ஏலமன் தன் நாட்களில் வைத்திருந்த பதிவேட்டின்படியே, அவன் நாட்களிலிருந்த நேபியின் ஜனங்களைப்பற்றிய விவரம், அவர்களது யுத்தங்களையும், பிரிவினைகளையும்பற்றியதான ஓர் விவரம்.
அதிகாரங்கள் 45 முதல் 62 உள்ளிட்டவை.
அதிகாரம் 45
ஆல்மாவின் வார்த்தைகளை ஏலமன் விசுவாசித்தல் – நேபியரின் அழிவைக் குறித்து ஆல்மா தீர்க்கதரிசனமுரைத்தல் – அவன் தேசத்தை ஆசீர்வதித்தலும், சபித்தலும் – மோசேயைப்போல ஆவியானவரால் ஆல்மா எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் – சபையில் பிரிவினை வளர்தல். ஏறக்குறைய கி.மு. 73.
1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, கர்த்தர் அவர்களைத் தங்களின் சத்துருக்களின் கைகளிலிருந்து மறுபடியும் விடுவித்தபடியால், நேபியின் ஜனங்கள் மிகவும் களிகூர்ந்தார்கள். ஆதலால் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளை ஏறெடுத்தார்கள்; ஆம், அவர்கள் அதிகமாய் உபவாசித்தும், அதிகமாய் ஜெபித்தும் மிகுந்த மகிழ்ச்சியுடனே தேவனைத் தொழுது கொண்டார்கள்.
2 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் பத்தொன்பதாம் வருஷத்தில், ஆல்மா தன் குமாரனாகிய ஏலமனிடத்தில் வந்து அவனை நோக்கி: காக்கப்பட்டு வருகிற அப்பதிவேடுகளைக் குறித்து உன்னிடம் நான் பேசின வார்த்தைகளை விசுவாசிக்கிறாயா? என்றான்.
3 அதற்கு ஏலமன் அவனை நோக்கி: ஆம், நான் விசுவாசிக்கிறேன், என்றான்.
4 ஆல்மா மறுபடியும், வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசிக்கிறாயா என்று கேட்டான்.
5 அதற்கு அவன் பிரதியுத்தரமாக: ஆம், நீர் பேசின சகல வார்த்தைகளையும் நான் விசுவாசிக்கிறேன், என்றான்.
6 ஆல்மா மறுபடியும் அவனை நோக்கி: நீ என் கட்டளைகளைக் கைக்கொள்ளுவாயா என்றான்.
7 அதற்கு அவன்: ஆம், நான் உமது கட்டளைகளை என் முழு இருதயத்தோடும் கைக்கொள்ளுவேன், என்றான்.
8 பின்பு ஆல்மா அவனை நோக்கி: நீ பாக்கியவான், கர்த்தர் உன்னை இத்தேசத்தில் விருத்தியடையச் செய்வார், என்றான்.
9 ஆனால் இதோ, நான் உன்னிடத்தில் தீர்க்கதரிசனமுரைக்கச் சில காரியங்கள் உள்ளன; ஆனால் நான் உனக்கு தீர்க்கதரிசனமுரைப்பதை நீ தெரிவிக்கவேண்டாம்; ஆம், நான் உரைக்கும் தீர்க்கதரிசனம் நிறைவேறும் மட்டும் அத்தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கப்படக் கூடாது. ஆகவே நான் சொல்லும் வார்த்தைகளை எழுதிக்கொள்.
10 இவை அவ்வார்த்தைகள், இதோ, எனக்குள் இருக்கிற வெளிப்படுத்தலின் ஆவியின்படி நேபியர்களாகிய இந்த ஜனங்களுக்குள்ளே இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தும் காலம் துவங்கி, நானூறு வருஷங்களில் இவர்கள் அவிசுவாசத்தில் நலிந்து போவார்கள், என்று உணர்கிறேன்.
11 ஆம், நேபியின் ஜனங்கள் அழிந்துபோகும் வரைக்குமாய், யுத்தங்களையும் வாதைகளையும், ஆம், பஞ்சங்களையும், இரத்தம் சிந்துதலையும் அப்பொழுது அவர்கள் காண்பார்கள்.
12 ஆம், அவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிவதினாலும், காரிருளின் கிரியைகளிலும், காமவிகாரத்திலும், சகலவிதமான அக்கிரமங்களிலும் விழுவதினாலுமே, இது சம்பவிக்கும்; ஆம், நான் உனக்குச் சொல்லுகிறேன், அவர்கள் மகா வெளிச்சத்திற்கும், ஞானத்திற்கும் விரோதமாய் பாவம் செய்யப்போவதினால், ஆம், நான் உனக்குச் சொல்லுகிறேன், அந்நாள் முதற்கொண்டு, இந்தப் பெரும் அக்கிரமம் வரும் முன்பு, நாலாம் தலைமுறை கூட கடந்து போவதில்லை.
13 அந்த பெரிதான நாள் வரும்போது, இதோ, இப்பொழுது இருக்கிறவர்கள் அல்லது, நேபியின் ஜனங்களோடு இப்பொழுது எண்ணப்பட்டு வருகிறவர்களின் சந்ததியார், இனி ஒருபோதும் நேபியின் ஜனங்களோடு எண்ணப்படாத காலம் அதிசீக்கிரமாய் வருகிறது.
14 ஆனால் கர்த்தருடைய சீஷர்கள் என்று அழைக்கப்படுகிற சிலரைத் தவிர, அந்தப் பெரிதும் பயங்கரமுமான நாளிலே நிலைத்திருந்து அழிக்கப்பட்டுப் போகாதவர்கள், லாமானியருக்குள்ளே எண்ணப்பட்டு, அவர்களைப் போலாவார்கள்; அவர்களை இராதபடி செய்யும் வரைக்கும் லாமானியர் துரத்துவார்கள். இப்பொழுதும் அக்கிரமத்தினிமித்தம் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படும்.
15 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா இந்தக் காரியங்களை ஏலமனிடம் சொன்ன பின்பு, அவனையும், தன்னுடைய பிற குமாரர்களையும் ஆசீர்வதித்தான். அவன் பூமியையும் நீதிமான்களினிமித்தம் ஆசீர்வதித்தான்.
16 பின்பு அவன்: தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, இந்நிலம் சபிக்கப்பட்டதாயிருக்கும். ஆம், இந்நிலம் துன்மார்க்கம் செய்வதில் பழுத்திருக்கிற ஒவ்வொரு தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்கும். ஜனத்திற்கும் அழிவுக்கேதுவாய் சபிக்கப்பட்டதாயிருக்கும்; நான் சொன்னதைப் போலவே சம்பவிக்கும்; ஏனெனில் கர்த்தர் பாவத்தை ஒரு துளியாகிலும் ஏற்றுக் கொள்ளாதவராதலால், இதுவே தேசத்தின் மேல், தேவனுடைய சாபமும், ஆசீர்வாதமுமாயிருக்கிறது என்றான்.
17 இப்பொழுதும் ஆல்மா இவ்வார்த்தைகளைச் சொன்ன போது, ஆம், அன்று முதல் விசுவாசத்தில் திடனாய் நிற்கும் யாவருமாகிய, சபையை அவன் ஆசீர்வதித்தான்.
18 ஆல்மா இதைச் செய்த பின்பு அவன் சாரகெம்லா தேசத்தை விட்டு மீலேக்கின் தேசத்திற்குப் போவதைப் போல புறப்பட்டான். அதற்குப் பின்பு அவனைக் குறித்து கேள்விப்படவேயில்லை. அந்தப்படியே, அவன் மரணத்தைக் குறித்தோ அல்லது அடக்கம் பண்ணப்பட்டதைக் குறித்தோ எங்களுக்குத் தெரியாது.
19 இதோ, அவன் நீதியுள்ள மனுஷனாயிருந்தான் என்று நாங்கள் அறிவோம்; அவன் மோசேயைப்போல ஆவியானவராலே எடுத்துக் கொள்ளப்பட்டானென்றும், அல்லது கர்த்தருடைய கரத்தினால் அடக்கம் பண்ணப்பட்டானென்றும், செய்தி சபைக்குள்ளே பரவிற்று. ஆனால் இதோ, கர்த்தர் மோசேயைத் தன்னிடத்தில் எடுத்துக்கொண்டார் என்று வேதவாக்கியங்கள் சொல்லுகின்றன; அவர் ஆல்மாவையும் ஆவியிலே தம்மிடத்தே எடுத்துக் கொண்டார், என்று நாங்கள் எண்ணுகிறோம். ஏனெனில் இதினிமித்தம் அவனுடைய மரணத்தைக் குறித்தோ, அடக்கம் பண்ணப்பட்டதைக் குறித்தோ எங்களுக்கு ஏதும் தெரியாது.
20 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளினுடைய ஆளுகையின் பத்தொன்பதாவது வருஷ துவக்கத்திலே, ஏலமன் வசனத்தைப் பிரசங்கிக்க ஜனங்களுக்குள்ளே போனான்.
21 ஏனெனில் இதோ, லாமானியருடன் அவர்களது யுத்தங்களாலும், அநேக சிறு கலகங்களாலும், ஜனங்களுக்குள்ளே இருந்த குழப்பங்களாலும், அவர்களுக்குள்ளே தேவனுடைய வார்த்தை அறிவிக்கப்படுவதும், ஆம், சபை முழுவதிலும் ஓர் ஒழுங்கு கொண்டு வரப்படுவதும் அவசியமாயிற்று.
22 ஆதலால், நேபியின் ஜனங்களால் சுதந்தரிக்கப்பட்ட தேசம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நகரமாய், ஆம் தேசம் அனைத்திலுமாக, ஏலமனும் அவன் சகோதரரும் சபையை மறுபடியும் ஸ்தாபிக்கும்படியாகப் போனார்கள். அந்தப்படியே, அவர்கள் தேச முழுவதிலும், சகல சபைகளுக்கும், ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் நியமித்தார்கள்.
23 இப்பொழுதும், அந்தப்படியே, ஏலமனும் அவன் சகோதரரும் சபைக்கு ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் நியமித்த பின், அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. அவர்கள் ஏலமன் மற்றும் அவனுடைய சகோதரர்களின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.
24 ஆனால் அவர்கள் தங்களின் மிகுந்த சம்பத்துகளினிமித்தம், தங்கள் இருதயங்களில் மேட்டிமையாயிருந்து, பெருமையடைந்தார்கள்; ஆகையால் அவர்கள் தங்கள் சொந்த பார்வையில் ஐஸ்வர்யவான்களாகி, தேவனுக்கு முன்பாக தலைநிமிர்ந்து நடக்கும்படி சொன்ன, அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லை.