வேதங்கள்
மோசே 1


மோசேயின் புஸ்தகத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவை

ஜூன் 1830லிருந்து பிப்ருவரி 1831வரை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்பட்டபடியே வேதாகமத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து ஒரு சாராம்சம்.

அதிகாரம் 1

(ஜூன் 1830)

மோசேக்குக்கு தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் – மோசே மறுரூபமாக்கப்படுகிறான் – அவன் சாத்தானால் எதிர்கொள்ளப்படுகிறான் – ஜனங்களிருந்த அநேக உலகங்களை மோசே காண்கிறான் – எண்ணிக்கையில்லாத உலகங்கள் குமாரனால் சிருஷ்டிக்கப்பட்டன – தேவனின் கிரியையும் மகிமையும் மனுஷனின் அநித்தியத்தையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவதற்கே.

1மிக உயர்ந்த மலையின் மீது மோசே எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தில் மோசேயிடம் தேவன் பேசிய வார்த்தைகள்,

2அவன் தேவனை முகமுகமாய்க் கண்டு, அவரோடு அவன் பேசினான், தேவனின் மகிமை மோசேயின் மீதிருந்தது; ஆகவே அவருடைய பிரசன்னத்தை மோசேவால் தாங்கமுடிந்தது.

3இதோ, நானே சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அந்தமில்லாதவரென்பது என்னுடைய நாமம்; ஏனெனில் நான் நாட்களின் ஆரம்பமாயும் வருஷங்களின் முடிவுமில்லாதவர், இது அந்தமற்றதல்லவா எனச்சொல்லி தேவன் மோசேயிடம் பேசினார்.

4இதோ, நீயே என்னுடைய குமாரன்; ஆகவே பார், என்னுடைய கைகளின் சிருஷ்டிப்பை நான் உனக்குக் காண்பிப்பேன்; ஆனால் எல்லாவற்றையும் அல்ல, ஏனெனில் என்னுடைய கிரியைகளும் என்னுடைய வார்த்தைகளும், முடிவில்லாதவை அவைகள் ஒருபோதும் நிற்பதில்லை

5ஆகவே, அவன் என்னுடைய சர்வ மகிமையையும் கண்டாலொழிய என்னுடைய எல்லா கிரியைகளையும் ஒருவனாலும் காணமுடியாது; என்னுடைய மகிமை யாவற்றையும் எந்த மனுஷனாலும் காணமுடியாது, கண்ட பின் மாம்சத்தில் பூமியில் நிலைத்திருக்கமுடியாது.

6என்னுடைய குமாரனாகிய மோசே, நான் உனக்கு ஒரு வேலையை வைத்திருக்கிறேன்; நீ என்னுடைய ஒரேபேறானவரின் சாயலிலிருக்கிறாய்; என்னுடைய ஒரேபேறானவர் இரட்சகராயிருக்கிறார், இருப்பார்; ஏனெனில் அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர். ஆனால் என்னைத் தவிர வேறே தேவனில்லை, சகல காரியங்களையும் நான் அறிந்திருப்பதால் அவைகள் என்னுடனே இருக்கின்றன.

7இப்பொழுது, இதோ, என்னுடைய குமாரனாகிய மோசே, உனக்கு இந்த ஒரு காரியத்தை நான் காட்டுகிறேன், நீ உலகத்திலிருப்பதால், இப்பொழுது உனக்கு அதை நான் காட்டுகிறேன்.

8மோசே பார்த்து, அதன் மேல் தான் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைக் கண்டான்; மோசே உலகத்தையும் அதன் முடிவுகளையும், சிருஷ்டிக்கப்படுகிற, சிருஷ்டிக்கப்பட்ட மனுபுத்திரர்கள் யாவரையும் கண்டான்; அது குறித்து அவன் மிகுந்த ஆச்சரியப்பட்டு மலைத்து போனான்.

9அவருடைய மகிமை மோசேயின்மீது இல்லாதிருக்கும்படியாக மோசேயிடமிருந்து தேவனின் பிரசன்னம் எடுத்துக்கொள்ளப்பட்டது; மோசே தனியே விடப்பட்டான். அவன் தனியே விடப்பட்டபோது அவன் தரையிலே விழுந்தான்.

10மனுஷனைப்போல அவனுடைய சுபாவ பெலனை மோசே மீண்டும் அடைவதற்கு பல மணிநேரங்களாயின; இப்பொழுது இந்தக் காரணத்தினிமித்தம் நான் ஒருபோதும் நினைத்திராத காரியமான மனுஷன் ஒன்றுமில்லாதவன் என்பதை அறிந்தேன் என அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

11ஆனால் இப்பொழுது என்னுடைய கண்களே தேவனைக் கண்டன; என்னுடைய சுபாவக் கண்களால் அல்ல, ஆனால் என்னுடைய ஆவிக்குரிய கண்களால், ஏனெனில் சுபாவக் கண்களால் கண்டிருக்க முடியாது; ஏனெனில் அவருடைய பிரசன்னத்தில் நான் உதிர்ந்துபோய் மரித்திருப்பேன்; ஆனால் அவருடைய மகிமை என் மீதிருந்தது; நான் அவருடைய முகத்தைக் கண்டேன், ஏனெனில் அவருக்கு முன்பாக நான் மறுரூபமாக்கப்பட்டேன்.

12மோசே இந்த வார்த்தைகளை சொன்னபோது, இதோ, மோசே, மனுஷகுமாரனே, என்னைத் தொழுதுகொள் எனச் சொல்லி அவனை சோதித்துக்கொண்டு சாத்தான் வந்தான்.

13, மோசே சாத்தானை நோக்கிப்பார்த்துச் சொன்னான்: நீ யார்? ஏனெனில் இதோ, அவருடைய ஒரேபேறானவரின் சாயலில் இருக்கிற நான் தேவனுடைய குமாரன்; நான் உன்னை தொழுதுகொள்ளும்படியாக உன்னுடைய மகிமை எங்கே?

14ஏனெனில் இதோ, அவருடைய மகிமை என்மீது வரும்வரையில் நான் தேவனை நோக்கிப்பார்க்க முடியவில்லை, நான் அவருக்கு முன்பாக மறுரூபமாக்கப்பட்டேன். ஆனால் சுபாவ மனுஷனாக உன்னை என்னால் நோக்கிப்பார்க்க முடிகிறது. நிச்சயமாக அப்படியில்லையா?

15என்னுடைய தேவனின் நாமம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக, ஏனெனில் அவருடைய ஆவி என்னிலிருந்து முழுவதுமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது உன்னுடைய மகிமை வேறெங்கிருக்கிறது, ஏனெனில் அது எனக்கு அந்தகாரமாயிருக்கிறது. உனக்கும் தேவனுக்குமிடையில் என்னால் பகுத்தறிய முடியும்; ஏனெனில் தேவன் என்னிடம் சொன்னார்: தேவனைப் பணிந்துகொண்டு அவர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக.

16அப்பாலே போ சாத்தானே; என்னை ஏமாற்றாதே; ஏனெனில் தேவன் என்னிடம் சொன்னார்: நீ என்னுடைய ஒரேபேறானவரின் சாயலிலிருக்கிறாய்.

17எரிகிற முட்செடியிலிருந்து என்னை அவர் அழைத்தபோது அவர் எனக்கு கட்டளைகளையும் கொடுத்து சொன்னதாவது: என்னுடைய ஒரே பேறானவரின் நாமத்தில் அழைத்து, என்னைத் தொழுதுகொள்.

18மீண்டும் மோசே சொன்னான்: தேவனை அழைப்பதை நான் நிறுத்தமாட்டேன், அவரிடம் விசாரிக்க எனக்கு பிற காரியங்களிருக்கின்றன: ஏனெனில் அவருடைய மகிமை என் மீதிருக்கிறது, ஆகவே அவருக்கும் உனக்குமிடையில் என்னால் பகுத்தறிய முடியும், அதனால் அப்பாலே போ, சாத்தானே.

19இப்பொழுது, மோசே இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, சாத்தான் உரத்த சத்தத்தில் அழுது, பூமியில் பிதற்றினான்: நானே ஒரேபேறானவன், என்னைத் தொழுதுகொள்.

20மோசே மிகுதியாய் பயப்பட ஆரம்பித்தான்; அவன் பயப்பட ஆரம்பித்தபோது, பாதாளத்தின் கசப்பை அவன் கண்டான். ஆயினும் தேவனை அழைத்து, அவன் பெலன் பெற்று, என்னிடமிருந்து அப்பாலே போ சாத்தானே, ஏனெனில் மகிமையின் தேவனாகிய இந்த தேவன் ஒருவரை மட்டுமே நான் தொழுதுகொள்ளுவேன் என கட்டளையிட்டுச் சொன்னான்.

21இப்பொழுது சாத்தான் நடுங்க ஆரம்பித்தான், பூமி குலுங்கியது; மோசே பெலன் பெற்று, ஒரேபேறானவரின் நாமத்தில் தேவனை அழைத்து, அப்பாலே போ சாத்தானே எனச் சொன்னான்.

22அழுகையுடனும், புலம்பலுடனும், பற்கடிப்புடனும் ஒரு உரத்த சத்தத்துடன் சாத்தான் அழுதான்; அவன் அவனைக் காணாதிருக்க மோசேயின் முன்பிருந்து போனான்.

23இப்பொழுது இந்தக் காரியத்தைக் குறித்து மோசே சாட்சியளித்தான்; ஆனால் துன்மார்க்கத்தினிமித்தம் மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே அது கிடைக்கவில்லை.

24மோசேயின் முன்பிருந்து சாத்தான் புறப்பட்டுப்போனபோது, மோசே பரலோகத்திற்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பிதாவையும் குமாரனையும் சாட்சி கொடுக்கிற பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு;

25தேவனுடைய நாமத்தினால் அழைத்து மீண்டும் அவருடைய மகிமையை அவன் கண்டான், ஏனெனில் அது அவன் மீதிருந்தது; மோசே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், ஏனெனில் சர்வவல்லவரான நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், அநேக தண்ணீர்களைவிட நீ பெலவானாக்கப்படுவாய்; ஏனெனில் நீ தேவனைப் போலிருப்பதைப்போல உன்னுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவார்கள் என்ற ஒரு சத்தத்தை அவன் கேட்டான்.

26உன்னுடைய நாட்களின் முடிவுவரை நான் உன்னுடனேகூட இருக்கிறேன்; ஏனெனில் நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலையும் என்னுடைய ஜனங்களையும் அடிமைத்தனத்திலிருந்து நீ விடுவிப்பாய்.

27சத்தம் இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், மோசே தன்னுடைய கண்களால் உற்றுப்பார்த்து பூமியை, ஆம், அதிலுள்ள அனைத்தையும் கண்டான்; தேவனின் ஆவியால் அதைப் பகுத்தறிந்து அவன் காணாத ஒரு தூள்கூட அங்கில்லை.

28அங்குள்ள குடிகளையும் அவன் கண்டான், அவன் காணாத ஒரு ஆத்துமாகூட அங்கில்லை; தேவனின் ஆவியால் அவன் அவைகளைப் பகுத்தறிந்தான்; கடற்கரையின் மணலைப்போல அவர்களின் எண்ணிக்கை எண்ணற்றதாய் இருந்தது.

29அநேக தேசங்களை அவன் கண்டான்; ஒவ்வொரு தேசமும் பூமியென அழைக்கப்பட்டது, அதன்மீது குடிகளிருந்தனர்.

30எனக்குச் சொல்லும், நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், இந்தக் காரியங்கள் ஏன் இப்படியிருக்கின்றன, இவைகளை நீர் எதினால் உண்டாக்கினீர், எனச்சொல்லி மோசே தேவனை அழைத்தான்.

31இதோ, தேவசமூகத்தில் நிற்கும்படியாக மோசேயின் மீது கர்த்தரின் மகிமையிருந்து, அவனுடன் முகமுகமாய்ப் பேசினார். தேவனாகிய கர்த்தர் மோசேயிடம் சொன்னார்: என்னுடைய சொந்த நோக்கத்திற்காகவே இந்தக் காரியங்களை நான் உண்டாக்கினேன். இதிலே ஞானம் விளங்கும், அது என்னிலே நிலைத்திருக்கிறது.

32கிருபையும் சத்தியமும் நிறைந்திருந்த என்னுடைய ஒரேபேறான குமாரனான என்னுடைய வார்த்தையின் வல்லமையால் அவைகளை நான் சிருஷ்டித்தேன்.

33எண்ணி முடியாத உலகங்களை நான் சிருஷ்டித்தேன்; அவைகளை என்னுடைய நோக்கத்திற்காகவும் நான் சிருஷ்டித்தேன்; என்னுடைய ஒரேபேறான குமாரனால் அவைகளை நான் சிருஷ்டித்தேன்.

34அநேகரான, சகல மனுஷர்களிலும் முதலாம் மனுஷனை நான் ஆதாம் என அழைத்தேன்.

35ஆனால் இந்த பூமி மற்றும் அதிலுள்ள குடிகளின் விவரத்தை மட்டுமே நான் உன்னிடம் காண்பித்தேன். ஏனெனில் இதோ, என்னுடைய வார்த்தையின் வல்லமையால் கடந்துபோன அநேக உலகங்களுண்டு. இப்பொழுது இருக்கிற அநேகம் அங்குண்டு, அவைகள் மனுஷனுக்கு எண்ணற்றவையாய் இருக்கின்றன; ஆனால் சகல காரியங்களும் எனக்கு எண்ணப்படுபவையாய் இருக்கும், ஏனெனில் அவைகள் என்னுடையவைகள், நான் அவைகளை அறிவேன்.

36தேவனே, உம்முடைய ஊழியக்காரன்மேல் இரக்கமாயிரும், இந்த பூமியையும் அதிலுள்ள குடிகளையும், வானங்களைக் குறித்தும் எனக்குச் சொல்லும், அப்பொழுது உம்முடைய ஊழியக்காரன் அமைதலாயிருப்பான் எனச் சொல்லி மோசே கர்த்தரிடம் பேசினான்.

37வானங்கள் அநேகமாயிருக்கின்றன, அவைகள் மனுஷனால் எண்ணக்கூடாததாய் இருக்கிறது; ஆனால் அவைகள் எனக்கு எண்ணக்கூடியதாயிருக்கும், ஏனெனில் அவைகள் என்னுடையவைகள் எனச்சொல்லி தேவனாகிய கர்த்தர் மோசேயிடம் பேசினார்.

38ஒரு பூமி கடந்து போகும்போது அதிலுள்ள வானங்களும்போய் மற்றொன்று வரும்; என்னுடைய கிரியைகளுக்கும் என்னுடைய வார்த்தைகளுக்கும் முடிவில்லை.

39ஏனெனில் இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.

40இப்பொழுது, என்னுடைய குமாரனாகிய மோசே, நீ நின்றுகொண்டிருக்கிற பூமியைக் குறித்து நான் உன்னிடம் பேசுவேன்; நான் பேசுகிற காரியங்களை நீ எழுதுவாயாக.

41மனுபுத்திரர்கள் என்னுடைய வார்த்தைகளை விருதாவாகப் பார்த்து, நீ எழுதிய புஸ்தகத்திலிருந்து அநேகத்தை எடுத்துப் போடுகிற நாளில், இதோ, உன்னைப் போலிருக்கிற மற்றொருவனை நான் எழுப்புவேன், அவர்களுக்கு மத்தியிலே அநேகர் நம்புகிற அளவில் மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே மீண்டும் அவைகளிருக்கும்.

42(மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே அறியப்படாத பெயருடைய மலையின்மீது இந்த வார்த்தைகள் மோசேயிடம் பேசப்பட்டன. இப்பொழுது அவைகள் உன்னிடம் பேசப்படுகின்றன. நம்புகிறவர்களைத் தவிர யாரிடமும் அவைகளை நீ காட்டாதே. அப்படியே ஆகக்கடவது. ஆமென்.)