிக்கவும். சத்தியத்தின்படி வாழ்வது அதிக விசுவாசம், சாட்சியம் மற்றும் மனமாற்றத்திற்கான விரைவான பாதையாகும். இரட்சகர் கூறியது போல், பிதாவின் கோட்பாட்டின்படி வாழ்வதே நம் அனைவருக்கும் கொள்கை உண்மையானதென அறிந்து கொள்வதற்கான வழி (யோவான் 7:17 பார்க்கவும்).
சிந்திக்க வேண்டிய கேள்விகள்: யாரோ ஒருவர் விடுத்த அழைப்பின் காரணமாக நீங்கள் எப்போது செயல்பட உணர்த்தப்பட்டீர்கள்? இதன் விளைவாக உங்கள் வாழ்க்கை எப்படி மாறியது? வேதங்களிலும் சபைத் தலைவர்களாலும் கொடுக்கப்பட்ட அழைப்புகளைக் கவனியுங்கள். மற்றவர்களை நீங்கள் செயலாற்ற அழைக்கும்போது அது உங்களுக்கு உதவ நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் அழைப்புகளில் எந்த வழிகளில் நீங்கள் பின்பற்றலாம்?
வேதங்களிலிருந்து: லூக்கா 10:36–37; யோவான் 7:17; யாக்கோபு 1:22; மோசியா 4:9–10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:8–10; 82:10