அதிகாரம் 7
(டிசம்பர் 1830)
ஏனோக்கு போதிக்கிறான், ஜனங்களை வழிநடத்துகிறான், மலைகளை நகர்த்துகிறான் – சீயோன் பட்டணம் ஸ்தாபிக்கப்பட்டது – மனுஷகுமாரனின் வருகையையும், அவருடைய பாவநிவாரண பலியையும், பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலையும் ஏனோக்கு முன் காண்கிறான் – மறுஸ்தாபிதத்தையும், கூடிச்சேர்தலையும், இரண்டாம் வருகையையும், சீயோனின் திரும்புதலையும் அவன் முன்காண்கிறான்.
1 , இதோ, நம்முடைய பிதாவான ஆதாம் இந்தக் காரியங்களை போதித்தார், அநேகர் நம்பிக்கை வைத்து தேவ புத்திரர்களானார்கள், அநேகர் நம்பிக்கை வைக்காமல் தங்களுடைய பாவங்களில் அழிந்துபோனார்கள், தேவகோபத்தின் கோபாக்கினை அவர்கள் மேல் பொழியப்படவிருப்பதால் பயத்துடனும் வேதனையிலும் எதிர்நோக்கி இருந்தார்கள் எனச் சொல்லி அவனுடைய பேச்சை ஏனோக்கு தொடர்ந்தான்.
2 நான் பயணப்பட்டு, மஹூஜா என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்து, கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டபோது நீ திரும்பி சிமியோன் மலையின்மேல் ஏறு எனச் சொல்லி வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது என ஜனங்களுக்குச் சொல்லி அந்த நேரத்திலிருந்து ஏனோக்கு தீர்க்கதரிசனமுரைக்க ஆரம்பித்தான்.
3 நான் திரும்பி மலையின் மேல் போனேன்; மலையின் மேல் நான் நின்று கொண்டிருந்த போது, வானங்கள் திறக்கப்படுவதைக் கண்டேன், நான் மகிமையின் வஸ்திரந்தரித்தவனாயிருந்தேன்;
4 நான் கர்த்தரைக் கண்டேன்; அவர் என் முகத்திற்கு முன்பாக நின்று, மனுஷன் ஒருவருக்கொருவர் பேசுவதைப்போன்று முகமுகமாய் என்னோடு அவர் பேசினார்; என்னிடம் அவர் சொன்னார்: பார், பல தலைமுறைகளுக்கான உலகத்தை நான் உனக்குக் காட்டுவேன்.
5 கூடாரங்களில் வசித்துவந்த சம்மின் ஜனங்களான மகத்தான ஜனங்களை சம்மின் பள்ளத்தாக்கில் பார்த்தேன்.
6 மீண்டும் கர்த்தர் என்னிடம் சொன்னார்: பார் வடக்கை நோக்கி நான் பார்த்தபோது, கூடாரங்களில் வசித்துவந்த கானான் ஜனங்களைப் பார்த்தேன்.
7 கர்த்தர் என்னிடம் சொன்னார்: தீர்க்கதரிசனமுரை; இதோ திரளாயிருந்த கானானின் ஜனங்கள் சம்மின் ஜனங்களுக்கு எதிராக போருக்கு ஆயத்தப்பட்டு யுத்தத்திற்குப் போவார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட அவர்களைக் கொன்றுபோடுவார்கள்; தேசத்தில் கானான் ஜனங்கள் தங்களுக்குள்ளே பிரிந்து, தேசம் வீணானதும் கனியற்றதுமாயிருக்கும், கானானின் ஜனங்களைத்தவிர வேறெந்த ஜனங்களும் அங்கே தங்கியிருக்கமுடியாது எனச் சொல்லி நான் தீர்க்கதரிசனமுரைத்தேன்;
8 ஏனெனில் இதோ, அதிக வெப்பத்தால் தேசத்தை கர்த்தர் சபிப்பார், அதிலுள்ள வறட்சி என்றென்றைக்குமிருக்கும்; சகல ஜனங்களுக்கும் மத்தியில் அவர்கள் வெறுக்கப்படும்படிக்கு கானானின் பிள்ளைகள் யாவர் மீதும் ஒரு கறுமை உண்டாயிருந்தது.
9 கர்த்தர் என்னிடம் சொன்னார்: நோக்கிப் பார்; நான் நோக்கிப்பார்த்து சாரோனின் தேசத்தையும், ஏனோக்கின் தேசத்தையும், ஓம்னர் தேசத்தையும், ஹெனி தேசத்தையும், சேமின் தேசத்தையும், ஹேனர் தேசத்தையும், ஹானானியா தேசத்தையும் அங்குள்ள குடிகள் யாவரையும் நான் பார்த்தேன்;
10 கர்த்தர் என்னிடம் சொன்னார்: இந்த ஜனங்களிடத்திற்குப் போய், நான் வெளியிலே வந்து, ஒரு சாபத்தால் அவர்களை அடித்து அவர்கள் சாகாதபடிக்கு, மனந்திரும்புங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
11 பிதாவின் நாமத்திலும், கிருபையும் சத்தியமும் நிறைந்த குமாரன், மற்றும் பிதா மற்றும் குமாரனைப்பற்றி சாட்சியைப் பகருகிற, பரிசுத்த ஆவியின் நாமத்தில், நான் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டுமென எனக்கு அவர் ஒரு கட்டளையைக் கொடுத்தார்.
12 கானானின் ஜனங்களைத்தவிர சகல ஜனங்களையும் மனந்திரும்ப ஏனோக்கு தொடர்ந்து அழைத்தான்;
13 தேவனின் ஜனங்களை வழிநடத்தும்படியாக, ஏனோக்கின் விசுவாசம் மிகுதியாயிருந்தது, அவர்களுடைய சத்துருக்கள் அவர்களுக்கு விரோதமாக போரிட வந்தார்கள்; அவன் கர்த்தரின் வார்த்தையைப் பேசினான், அவனுடைய கட்டளையின்படி, பூமி நடுங்கியது; மலைகள் ஓடிப்போயின, ஆறுகள் தங்களின் பாதைகளைவிட்டு விலகின; சிங்கத்தின் கெர்ச்சிப்பு வனாந்தரங்களுக்கு வெளியே கேட்டது; தேவன் அவனுக்குக் கொடுத்த பாஷையின் வல்லமை மிகுதியாயிருந்ததால், ஏனோக்கின் வார்த்தை மிகுந்த வல்லமையாயிருந்தது, சகல தேசங்களும் மிகுதியாய் பயந்தன.
14 சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து ஒரு தேசமும் வெளிவந்தது, அவர்கள் ஓடிப்போய், தூரத்தில் நின்று, சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து வெளியே வந்த தேசத்திற்குப் போகும்படியாக தேவனின் ஜனங்களின் சத்துருக்களின் பயம் மிகுதியாயிருந்தது.
15 தேசத்தின் இராட்சதர்களும் கூட தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்; தேவனுக்கு எதிராக சண்டையிட்ட சகல ஜனங்கள் மீதும் ஒரு சாபம் போனது;
16 அந்த நேரத்திலிருந்து அவர்களுக்கு மத்தியிலே யுத்தங்களும் இரத்தம் சிந்துதலுமிருந்தன; ஆனால் கர்த்தர் வந்து அவருடைய ஜனங்களுக்கு மத்தியிலே வாசம் செய்தார், அவர்கள் நீதியிலே வாசம் செய்தார்கள்.
17 அவருடைய ஜனங்கள் மீதிருந்த கர்த்தரின் மகிமை மிகுதியாயிருந்ததால் சகல தேசங்கள் மீதும் கர்த்தரின் பயமிருந்தது. தேசத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார், மலைகள் மேலும், உயரமான இடங்கள் மேலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, செழிப்படைந்தார்கள்.
18 அவர்கள் ஏக சிந்தனையிலும் ஏக உள்ளத்திலுமிருந்ததாலும், நீதியில் வாசம் செய்ததாலும் கர்த்தர் அவனுடைய ஜனங்களை சீயோன் என்றழைத்தார்; அவர்களுக்குள்ளே எளியவன் இல்லாதிருந்தான்.
19 தேவனின் ஜனங்களுக்கு நீதியில் அவன் பிரசங்கிப்பதை ஏனோக்கு தொடர்ந்தான். அவனுடைய நாட்களில், பரிசுத்தத்தின் பட்டணம் என்றழைக்கப்பட்ட சீயோன் என்ற ஒரு பட்டணத்தை அவன் கட்டினான்.
20 ஏனோக்கு கர்த்தரிடம் பேசினான்; அவன் கர்த்தரிடம் சொன்னான்: என்றென்றைக்கும் நிச்சயமாக சீயோன் பாதுகாப்பாய் வாசம் செய்யும். ஆனால் ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: சீயோனை நான் ஆசீர்வதித்தேன், மீதியான ஜனங்களை நான் சபித்தேன்.
21 பூமியின் குடிகள் யாவரையும் ஏனோக்குக்கு கர்த்தர் காட்டினார்; அவன் சீயோனைக் கண்டான், சிலகாலம் சென்றபின்பு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். கர்த்தர் ஏனோக்கிடம் சொன்னார்: இதோ, என்றென்றைக்குமான என் உறைவிடத்தைப் பார்ப்பாயாக.
22 ஆதாமின் குமாரர்களான மீதியான ஜனங்களையும் ஏனோக்கு கண்டான்; காயீன் சந்ததியைத் தவிர அவர்கள் கலந்திருக்கும் ஆதாமின் எல்லா சந்ததியருமாயிருந்தார்கள், ஏனெனில் காயீனின் சந்ததி கறுமையாயிருந்ததால் அவர்களுக்குள்ளே இடம் இல்லாதிருந்தார்கள்.
23 அதன்பிறகு சீயோன் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை ஏனோக்கு கண்டான், பூமியின் சகல தேசங்களும் அவனுக்கு முன்பாக இருந்தன;
24 தலைமுறை தலைமுறையாக வந்தது, ஏனோக்கு உயர்வானவனாயிருந்து, பிதா மற்றும், மனுஷகுமாரனின் மடிக்கும் உயர்த்தப்பட்டான்; இதோ, சாத்தானின் வல்லமை பூமி முழுவதிலுமிருந்தது.
25 தூதர்கள் வானத்திலிருந்து இறங்குவதை அவன் கண்டான்; பூமியின் குடிகளுக்கு ஐயோ, ஐயோ என்று சொன்ன ஒரு உரத்த சத்தத்தை அவன் கேட்டான்.
26 அவன் சாத்தானைக் கண்டான்; அவன் தன்னுடைய கையில் ஒரு பெரிய சங்கிலியைப் பிடித்திருந்தான், அது பூமி முழுவதையும் இருளால் மறைத்தது; அவன் மேலே நோக்கிப்பார்த்து நகைத்தான், அவனுடைய தூதர்கள் களிகூர்ந்தார்கள்.
27 பிதாவையும் குமாரனையும் குறித்த சாட்சியைப் பகிர்ந்துகொண்டு தூதர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவதை ஏனோக்கு கண்டான்; பரிசுத்த ஆவி அநேகர்மேல் இறங்கி பரலோகத்தின் வல்லமைகளால் அவர்கள் சீயோனுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
28 ஜனங்களில் மீதியானோரை பரலோகத்தின் தேவன் நோக்கிப்பார்த்து அவர் அழுதார்; வானங்கள் எவ்வாறு அழுது மலைகளின்மேலே மழையாக அவைகளின் கண்ணீரை பொழியக்கூடும் எனச் சொல்லி ஏனோக்கு அதைக் குறித்து சாட்சி கொடுத்தான்.
29 ஏனோக்கு கர்த்தரிடம் சொன்னான்: அநாதியாய் என்றென்றைக்குமாய் நீர் பரிசுத்தராயிருந்தும் உம்மால் எப்படி அழமுடிகிறது?
30 பூமியின் துகள்களை மனுஷனால் எண்ணக்கூடுமோ, ஆம் இதைப்போன்ற கோடிக் கணக்கில் பூமிகளுண்டு, உமது சிருஷ்டிப்புகளின் எண்ணிக்கையில் இது ஒரு ஆரம்பமாயிருக்காது; உமது திரைகள் இன்னமும் நீட்டப்பட்டிருக்கின்றன; இருந்தும் நீர் அங்கிருக்கிறீர், உமது மடி அங்கிருக்கிறது; நீர் நீதியாயுமிருக்கிறீர்; நீர் என்றென்றைக்கும் இரக்கமுள்ளவரும் மனதுருக்கமுள்ளவருமாய் இருக்கிறீர்;
31 உமது சிருஷ்டிப்புக்களிலிருந்து, அநாதியாய் என்றென்றைக்குமாய் நீர் சீயோனை உமது மடியில் எடுத்துக் கொண்டீர்; உமது சிங்காசனத்தின் வாசஸ்தலம், சமாதானம், நீதி, சத்தியம் தவிர வேறெதுவுமில்லை. உமது முகத்திற்கு முன்பாக கிருபை போகும், அதற்கு முடிவில்லை, உம்மால் எப்படி அழமுடிகிறது?
32 ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: இதோ, இவர்களே உன்னுடைய சகோதரர்கள்; அவர்கள் என் கைகளின் வேலைப்பாடுகள், அவர்களை நான் சிருஷ்டித்த நாளிலே அவர்களின் ஞானத்தை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; ஏதேன் தோட்டத்திலே அவனுடைய சுயாதீனத்தை நான் மனுஷனுக்குக் கொடுத்தேன்;
33 அவர்கள் ஒருவரிலொருவர் அன்பு கூரவேண்டும், அவர்களுடைய பிதாவான என்னை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என உன்னுடைய சகோதரர்களுக்கு நான் சொல்லி கட்டளையையும் கொடுத்தேன்; ஆனால் இதோ, அவர்கள் வாஞ்சையில்லாதிருந்தார்கள், அவர்கள் தங்களுடைய சொந்த இரத்தத்தை வெறுத்தார்கள்;
34 என்னுடைய சினத்தின் அக்கினி அவர்களுக்கு எதிராக மூட்டப்படுகிறது; என்னுடைய உக்கிரத்திலே அவர்கள் மேல் வெள்ளத்தை நான் அனுப்பமாட்டேனோ, ஏனெனில் என்னுடைய கோபத்தின் உக்கிரம் அவர்களுக்கெதிராக மூட்டப்படுகிறது.
35 இதோ, நானே தேவன்; பரிசுத்தத்தின் மனுஷன் என்பது என்னுடைய நாமம்; ஆலோசனையின் மனுஷன் என்பது என்னுடைய நாமம்; முடிவற்றதும் நித்தியமும்கூட என்னுடைய நாமமாயிருக்கிறது.
36 ஆகவே, என்னுடைய கைகளை நீட்டி நான் உண்டாக்கின சிருஷ்டிகள் யாவற்றையும் என்னால் பிடிக்க முடியும்; என்னுடைய கண்கள் அவைகளை ஊடுருவவும் முடியும்; என்னுடைய கைகளின் எல்லா வேலைப்பாடுகளின் மத்தியிலே உன்னுடைய சகோதரருக்கு மத்தியிலேயுள்ள மகா துன்மார்க்கத்தைப் போன்று இருந்ததில்லை.
37 ஆனால் இதோ, அவர்களுடைய பாவங்கள் அவர்களுடைய பிதாக்களின் தலைகள் மீதிருக்கும்; சாத்தான் அவர்களுடைய தகப்பனாயிருப்பான்; துர்பாக்கியம் அவர்களின் கடைசி அழிவாயிருக்கும்; வானங்களும், என்னுடைய கைகளின் வேலைப்பாடுகளும்கூட அவர்களுக்காக அழுது புலம்பும்; ஆகவே இவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து வானங்கள் அழக்கூடாதோ?
38 ஆனால் இதோ, இவர்கள்மேல் உமது கண்களிருக்கிற இவர்கள் வெள்ளத்தால் அழிவார்கள்; இதோ, அவர்களை நான் அடைத்து வைப்பேன்; அவர்களுக்காக நான் ஒரு சிறைச்சாலையை ஆயத்தப்படுத்தினேன்.
39 நான் தெரிந்து கொண்டவர் என் சமுகத்தில் பரிந்து பேசினார், ஆகவே, அவர் அவர்களின் பாவங்களுக்காக பாடனுபவிக்கிறார்; என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர் என்னிடத்தில் திரும்பி வரும்படிக்கு அவர்கள் மனந்திரும்புகிற அளவில் அந்த நாள் வரைக்கும் அவர்கள் வாதிக்கப்படுவார்கள்;
40 இதற்காக வானங்கள் அழும், ஆம், என்னுடைய கைகளின் வேலைப்பாடுகள் யாவும் அழும்.
41 கர்த்தர் ஏனோக்கிடம் பேசினார், மனுபுத்திரரின் செயல்கள் எல்லாவற்றையும் கூறினார்; ஆகவே ஏனோக்கு அறிந்து அவர்களுடைய துன்மார்க்கத்தையும், அவர்களுடைய துர்பாக்கியத்தையும் நோக்கிப் பார்த்து, அழுது அவனுடைய கைகளை நீட்டினான்; அவனுடைய இருதயம் நித்தியத்தைப் போல பரந்து விம்பியது; அவனுடைய உள்ளம் பொங்கினது; நித்தியம் முழுமையும் அசைந்தது,
42 நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் கூட ஏனோக்கு பார்த்தான்; ஒரு உலகப்பிரகாரமான இரட்சிப்புடன் நோவாவின் குமாரரின் சந்ததி யாவும் இரட்சிக்கப்படவேண்டும்;
43 ஆகவே நோவா ஒரு பேழையைக் கட்டுவதை ஏனோக்கு பார்த்தான்; கர்த்தர் அதைக்குறித்து புன்னகைத்தார், தன்னுடைய கைகளால் அதைப் பாதுகாத்தார்; ஆனால் மீதியான துன்மார்க்கர்மேல் வெள்ளம் வந்து அவர்களை விழுங்கிப்போட்டது.
44 ஏனோக்கு இதைப் பார்த்தபோது அவனுடைய மனம் கசந்தது, அவனுடைய சகோதரர்களுக்காக அவன் அழுது வானங்களிடம் சொன்னான்: நான் ஆறுதலடையாமல் போவேன்; ஆனால் கர்த்தர் ஏனோக்கிடம் சொன்னார்: உன்னுடைய இருதயத்தை உயர்த்தி சந்தோஷமாயிரு; நோக்கிப்பார்.
45 ஏனோக்கு பார்த்து; நோவாவிலிருந்து பூமியின் சகல குடும்பங்களையும் அவன் பார்த்தான்; கர்த்தரின் வருகையின் நாள் எப்போது வரும், துக்கிக்கிற அவர்கள் யாவரும் பரிசுத்தப்பட்டு நித்திய ஜீவனை அடையும்படியாக எப்போது நீதிமான்களின் இரத்தம் சிந்தப்படும் எனச் சொல்லி அவன் கர்த்தரிடம் அழுதான்.
46 கர்த்தர் சொன்னார்: துன்மார்க்கம் மற்றும் பழிவாங்குதலின் நாட்களில் காலத்தின் மத்தியில் அது இருக்கும்.
47 இதோ, மாம்சத்தில் மனுஷ குமாரனின் வருகையின் நாளை ஏனோக்கு பார்த்தான்; நீதிமான் உயர்த்தப்படுகிறார், உலகத் தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்படுகிறார்; விசுவாசத்தின் மூலமாக நான் பிதாவின் மடியிலிருக்கிறேன், இதோ, சீயோன் என்னுடனிருக்கிறது எனச் சொல்லி, அவனுடைய ஆத்துமா களிகூர்ந்தது.
48 ஏனோக்கு பூமியை நோக்கிப் பார்த்தான்; ஐயோ, மனுஷர்களின் தாயான எனக்கு ஐயோ, என்னுடைய பிள்ளைகளின் துன்மார்க்கத்தால் நான் வேதனைப்படுகிறேன், நான் களைப்படைகிறேன். நான் எப்போது இளைப்பாறி என்னிலிருந்து புறப்பட்டுப்போன அசுத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவேன்? நான் இளைப்பாறும்படியாகவும் ஒரு சிறிது காலம் நீதி என் முகத்தில் தங்கியிருக்கவும் எப்போது என்னுடைய சிருஷ்டிகர் என்னை பரிசுத்தம் பண்ணுவார் எனச் சொல்லி அங்கே பூமியின் ஆழத்திலிருந்து அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான்.
49 பூமி துக்கிப்பதை ஏனோக்கு கேட்டபோது, கர்த்தாவே, பூமியின்மேல் நீர் இரக்கம் கொள்ளமாட்டீரோ? நோவாவின் பிள்ளைகளை நீர் ஆசீர்வதிக்கமாட்டீரோ எனச் சொல்லி கர்த்தரிடத்தில் அவன் கண்ணீர்விட்டு அழுதான்.
50 பூமி இனி ஒருபோதும் வெள்ளத்தால் மூடப்படாதிருக்கும்படியாக நோவாவின் மேலும் அவனுடைய சந்ததியின் மேலும் இரக்கம் காட்டும்படியாக உம்முடைய ஒரேபேறான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கர்த்தாவே நான் உம்மைக் கேட்கிறேன் எனச் சொல்லி கர்த்தரிடம் ஏனோக்கு தனது அழுகையைத் தொடர்ந்தான்.
51 கர்த்தரால் நிறுத்த முடியவில்லை; வெள்ளத்தை அவர் நிறுத்துவாரென்றும் நோவாவின் பிள்ளைகளை அழைத்துக் கொள்வாரென்றும் ஒரு ஆணையோடு அவர் ஏனோக்கோடே உடன்படிக்கை செய்தார்;
52 பூமி இருக்கும் வரைக்கும் அவனுடைய சந்ததியின் மீதியானோர் சகல தேசங்களுக்கு மத்தியிலும் எப்போதுமே காணப்படும்படியாக மாற்றமுடியாத ஒரு கட்டளையை அவர் அனுப்பினார்;
53 கர்த்தர் சொன்னார்: மேசியா வரக்கூடிய சந்ததியான அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஏனெனில் அவர் சொல்லுகிறார், சீயோனின் ராஜாவான, நித்தியத்தைப் போன்று பரந்த பரலோகத்தின் கன்மலையான மேசியா நானே, வாசலில் வந்து நின்று என்னிடத்தில் ஏறி வருகிறவன் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை; ஆகவே, நான் பேசுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஏனெனில் நித்திய சந்தோஷத்தின் பாடல்களுடன் அவர்கள் புறப்பட்டு வருவார்கள்.
54 மனுஷகுமாரன் மாம்சத்தில் வரும்போது பூமி இளைப்பாறுமா? இந்தக் காரியங்களை எனக்குக் காட்டுமென உம்மிடம் ஜெபிக்கிறேன் எனச் சொல்லி ஏனோக்கு கர்த்தரிடம் அழுதான்.
55 ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: பார், அவன் நோக்கிப்பார்த்து, மனுஷர்களின் வழக்கப்படியே மனுஷ குமாரன் சிலுவையில் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டான்;
56 அவன் ஒரு உரத்த குரலைக் கேட்டான்; வானங்கள் மூடப்பட்டிருந்தன; தேவனின் சகல சிருஷ்டிகளும் துக்கித்தன; பூமி புலம்பியது; கன்மலைகள் பிளந்தன; பரிசுத்தவான்கள் எழுந்து மனுஷ குமாரனின் வலது பாரிசத்தில் மகிமையின் கிரீடங்களால் முடிசூட்டப்பட்டார்கள்;
57 சிறைச்சாலையிலேயிருந்த அநேக ஆவிகள் வெளியே வந்து தேவனின் வலது பாரிசத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; மகத்தான நாளின் நியாயத்தீர்ப்புவரை மீதியானோர் அந்தகாரத்தின் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
58 பூமி எப்போது இளைப்பாறும் எனச் சொல்லி மீண்டும் ஏனோக்கு கண்ணீர்விட்டு கர்த்தரிடம் அழுதான்.
59 மனுஷகுமாரன் பிதாவினிடத்தில் ஏறிப்போவதை ஏனோக்கு கண்டான்; மீண்டும் நீர் பூமிக்கு வரமாட்டீரோ, நீர் தேவனாயிருக்கிற அளவில், நான் உம்மை அறிவேன், நீர் எனக்கு ஆணையிட்டுக்கொடுத்திருக்கிறீர், உம்முடைய ஒரேபேறானவரின் நாமத்தில் நான் கேட்கவேண்டுமென எனக்குக் கட்டளையிட்டிருக்கிறீர்; நீர் என்னை உண்டாக்கியிருக்கிறீர், உமது சிங்காசனத்திற்கு உரிமையை எனக்கு நீர் கொடுத்திருக்கிறீர், என்னால் அல்ல, உம்முடைய கிருபையின் மூலமாகவே; ஆகவே மீண்டும் நீர் பூமிக்கு வரமாட்டீரோ என உம்மை நான் கேட்கிறேன்.
60 ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: நோவாவின் பிள்ளைகளைக் குறித்து நான் உனக்குச் செய்த ஆணையை நிறைவேற்ற, நான் ஜீவிக்கிறதைப் போலவே, கடைசி நாட்களில், துன்மார்க்கம் மற்றும் பழிவாங்குதலின் நாட்களில் நான் வருவேன்;
61 பூமி இளைப்பாறும் நாள் வரும், ஆனால் அந்த நாளுக்கு முன்பாக வானங்கள் இருண்டுபோகும், அந்தகாரத்தின் திரை பூமியை மூடும்; வானங்களும் பூமியும்கூட அசைக்கப்படும்; மனுபுத்திரருக்கு மத்தியிலே மகா உபத்திரவங்களிருக்கும், ஆனால் என்னுடைய ஜனங்களை நான் பாதுகாப்பேன்.
62 பரலோகத்திலிருந்து கீழே நீதியை நான் அனுப்புவேன்; என்னுடைய ஒரேபேறானவரைப்பற்றியும், மரணத்திலிருந்து அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும், ஆம், சகல மனுஷர்களின் உயிர்த்தெழுதலைப்பற்றியும் சாட்சி கொடுக்க பூமியிலிருந்து சத்தியத்தை நான் அனுப்புவேன்; என்னுடைய ஜனங்கள் தங்களுடைய அரைக்கச்சையைக் கட்டிக் கொள்ளவும் என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்திருக்கவும் நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற ஒரு பரிசுத்த பட்டணமான ஒரு இடத்தில் பூமியின் நான்கு பாகங்களிலிருந்தும் நான் தெரிந்து கொண்டவர்களை கூட்டிச் சேர்க்க ஒரு வெள்ளத்தைப்போல நீதியினாலும் சத்தியத்தினாலும் நான் பூமியை துடைத்துப் போடச் செய்வேன்; ஏனெனில் அங்கே என்னுடைய ஆசரிப்புக் கூடாரமிருக்கும், ஒரு புதிய எருசலேமான அது சீயோன் என்றழைக்கப்படும்.
63 ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: நீயும் உன்னுடைய சகல பட்டணங்களும் அவர்களை அங்கே சந்திப்பீர்கள், நாம் அவர்களை நமது மடியிலே ஏற்றுக்கொள்வோம், அவர்கள் நம்மைக் காண்பார்கள், நாம் அவர்களின் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொள்வோம், அவர்கள் நமது கழுத்தைச் சுற்றிப் பிடித்து ஒருவருக்கொருவர் முத்தமிடுவோம்;
64 அங்கே நான் வாழும் இடமிருக்கும், நான் உண்டாக்கின சிருஷ்டிகளிலிருந்தும் புறப்பட்டு வருகிற அது சீயோனாயிருக்கும்; ஒரு ஆயிரம் வருஷ காலத்திற்கு பூமி இளைப்பாறும்.
65 கடைசி நாட்களில், ஒரு ஆயிரம் வருஷ காலத்திற்கு, நீதியில் பூமியில் வாசம் செய்ய மனுஷ குமாரனின் வருகையின் நாளை ஏனோக்கு கண்டான்;
66 ஆனால் அந்த நாளுக்கு முன்பு அவன் துன்மார்க்கர்களுக்கு மத்தியிலே மிகுந்த துன்மார்க்கத்தைக் கண்டான்; சமுத்திரமும் கொந்தளித்தது எனவும் கண்டான், துன்மார்க்கர்மேல் வரவிருக்கிற சர்வவல்ல தேவனின் நியாயத்தீர்ப்புகளை பயத்துடன் எதிர்பார்த்து மனுஷ இருதயங்களும் சோர்ந்துபோவதை அவன் கண்டான்.
67 உலகத்தின் முடிவுவரை சகல காரியங்களையும் ஏனோக்குக்கு கர்த்தர் காட்டினார்; நீதியின் நாளையும் அவர்களின் மீட்பின் மணி நேரத்தையும் அவன் கண்டு பரிபூரண சந்தோஷமடைந்தான்;
68 ஏனோக்கின் நாட்களில் சீயோனின் நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
69 ஏனோக்கும் அவனுடைய ஜனங்கள் யாவரும் தேவனோடு சஞ்சரித்தார்கள்; அவர் சீயோனுக்கு நடுவிலே வாசம் செய்தார்; சீயோன் இல்லாமல் போனது, ஏனெனில் தேவன் அதை தன்னுடைய மடியில் ஏற்றுக்கொண்டார்; அப்போதிலிருந்து சீயோன் மறைந்தது என்ற சொல் உண்டானது.