“சபை அழைப்புக்களில் சேவை செய்தல்,” லியஹோனா, மார்ச் 2022.
லியஹோனா மாதாந்தர செய்தி, மார்ச் 2022
சபை அழைப்புக்களில் சேவை செய்தல்
“அழைப்புகள்” என்றறியப்படுகிற குறிப்பிட்ட பணிகளில் சேவை செய்ய உறுப்பினர்களை சபைத் தலைவர்கள் கேட்கிறார்கள். மற்றவர்களுக்கு சேவை செய்யவும் தேவனிடத்தில் நெருங்கி வரவும், அழைப்புகள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
நமது அழைப்புகளில் நாம் சேவை செய்யும்போது, தேவனின் பணியை நிறைவேற்ற நாம் உதவுகிறோம். பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும்பற்றி நாம் மற்றவர்களுக்குப் போதித்து, நாம் போதிக்கிறவர்கள் அவர்களிடம் நெருங்கிவர உதவுகிறோம். நாம் உண்மையுள்ளவர்களாக சேவை செய்யும்போது நாம் ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம்.
அழைப்புகளைப் பெறுதல்
சபையில் சேவை செய்பவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு அழைப்பிலும் யாரிடம் கேட்பதென்பதை அறிந்துகொள்ள உணர்த்துதலுக்காக சபைத் தலைவர்கள் ஜெபிக்கிறார்கள். பின்னர், சேவை செய்ய ஒரு உறுப்பினரை தலைவர் அழைத்து அழைப்பின் கடமைகளைப்பற்றி விவரிக்கிறார். தொகுதி அல்லது கிளை உறுப்பினர்கள் ஆதரித்தல் வாக்கை வழங்கும் சபை கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆதரிக்கப்படுகிறார்கள். அழைக்கப்படும் நபரை ஆதரிக்க அவர்கள் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். பின்னர், ஒரு ஆசாரியத்துவத் தலைவரால் உறுப்பினர் ஆசீர்வாதம் கொடுக்கப்படுகிறார். இது பணிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. அவன் அல்லது அவள் சேவை செய்ய உதவுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு, அவனுக்கு அல்லது அவளுக்கு உதவ பிற ஆசீர்வாதங்களும் உறுப்பினருக்கு வழங்கப்படும்.
ஆயர்கள்
ஆயர் ஒரு தொகுதியின் தலைவர். (ஒரு கிளையில், கிளைத் தலைவர் ஒரு ஆயரைப் போன்றவர்.) ஆயராக அழைக்கப்பட, ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கும் தகுதியான ஒருவரை பிணையத் தலைவர் பரிந்துரைக்கிறார். அழைப்பை பிரதான தலைமை அங்கீகரிக்கிறது. பின்னர் ஆயர் ஆதரிக்கப்பட்டு சேவை செய்ய தெரிந்தெடுக்கப்படுகிறார். அவர் ஆசாரியத்துவ திறவுகோல்களையும் பெறுகிறார், அதாவது, தொகுதியை வழிநடத்த அவருக்கு அதிகாரமுள்ளது. ஆயராக, அவர் சேவை செய்கிறார் மற்றும், தொகுதியின் உறுப்பினர்கள் அனைவரையும் வழிநடத்துகிறார்.
தலைமைகள்
ஆசாரியத்துவ குழுமங்கள், ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள், ஆரம்ப வகுப்பு, ஞாயிறுபள்ளி அமைப்புகள் தலைமைகளால், வழக்கமாக ஒரு தலைவர் மற்றும் இரண்டு ஆலோசகர்களால் வழிநடத்தப்படுகின்றன. பிணைய தலைமையால், மூப்பர் குழும தலைமைகள் அழைக்கப்பட்டு தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். தொகுதியிலுள்ள பிற தலைமைகளில் சேவை செய்ய உறுப்பினர்களை ஆயத்துவம் கேட்டுக்கொண்டு, அவர்களைப் பணி அமர்த்துகிறார்கள். தங்களுடைய குழுமங்கள் அல்லது அமைப்புகளில் உறுப்பினர்களுக்கு எல்லா தலைவர்களும் சேவை செய்கிறார்கள். உறுப்பினர்களின் தேவைகளுக்கு அவர்கள் ஊழியம் செய்து, தேவனின் அன்பை உணர அவர்களுக்கு உதவுகிறார்கள்.
பிற அழைப்புகள்
போதித்தல், இசைக்காக உதவுதல், பதிவேடுகளை வைத்திருத்தல், இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல் மற்றும் பிற வழிகளில் சேவை செய்தல் சபையின் பிற அழைப்புகளில் அடங்கும். சபையில் ஒவ்வொரு அழைப்பும் முக்கியமானது, மற்றவர்களுக்கு சேவை செய்யவும் தேவனுக்கு சேவை செய்யவும் உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நமது அழைப்புகளை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றும்போது மற்றவர்களை நாம் பெலப்படுத்தி, சபை வளர உதவுகிறோம்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, March 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18296 418