லியஹோனா
தேவன் நம்மை ஆதரித்துப் பாதுகாப்பார்
ஆகஸ்ட் 2024


“தேவன் நம்மை ஆதரித்துப் பாதுகாப்பார்,” லியஹோனா, ஆகஸ்ட் 2024.

மாதாந்தர லியஹோனா செய்தி, ஆகஸ்ட் 2024

தேவன் நம்மை ஆதரித்துப் பாதுகாப்பார்

சேனாதிபதி மரோனியைப் போல வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களில் தெய்வீக உதவியையும் வல்லமையையும் நம்மால் பெற முடியும்.

படம்
சுதந்திரக் கொடியை பிடித்திருக்கும் சேனாதிபதி மரோனி

எரிக் சோவின் விளக்கப்படங்கள்

மார்மன் புஸ்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது, நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் இடையே நடந்த யுத்தங்களின் வரலாற்றை அனுபவித்தேன். சேனாதிபதி, ஒரு இராணுவ தளபதி, மரோனியின் விசுவாசம், புத்தி கூர்மை மற்றும் அவன் பயன்படுத்திய தந்திரங்களால் நான் கவரப்பட்டேன், தன்னுடைய 25 ஆம் வயதிலேயே நேபிய படைகள் அனைத்திற்கும் தலைவனாக நியமிக்கப்பட்டவன். ன். அவன் ஞானமுள்ளவனாகவும், பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தான். அவன் தனது மக்களின் சுதந்திரம் மற்றும் நலனுக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் இருந்தான். ( ஆல்மா 48:11–12பார்க்கவும்.)

இராணுவ வெற்றிகளைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, தேவனையும், போரிடாத பெண்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து அவனது படைகளுக்குக் கிடைத்த புனிதமான ஆதரவையும் காரணமாக்கினான். தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின் தலைவனிடம் அவன் கூறியது: “கர்த்தர் … உங்களை எங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார். இது எங்கள் மார்க்கத்தினிமித்தமும், கிறிஸ்துவிலுள்ள எங்கள் விசுவாசத்தினிமித்தமும் … சம்பவித்தது என்று, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.” பின்னர் மரோனி இந்த தீர்க்கதரிசன உள்ளுணர்வைப் பகிர்ந்து கொண்டான்: “நாங்கள் அவருக்கும் எங்களுடைய விசுவாசத்திற்கும், எங்களுடைய மார்க்கத்திற்கும் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்வரைக்கும் தேவன் எங்களை ஆதரித்து, பாதுகாத்து உயிரோடு வைப்பார்”(ஆல்மா 44:3, 4).

காலப்போக்கில், நமது நவீன வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் நாம் பயன்படுத்தக்கூடிய கொள்கைகளை மரோனி மாதிரியாக்கினான் என்பதை நான் உணர்ந்தேன். உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் விசுவாசம் வைக்கும்போது, அவர் தம்முடைய வல்லமையால் நம்மை ஆசீர்வதிப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதற்கும், அவரது ஆசீர்வாதங்களை நாம் அடையாளம் காண்பதற்கும், மரோனி தனது வாழ்க்கையில் உண்மையான போர்களுக்கு ஆயத்தம் செய்து எதிர்கொண்டது போல, நமது நோக்கத்தை புரிந்துகொண்டு, வெற்றிக்கான திட்டமுறையை வகுத்து, நாம் எதிர்கொள்ளும் உருவக போர்களுக்காக ஆயத்தப்பட வேண்டும். நாம் அவ்வாறு செய்யும்போது, பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் நம்மை ஆதரித்துப் பாதுகாப்பார்கள்.

நம்முடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்

மரோனி மக்களுக்கு அவர்கள் யார் என்பதையும் (ஆபிரகாமிய உடன்படிக்கையின் சுதந்திரவாளிகள்), அவர்கள் யாருடையவர்கள் என்பதையும் (தேவனின் அன்பான பிள்ளைகள்), மற்றும் அவர்களின் போராட்டத்திற்கான காரணத்தையும் (குடும்பம், விசுவாசம் மற்றும் சுதந்திரம்) மீண்டும் மீண்டும் நினைவூட்டினான். அவர்கள் பிழைத்திருப்பதற்காகவும் , ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனத்திலிருந்து அவர்களின் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள் மரோனி தனது மக்களுக்கு கற்பித்தான். இதற்கு நேர்மாறாக, அவர்களின் எதிரிகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதன் மூலம் வரும் தனிப்பட்ட ஆதிக்கத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் போரிட்டனர்.

சில நேபியர்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தை அபகரிக்க முயன்றபோது, மரோனி தனது அங்கியைக் கிழித்து, அதன் ஒரு துண்டில் தனது செய்தியின் முக்கிய கூறுகளை எழுதினான்: “நமது தேவன், நமது மார்க்கம் மற்றும் சுதந்திரம், நமது சமாதானம், நமது மனைவிகள், நமது பிள்ளைகள் நினைவாக.” “சுதந்திரக் கொடி” என்று அவன் அழைத்த இந்தக் கொடியை ஒரு கம்பத்தின் முனையில் ஏற்றி,எதற்காக போராடுகிறோம் என்பதை மக்களுக்கு நினைவூட்டவும், அந்த நோக்கத்திற்காக அவர்களை அணிதிரட்டவும் அதைப் பயன்படுத்தினான். ( ஆல்மா 46:12–13, 19-20பார்க்கவும்.)

வாழக்கையின் ஆவிக்குரிய போராட்டங்களில், “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, அந்தகார லோகாதிபதிகளோடும் … பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12). போராட்டம் எதற்காக என்பதை நாமும் நினைவில் கொள்ள வேண்டும். பன்னிரு அப்போஸ்தலர்கள் குழுமத்தின் முன்னாள் அங்கத்தினரான மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் (1926–2004), இந்த சிந்தனையை சொல்வன்மைமிக்க சுருக்கமான ஒரு உரையாடலில் கூறினார்.

2004ல், மூப்பர் மேக்ஸ்வெல் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பு நான் அவரை அவரது மருத்துவமனை அறையில் சந்தித்தேன். தன்னைப் பார்க்க வந்தவர்களிடமும் தனக்கு உதவி செய்தவர்களிடமும் அவர் மிகவும் அன்பாக இருந்தார். சுகாதாரப் பணியாளர்கள் அவரது அறைக்குச் சென்று அழுதுகொண்டே வெளியே வந்தனர். நான் அவரிடம், “மூப்பர் மேக்ஸ்வெல், இது மிகவும் கடினமானது,” என்று கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே, “ஓ, டேல், நாம் ஒரு அழிவுக்கேதுவான உலகில் வாழும் நித்தியப் பிறவிகள். தண்ணீருக்கு வெளியே இருக்கும் மீன் போல நாம் நம் அமைப்பிற்கு வெளியே இருக்கிறோம் நமக்கு ஒரு நித்திய கண்ணோட்டம் இருக்கும்போது மட்டுமே இவைகளின் அர்த்தங்களை நம்மால் உணர முடியும்.”

நம்முடைய தெய்வீக சுபாவமும் நித்திய எதிர்காலமும் மேலும் நம்மை எதிர்க்கும் கொடூரமான சக்திகளும் அடங்கிய பெரிய கூட்டமைப்பின் மீதான பார்வையை நாம் இழந்துவிடக்கூடாது. பரலோக பிதாவின் திட்டத்தை சரியாக புரிந்துகொள்வது, நமது நித்திய இரட்சிப்புக்காகவும், ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து நமது விடுதலைக்காகவும்,தொடர்ந்து போராட நம்மை ஊக்குவிக்கும்.

படம்
மக்கள் அரண்களைத் தயார் செய்தல்

வெற்றிக்கான வியூகங்களை வகுத்தல்

அவனது படைகள் சண்டையிட்ட போர்கள் முழுவதும், மரோனி வெற்றியை உறுதிப்படுத்த வியூகங்களை வகுத்தான். அவன் தனது எதிரிகளின் நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் கண்டுபிடிக்க ஒற்றர்களைப் பயன்படுத்தினான். அவன் ஆல்மா தீர்க்கதரிசியிடமிருந்து வழிநடத்துதலை நாடினான். மரோனி பின்னர் போருக்கான தனது அணுகுமுறையில் அந்த உணர்த்தப்பட்ட அறிவுரைகளை பயன்படுத்தினான். தேவைக்கேற்ப ஆதாரங்களை நிலைநிறுத்தி, குறைந்த அரண் கொண்ட நகரங்களில் அதிக வீரர்களை நிறுத்தினான். புது தகவல்களின் அடிப்படையில் அவன் வியூகங்களின் மூலம் செயல்பாட்டுத் திட்டங்களை அமைத்தான்.

அவன் இதன் மூலம் எதிரி படைகளுக்கு மேலாக சாதகங்களை பெற்றான். முந்தைய வெற்றிகளால் அவன் ஒருபோதும் திருப்தி அடையவில்லை; மாறாக, எதிர்கால சவால்களைச் சமாளிக்க தனது திறன்களையும் தனது படைகளின் திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்தினான்.

ஆவிக்குரிய எதிரிகளைக் கையாள்வதற்கு இதே போன்ற அணுகுமுறைகளை நாம் பயன்படுத்தலாம். சாத்தான் நம் வாழ்வில் என்ன செய்ய முயற்சிக்கிறான் என்பதை உணர்ந்துகொள்வதில் இருந்து நாம் தொடங்கலாம். நம்முடைய நோக்கத்திலிருந்து நம்மைத் திசைதிருப்ப அவன் முயற்சி செய்கிறான். சோதனைகள் வரும்போது, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது:

  • என்னுடைய சார்பிலான இந்த செயல் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு எதிராக எவ்வாறு அடுக்கப்படுகிறது?

  • இந்த செயலை செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

  • பூமியில் என் நோக்கத்தை நிறைவேற்ற இந்தச் செயல் எனக்கு உதவுமா?

மிகச் சிறிய இச்சைகளுக்காகிலும் அடிபணிவதால் ஏற்படும் இறுதி விளைவை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சோதனைகளுக்கு இடங்கொடுக்கும்போது நாம் “கொஞ்சம் கொஞ்சமாய் விஷத்தை” (ஆல்மா 47:18) உட்கொள்ளுகிறோம், இது ஆவிக்குரிய மரணத்திற்கு வழிவகுக்கும் விளைவுகளை ஏற்படுத்த துன்மார்க்க வல்லமைகளால் பயன்படுத்தப்படும் மிக ஆற்றல்வாய்ந்த உத்தி.

நமது பிற்காலத் தீர்க்கதரிசியிடமிருந்து நாம் பெறும் வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் மூலம் சாத்தானின் சோதனைகளுக்கு எதிராக நம்மைப் பலப்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு செய்வது நமது செயல்களை மதிப்பீடு செய்வதற்கான ஒரு நித்திய கண்ணோட்டத்தை வைத்திருக்க உதவுகிறது. நம் வாழ்வின் பல்வேறு பகுதிகளில் எழும் சோதனைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வோம் என்று செயல்திட்டமிட்டுக் கொள்வது நமக்குத் தேவைப்படும் தருணத்தில் சரியான தேர்வுகளைச் செய்ய உதவும். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் நமது நித்திய நோக்கத்திலிருந்து திசைதிரும்பிடாமல் பாதுகாக்க உதவும்.

ஒரு உதாரணம் தொழில்நுட்பத்திலிருக்கிறது. தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயம், அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இரண்டுமே பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கலாம். நமது சாதனங்களின் பயன்பாட்டில் ஞானமான தேர்வுகளைச் செய்ய இளைஞர்களும் முதியவர்களும் “தொழில்நுட்பத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுதல்” மற்றும் For the Strength of Youth: A Guide for Making Choicesஐ பார்க்கவும். இவை நமது நோக்கத்தை நமக்கு நினைவூட்டுகின்றன, இயேசு கிறிஸ்துவிடம் செல்லும் வழியை சுட்டிக்காட்டுகின்றன, பரிசுத்த ஆவியை நம் வாழ்விற்குள் அழைக்க உதவுகின்றன. தொழில்நுட்பத்தை எப்படி, எப்போது, எங்கு பயன்படுத்துவோம் என்று திட்டமிடுவது அடிப்படையான, உலகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நம்மை பலப்படுத்தும்.

படம்
லாமானியர்கள் நேபிய அரண்களைத் தாக்குதல்

உருவகப் போர்களுக்குத் தயாராகுதல்

வரவிருக்கும் போர்களை எதிர்நோக்கி, மரோனி தனது மக்களை தனிப்பட்டவிதமான மார்புக்கவசங்கள், கேடயங்கள், தலைக்கவசங்கள் மற்றும் தடிமனான ஆடைகளுடன் தயார் செய்தான். நகரங்களைக் கோட்டைகளால் சூழ்ந்து, அவற்றைச் சுற்றி மண் மதில்களை எழுப்புவதன் மூலம் அவன் தனது மக்களை ஒன்றுசேர்த்து தயார்படுத்தினான்.

ஆவிக்குரிய ரீதியாக, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் நாம் தனித்தனியாக ஆயத்தப்படுகிறோம். நாம் தேவனுடன் உடன்படிக்கைகளை செய்து கடைபிடிக்கிறோம், அது இயேசு கிறிஸ்துவின் வல்லமையை நம் வாழ்விற்குள் ஈர்க்கும். . ஜெபம், உபவாசம், வேதவசனங்களை ஆராய்தல் போன்ற தனிப்பட்ட அர்ப்பணிப்பின் செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். நாம் பெறும் ஆவிக்குரிய வழிநடத்துதலுக்கு இணங்கி, விசுவாசத்தோடு செயல்படுகிறோம். திருவிருந்துக்கு நாம் மனசாட்சியுடன் ஆயத்தப்பட்டு, தகுதியுள்ளவர்களாக பங்கேற்கிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்த மரோனிக்கு அவர் உண்மையாக இருந்தது போல, இரட்சகர் நமது வாழ்க்கையிலும் அதிக உண்மையானவராக ஆகிறார். வழிநடத்துதலுக்காகவும் விடுதலைக்காகவும் தான் இரட்சகரை சார்ந்திருக்க முடியும் என்பதை மரோனி அறிந்திருந்தான்( ஆல்மா 48:16 பார்க்கவும்) நாமும் வழிநடத்துதலுக்காகவும் விடுதலைக்காகவும் இயேசு கிறிஸ்துவை சார்ந்திருக்கலாம்.

நம் குடும்பங்களை பலப்படுத்துவதன் மூலம் நாம் மேலும் ஆயத்தம் செய்யலாம். நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், அவரிடம் எவ்வாறு திரும்புவது என்பதைக் கற்றுக்கொள்ளவும் நமது பரலோக பிதா நம்மைக் குடும்பங்களாக ஒழுங்கமைத்தார். நம் குடும்பங்கள் நமக்கு உதவியின் ஆதாரமாக இருக்கலாம். நம் குடும்பங்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், நாம் தேவனின் பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வதன் மூலம் நம் அனைவராலும் மகிழ்ச்சியையும் அன்பையும் உணர முடியும்.

பரிசுத்தவான்களின் சமூகங்களில் நாம் சேரும்போது நாம் கூட்டாக வலிமையைப் பெற்று நமது ஆவிக்குரிய போர்களுக்காக ஆயத்தப்படலாம். நம் பிணையங்களும் சேகரங்களும் அத்தகைய அடைக்கலமான மற்றும் பாதுகாப்புக்கான இடத்தை வழங்குகின்றன. நாம் ஒருவரையொருவர் ஆவிக்குரிய பிரகாரமாக போஷித்துக் கொள்ளலாம், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவலாம், எப்போதும் மற்றும் குறிப்பாக சவாலான காலங்களில் கிறிஸ்துவைச் சார்ந்திருக்க ஒருவருக்கொருவர் ஊக்குவிக்கலாம். நாம் ஒன்றுகூடும்போது, நமது போர்களை நாம் தனியாகப் போராடவில்லை என்பதை உணர்கிறோம். நமக்கு உதவவும் பாதுகாக்கவும் நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளனர். நாம் ஒன்றாக ஆயத்தமாகும்போது நாம் அனைவரும் வல்லமைப் படுகிறோம்.

குறிப்பிடத்தக்க வகையில், மரோனி தனது மக்களின் அனைத்து மகிழ்ச்சிக்கும் தேவன் மீதும் அவர்களின் மார்க்கத்தின் மீதுமான அவர்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பதுதான் காரணம் என்று கூறினான். பரலோக பிதாவினாலும் அவரது திட்டத்தினாலும், இயேசு கிறிஸ்துவினாலும் மற்றும் அவரது பாவநிவிர்த்தியினாலும் மகிழ்ச்சி வருகிறது என்பதை மரோனியைப் போல நாமும் உணர வேண்டும். நமது நோக்கத்தைப் புரிந்துகொண்டு, வெற்றிக்கான வியூகங்களை வகுத்து, உருவகப் போர்களுக்கு ஆயத்தமாகும்போது, நாம் தெய்வீக உதவியையும் வல்லமையையும் பெறுகிறோம்.

மரோனியைப் போல,பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் அடிமைத்தனத்திலிருந்து பரிபூரண விடுதலையையும் —மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலையையும் கொண்டுவருகிறார்கள் என நான் அறிவேன். எல்லாவற்றிலும் நாம் அவர்களைப் நோக்கிப்பார்க்கும்போது அவர்கள் தங்கள் வல்லமையால் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

குறிப்புகள்

  1. Taking Charge of Technology,” சுவிசேஷ நூலகம்.

  2. இளைஞரின் பெலனுக்காக: தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டி (2022), சுவிசேஷ நூலகம்.

  3. ரசல் எம். நெல்சன், “Joy and Spiritual Survival,” லியஹோனா, நவம்பர் 2016, 82 ஐ பார்க்கவும்.

அச்சிடவும்