வேதங்கள்
மோசியா 13


அதிகாரம் 13

அபிநாதி தெய்வீக வல்லமையால் பாதுகாக்கப்படுதல் – அவன் பத்து கட்டளைகளைப் போதித்தல் – மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் மாத்திரமே இரட்சிப்பு வருவதில்லை – தேவன் தாமே ஒரு பாவநிவர்த்தி செய்து தன் ஜனத்தை மீட்டுக்கொள்வார். ஏறக்குறைய கி.மு. 148.

1 இப்பொழுதும் இந்த வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் ஆசாரியர்களை நோக்கி: இவனைக்கொண்டு சென்று கொன்றுபோடுங்கள். இவன் பைத்தியக்காரனாயிருப்பதினால் இவனோடு நமக்கு என்ன சகவாசம், என்றான்.

2 அவர்கள் எழுந்து தங்கள் கைகளை அவன்மீது போட முற்பட்டார்கள்; அவனோ அவர்களை எதிர்த்து:

3 என்னைத் தொடாதீர். உங்கள் கைகளை என்மீது போடுவீர்களெனில், தேவன் உங்களை அடிப்பார். ஏனெனில், கர்த்தர் என்னை அனுப்பி, அறிவிக்கச் சொன்ன செய்தியை நான் அறிவிக்கவில்லை; நான் சொல்லவேண்டுமென்று நீங்கள் வேண்டியவற்றையும், நான் இன்னும் சொல்லவில்லை. ஆதலால் இச்சமயத்திலே நான் கொல்லப்பட்டுப்போகும்படி தேவன் இடங்கொடார்.

4 ஆனால் தேவன் எனக்குக் கட்டளையிட்ட கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினிமித்தம் என்னிடம் நீங்கள் குரோதம் கொண்டீர்கள். மறுபடியும் நான் தேவனுடைய வார்த்தையைப் பேசினதாலே, நான் பைத்தியக்காரன் என்று என்னை தீர்மானித்துக்கொண்டீர்கள், என்றான்.

5 இப்பொழுது, அந்தப்படியே, அபிநாதி இந்த வார்த்தைகளைப் பேசின பின்பு, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மீது இருந்ததினால், நோவா ராஜாவின் ஜனங்கள் அவன் மீது தங்கள் கைகளைப்போடத் துணியவில்லை; சீனாய் மலையில், கர்த்தருடன் பேசுகையில் மோசேயின் முகம் மாறியிருந்ததைப்போலவே, அவனுடைய முகமும் மிகவும் அதிகமாய்ப் பிரகாசித்தது.

6 அவன் தேவனிடத்திலிருந்து பெற்ற வல்லமையோடும், அதிகாரத்தோடும் பேசினான். அவன் தன் வார்த்தைகளைத் தொடர்ந்து:

7 என்னைக் கொன்றுபோட உங்களுக்கு வல்லமையில்லை என்பதைக் காண்கிறீர்கள். ஆகவே என் செய்தியை நான் முடிக்கிறேன். ஆம், உங்கள் அக்கிரமங்களைக் குறித்த உண்மையை நான் உங்களிடம் சொல்வதால், அது உங்கள் இருதயங்களை ஊடுருவிச் செல்கிறது, என நான் எண்ணுகிறேன்.

8 ஆம், என் வார்த்தைகள் உங்களை ஆச்சரியத்தாலும், வியப்பாலும், கோபத்தாலும் நிறைக்கின்றனவே.

9 ஆனால் என் செய்தியை முடித்துக் கொள்கிறேன். அதன் பின்பும் பிழைத்திருப்பேனேயெனில், நான் செல்லுமிடம் முக்கியமானதில்லை.

10 அன்றியும் நான் உங்களுக்கு இவ்வளவாய்ச் சொல்லுகிறேன். இதற்கு பின்பு, என்னை என்ன செய்கிறீர்களோ அது, வரப்போகிறவைகளுக்கு முன்னடையாளமாகவும் நிழலாட்டமாகவுமிருக்கும்.

11 இப்பொழுதும் தேவனுடைய கட்டளைகளில் மீதியானவைகள் உங்களின் இருதயங்களிலே எழுதப்படாததை நான் அறிந்ததாலே, அவைகளை உங்களுக்கு வாசிக்கிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அக்கிரமத்தைக் கற்பதிலும், போதிப்பதிலும் செலவிட்டீர்கள், என நான் எண்ணுகிறேன்.

12 இப்பொழுது, நான் உங்களுக்குச் சொன்னவைகளை நினைவில் கொள்ளுங்கள்: மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும், உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பானதையும், யாதொரு வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

13 மேலும் நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தராகிய நான் பொறாமையுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிற பிதாக்களுடைய அக்கிரமத்தை, பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

14 அவர்களில் என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்ளும் ஆயிரக்கணக்கானோருக்கு இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்.

15 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; ஏனெனில் கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவர்களைத் தண்டியாமல் விடார்.

16 ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க நினைப்பாயாக.

17 ஆறு நாளும் நீ வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.

18 ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களிலிருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

19 கர்த்தர் ஆறு நாளிலே வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்; ஆகையால் கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார்.

20 உன் கர்த்தராகிய தேவன் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருக்க, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக.

21 கொலை செய்யாதிருப்பாயாக.

22 விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக.

23 உனது அயலானுக்கு விரோதமாய் பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.

24 உன் அயலானுடைய இல்லத்தை இச்சியாதிருப்பாயாக. உன் அயலானுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் உன் அயாலானுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

25 அந்தப்படியே, அபிநாதி இந்த வார்த்தைகளைப் பேசி முடித்த பின்பு, அவன் அவர்களை நோக்கி, இந்தக் கட்டளைகளை இந்த ஜனங்கள் கைக்கொள்ளும்படி, இந்தக் காரியங்கள் அனைத்தையும் அவர்கள் கருத்தாய் செய்யவேண்டுமென போதித்தீர்களா?

26 நான் உங்களை நோக்கி, அப்படியல்ல என்கிறேன், அப்படி செய்திருப்பீர்களானால், இந்த ஜனத்தைக் குறித்து பொல்லாப்பை தீர்க்கதரிசனமாய் உரைக்க கர்த்தர் என்னை இங்கே வரும்படிச் செய்திருக்கமாட்டார்.

27 இப்பொழுதும் நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் இரட்சிப்பு வருகிறது என்றீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தை முன்பு போலவே கைக்கொள்ளுவது அவசியமாயிருக்கிறது, என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்வது அவசியமற்றுப் போகும் காலமும் வருமென்று, உங்களுக்குச் சொல்கிறேன்.

28 மேலும், நியாயப்பிரமாணத்தினால் மட்டுமே இரட்சிப்பு வருவதில்லை. மோசேயின் நியாயப்பிரமாணம் இருப்பினும், தேவன் தாமே தன் ஜனத்தினுடைய பாவங்களுக்காவும், அக்கிரமங்களுக்காகவும் செய்யவிருக்கிற பாவநிவர்த்தி சம்பவியாமல் போகுமேயானால், அவர்கள் தவிர்க்க முடியாமல் அழிந்துபோவார்கள்.

29 இப்பொழுதும் இஸ்ரவேலின் பிள்ளைகள், வணங்காக் கழுத்துள்ளவர்களாயும், அக்கிரமத்தைச் சடுதியாய் செய்கிறவர்களாயும், கர்த்தராகிய தங்கள் தேவனை நினைவுகூர தாமதிக்கிற ஜனங்களாயும் இருப்பதினாலே, அவர்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட வேண்டிய அவசியமுள்ளது; ஆம் கடுமையான ஒரு நியாயப்பிரமாணம், என்று நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30 ஆதலால் அவர்கள் தேவனை நினைவுகூரும்படிக்கும் அவருக்கு தங்களின் கடமைகளைச் செய்யவும், ஒவ்வொரு நாளும் சற்றும் மாறாமல் கைக்கொள்ளவும், சடங்குகளும், நியமங்களுமான நியாயப்பிரமாணம் ஒன்று, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

31 இதோ, வரவிருக்கிற காரியங்களுக்கு இவைகள் முன்மாதிரிகளாய் இருக்கின்றன, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

32 இப்பொழுதும் அவர்கள் நியாயப்பிரமாணத்தை அறிந்துகொண்டார்களா? இல்லை. அவர்களில் அனைவரும் நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கவில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இது அவர்களின் இருதயத்தின் கடினத்தினிமித்தமே. ஏனெனில் தேவனின் மீட்பின் மூலம் மாத்திரமே அல்லாமல் ஒரு மனுஷனும் இரட்சிக்கப்படமுடியாது, என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

33 ஏனெனில் இதோ, அந்த மேசியாவின் வருகையைக் குறித்தும், தேவன் தம் ஜனத்தை மீட்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மோசே தீர்க்கதரிசனமுரைக்கவில்லையா? ஆம், உலகம் துவங்கினது முதல் தீர்க்கதரிசனமுரைத்த தீர்க்கதரிசிகளெல்லோரும், ஏறக்குறைய இந்தக் காரியங்களைக்குறித்து பேசியிருக்கவில்லையா?

34 தேவன் தாமே மனுபுத்திரர் மத்தியிலே வந்து மனுஷனின் சாயலைத் தரித்து, பூமியின் பரப்பின் மீதெங்கும், பலத்த வல்லமையோடு செல்லுவார், என்று அவர்கள் சொல்லவில்லையா?

35 அவர் நொறுக்கப்பட்டு, உபத்திரவப்பட்டு, மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுவார், என்று அவர்கள் சொல்லவில்லையா?