பாகம் 133
நவம்பர் 3, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தலின் முகவுரையாக ஜோசப் ஸ்மித்தின் வரலாறு கூறுகிறது “இந்த நேரத்தில் பூமியின் குடிகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு சம்பந்தப்பட்டதையும் கூடுகையைக் குறித்தும் அநேக காரியங்களை மூப்பர்கள் அறிந்துகொள்ள வாஞ்சித்தார்கள்; மெய்யான ஒளியில் நடக்கும்படியாகவும், உன்னதத்திலிருந்து அறிவுறுத்தப்படும்படியாகவும் நவம்பர் 3, 1831ல் கர்த்தரை நான் விசாரித்து பின்வரும் முக்கியமான வெளிப்படுத்தலை நான் பெற்றேன்.” கோட்பாடும் உடன்படிக்கைகளும் புஸ்தகத்திற்கு ஒரு பிற்சேர்க்கையாக முதலில் இந்த பாகம் சேர்க்கப்பட்டு இறுதியில் ஒரு பாகத்தின் எண் கொடுக்கப்பட்டது.
1–6, இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்பட பரிசுத்தவான்கள் கட்டளையிடப்பட்டார்கள்; 7–16, பாபிலோனிலிருந்து ஓடி, சீயோனுக்கு வரவும், கர்த்தரின் மகத்தான நாளுக்காக ஆயத்தப்படவும் சகல மனுஷர்களும் கட்டளையிடப்பட்டார்கள்; 17–35, அவர் சீயோன் மலைமீது நிற்பார், கண்டங்கள் ஒரு தேசமாக மாறும், காணாமற்போன இஸ்ரவேல் கோத்திரத்தார் திரும்பி வருவார்கள்; 36–40, உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்பட ஜோசப் ஸ்மித் மூலமாக சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது; 41–51, துன்மார்க்கர்மீது பழிவாங்க கர்த்தர் கீழிறங்கி வருவார்; 52–56, இது அவருடைய மீட்பின் வருஷமாயிருக்கும்; 57–74, பரிசுத்தவான்களை இரட்சிக்கவும் துன்மார்க்கரின் அழிவிற்காகவும் சுவிசேஷம் அனுப்பப்படும்.
1 எனது சபையின் ஜனங்களே செவி கொடுங்கள், உங்களைக் குறித்து கர்த்தரின் வார்த்தையைக் கேளுங்கள் என,
2 அவருடைய ஆலயத்திற்கு திடீரென வருகிற கர்த்தர், நியாயத்தீர்ப்புக்காக ஒரு சாபத்துடன் உலகத்தின் மீது வரவிருக்கிற கர்த்தர், ஆம், தேவனை மறக்கிற சகல தேசங்கள்மீதும், உங்களுக்கு மத்தியிலிருக்கிற சகல துன்மார்க்கர்மீதும், ஒரு சாபத்துடன் உலகத்தின்மீது வந்திறங்குகிற, கர்த்தராகிய உன்னுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
3 ஏனெனில் எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
4 ஆகவே, எனது ஜனங்களே, ஆயத்தப்படுங்கள்; உங்களை பரிசுத்தம் பண்ணுங்கள், ஒன்றுகூடி வாருங்கள், சீயோனின் தேசத்தின்மீதுள்ள எனது சபையின் ஜனங்களே நீங்கள் யாவரும் தங்குவதற்கு கட்டளையிடப்பட்ட யாவரும் ஆயத்தப்படுங்கள்.
5 பாபிலோனிலிருந்து வெளியே போங்கள். கர்த்தருடைய பாத்திரங்களை சுமப்பவர்களே சுத்தமாயிருங்கள்.
6 உங்களுடைய விசேஷித்த பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அடிக்கடி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மனுஷனும் கர்த்தரின் நாமத்தை அழைப்பானாக.
7 ஆம், மெய்யாகவே மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தருடைய சத்தம் உங்களுக்கு வரும் காலம் வந்தது, பாபிலோனைவிட்டுப் போங்கள்; வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறு முனைமட்டும் நாலு திசைகளிலிருந்தும் சகல ஜாதிகளுக்கு மத்தியிலிருந்தும் கூடிச்சேருங்கள்.
8 தொலை தூரத்திலிலுள்ள தேசங்களுக்கும், சமுத்திரத்தின் தீவுகளுக்கும், அந்நிய நாடுகளுக்கும் என்னுடைய சபையின் மூப்பர்களை அனுப்புங்கள்; முதலில் புறஜாதியாரையும் பின்னர் யூதர்களையும், சகல தேசங்களையும் அழையுங்கள்.
9 இதோ, இது அவர்களின் கூக்குரலாயும், சகல ஜனங்களுக்கும் கர்த்தரின் சத்தமாயுமிருக்கும்: என்னுடைய ஜனங்களின் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படியாகவும், அவளுடைய பிணையங்கள் பெலப்படுத்தப்படும்படியாகவும், சீயோன், சுற்றிலுமுள்ள பகுதிகளுக்குச் செல்லும்படியாகவும், சீயோன் தேசத்திற்குப் போங்கள்.
10 ஆம், சகல ஜனங்களுக்கு மத்தியிலும் கூக்குரல் போவதாக: விழித்தெழும்புங்கள், மணவாளனை சந்திக்கப் போங்கள்; இதோ, மணவாளன் வருகிறார்; அவரைச் சந்திக்க போங்கள். கர்த்தரின் மகத்தான நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.
11 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
12 ஆகவே, புறஜாதியாருக்கு மத்தியிலுள்ள அவர்கள் சீயோனுக்கு ஓடிப்போவார்களாக.
13 யூதாவினுடைய அவர்கள் கர்த்தரின் ஆலயத்தின் மலைகளுக்கு எருசலேமிற்கு ஓடிப்போவார்களாக.
14 ஜாதிகளுக்கு மத்தியிலிருந்து, ஆவிக்குரிய பாபிலோனாகிய பாபிலோனிலிருந்தும் துன்மார்க்கத்தின் மத்தியிலிருந்தும் போங்கள்.
15 ஆனால் மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், உங்களின் ஓட்டம் அவசரமாயில்லாதிருப்பதாக; ஆனால் உங்களுக்கு முன்பாக சகல காரியங்களும் ஆயத்தப்படுத்தப்படுவதாக; போகிறவனுக்கு அவன்மீது திடீரென அழிவு வராதிருக்கும்படியாக அவன் திரும்பிப் பார்க்காதிருப்பானாக.
16 பூமியின் குடிகளே செவிகொடுங்கள், கேளுங்கள். என்னுடைய சபையின் மூப்பர்களே ஒன்றுகூடிக் கவனித்து கர்த்தரின் சத்தத்தைக் கேளுங்கள்; ஏனெனில் அவர் சகல மனுஷர்களையும் அழைக்கிறார், எல்லா இடங்களிலுமுள்ள சகல மனுஷர்களையும் மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
17 ஏனெனில் இதோ, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கு அவருடைய பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள், ஏனெனில் அவருடைய வருகையின் மணிநேரம் சமீபித்திருக்கிறது என்று வானத்தின் மத்தியிலே கூக்குரலிடுகிற கர்த்தராகிய தேவன் அனுப்பிய தூதன் சொல்வான்.
18 ஆட்டுக்குட்டியானவர் சீயோன் மலைமீது நின்று கொண்டிருக்கும்போது தங்களுடைய நெற்றிகளின் மீது அவருடைய பிதாவின் நாமம் எழுதப்பட்டு, அவருடன் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் இருப்பார்கள்.
19 ஆகவே, மணவாளனின் வருகைக்காக ஆயத்தமாயிருங்கள்; போங்கள், அவரைச் சந்திக்க போங்கள்.
20 ஏனெனில் இதோ, அவர் ஒலிவ மலையின் மீதும், மகா ஆழமானதுமான பெலத்த சமுத்திரத்தின் மீதும், கடலின் தீவுகளின் மீதும், சீயோன் தேசத்தின் மீதும் நிற்பார்.
21 சீயோனிலிருந்து அவருடைய குரலில் உச்சரிப்பார். எருசலேமிலிருந்து அவர் பேசுவார், சகல ஜனங்களுக்கு மத்தியிலும் அவருடைய சத்தம் கேட்கப்படும்;
22 அநேக தண்ணீர்களின் சத்தத்தைப் போன்று, மலைகளை தகர்க்கிற ஒரு மகா பெரிய இடிமுழக்கத்தின் சத்தமாக அது இருக்கும், பள்ளத்தாக்குகள் காணப்படாது.
23 மகா ஆழங்களை அவர் கட்டளையிட்டு அது வடக்கு தேசங்களுக்குள் பின்னாகத் தள்ளப்பட்டு தீவுகள் ஒரே தேசமாக மாறும்;
24 எருசலேமின் தேசமும் சீயோனின் தேசமும் தங்களுடைய சொந்த இடத்திற்கு திரும்பப்போய், பூமி பிரிக்கப்படுவதற்கு முந்தைய நாட்களில் அது இருந்ததைப் போலிருக்கும்.
25 கர்த்தரும், இரட்சகருமானவர் அவருடைய ஜனங்களுக்கு மத்தியில் நின்று சகல மாம்சங்கள்மீதும் ஆளுகை செய்வார்.
26 வடக்கு தேசங்களிலுள்ள அவர்கள் நினைவுகூருதலில் கர்த்தருக்கு முன்பாக வருவார்கள்; அவர்களுடைய தீர்க்கதரிசிகள் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள், இனி ஒருபோதும் தங்கிவிட மாட்டார்கள்; அவர்கள் பாறைகளை அடிப்பார்கள், அவர்களுக்கு முன்பாக பனி வழிந்தோடும்.
27 மகா ஆழத்தின் மத்தியில் ஒரு பெரும் பாதைப் போடப்படும்.
28 அவர்களுடைய சத்துருக்கள் அவர்களுக்கு இரையாவார்கள்,
29 பாழ் வனாந்தரங்களில் ஜீவதண்ணீரின் நீரூற்றுகள் வரும்; வெட்டாந்தரை இனியும் ஒரு விடாய்த்த நிலமாயிராது.
30 என்னுடைய ஊழியக்காரர்களாகிய, எப்பிராயீம் பிள்ளைகளுக்கு, தங்களுடைய ஐஸ்வரியமான பொக்கிஷங்களைக் கொண்டுவருவார்கள்.
31 அவர்களுக்கு முன்பாக நித்திய பர்வதங்களின் எல்லைகள் நடுங்கும்.
32 அங்கே, சீயோனிலும் அவர்கள் கீழே விழுந்து, கர்த்தரின் ஊழியக்காரர்களான எப்பிராயீமின் பிள்ளைகளின் கைகளினால் மகிமையுடன் கிரீடம் சூட்டப்படுவார்கள்.
33 நித்திய சந்தோஷத்தின் பாடல்களுடன் அவர்கள் நிரப்பப்படுவார்கள்.
34 இதோ, இஸ்ரவேல் கோத்திரத்தார் மீது நித்திய தேவனின் ஆசீர்வாதமாகவும், எப்பிராயீம் மற்றும் அவனுடைய தோழர்களின் தலைகள்மீது ஐஸ்வரியத்தின் ஆசீர்வாதமாக இது இருக்கிறது.
35 அவர்களும்கூட யூதாவின் கோத்திரத்தார் ஆவார்கள், அவர்களின் வேதனைக்கு பின்பு, இரவும் பகலும் என்றென்றைக்குமாய் அவருடைய பிரசன்னத்தில் வாழ கர்த்தருக்கு முன்பாக சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படுவார்கள்.
36 இப்பொழுது, மெய்யாகவே கர்த்தர் சொல்லுகிறார், பூமியின் குடிகளே இந்தக் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் அறியப்படும்படியாக, சிலருக்கு தோன்றி அதை மனுஷர்களுக்கு ஒப்புவித்த, பூமியில் வாழ்கிற அநேகருக்கு தோன்றவிருக்கிற, நித்திய சுவிசேஷத்தைக் கொண்டிருக்கிற வானத்தின் மத்தியிலே பறந்துவருகிற என்னுடைய தூதனை நான் அனுப்பினேன்.
37 இந்த சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்துக்குள்ளும், இனத்திற்குள்ளும், பாஷைக்குள்ளும், ஜனங்களுக்குள்ளும் பிரசங்கிக்கப்படும்.
38 ஒரு உரத்த சத்தத்துடன் சொல்லிக்கொண்டு, தேவனின் ஊழியக்காரர்கள் போவார்கள்: அவருடைய நியாயத்தீர்ப்பின் நேரம் வருகிறதால் தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்;
39 வானத்தையும் பூமியையும், கடலையும் தண்ணீரின் நீரூற்றுக்களையும் உண்டாக்கின அவரை தொழுது கொள்ளுங்கள்,
40 இரவும் பகலும் கர்த்தரின் நாமத்தை அழைத்துக்கொண்டு சொல்லுங்கள்: பர்வதங்கள் உமக்கு முன்பாக உருண்டோடிப் போகும்படிக்கும் நீர் கீழிறங்கி வரும்படிக்கும் வானங்களைக் கிழிக்க வேண்டும்.
41 அவைகள் அவர்களுடைய சிரசுகளிலே பதிலளிக்கப்படும்; ஏனெனில் உருக்கும் அக்கினி எரிவது போலவும், அக்கினி தண்ணீரைக் கொதிக்கப்பண்ணுவது போலவும் கர்த்தரின் பிரசன்னமிருக்கும்.
42 கர்த்தாவே, உம்முடைய நாமத்தை உமது சத்துருக்கள் அறிந்து கொள்ளச் செய்யும்படியாகவும் சகல தேசங்களும் உம்முடைய பிரசன்னத்தில் நடுங்கும்படியாகவும் கீழிறங்கி வாரும்,
43 அவர்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்யும்போது;
44 ஆம், நீர் கீழிறங்கி வரும்போது, உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போகும், களிகூருகிற, நீதியை நடப்பிக்கிற, உமது வழிகளில் உம்மை நினைவு கூருகிறவனை நீர் சந்திப்பீர்.
45 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் ஆயத்தம் செய்தவைகளான இவ்வளவு மகத்தான காரியங்களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு மனுஷர்கள் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, எந்தக் கண்ணும் பார்த்ததுமில்லை.
46 இது சொல்லப்படும்: பரலோகத்தின் தேவனிடமிருந்து சாயந்தோய்ந்த வஸ்திரங்களுடையவராக, ஆம், அறியப்படாத எல்லைகளிலிருந்து, அவருடைய மகிமையான வஸ்திரத்தை உடுத்தினவராய், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்?
47 அவர் சொல்லுவார்: நீதியாய்ப் பேசி, இரட்சிக்க வல்லவராகிய நான்தான்.
48 கர்த்தருடைய உடுப்புச் சிவப்பாகவும், அவருடைய வஸ்திரங்கள் திராட்சைரச ஆலையை மிதிக்கிறவனின் வஸ்திரங்கள்போலவும் இருக்கும்.
49 சூரியன் தன் முகத்தை அவமானத்தாலே மறைக்கும்படியாகவும், சந்திரன் அதன் ஒளியை மறைத்துக்கொள்ளும்படியாகவும், நட்சத்திரங்கள் தங்களுடைய இடங்களிலிருந்து தள்ளிப்போகும்படியாகவும் அவருடைய மகிமையின் பிரசன்னம் மிகுந்த மகத்தானதாயிருக்கும்.
50 அவருடைய வார்த்தை கேட்கப்படும்: நான் ஒருவனாய் திராட்சைரச ஆலையை மிதித்தேன், சகல ஜனங்கள் மேலும் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தேன்; ஒருவனும் என்னோடிருந்ததில்லை;
51 அவர்களை என் உக்கிரத்திலே நசுக்கிப்போட்டு, என் கோபத்திலே மிதித்து, அவர்களுடைய இரத்தத்தை என் வஸ்திரங்களின்மேல் தெளித்து என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக் கொண்டேன்; ஏனெனில் நீதியைச் சரிக்கட்டும் இந்த நாள் என் மனதிலிருந்தது.
52 இப்பொழுது என்னுடைய மீட்கப்பட்டவர்களின் வருஷம் வந்தது; என்றென்றைக்கும் அவருடைய நன்மையின்படியும், அவருடைய அன்பின் நேசத்தின்படியும் அவர்கள்மீது அவர் அருளிய சகலத்தையும் அவர்களுடைய கர்த்தரின் நேசத்தின் இரக்கத்தையும் என்றென்றைக்குமாக அவர்கள் குறிப்பிடுவார்கள்.
53 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய பிரசன்னத்திலிருந்த தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு;
54 ஆம், ஏனோக்கையும், அவனுடனிருந்தவர்களையும் அவனுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், நோவாவையும், அவனுக்கு முன்பிருந்தவர்களையும், மோசேயையும் அவனுக்கு முன்பிருந்தவர்களையும் பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார்;
55 அவருடைய உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவுடனிருந்த மோசேயிலிருந்து எலியாவரை, எலியாவிலிருந்து யோவான்வரை, மற்றும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பரிசுத்த அப்போஸ்தலர்கள் ஆட்டுக்குட்டியானவரின் பிரசன்னதிலிருப்பார்கள்.
56 பரிசுத்தவான்களின் கல்லறைகள் திறக்கப்படும்; சீயோன் மலையின்மீதும் புதிய எருசலேமான பரிசுத்த பட்டணத்தின் மீதும் அவர் நிற்கும்போது அவர்கள் வந்து ஆட்டுக்குட்டியானவரின் வலது பாரிசத்தில் நிற்பார்கள்; என்றென்றைக்குமாக இரவும் பகலும் ஆட்டுக்குட்டியானவரின் பாடலை அவர்கள் பாடுவார்கள்.
57 இந்தக் காரணத்திற்காக, வெளிப்படுத்தப்படப்போகிற மகிமைகளில் மனுஷர்கள் பங்கேற்கும்படியாக தெளிவாகவும் வஞ்சகமின்றியும் அவருடைய நித்திய உடன்படிக்கையான அவருடைய சுவிசேஷத்தின் பரிபூரணத்தை கர்த்தர் அனுப்பினார்,
58 பூமியில் வந்து கொண்டிருக்கிற அந்தக் காரியங்களுக்காகவும், பலவீனமானவர்களை ஆயத்தப்படுத்தவும் அந்த நாளில் கர்த்தரின் பணிக்காக பெலவீனமானவன் ஞானமானவனை தாறுமாறாக்கும்போது, சிறியவன் ஒரு பலத்த ஜாதியாகி இருவர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள்.
59 அவருடைய ஆவியின் வல்லமையால் பூமியின் பெலவீனமான காரியங்களால் கர்த்தர் தேசங்களைப் பிரித்திடுவார்.
60 இந்தக் காரணத்திற்காக இந்தக் கட்டளைகள் கொடுக்கப்பட்டன; அவைகள் கொடுக்கப்பட்ட நாளில் உலகத்திலிருந்து காக்கப்பட அவைகள் கட்டளையிடப்பட்டன, ஆனால் இப்பொழுது சகல மாம்சங்களுக்கும் போகவேண்டும்,
61 சகல மாம்சங்களையும் அரசாளுகிற கர்த்தரின் எண்ணம் மற்றும் சித்தத்தின்படியே ஆகும்.
62 கர்த்தருக்கு முன்பாக மனந்திரும்பி தன்னை பரிசுத்தம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும்.
63 ஜனங்களுக்கு மத்தியிலிருந்து அவர்கள் அறுப்புண்டு போகும்படியாக தீர்க்கதரிசி மோசேயால் எழுதப்பட்டவை கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுக்காத அவர்கள்மேல் நிறைவேற்றப்படும்.
64 தீர்க்கதரிசி மல்கியாவால் எழுதப்பட்டவையும் கூட. ஏனெனில் இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும், அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும், அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
65 ஆகவே அவர்களுக்கு இதுவே கர்த்தரின் பதிலாயிருக்கும்
66 அந்த நாளிலே நான் எனக்கு சொந்தமானவர்களுக்குள்ளே வந்தேன், உங்களில் ஒருவனும் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, நீங்கள் விரட்டியடிக்கப்பட்டீர்கள்.
67 நான் மீண்டும் அழைத்த போது பதில் சொல்ல அங்கு ஒருவனுமில்லை; இருந்தும் நான் மீட்கக் கூடாதபடிக்கும், விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாதபடிக்கும் எனது கரம் குறுகிப் போகவில்லை.
68 இதோ, என் கண்டித்தலினாலே கடலை வற்றப் பண்ணுகிறேன். நதிகளை வனாந்தரமாக்கிப் போடுகிறேன்; மீன் தாகத்தால் செத்து நாறுகிறது.
69 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
70 என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும், நீங்கள் வேதனையில் கிடப்பீர்கள்.
71 இதோ, உங்களை விடுவிப்பார் யாருமில்லை; ஏனெனில் வானங்களிலிருந்து உங்களை நான் அழைத்தபோது என்னுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை; என்னுடைய ஊழியக்காரர்களை நீங்கள் நம்பவில்லை, அவர்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட போது நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
72 ஆகவே அவர்கள் சாட்சியை முத்திரித்து நியாயப்பிரமாணத்தை கட்டினார்கள், அந்தகாரத்திற்கு நீங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டீர்கள்.
73 அழுகையும், புலம்பலும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளினுள்ளே இவைகள் போகும்.
74 இதோ, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் இதைப் பேசினார். ஆமென்.