அதிகாரம் 6
(நவம்பர் – டிசம்பர் 1830)
ஒரு ஞாபகப் புஸ்தகத்தை ஆதாமின் சந்ததி வைத்திருந்தார்கள் – அவனுடைய நீதியான வம்சம் மனந்திரும்புதலைப் பிரசங்கித்தார்கள் – தேவன் தம்மை ஏனோக்குக்கு வெளிப்படுத்துகிறார் – ஏனோக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறான் – ஆதாமுக்கு இரட்சிப்பின் திட்டம் வெளிப்படுத்தப்பட்டது – ஞானஸ்நானத்தையும் ஆசாரியத்துவத்தையும் அவன் பெற்றான்.
1 தேவனின் சத்தத்தை ஆதாம் கேட்டு மனந்திரும்பும்படி அவனுடைய குமாரர்களை அழைத்தான்.
2 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள், அவனுக்கு சேத் என்று பேரிட்டான். ஆதாம் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்தி, காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொன்னான்.
3 சேத்துக்கு தேவன் தம்மை வெளிப்படுத்தினார், அவன் கலகம் பண்ணவில்லை, ஆனால் அவனுடைய சகோதரன் ஆபேலைப்போல ஒரு ஏற்றுக்கொள்ளப்படத்தக்க காணிக்கையைச் செலுத்தினான். அவனுக்கும் ஒரு குமாரன் பிறந்தான், அவனுக்கு ஏனோஸ் என பேரிட்டான்.
4 பின்னர் இந்த மனுஷர்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார்;
5 ஆதாமின் பாஷையில் எழுதப்பட்டிருந்த ஞாபகப் புஸ்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது, ஏனெனில் உணர்த்துதலின் ஆவியால் எழுத தேவனால் அழைக்கப்பட்ட அநேகருக்கு அது கொடுக்கப்பட்டது;
6 மாசில்லாத சுத்தமானதான பாஷையைக் கொண்டிருந்ததால் அவர்களால் தங்களுடைய பிள்ளைகள் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள்.
7 இப்பொழுது ஆரம்பத்திலிருந்த இந்த அதே ஆசாரியத்துவம் உலகத்தின் முடிவுவரையிலிருக்கும்.
8 இப்பொழுது பரிசுத்த ஆவியால் அவன் அசைக்கப்பட்டு இந்த தீர்க்கதரிசனத்தை ஆதாம் பேசினான், தேவனின் பிள்ளைகளின் வம்சவரலாறு வைக்கப்பட்டிருந்தது. தேவன் மனுஷனை சிருஷ்டித்த நாளில் தேவனுடைய சாயலில் அவனை அவர் உண்டாக்கினார் எனச் சொல்லுகிற இது, ஆதாமின் வம்சவரலாற்றின் புஸ்தகம்;
9 அவருடைய சரீரத்தின் சாயலில் ஆணும் பெண்ணுமாக அவர்களை அவர் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்தார், தேவனுடைய பாதபடியின் மேலுள்ள தேசத்தில் அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டு ஜீவாத்துமாவான நாளில் அவர்களை ஆதாம் என்று பேரிட்டு அழைத்தார்.
10 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு சேத் என்று பேரிட்டான்.
11 ஆதாம் சேத்தைப் பெற்றபின்பு, எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
12 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.
13 சேத் நூற்றைந்து வயதானபோது ஏனோஸைப் பெற்றான், அவன் ஜீவனுள்ளளவும் தீர்க்கதரிசனமுரைத்து, தேவனுடைய வழிகளில் அவனுடைய குமாரனாகிய ஏனோஸூக்கு போதித்தான்; ஆகவே ஏனோஸூம் தீர்க்கதரிசனமுரைத்தான்.
14 சேத் ஏனோஸைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான்.
15 தேசம் முழுவதின் மேலும் மனுபுத்திரர்கள் திரளானோராய் இருந்தார்கள். அந்த நாட்களில் மனுஷர்களுக்கு மத்தியிலே சாத்தானுக்கு பலத்த ஆளுகையிருந்தது, அவர்களுடைய இருதயங்களைக் கொந்தளிக்கவைத்தான், அங்கேயிருந்து யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் வந்தன, அதிகாரத்தை அடைவதற்கான இரகசிய கிரியைகளால் மரணத்தை ஏற்படுத்துவதில் ஒரு மனுஷனுடைய கை அவனுடைய சகோதரனுக்கு விரோதமாக இருந்தது.
16 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்து பன்னிரண்டு வருஷம், அவன் மரித்தான்.
17 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது கேனானைப் பெற்றான். ஏனோஸூம் தேவ ஜனங்களின் மீதியானோரும் ஷூலோன் என்றழைக்கப்பட்ட தேசத்திலிருந்து வெளியே வந்து, கேனான் என அவன் பேரிட்ட அவனுடைய குமாரனின் பெயரால் அவன் அழைத்த வாக்குத்தத்தத்தின் தேசத்தில் வாசம் செய்தார்கள்.
18 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்று பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோஸூடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
19 கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான், கேனான் மகலாலெயேலைப் பெற்ற பின்பு, எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம், அவன் மரித்தான்.
20 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது யாரேதைப் பெற்றான்; மகலாலெயேல் யாரேதைப் பெற்ற பின் எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மகலாலெயேல் நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
21 யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்; யாரேத் ஏனோக்கைப்பெற்ற பின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். தேவனின் சகல வழிகளையும் யாரேது ஏனோக்குக்குப் போதித்தான்.
22 இதுவே, தேவ குமாரனாயிருந்த, தேவனே அவனோடு சம்பாஷித்த, ஆதாமின் குமாரர்களுடைய வம்சவரலாறு.
23 அவர்கள் நீதியின் பிரசங்கிகளாயிருந்து, பேசினார்கள், தீர்க்கதரிசனமுரைத்தார்கள், மனந்திரும்ப எங்கெங்கிலுமுள்ள மனுஷர்கள் யாவரையும் அழைத்தார்கள். மனுபுத்திரர்களுக்கு விசுவாசம் போதிக்கப்பட்டது.
24 யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம், அவன் மரித்தான்.
25 ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
26 ஏனோக்கு தேசத்திலே ஜனங்களுக்கு மத்தியிலே பிரயாணம் செய்தான்; அவன் பிரயாணப்பட்டபோது வானத்திலிருந்து தேவ ஆவி இறங்கி அவன்மேலே தங்கியது.
27 என் மகன் ஏனோக்கே, இந்த ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமுரைத்து, மனந்திரும்புங்கள் என அவர்களுக்குச் சொல்லு; ஏனெனில் இந்த ஜனங்களிடத்தில் நான் கோபமாயிருக்கிறேன், என்னுடைய உக்கிரமான கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது; ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டன, அவர்களுடைய காதுகள் கேளாமல் போயின, அவர்களுடைய கண்கள் சொருகிப்போயின, இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார் எனச் சொன்ன, வானத்திலிருந்து ஒரு சத்தத்தை அவன் கேட்டான்;
28 ஏனெனில் அவர்களை நான் சிருஷ்டித்த நாளிலிருந்து இந்த அநேக தலைமுறைகள் வழிவிலகிப் போனார்கள், என்னை மறுதலித்தார்கள், இருளில் அவர்களுடைய சொந்த ஆலோசனையை நாடினார்கள்; தங்களுடைய சொந்த அருவருப்புகளில் கொலை செய்ய ஆலோசித்தார்கள், அவர்களுடைய தகப்பனான ஆதாமுக்கு நான் கொடுத்த கட்டளைகளைக் கைக்கொள்ளாதிருந்தார்கள்.
29 ஆகவே அவர்கள் தங்களுக்குள்ளே முன்ஆணையிட்டுக் கொண்டார்கள், அவர்களுடைய ஆணையினால் தங்கள்மேல் தாங்களே மரணத்தைக் கொண்டு வந்தார்கள்; அவர்கள் மனந்திரும்பாவிட்டால் அவர்களுக்காக ஒரு பாதாளத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறேன்;
30 உலகத்தோற்றத்திற்கு முன்பே, என்னுடைய வாயிலிருந்து, அஸ்திபாரத்திலிருந்தே நான் அனுப்பிய கட்டளை இது, என்னுடைய ஊழியக்காரர்களான உன்னுடைய பிதாக்களின் வாயால், உலகத்துக்கு அதன் முடிவுவரை அனுப்பும்படியாக நான் அதைக் கட்டளையிட்டேன்.
31 இந்த வார்த்தைகளை ஏனோக்கு கேட்டபோது கர்த்தருக்கு முன்பாக அவன் தரைமட்டும் குனிந்து உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைத்தது ஏன், நான் ஒரு வாலிபன், சகல ஜனங்களும் என்னை வெறுக்கிறார்கள்; ஏனெனில் நான் திக்குவாயன்; ஆகவே நான் உமது ஊழியக்காரனா எனச் சொல்லி கர்த்தருக்கு முன்பாக பேசினான்.
32 ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: நீ போய் நான் உனக்குக் கட்டளையிட்டதைப்போலச் செய், உன்னை ஒருவனும் குத்துவதில்லை. உன்னுடைய வாயைத் திற, அது நிரப்பப்படும் நான் உனக்கு பேச்சைக் கொடுப்பேன், ஏனெனில் சகல மாம்சங்களும் என்னுடைய கைகளிலிருக்கிறது, என்னுடைய பார்வைக்கு நலமானதை நான் செய்வேன்.
33 இந்த ஜனங்களுக்குச் சொல்: உன்னை உண்டாக்கிய தேவனாகிய கர்த்தரை சேவிக்க இந்த நாளை தெரிந்து கொள்ளுங்கள்.
34 இதோ, என்னுடைய ஆவி உன் மேலிருக்கிறது, ஆகவே உன்னுடைய வார்த்தைகள் யாவற்றையும் நான் நியாயப்படுத்தமாட்டேனோ; மலைகள் உனக்கு முன்பாக ஓடிப்போகும், ஆறுகள் தங்களுடைய பாதைகளிலிருந்து விலகிப்போகும்; நீ என்னில் வாசம் செய்வாய், நான் உன்னிலிருப்பேன்; ஆகவே என்னோடு நீ சஞ்சரிப்பாய்.
35 கர்த்தர் ஏனோக்கிடம் பேசி அவனிடம் சொன்னார்: உன்னுடைய கண்களின்மேல் சேற்றைப்பூசி, அவற்றைக் கழுவு, நீ பார்வையடைவாய். அவன் அப்படியே செய்தான்.
36 தேவன் சிருஷ்டித்த ஆவிகளை அவன் கண்டான்; சுபாவக் கண்களுக்குத் தெரியாத காரியங்களையும் அவன் கண்டான்; அப்போதிலிருந்து அவருடைய ஜனங்களுக்கு ஒரு ஞானதிருஷ்டிக்காரரை கர்த்தர் எழுப்பியிருக்கிறார் என தேசத்திற்கு வெளியே சொன்னவை பரவின.
37 மலைகள்மேலும் உயர்ந்த இடங்களிலும் நின்றுகொண்டு தேசத்தில் ஜனங்களுக்கு மத்தியில் ஏனோக்கு போய், அவர்களுடைய கிரியைகளுக்கு விரோதமாக சாட்சியளித்து ஒரு உரத்த சத்தத்தில் அழுதான்; அவனால் சகல மனுஷர்களும் இடறலடைந்தார்கள்.
38 கூடாரத்தைக் காக்கிறவர்களிடம் இவ்விதமாய்ச் சொல்லி உயரமான இடங்களில் அவன் சொல்வதைக் கேட்க அவர்கள் வந்தார்கள். நாங்கள் ஞானதிருஷ்டிக்காரனைப் பார்க்கப் போகும்போது நீங்கள் இங்கே தங்கியிருந்து கூடாரங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவன் தீர்க்கதரிசனமுரைக்கிறான். தேசத்தில் ஒரு வினோதமான காரியம் நடக்கிறது. ஒரு துஷ்டமனுஷன் நமக்குள்ளே வந்திருக்கிறான்
39 அவன் சொன்னதை அவர்கள் கேட்டபோது ஒருவனும் அவன்மேல் கைகளைப்போடவில்லை; ஏனெனில் அவன் சொன்னதைக்கேட்ட அவர்கள் யாவருக்கும் பயம் வந்தது, ஏனெனில் அவன் தேவனோடு சஞ்சரித்தான்.
40 மஹிஜா என்ற பேருடைய ஒரு மனுஷன் அவனிடத்தில் வந்து அவனிடம் சொன்னான்: நீர் யார், நீர் எங்கிருந்து வருகிறீர் என எங்களுக்கு தீர்மானமாகச் சொல்லும்.
41 அவர்களுக்கு அவன் சொன்னான்: என்னுடைய பிதாக்களின் தேசமான, இந்த நாள்வரை நீதியின் தேசமான கேனான் தேசத்திலிருந்து நான் வருகிறேன். தேவனின் சகல வழிகளையும் என்னுடைய தகப்பன் எனக்குப் போதித்தார்.
42 கிழக்கு கடற்கரை வழியாக கேனான் தேசத்திலிருந்து நான் பிரயாணப்பட்டபோது நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன்; வானங்களை நான் பார்த்தேன், கர்த்தர் என்னோடு பேசி எனக்கு கட்டளையைக் கொடுத்தார்; ஆகவே கட்டளையைக் கைக்கொள்ள இந்தக் காரணத்திற்காக இந்த வார்த்தைகளை நான் பேசுகிறேன்.
43 என்னோடே பேசிய கர்த்தர் பரலோகத்தின் அதே தேவன், அவர் என்னுடைய தேவன், உங்களுடைய தேவன், நீங்கள் என்னுடைய சகோதரர், ஏன் உங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணி பரலோகத்தின் தேவனை மறுதலிக்கிறீர்கள் எனச் சொல்லி ஏனோக்கு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தான்.
44 வானங்களை அவர் உண்டு பண்ணினார், பூமி அவருடைய பாதபடி; அதிலுள்ள அஸ்திபாரம் அவருடையது. இதோ, அவர் அதைப்போட்டார், மனுஷசேனை ஒன்றை அதன்மேல் அவர் கொண்டுவந்தார்.
45 மரணம் நம்முடைய பிதாக்கள்மேல் வந்தது; ஆயினும் நமக்கு அவர்களைத் தெரியும், மறுக்கமுடியாது, யாவருக்கும் முதன்மையான ஆதாமையும் நமக்குத் தெரியும்.
46 ஏனெனில் தேவனின் விரலால் கொடுக்கப்பட்ட மாதிரியின்படி நமக்குள்ளே ஞாபகப்புஸ்தகம் ஒன்றை நாம் எழுதினோம்; நமது பாஷையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டது.
47 ஏனோக்கு தேவனின் வார்த்தைகளைப் பேசியபோது ஜனங்கள் நடுங்கினார்கள், அவனுடைய சமுகத்தில் நிற்க முடியவில்லை.
48 அவர்களுக்கு அவன் சொன்னான்: ஆதாம் வீழ்ந்ததால் நாமும் வீழ்ந்தோம், அவனுடைய வீழ்ச்சியால் மரணம் வந்தது; புலம்பலிலும் துக்கத்திலும் பங்கேற்கிறவர்களாக நாம் ஆக்கப்பட்டோம்.
49 இதோ, சாத்தான் மனுபுத்திரர்களுக்கு மத்தியிலே வந்து அவனைத் தொழுதுகொள்ள அவர்களை சோதிக்கிறான், மனுஷர்கள் மாம்சத்தினராய், ஜென்மசுபாவத்தாராய், பேய்க்குணம் படைத்தவர்களானார்கள், தேவ பிரசன்னத்திலிருந்து தள்ளப்பட்டார்கள்.
50 ஆனால் மனுஷர் யாவரும் மனந்திரும்பவேண்டுமென நமது பிதாக்களுக்கு தேவன் அறியப்படுத்தினார்.
51 நானே தேவன்; நானே உலகத்தை உண்டு பண்ணினேன், அவர்கள் மாம்சத்திலிருப்பதற்கு முன்பே மனுஷர்களை நான் உண்டுபண்ணினேன் எனச் சொல்லி நம்முடைய பிதாவான ஆதாமை அவருடைய குரலால் அழைத்தார்.
52 மேலும் அவனுக்கு அவர் சொன்னார்: நீ என் பக்கம் திரும்பி என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, நம்பிக்கை வைத்து, உன்னுடைய அக்கிரமங்கள் யாவற்றிற்காகவும் மனந்திரும்பி, கிருபையும் சத்தியமும் நிறைந்திருக்கிற, வானத்தின்கீழே கொடுக்கப்படுகிற, மனுபுத்திரருள் இரட்சிப்பு வருகிற ஒரே நாமமான என்னுடைய ஒரேபேறான குமாரனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றால், பரிசுத்த ஆவியின் வரத்தை நீ பெற்று அவருடைய நாமத்தில் சகல காரியங்களையும் கேட்டால், நீ எதைக் கேட்டாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்.
53 நம்முடைய பிதாவாகிய ஆதாம் கர்த்தரிடம் சொன்னான்: மனுஷன் ஏன் மனந்திரும்பி தண்ணீரில் ஞானஸ்நானம் பெறவேண்டும்? கர்த்தர் ஆதாமுக்குச் சொன்னார்: இதோ, ஏதேன் தோட்டத்திலேயே உன்னுடைய மீறுதலை நான் உனக்கு மன்னித்துவிட்டேன்.
54 முதல் குற்றத்திற்காக தேவகுமாரன் பாவநிவர்த்தி செய்தார், அதனால் பெற்றோர்களின் பாவங்கள் பிள்ளைகளின் தலைகள்மேலே சுமராது, ஏனெனில் உலகத்தோற்றமுதல் அவர்கள் முழுமையாயிருக்கிறார்கள் என்று சொல்லுதல் தூர இடங்களில் ஜனங்களுக்குள்ளே வந்தது.
55 இப்படியாகச் சொல்லி கர்த்தர் ஆதாமிடம் பேசினார்: உன்னுடைய பிள்ளைகள் பாவத்தில் கர்ப்பந்தரித்திருக்கிற அளவில், அவர்கள் வளர ஆரம்பிக்கும் போது கூட பாவம் அவர்களுடைய இருதயங்களில் கர்ப்பந்தரித்திருக்கிறது, நன்மையை ஆதாயப்படுத்த அறியும்படியாக அவர்கள் கசப்பை ருசிக்கிறார்கள்.
56 தீமையிலிருந்து நன்மையை அறியத்தக்கதாக இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆகவே அவர்கள் தங்களுக்குத் தாங்களே சுயாதீனர்களாயிருப்பார்கள், நான் உங்களுக்கு மற்றுமொரு நியாயப்பிரமாணத்தையும் கட்டளையையும் கொடுத்திருக்கிறேன்.
57 ஆகவே எங்கெங்கிலுமுள்ள சகல மனுஷர்களும் மனந்திரும்ப வேண்டும், அல்லது அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என அதை உன் பிள்ளைகளுக்குப் போதி, ஏனெனில் அசுசியான காரியம் எதுவும் அங்கே வாசம் செய்யமுடியாது, அல்லது அவருடைய பிரசன்னத்தில் வாசம் செய்யமுடியாது; ஏனெனில் ஆதாமின் பாஷையில், பரிசுத்தத்தின் மனுஷன் என்பது அவருடைய நாமம், அவருடைய ஒரேபேறானவரான, நீதியின் நியாயாதிபதியானவரும் காலத்தின் மத்தியில் வருகிறவருமான இயேசு கிறிஸ்துவான அவருடைய நாமம் மனுஷகுமாரன்.
58 ஆகவே இப்படியாகச் சொல்லி, உன்னுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதிக்க நான் உனக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்;
59 மீறுதலின் காரணத்தால் வீழ்ச்சி வருகிறது. அந்த வீழ்ச்சி மரணத்தைக் கொண்டு வருகிறது. நான் உண்டாக்கின ஜலத்தாலும் இரத்தத்தாலும் ஆவியாலும் உலகினில் நீ ஜெனிப்பிக்கப்பட்ட அளவில், புழுதியிலிருந்து ஜீவாத்துமாவானாய். ஆகவே நீ மறுபடியும் ஜலத்தாலும் ஆவியாலும் பரலோக ராஜ்யத்தில் மீண்டும் பிறக்கவேண்டும். நீ எல்லா பாவங்களிலிருந்தும் பரிசுத்தப்படும்படிக்கும், இந்த உலகில் நித்திய ஜீவனின் வார்த்தைகளையும் வரவிருக்கிற உலகில் அழியாமையின் மகிமையாகிய நித்திய ஜீவனையும் அனுபவிக்கும்படிக்கு, ஒரேபேறானவரின் இரத்தத்தால் கழுவப்பட வேண்டும்.
60 ஏனெனில், தண்ணீரால் நீ கட்டளையைக் கைக்கொள்ளுகிறாய்; ஆவியால் நீ நீதிமானாக்கப்படுகிறாய்; இரத்தத்தால் நீ சுத்திகரிக்கப்படுகிறாய்;
61 ஆனபடியால், ஞானம், இரக்கம், சத்தியம், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பின்படி, எல்லா வல்லமையுமுடைய, எல்லாவற்றையும் அறிந்த, எல்லாவற்றையும் உயிரோடு வைக்கிற, எல்லாவற்றுக்கும் உயிரூட்டுகிற, எல்லாவற்றின் சத்தியமான, அழிவற்ற, மகிமையின் சமாதான காரியரான, தேற்றரவாளனாகிய பரலோகத்தின் சாட்சியானவர், உன்னிடம் தரித்திருக்க கொடுக்கப்பட்டிருக்கிறார்.
62 இப்பொழுது, இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன்: காலத்தின் மத்தியில் வருகிறவரான என்னுடைய ஒரேபேறானவரின் இரத்தத்தின் மூலமாக இது சகல மனுஷர்களுக்குமான இரட்சிப்பின் திட்டம்.
63 இதோ, எல்லா காரியங்களும் அவற்றின் சாயலிலிருக்கின்றன, எல்லா காரியங்களும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்க சிருஷ்டிக்கப்பட்டு, உண்டாக்கப்பட்டுள்ளன. உலகப்பிரகாரமான காரியங்களும், ஆவிக்குரிய காரியங்களும், மேலே வானங்களில் உள்ள காரியங்களும், பூமியின் மேல் இருக்கிறவைகளும், பூமியினுள் இருப்பவைகளும், பூமிக்குக் கீழ் இருப்பவைகளும், மேலேயும் கீழேயும் உள்ள அனைத்துமே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன.
64 நம்முடைய பிதாவான ஆதாமுடன் கர்த்தர் பேசியபோது, ஆதாம் கர்த்தரிடத்தில் அழுது, கர்த்தரின் ஆவியால் எடுத்துக் கொள்ளப்பட்டு, தண்ணீருக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டு, தண்ணீருக்குள்ளே வைக்கப்பட்டு தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டான்.
65 அப்படியாக அவன் ஞானஸ்நானம் பெற்றான், தேவ ஆவி அவன் மீது இறங்கியது, அப்படியாக அவன் ஆவியில் பிறந்தான், உள்ளான மனுஷனில் உயிர்ப்பிக்கப்பட்டான்.
66 நீ அக்கினியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெற்றாய். இது இப்போதிலிருந்தும் என்றென்றைக்கும் பிதாவிடமிருந்தும் குமாரனிடமிருந்துமுள்ள சாட்சி;
67 அநாதியாய் என்றென்றைக்கும் நாட்களின் தொடக்கமும் வருஷங்களின் முடிவும் இல்லாதவருமான அவரின் முறைமையின்படி இருக்கிறாய் எனச் சொல்லி வானத்திலிருந்து ஒரு சத்தத்தை அவன் கேட்டான்.
68 இதோ, தேவகுமாரனாகிய நீ என்னில் ஒருவனாயிருக்கிறாய்; அப்படியாக யாவரும் என்னுடைய புத்திரர்களாகுகிறார்கள். ஆமென்.