“மனமாற்றம் நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“மனமாற்றம் நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024
மனமாற்றம் நமது இலக்கு
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கும் போதித்தலுக்குமான நோக்கம், நமது மனமனமாற்றத்தை ஆழப்படுத்துதலும் இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக நமக்கு உதவி செய்தலுமே ஆகும். இந்தக் காரணத்தினால்தான், சுவிசேஷத்தை நாம் படிக்கும்போது, நாம் புதிய தகவலுக்காக மட்டுமே தேடுவதில்லை; நாம் ஒரு “புதிய சிருஷ்டி” ஆக விரும்புகிறோம் (2 கொரிந்தியர் 5:17). நமது இருதயங்களை, நமது பார்வைகளை, நமது செயல்களை மற்றும் நமது இயல்புகளையும் மாற்ற நமக்குதவ பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் சார்ந்திருத்தல், என்பது இதன் பொருள்.
ஆனால் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தி மனமாற்றம் என்னும் அற்புதத்துக்கு வழிநடத்தும் வகையான சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் உடனடியாக நடந்துவிடுவதில்லை. அது ஒரு வகுப்பறையைத் தாண்டி ஒரு தனிநபரின் இருதயம் மற்றும் வீட்டுக்குள்ளும் நீள்கிறது. சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ளவும் அதன்படி வாழவும் சீரான அன்றாட முயற்சிகள் தேவைப்படுகின்றன. உண்மையான மனமாற்றத்துக்கு பரிசுத்த ஆவியின் செல்வாக்கு தேவைப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவர் சத்தியத்துக்கு நம்மை வழிநடத்தி அந்த சத்தியத்தைப்பற்றி சாட்சி பகருகிறார் ( யோவான் 16:13 பார்க்கவும்). அவர் நமது மனங்களை தெளிவுபடுத்தி, நம் புரிதலுக்கு உயிரூட்டி, எல்லா சத்தியத்துக்கும் ஆதாரமான தேவனிடமிருந்து வரும் வெளிப்படுத்தலினால் நம் இருதயங்களைத் தொடுகிறார். பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களை தூய்மையாக்குகிறார். சத்தியத்தின்படி வாழ நம்மில் வாஞ்சையை உணர்த்தி, இதைச் செய்ய வழிகளை நமக்கு கிசுகிசுக்கிறார். உண்மையாகவே, “பரிசுத்த ஆவியானவர் … எல்லாவற்றையும் [நமக்குப்] போதிப்பார்” (யோவான் 14:26).
இக்காரணங்களுக்காகவே, சுவிசேஷத்தின்படி வாழவும், கற்றுக்கொள்ளவும், போதிக்கவும் நமது முயற்சிகளில் நாம் முதலாகவும் முதன்மையாகவும் பரிசுத்த ஆவியானவரின் தோழமையை நாட வேண்டும். இந்த இலக்கே நமது தேர்ந்தெடுப்புகளை ஆளுகை செய்து, நமது சிந்தனைகளையும், செயல்களையும் வழிநடத்த வேண்டும். பரிசுத்த ஆவியின் செல்வாக்கை வரவேற்கிற எதையும் நாம் நாட வேண்டும், அந்த செல்வாக்கைத் துரத்துகிற எதையும் மறுக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாயிருக்க நாம் தகுதியாயிருக்க முடியுமானால், பரலோக பிதா மற்றும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழவும் நாம் தகுதி பெற முடியும் என நாம் அறிகிறோம்.