அதிகாரம் 11
நேபியர்களின் நாணய முறை ஏற்படுத்தப்படுதல் – சீஸ்ரமிடம் அமுலேக் தர்க்கம்பண்ணுதல் – ஜனங்களை அவர்களுடைய பாவங்களிலே கிறிஸ்து இரட்சியார் – பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் – சகல மனுஷரும் அழியாமையிலே எழுவார்கள் – உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, மரணம் என்பதேயில்லை. ஏறக்குறைய கி.மு. 82.
1 சட்டத்தின் நியாயாதிபதியான ஒவ்வொருவரும், நியாயாதிபதியாய் நியமிக்கப்பட்டவர்களும், தங்களுக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படும்படி கொண்டுவரப்பட்டவர்களை நியாயந்தீர்க்க தாங்கள் பிரயாசப்பட்ட காலளவிற்குத் தக்கதாக, ஊதியத்தை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று மோசியாவின் சட்டத்திலே இருந்தது.
2 ஒருவன் பிறனுக்கு கடன்பட்டிருந்து, தான் கடன்பட்ட தொகையை செலுத்தாமற் போவானேயாகில், அவன் நியாயாதிபதியிடம் குற்றம் சாட்டப்படுவான்; நியாயாதிபதி அதிகாரத்தை பிரயோகித்து, அந்த மனுஷனை தன் முன்பு அழைத்து வரும்படிக்கு அதிகாரிகளை அனுப்புவான்; அவன் அம்மனுஷனை சட்டத்தின்படியேயும், அவனுக்கு விரோதமாய் வந்த சாட்சிகளுக்குத் தக்கதாகவும் நியாயம் விசாரிப்பான். இப்படியாய் அந்த மனுஷன் தான் கடன்பட்டிருந்த தொகையை செலுத்தும்படியாக கட்டாயப்படுத்தப்பட்டான். இல்லாவிடில் அவனிடத்தில் உள்ளவைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு அவன் திருடனைப்போலவும் கள்ளனைப்போலவும், ஜனங்கள் மத்தியிலிருந்து துரத்தப்படுவான்.
3 நியாயாதிபதி தான் வேலை செய்த காலளவு ஒரு நாளாயிருக்குமானால், பொன் சினயீனோ, அல்லது ஒரு பொன் சினயீனுக்கு சமமான வெள்ளி சினூமையோ, தன் ஊதியமாக பெற்றுக்கொண்டான்; இதுவும் கொடுக்கப்பட்ட சட்டத்தின்படியே ஆகும்.
4 இவைகள் பொன்னாலும், வெள்ளியினாலும் ஆன அவர்களுடைய நாணயங்களின் மதிப்பிற்கேற்றபடி கொடுக்கப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் நேபியர்கள் வைத்தவை, ஏனெனில் எருசலேமிலிருந்த யூதர்களைப்போல எண்ணாமல், அவர்களைப்போல அளக்காமல், மோசியா ராஜா ஏற்படுத்தின நியாயாதிபதிகளினுடைய ஆளுகை மட்டும், ஜனங்களுடைய எண்ணங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி, ஒவ்வொரு தலைமுறையிலும் தங்களுடைய எண்ணல், அளத்தல் முறைகளை மாற்றிப்போட்டார்கள்.
5 அவர்களுடைய நாணய மதிப்புகளாவன, பொன் சீனயீன், பொன் சியான், பொன் சும், பொன் லிம்நா,
6 வெள்ளி சினூம், வெள்ளி அம்நோர், வெள்ளி எசிரோம், வெள்ளி ஒன்டீ.
7 ஒரு வெள்ளி சினூம், ஒரு பொன் சீனயீனுக்கும், வாற்கோதுமை மற்றும், தானியங்களின் கொள்ளளவிற்கும் சமமான மதிப்பைப் பெற்றிருந்தது.
8 பொன் சியான், சீனயீனைக் காட்டிலும் இரட்டிப்பு பெறுமானமுள்ளது.
9 பொன் சும்மின் மதிப்பு சியான் மதிப்பில் இரண்டத்தனை.
10 பொன் லிம்நா, அவைகளனைத்தின் கூட்டு மதிப்பைப் பெற்றிருந்தது.
11 வெள்ளி அம்நோர், இரு சினூமின் மதிப்பைப் பெற்றிருந்தது.
12 வெள்ளி எசிரோம், நான்கு சினூமின் மதிப்பைப் பெற்றிருந்தது.
13 ஒன்டீ அவைகளனைத்தின் கூட்டு மதிப்பைப் பெற்றிருந்தது.
14 அவர்களுடைய நாணயமுறையிலே குறைந்த மதிப்பை பெற்றிருந்த நாணயங்களாவன.
15 சிப்லோன், சினூமின் மதிப்பில் பாதியைப் பெற்றிருந்தது. ஆகவே சிப்லோம், வாற்கோதுமையின் அரைக்கொள்ளவிற்கு சமம்.
16 அரை சிப்லோன், சிப்லத்திற்கு சமம்.
17 அரை சிப்லம் ஒரு லேயாவிற்குச் சமம்.
18 இவைகளே அவர்களுடைய நாணய முறையின் நாணயங்களின் மதிப்பு.
19 பொன் அந்தியோன் மூன்று சிப்லோன்களுக்குச் சமம்.
20 அவர்கள் தங்களுடைய வேலைகளுக்குத் தக்கதாய் ஊதியத்தைப் பெற்று வந்ததினிமித்தம் ஆதாயம் பெற ஜனங்களை கலகம் செய்ய ஏவிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு முன்பாக தொடரப்பட்ட விசாரணைக்குத் தக்கதாக பணம் சம்பாதிக்கும்படிக்கும், ஜனங்களை கலகங்களிலும், குழப்பங்களிலும், துன்மார்க்கங்களிலும், ஈடுபட ஏவிவிட்டார்கள். ஆனபடியாலேதான் அவர்கள் ஆல்மாவிற்கும், அமுலேக்கிற்கும் விரோதமாய் இந்த ஜனங்களை ஏவி விட்டார்கள்.
21 பின்னும் சீஸ்ரம், அமுலேக்கை நோக்கி: நான் உன்னிடம் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பாயா என்று கேட்கத் தொடங்கினான். இந்த சீஸ்ரம் எனப்பட்ட மனுஷன் நன்மையானவற்றை நிர்மூலமாக்கிப் போடும்படிக்கு பிசாசின் தந்திரங்களிலே திறமையானவன். ஆகவேதான் அவன் அமுலேக்கை நோக்கி: நான் உன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பாயா என்றான்.
22 அதற்கு அமுலேக் அவனை நோக்கி: ஆம், அது எனக்குள்ளிருக்கிற கர்த்தருடைய ஆவியானவரின்படியிருந்தால் மாத்திரமே, ஏனெனில் கர்த்தருடைய ஆவியானவருக்கு முரணாய் நான் எதையும் சொல்லேன், என்றான். பின்னும் சீஸ்ரம் அவனை நோக்கி: இதோ வெள்ளியிலான ஆறு ஒன்டீ நாணயங்கள் இங்கே இருக்கின்றன. நீ உன்னதமானவர் ஜீவிப்பதை மறுதலித்தால், இவைகள் அனைத்தையும் உனக்குத் தருவேன்.
23 அதற்கு அமுலேக், நரகத்தின் பிள்ளையே, ஏன் என்னை சோதிக்கிறாய்? நீதிமான்கள் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு உடன்படுவதில்லை என்று அறியாயோ என்றான்.
24 தேவனில்லை என்று விசுவாசிக்கிறாயோ? நான் உனக்குச் சொல்லுகிறேன், அப்படியல்ல. தேவன் ஒருவர் உண்டென்று நீ அறிகிறாய், ஆனால் அவரிலும் ஐஸ்வரியத்தை நீ மிகவும் நேசிக்கிறாய்.
25 நீ தேவனுக்கு முன்பாக என்னிடத்தில் பொய்யுரைத்தாய். நீ என்னை நோக்கி, இதோ, என்னிடத்திலிருக்கிற இந்த அதிக மதிப்புடைய ஆறு ஒன்டீகளை உனக்கு தருகிறேன் என்றாய், ஆனாலும் அதை எனக்குத் தராமல் தானே வைத்துக்கொள்ளவேண்டுமென்பதே உன் இருதயத்தின் சிந்தனையாய் இருக்கிறது. என்னை நீ அழித்துப்போடும்படி உனக்கு ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்தவே நான் மெய்யான ஜீவனுள்ள தேவனை மறுதலிக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறாய். இப்போதும் இதோ, இந்த மகா பொல்லாப்பினிமித்தம், நீ உன் பலனைப் பெறுவாய் என்றான்.
26 சீஸ்ரம் அவனை நோக்கி: மெய்யான ஜீவிக்கிற தேவன் உண்டென்று சொல்லுகிறாயா? என்றான்.
27 அதற்கு அமுலேக்: மெய்யான ஜீவிக்கிற தேவன் ஒருவர் உண்டென்றான்.
28 இப்பொழுது சீஸ்ரம் ஒரு தேவனிலும் அதிகமானோர் உண்டா என்றான்.
29 அதற்கு அவன், இல்லை, என்றான்.
30 பின்னும் சீஸ்ரம் அவனை நோக்கி: இக்காரியங்களை நீ எப்படி அறிந்துகொண்டாய் என்றான்.
31 அதற்கு அவன்: ஒரு தூதன் எனக்கு இவைகளை வெளிப்படுத்தினான், என்றான்.
32 பின்னும் சீஸ்ரம் வரவிருக்கிறவர் யார்? தேவகுமாரனா என்று கேட்டான்.
33 அதற்கு அவன், ஆம் என்றான்.
34 பின்னும் சீஸ்ரம், அவர் தம் ஜனங்களை அவர்கள் பாவங்களிலிருந்தபடியே இரட்சிப்பாரா என்று கேட்டான். அமுலேக் பிரதியுத்தரமாக: அவர் அப்படிச் செய்யார். அவர் தமது வார்த்தையை மறுதலிப்பது அவருக்கு கூடாத காரியம், என்று உனக்குச் சொல்லுகிறேன், என்றான்.
35 இப்பொழுது சீஸ்ரம், ஜனங்களை நோக்கி: இவைகளை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்; தேவன் ஒருவரே என்கிறான்; ஆகிலும் தேவகுமாரன் வருவார் என்றும், அவர் தமது ஜனத்தை இரட்சியார், என்றும் அவன் தேவனுக்குக் கட்டளையிட அதிகாரம் பெற்றிருப்பதுபோல, சொல்லுகிறான், என்றான்.
36 இப்பொழுது அமுலேக் அவனை நோக்கி: இதோ, அவர் தம்முடைய ஜனத்தை அவர்களுடைய பாவங்களிலே இரட்சியார், என்று நான் சொன்னதினிமித்தம், தேவனை கட்டளையிட அதிகாரத்தைப் பெற்றிருப்பதைப்போல பேசினேன், என்று நீ பொய்யுரைத்தாய்.
37 நான் உனக்குச் சொல்லுகிறேன், அவர் அவர்களை அவர்களுடைய பாவங்களிலே இரட்சிக்க முடியாது; பரலோக ராஜ்யத்தை தீட்டான எப்பொருளும் சுதந்தரிக்கலாகாது, என்று அவர் சொன்ன வார்த்தையை, நான் மறுதலிக்கக்கூடாது; ஆகவே நீங்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரியாமல், இரட்சிக்கப்படுவதெப்படி? எனவே நீங்கள் உங்களுடைய பாவங்களிலே இரட்சிக்கப்படமுடியாது, என்றான்.
38 பின்னும் சீஸ்ரம் அவனை நோக்கி: தேவகுமாரன்தான் நித்திய பிதாவானவரா என்று கேட்டான்.
39 அமுலேக் அவனை நோக்கி: ஆம், அவரே வானத்தையும் பூமியையும் அவைகளிலிருக்கிற யாவையும் உண்டாக்கிய நித்திய பிதா; அவரே, ஆதியும் அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறார்.
40 அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்; தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்களின் மீறுதல்களை அவர் தம்மீது எடுத்துக்கொள்வார்; இவர்களே நித்திய ஜீவனைப் பெறுவார்கள், வேறொருவருக்கும் இரட்சிப்பு வருவதில்லை.
41 துன்மார்க்கர் மரணக்கட்டுகளிலிருந்து அவிழ்க்கப்படுவது அன்றி மீட்பு சம்பவியாததுபோல இருப்பார்கள்; ஏனெனில் இதோ, சகலமானோரும் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படி, மரித்தோரிலிருந்து எழுந்து தேவனுக்கு முன்பாக நிற்கும் நாளானது வருகிறது.
42 இப்பொழுது இம்மைக்குரிய மரணம் என்றொரு மரணமுண்டு; அனைவரும் இந்த இம்மைக்குரிய மரணத்திலிருந்து எழும்பொருட்டு இந்த இம்மைக்குரிய மரணத்தின் கட்டுக்களை கிறிஸ்துவினுடைய மரணம் அவிழ்த்துப்போடும்.
43 ஆவியும் சரீரமும், அவைகளுடைய பரிபூரண அமைப்பிலே மறுபடியும் சேர்க்கப்படும். இப்பொழுது நாம் இருப்பதுபோன்று அவயவமும், கணுக்களும், அவைகளுடைய பரிபூரண வடிவத்திலே மறுபடியும் சேர்க்கப்படும்; நாம் தேவனுடைய சமுகத்திலே நிற்கும்படியாய் கொண்டுவரப்படும்போது, இப்பொழுது நாம் அறிந்திருக்கிறதைப்போலவே, அப்பொழுதும் நம்முடைய சகல குற்றங்களையும் தெள்ளத்தெளிவாய் நினைவுகூருவோம்.
44 இப்பொழுது இந்த சீர்பொருந்துதல் முதியோருக்கும் வாலிபருக்கும், அடிமைகளுக்கும், சுயாதீனருக்கும், புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும், துன்மார்க்கருக்கும், நீதிமான்களுக்குமாக யாவருக்கும் ஏற்படும்; அவர்களின் சிரசிலிருந்து ஒரு முடிகூட தொலைந்துபோகாது. இப்பொழுது இருப்பதைப்போலவே பூரண அமைப்பாகிய சரீரத்திலே அனைத்தும் திரும்பியும் இணைக்கப்படும். தங்களுடைய நன்மையான மற்றும் தீமையான அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படி குமாரானாகிய கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும், பரிசுத்தாவியுமான நித்திய தேவனுடைய நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக கணக்கொப்புவிக்கும்படி நிற்க வைக்கப்படுவார்கள்.
45 இதோ நான் சாவுக்கேதுவான சரீரத்தின் மரணத்தைப்பற்றியும், சாவுக்கேதுவான சரீரத்தின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் பேசியிருக்கிறேன். முதல் மரணத்திலிருந்து ஜீவனுக்கு, அதாவது மரணத்திலிருந்து இந்த சாவுக்கேதுவான சரீரம் இனி செத்துப்போகாமல், சாவாமையின் சரீரத்திலே எழும்போதும் என்றென்றும் பிரியாதபடிக்கு, அவைகளுடைய ஆவிகள் தங்கள் சரீரங்களோடு சேர்ந்துகொள்ளும். இப்படியாய் சரீரம் இனி அழிவைக் காணாமல் ஆவிக்குரியதும் அழியாமைக்குரியதுமாகும்.
46 இப்பொழுது இவ்வார்த்தைகளை அமுலேக் பேசி முடித்த பின்பு, ஜனங்கள் திரும்பவும் திகைத்துப்போனார்கள். சீஸ்ரம் நடுக்கம்கொள்ளத் துவங்கினான். அமுலேக் பேசிய வார்த்தைகள் முடிவு பெற்றன. அல்லது நான் எழுதியவைகள் இவைகளே.