“திருவிருந்தில் பங்கேற்குமாறு இயேசு கிறிஸ்து நம்மைக் கேட்டுக்கொண்டார்,”லியஹோனா, மார்ச் 2021
லியஹோனா மாதாந்தர செய்தி, மார்ச் 2021
திருவிருந்தில் பங்கேற்குமாறு இயேசு கிறிஸ்து நம்மைக் கேட்டுக்கொண்டார்
ஒவ்வொரு வாரமும் நமது இரட்சகரை நாம் நினைவுகூரும்போது நாம் கழுவப்படுகிறோம். குணமாக்கப்படுகிறோம்.
இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்பு, கடைசி இராப்போஜனம் என்றழைக்கப்பட்ட ஒரு கடைசி உணவை உண்டார். இந்த உணவின் முடிவில் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் திருவிருந்தை அறிமுகம் செய்தார். அப்பத்தை அவர் பிட்டு அதை ஆசீர்வதித்தார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என அவர் சொன்னார் (லூக்கா 22:19). பின்னர் அவர் திராட்சை ரசப் பாத்திரத்தை ஆசீர்வதித்து பகிர்ந்தார்.
வாராந்தர ஆராதனையின் பாகம்
பூமியில் இயேசு கிறிஸ்துவின் சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டபோது, வாராந்தர ஆராதனையில் திருவிருந்து ஒரு பகுதியானது. சபை நடக்கும்போது, ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களால், திருவிருந்து ஆசீர்வதிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. வேதங்களிலிருந்து வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்கள் ஜெபிக்கிறார்கள் (மரோனி 4; 5 பார்க்கவும்). பின்னர் அவர் நம்மைக் கேட்டுக்கொண்ட வழியில், இயேசு கிறிஸ்துவையும் அவர் நமக்காக செய்த பிராயச்சித்தத்தையும் நினைவுகூரும்படி, சபையிலுள்ள ஒவ்வொருவரும் அப்பத்தை உண்டு, தண்ணீரை அருந்துகிறார்கள்.
பங்கேற்பதற்கு ஆயத்தமாகுதல்
திருவிருந்தில் பங்கேற்க ஆயத்தமாவதற்கு, நமது வாழ்க்கையையும் தேர்ந்தெடுப்புகளையும்பற்றி நேர்மையாக நாம் சிந்திக்கவேண்டும். மன்னிப்புக்காக தேவனிடம் கேட்பதையும் உள்ளடக்கி, கடந்த வாரத்தின் தவறுகளுக்காகவும் பாவங்களுக்காகவும் நாம் மனந்திரும்பவேண்டும். திருவிருந்தில் பங்கேற்க நாம் பூரணராயிருக்கத் தேவையில்லை, ஆனால் நமது இருதயங்கள் தாழ்மையாயிருக்க வேண்டும்.
அப்பத்தையும் தண்ணீரையும்விட உயர்வானது
திருவிருந்தில் பங்கேற்பது ஒரு புனிதமான, பரிசுத்தமான நேரம். அப்பத்தையும் தண்ணீரையும் நாம் எடுத்துக்கொள்ளும்போது, நமக்காக இயேசு கிறிஸ்து கொடுத்த சரீரத்தையும் இரத்தத்தையும் நாம் நினைவுகூருகிறோம் என்பதை திருவிருந்து ஜெபங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவரைப் பின்பற்றவும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் நாம் வாக்களிக்கிறோம். தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முயற்சிக்க நாம் வாக்களிக்கிறோம். பதிலுக்கு, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆறுதல்படுத்துவார், வழிநடத்துவார், குணப்படுத்துவார்.
உடன்படிக்கைகளைப் புதுப்பித்தல்
ஞானஸ்நானம் பெற்ற நாம், ஒரு தூய இருதயத்துடன் திருவிருந்தில் பங்கேற்கும்போது ஞானஸ்நானத்தில் நாம் செய்த உடன்படிக்கையை நாம் புதுப்பிக்கிறோம். பரிசுத்த ஆவியைப் பெறுவதும், நாம் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றதைப் போல பாவத்திலிருந்து கழுவப்படுவதுவும் இதில் அடங்கும். நம் ஒவ்வொருவருக்கும் இயேசு வழங்குகிற நம்பிக்கையும் இரக்கமும் இதுதான். மனந்திரும்பவும் மன்னிக்கப்படவும் ஒருபோதும் மிகத் தாமதமில்லை.
திருவிருந்தைப்பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?
திருவிருந்தை எடுப்பதற்கு முன்பாக, ஆவிக்குரிய விதமாக, நேர்மையாக உள்ளார்ந்து நோக்கி, நம்மை நாமே சோதித்தறியவேண்டும் (1 கொரிந்தியர் 11:28 பார்க்கவும்).
அவர் உயிர்த்தெழுந்த பின்னர், திருவிருந்தை எவ்வாறு எடுக்கவேண்டுமென அமெரிக்காவில் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்குக் காட்டினார் (3 நேபி 18 பார்க்கவும்).
திருவிருந்திற்காக அப்பம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்த தற்கால தீர்க்கதரிசிகள் நமக்குக் கூறியிருக்கிறார்கள், ஆனால் நாம் எதை உண்ணுகிறோம் அல்லது அருந்துகிறோம் என்பது உண்மையில் பொருட்டல்ல (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:2 பார்க்கவும்). சிலநேரங்களில் ஒவ்வாமை உள்ளவர்கள் அப்பம் போன்ற மற்றொரு உணவைப் பயன்படுத்தவேண்டும்.
© 2021 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, March 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17464 418.