அதிகாரம் 14
கிறிஸ்துவின் பிறப்பின்போது இரவிலே வெளிச்சமும் ஒரு புது நட்சத்திரமும் தோன்றுமென்று சாமுவேல், முன்னுரைத்தல் – மனுஷரை உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய மரணத்திலிருந்து கிறிஸ்து மீட்டுக்கொள்ளுதல் – அவருடைய மரணத்தின் அறிகுறிகளாக, காரிருளான மூன்று நாட்கள், கன்மலைகள் பிளத்தல், இயற்கையின் கொந்தளிப்புக்கள் ஆகியவை அடங்கும். ஏறக்குறைய கி.மு. 6.
1 இப்பொழுதும், அந்தப்படியே, லாமானியனான சாமுவேல், எழுதப்பட முடியாத இன்னும் அநேக பெரிய காரியங்களை தீர்க்கதரிசனமுரைத்தான்.
2 இதோ, அவன் அவர்களை நோக்கி: இதோ, நான் உங்களுக்கு ஒரு அறிகுறியைக் கொடுக்கிறேன்; ஐந்து வருஷங்களுக்குப் பின்பு, இதோ, அவருடைய நாமத்தை விசுவாசிக்கிற யாவரையும் மீட்க தேவ குமாரன் வருவார்.
3 இதோ, அவருடைய வருகைக்கு ஓர் அறிகுறியாக இதை உங்களுக்குக் கொடுக்கிறேன்; இதோ, அவர் வருகைக்கு முந்தின இரவில் மனுஷனுக்கு ஒரு பகலைப்போல காட்சியளிக்கும் அளவில், இருளே இல்லாதபடி வானத்தில் பெரும் வெளிச்சங்கள் தோன்றும்.
4 ஆகையால், அங்கே ஒரு பகல், ஒரு இரவு, மற்றும் ஒரு பகல் ஆகியவை ஒரு பகலைப்போலவும், இரவு இல்லாததைப் போலவும் இருக்கும். இது உங்களுக்கு ஓர் அறிகுறியாக இருக்கும்; நீங்கள் சூரியனின் உதயத்தையும் அது அஸ்தமிக்கிறதையும் அறிவீர்கள்; ஆகையால், அங்கே இரு பகல், ஓர் இரவு இருப்பதை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள்; ஆயினும் அந்த இரவில் இருள் சூழாது, அது அவர் பிறப்பதற்கு முந்திய இரவாகும்.
5 இதோ, நீங்கள் என்றுமே கண்டிராத ஓர் புதிய நட்சத்திரம் எழும்பும்; இதுவும் உங்களுக்கு ஓர் அறிகுறியாயிருக்கும்.
6 இதோ, இவை மாத்திரமல்ல, வானத்தில் அநேக அறிகுறிகளும், அற்புதங்களும் தோன்றும்.
7 நீங்கள் யாவரும் பூமியில் விழுந்து போகும்படியாய் ஆச்சரியப்பட்டு மலைத்துப் போவீர்கள்.
8 தேவ குமாரன்மேல் விசுவாசிக்கிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.
9 இதோ, நான் வந்து இக்காரியத்தை உங்களுக்கு சொல்லவேண்டுமென்று கர்த்தர் எனக்கு அவரது தூதன் மூலம் கட்டளையிட்டார்; ஆம், நான் இவைகளை உங்களுக்கு தீர்க்கதரிசனமுரைக்க வேண்டுமென்று அவர் கட்டளையிட்டிருக்கிறார். ஆம், அவர் என்னை நோக்கி, இந்த ஜனங்களிடத்தில், மனந்திரும்புங்கள், கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும் கூக்குரலிடுவாயாக என்றார்.
10 இப்பொழுதும் நான் லாமானியன் என்பதாலும், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை உங்களிடத்தில் பேசினதாலும், அவை உங்களுக்கு விரோதமாய் கடினமாயிருந்ததாலும், நீங்கள் என்னோடு கோபம்கொண்டு, என்னை அழிக்க வகைதேடி, என்னை உங்கள் மத்தியிலிருந்து வெளியே தள்ளினீர்கள்.
11 நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்பீர்கள். நீங்கள் உங்கள் அக்கிரமத்தினிமித்தம், உங்களுக்காக காத்திருக்கிற தேவ நியாயத்தீர்ப்புகளைக் குறித்து கேட்டு, மனந்திரும்புதலின் நிபந்தனைகளை நீங்கள் அறியும்படிக்கும் இந்த நோக்கத்திற்காகவே நான் பட்டணத்தின் மதில்களின் மேல் ஏறி வந்திருக்கிறேன்.
12 ஆதியிலிருந்து சகலத்தையும் சிருஷ்டித்தவரும், வானத்திற்கும் பூமிக்கும் பிதாவானவருமான, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்து அறியவும், அவருடைய நாமத்தை நீங்கள் விசுவாசிக்கத்தக்கதாக, அவருடைய வருகையின் அறிகுறிகளையும் அறிந்துகொள்ளவும் வேண்டும்.
13 நீங்கள் அவருடைய நாமத்தை விசுவாசித்தால், நீங்கள் உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் மனந்திரும்புவீர்கள். அதினிமித்தம் அவைகளுக்கான மன்னிப்பை, அவருடைய நற்செயலின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
14 இதோ, மறுபடியும் நான் உங்களுக்கு, ஆம், அவருடைய மரணத்தின் அறிகுறியாக மற்றொரு அறிகுறியைக் கொடுக்கிறேன்.
15 இதோ, இரட்சிப்பு வரும்படியாக அவர் நிச்சயமாக மரிக்கவேண்டும்; ஆம், மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணி, அதினிமித்தம் மனுஷர் கர்த்தரின் சமுகத்தினுள் கொண்டுவரப்படும் பொருட்டு, அவர் மரிப்பது, அவர் செய்யவேண்டியதும் அவசியமானதுமாய் இருக்கிறது.
16 ஆம், இதோ, இந்த மரணம் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணி, அந்த முதலாம் மரணமாகிய ஆவிக்குரிய மரணத்திலிருந்து சகல மனுக்குலத்தையும் மீட்கிறது; ஏனெனில், ஆதாமின் வீழ்ச்சியினாலே சகல மனுக்குலமும் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு, அவர்கள் உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய காரியங்களுக்காக மரித்தவர்களென எண்ணப்பட்டார்கள்.
17 ஆனால் இதோ, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மனுக்குலத்தை, ஆம், சகல மனுக்குலத்தையும் மீட்டு, அவர்களை மறுபடியும் கர்த்தருடைய சமுகத்தில் கொண்டு வருகிறது.
18 ஆம், மனந்திரும்புகிற எவனும் வெட்டப்பட்டு அக்கினிக்குள் போடப்படமாட்டான் என்றும், மனந்திரும்பாத எவனும் வெட்டப்பட்டு அக்கினிக்குள்ளாக போடப்படுவான் என்ற மனந்திரும்புதலின் நிபந்தனையை அது சம்பவிக்கப்பண்ணும்; ஆம், அவர்கள் நீதிக்கடுத்த காரியங்களிலிருந்து அறுப்புண்டதால் இரண்டாவது மரணமாகிய ஆவிக்குரிய மரணம் அவர்கள் மேல் மறுபடியும் வருகிறது.
19 ஆதலால் மனந்திரும்புங்கள். இக்காரியங்களை அறிந்து அதைச் செய்யாமல், நீங்கள் ஆக்கினைக்குள்ளாக வர உங்களையே அனுமதித்து, இந்த இரண்டாம் மரணத்தைப் பெறும்படியாய் கொண்டு வரப்படாதபடிக்கு மனந்திரும்புங்கள்.
20 ஆனால் இதோ, மற்றொரு அறிகுறியாகிய அவருடைய மரணத்தின் அறிகுறியைக் குறித்து உங்களுக்குச் சொன்னதுபோல, அவரது மரணத்தின் அடையாளமாக, இதோ, அவர் மரிக்கும் அந்நாளில் சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் இருண்டு தங்கள் வெளிச்சதைக் கொடுக்க மறுக்கும்; அவர் மரணமடையும் காலம் துவங்கி மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிர்த்தெழும் காலம் வரைக்குமான மூன்று நாளளவும் இந்த தேசத்தின் மேல் எந்த ஒளியும் இராது.
21 ஆம், அவர் ஆவியை விடும் சமயத்தில் அங்கே பலமணி நேரத்திற்கு இடிகளும், மின்னல்களும் இருக்கும். பூமி அதிர்ந்து நடுங்கும், பெரும்பாலும் ஒரே கட்டியாக இருப்பதாக நீங்கள் அறிகிற, மண்ணின் மேலும், கீழுமான இப்பூமியின் பரப்பிலுள்ள, அல்லது இப்பொழுதும் ஒரே கெட்டியான கற்பாறையின் பெரும் பகுதி நொறுக்கப்படும்.
22 ஆம், அவைகள் இரண்டாகப் பிளந்துபோகும். அதற்குப் பின்பு அவை மண்ணின் மேலும், கீழுமாக பூமியனைத்தின் பரப்பிலும் சிறு குவியல்களாகவும், பிளவுபட்டவைகளாகவும், உடைந்துபோன துகள்களாகவும் காணப்படும்.
23 இதோ, அங்கே பெரும் புயல்களிருக்கும். அங்கே அநேக மலைகள் ஒரு பள்ளத்தாக்கைப் போல தாழ்த்தப்படும். இப்போது பள்ளத்தாக்குகள் என்று அழைக்கப்படுகிற அநேக இடங்கள், அதிக உயரம் கொண்ட மலைகளாக மாறும்.
24 அநேக நெடுஞ்சாலைகள் உடைக்கப்பட்டுப் போகும். அநேக பட்டணங்கள் பாழாய்ப் போகும்.
25 அநேக கல்லறைகள் திறக்கப்பட்டு, தங்கள் மரித்தோரில் அநேகரை விடுவிக்கும், அநேக பரிசுத்தவான்கள் அநேகருக்கு காட்சியளிப்பார்கள்.
26 இதோ, இப்படியாக தூதன் என்னிடத்தில் பேசினான்; ஏனெனில் அவன் என்னை நோக்கி, அங்கே பலமணிநேரங்களாக இடிகளும், மின்னல்களும் இருக்குமென்றான்.
27 அவன் என்னை நோக்கி, இடிகளும், மின்னல்களும், புயல்களும் நீடித்திருக்கையில், இவை நடக்கும் பொருட்டு மூன்று நாளளவும் அந்தக் காரிருள் பூமி முழுவதையும் மூடும், என்றான்.
28 மனுபுத்திரருக்குள்ளே அவிசுவாசத்தின் எக்காரணமும் இருக்கக்கூடாதென்ற நோக்கத்திற்காகவும், இந்த தேசத்தின் மேல் எங்கும் வருகிற இந்த அறிகுறிகளையும் அற்புதங்களையும் அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், இதைக் காட்டிலும் பெரிய காரியங்களை அநேகர் காண்பார்கள் என்றும், தூதன் சொன்னான்,
29 விசுவாசிக்கிற எவனும் இரட்சிக்கப்படவும், விசுவாசிக்காத எவன் மேலும் நீதியான நியாயத்தீர்ப்பு வரவேண்டுமென்பதே இதன் நோக்கமாயிருக்கிறது; அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த ஆக்கினைத் தீர்ப்பை தங்கள் மேல் வரப்பண்ணுகிறார்கள்.
30 இதோ, என் சகோதரரே, நினைவுகூருங்கள், நினைவுகூருங்கள், கெட்டுப்போகிற எவனும் தானாகவே கெட்டுப்போகிறான்; அக்கிரமத்தைச் செய்கிற எவனும் தாமாகவே அக்கிரமத்தைச் செய்கிறான்; ஏனெனில் இதோ, நீங்கள் சுதந்தரவாளிகளாயிருக்கிறீர்கள்; நீங்கள் நீங்களாகவே காரியங்களை நடப்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனெனில் இதோ, தேவன் உங்களுக்கு அறிவைத் தந்திருக்கிறார், அவர் உங்களை சுதந்தரவாளிகளாக்கியிருக்கிறார்.
31 நீங்கள் தீமையிலிருந்து நன்மையை அறியத்தக்கதாக அவர் உங்களை அனுமதித்திருக்கிறார். நீங்கள் ஜீவனையோ அல்லது மரணத்தையோ தெரிந்துகொள்ளும்படி அவர் உங்களை அனுமதித்திருக்கிறார். நீங்கள் நன்மையைச் செய்து, நன்மையானவைகளிடத்தில் மறுபடியும் சேர்க்கப்படலாம். அல்லது நன்மையானது மறுபடியும் உங்களிடத்தில் சேர்க்கப்படலாம்; இல்லாவிடில் பொல்லாப்பைச் செய்து பொல்லாப்பை மறுபடியும் உங்களிடத்தில் சேரச் செய்யலாம்.