அதிகாரம் 17
அபிநாதியினுடைய வார்த்தைகளை ஆல்மா விசுவாசித்து எழுதுதல் – அபிநாதி அக்கினியால் மரணமடைதல் – அவன் தன்னைக் கொலை செய்கிறவர்கள் நோய்வாய்ப்பட்டும், அக்கினியாலும் மரிப்பார்களென்று தீர்க்கதரிசனமுரைத்தல். ஏறக்குறைய கி.மு. 148.
1 இப்பொழுதும், அந்தப்படியே, அபிநாதி இவைகளைப் பேசி முடித்த பின்பு, ஆசாரியர்கள் அவனைப் பிடித்து, கொலைசெய்ய வேண்டுமென்று, ராஜா கட்டளையிட்டான்.
2 அவர்களுக்குள்ளே நேபியின் சந்ததியான, ஆல்மா என்ற பெயருடைய ஒருவனிருந்தான். அவன் ஒரு வாலிபனாயிருந்தான். அபிநாதியினுடைய வார்த்தைகளை விசுவாசித்தான். ஏனெனில் அபிநாதி அவர்களுக்கு விரோதமாய் சாட்சி கொடுத்த, அவர்களின் அக்கிரமங்களைக்குறித்து அவன் அறிவான். ஆதலால் ராஜா அபிநாதி மேல் கோபம் கொள்ளாமல், அவனை சமாதானத்துடனே போகவிடும்படிக் கெஞ்சினான்.
3 இதனால் ராஜா அதிகமாய் கோபமடைந்து, ஆல்மா அவர்கள் மத்தியிலிருந்து புறம்பே தள்ளப்படும்படிக்கும், அவனைக் கொன்றுபோடும்படிக்கும், தன்னுடைய வேலையாட்களை அவன் பின்னே அனுப்பினான்.
4 அவர்கள் முன்பிருந்து அவன் ஓடிப்போய், அவர்கள் காணக்கூடாதபடி ஒளிந்துகொண்டான். அவன் அநேக நாட்கள் மறைவிலிருந்து அபிநாதி பேசிய எல்லா வார்த்தைகளையும் எழுதினான்.
5 அந்தப்படியே, ராஜா தன் காவற்காரர்கள் அபிநாதியைச் சூழ்ந்து பிடிக்கும்படிக்கு கட்டளையிட்டான். அவர்களும் அவனைக் கட்டி, சிறையிலே அடைத்தார்கள்.
6 மூன்று நாட்கள் தன் ஆசாரியர்களுடன் ஆலோசித்து, அவனை மறுபடியும் தனக்கு முன்பாகக் கொண்டு வரும்படிச் செய்தான்.
7 அவன் அவனை நோக்கி: அபிநாதியே, உனக்கு விரோதமாய் ஒரு குற்றச்சாட்டை நாங்கள் கண்டோம். நீ மரணத்திற்கு பாத்திரவானாயிருக்கிறாய்.
8 ஏனெனில் தேவன் தாமே மனுபுத்திரர் மத்தியிலே வருவாரென்று நீ சொல்லியிருக்கிறாய்; இப்பொழுதும் இந்த காரணத்திற்காக, நீ என்னையும் என் ஜனத்தையும் குறித்து, பொல்லாப்பாய்ப் பேசின சகல வார்த்தைகளையும், நீ மறுத்தாலொழிய, நீ மரணத்திற்குள்ளாவாய்.
9 இப்பொழுது அபிநாதி அவனை நோக்கி, நான் இந்த ஜனத்தைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் உண்மையாதலால், அவைகளை மறுக்கமாட்டேன். நீ அவைகளின் சத்தியத்தை அறிந்து கொள்ளும்பொருட்டு, உன்னுடைய கைகளுக்குள் சிக்கும்படிக்கு, என்னையே ஒப்புக்கொடுத்திருக்கிறேன்.
10 ஆம், நான் மரணத்தையும் சகித்திருப்பேன். என் வார்த்தைகளை மறுக்கமாட்டேன். அவைகள் உனக்கு விரோதமாய் ஒரு சாட்சியமாய் நிற்கும். என்னைக் கொலை செய்வீர்களானால், குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவீர்கள். இதுவும் கடைசி நாளிலே உங்களுக்கு விரோதமாய் சாட்சியமாய் நிற்கும் என்றான்.
11 இப்பொழுதும் நோவா ராஜா, அவனது வார்த்தையினிமித்தம், திகிலடைந்து, தன்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கள் வருமென்று பயந்து, அவனை விடுவிக்க இருந்தான்.
12 ஆனால் ஆசாரியர்கள் அவனுக்கு விரோதமாய் தங்கள் சத்தங்களை உயர்த்தி, அவனைக் குற்றம் சாட்டத் துவங்கி, அவன் ராஜாவை நிந்தித்தான், என்றார்கள். ஆதலால் ராஜா அவனுக்கு விரோதமாய் கோபமடையத் தூண்டப்பட்டு, அவன் கொலை செய்யப்படும்படிக்கு, அவனை ஒப்புக்கொடுத்தான்.
13 அந்தப்படியே, அவர்கள் அவனைப் பிடித்துக் கட்டி, அவன் சாகுமட்டும் சுள்ளிக்கட்டினால் அவனுடைய மேனியை அடித்தார்கள்.
14 இப்பொழுதும் அக்கினி ஜூவாலைகள் அவனைத் தகிக்கும்போது, அவன் அவர்களை நோக்கி கூக்குரலிட்டு:
15 இதோ, நான் துன்பப்படும்படி எனக்கு நீங்கள் செய்தது போலவே, உங்கள் சந்ததியாரும், அநேகரை நான் இப்பொழுது அனுபவிக்கும் வேதனைகளால், அதுவும் அக்கினியாலான மரணத்தின் வேதனைகளை அனுபவிக்கச் செய்யும் காலம் வரும்; அவர்கள் கர்த்தராகிய தங்களின் தேவனின் இரட்சிப்பை விசுவாசிப்பதினிமித்தம் இப்படிச் செய்வார்கள்.
16 உங்கள் அக்கிரமங்களினிமித்தம் சகல விதமான நோய்களால் வாதிக்கப்படுவீர்கள்.
17 ஆம், நீங்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் அடிக்கப்படுவீர்கள். காட்டின் கொடிய மிருகங்களால் அலைக்கழிக்கப்படுகிற, காட்டு மந்தையைப்போல, அங்கேயும் இங்கேயும் நீங்கள் அலைக்கழிக்கப்பட்டு, சிதறடிக்கப்படுவீர்கள்.
18 அந்நாளிலே நீங்கள் வேட்டையாடப்பட்டு, உங்களுடைய சத்துருக்களின் கைகளிலே அகப்பட்டு, நான் துன்பப்படுகிற அக்கினியாலான மரணத்தின் வேதனைகளால் நீங்களும் துன்பப்படுவீர்கள்.
19 இவ்விதமாய் தேவன் தம் ஜனத்தை அழிக்கிறவர்களின் மீது நீதியை சரிக்கட்டுகிறார். தேவனே, என் ஆத்துமாவை ஏற்றுக்கொள்ளும், என்றான்.
20 இப்பொழுதும் அபிநாதி இந்த வார்த்தைகளைச் சொன்னபின்பு, அவன் அக்கினியாலான மரணத்தினால் மரித்தான்; ஆம், அவன் தன் வார்த்தைகளின் சத்தியத்தை தன்னுடைய மரணத்தினாலே முத்திரையிட்டு, தேவனுடைய கட்டளைகளை மறுக்காததினிமித்தம், கொலை செய்யப்பட்டான்.