ஊழிய அழைப்புகள்
அத்தியாயம் 3: பாடம்3—இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்


“அத்தியாயம் 3: பாடம் 3—இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“அத்தியாயம் 3: பாடம் 3,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

அத்தியாயம் 3: பாடம் 3

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்

இரண்டாம் வருகை–ஹாரி ஆண்டர்சன்

மக்கள் ஆச்சரியப்படலாம்

  • இயேசு கிறிஸ்து யார்? எனக்கும் என் குடும்பத்துக்கும் அவர் எப்படி உதவ முடியும்?

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் அர்த்தம் என்ன? அவர் மீது விசுவாசம் வைப்பது எப்படி என் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும்?

  • மனந்திரும்புதல் என்றால் என்ன?

  • நான் தவறான தேர்வுகளை செய்த பிறகு தேவனின் சமாதானத்தையும் மன்னிப்பையும் எப்படி உணர முடியும்?

  • ஞானஸ்நானத்தின் நோக்கம் என்ன?

  • பரிசுத்த ஆவியின் வரம் என்றால் என்ன?

  • இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதன் அர்த்தம் என்ன?

நாம் எப்படி கிறிஸ்துவிடம் வருகிறோம் என்பதே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம். ஒரு குழந்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு அது எளிமையானது. இந்தப் பாடம், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம் மற்றும் இறுதிபரியந்தம் நிலைத்திருப்பது உள்ளிட்ட கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் கோட்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறது. சுவிசேஷம் தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.

சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு “நற்செய்தி” என்று அர்த்தம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு நல்ல செய்தியாகும்—ஏனென்றால் அது நித்திய சத்தியத்தை வழங்குகிறது—நாம் அவரிடம் வந்து இரட்சிக்கப்பட வேண்டும் (1 நேபி 15:14 பார்க்கவும்). நல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை சுவிசேஷம் நமக்குக் கற்பிக்கிறது. சுவிசேஷத்தின் நற்செய்தி பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பரிசுத்தமாக்கப்படுவதற்கும், தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கும் வழி வழங்குகிறது.

கற்பித்தலுக்கான ஆலோசனைகள்

இந்தப் பிரிவு உங்களுக்குக் கற்பிக்கத் தயாராவதற்கு ஒரு மாதிரி குறிப்பை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய கேள்விகள் மற்றும் அழைப்புகளின் எடுத்துக்காட்டுகளும் இதில் அடங்கும்.

நீங்கள் கற்பிக்கத் தயாராகும்போது, ஒவ்வொருவரின் சூழ்நிலையையும் ஆவிக்குரிய தேவைகளையும் ஜெபத்துடன் கருத்தில் கொள்ளுங்கள். எது கற்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்யுங்கள். மக்கள் புரிந்து கொள்ளாத சொற்களை வரையறுக்க தயாராகுங்கள். பாடங்களை சுருக்கமாக வைத்திருப்பதை நினைவில் வைத்து, உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதைத் திட்டமிடுங்கள்.

நீங்கள் கற்பிக்கும்போது பயன்படுத்த வசனங்களைத் தேர்ந்தெடுங்கள். பாடத்தின் “கோட்பாட்டு அடித்தளம்” பிரிவில் பல உதவிகரமான வசனங்கள் உள்ளன.

நீங்கள் கற்பிக்கும்போது என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் கொடுக்க அழைப்புகளைத் திட்டமிடுங்கள்.

தேவனின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை வலியுறுத்துங்கள், நீங்கள் கற்பிப்பதைப் பற்றிய உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு குடும்பத்திற்கு ஊழியக்காரர்கள் கற்பித்தல்

15–25 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்

கற்பிக்க பின்வரும் கொள்கைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் இந்த குறிப்புக்குப் பிறகு வழங்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் தெய்வீக ஊழியம்

  • பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்காக தேவன் தம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார்.

  • நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவ நிவாரண பலியின் நிமித்தமாக, நமது பாவங்களுக்காக நாம் சுத்திகரிக்கப்பட முடியும்.

  • இயேசு சிலுவையிலறையப்பட்ட பிறகு, அவர் உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பரிபூரணமான, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம்.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முதல் கொள்கை விசுவாசமாகும்.

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பதில், அவர் தேவனின் குமாரன் என்று நம்புவதும், அவரை நம் இரட்சகராகவும் மீட்பராகவும் நம்புவதும் அடங்கும்.

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது செயல் மற்றும் வல்லமையின் கொள்கை.

  • ஜெபிப்பது, வேதங்களைப் படிப்பது மற்றும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம்.

மனந்திரும்புதல்

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது மனந்திரும்புதல் என்பது தேவனிடம் திரும்புவதும் பாவத்திலிருந்து விலகிச் செல்வதும் ஆகும். நாம் மனந்திரும்பும்போது, நம்முடைய செயல்கள், வாஞ்சைகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக மாறுகின்றன.

  • நாம் உண்மையாக மனந்திரும்பும்போது, தேவன் நம்மை மன்னிக்கிறார். நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாவநிவர்த்தி செய்ததால் மன்னிப்பு நமக்கு சாத்தியமாகிறது.

  • நாம் மனந்திரும்பும்போது, ​​நம்முடைய குற்றமும் துக்கமும் குணமாக்கப்படும்போது நாம் சமாதானத்தை உணர்கிறோம்.

  • மனந்திரும்புதல் வாழ்நாள் செயல்முறை. நாம் மனந்திரும்பும் ஒவ்வொரு முறையும் தேவன் நம்மை திரும்பவும் வரவேற்கிறார். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

ஞானஸ்நானம்: தேவனுடனான நமது முதல் உடன்படிக்கை

  • ஞானஸ்நானம் என்பது நாம் முதலில் தேவனுடன் எப்படி ஒரு உடன்படிக்கை உறவில் பிரவேசிக்கிறோம் என்பதாகும்.

  • ஞானஸ்நானம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: தண்ணீரால் மற்றும் ஆவியானவரால் ஞானஸ்நானம். நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது, வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் தரப்பட்டு, நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம்.

  • இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் மூழ்கடிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெறுகிறோம்.

  • குழந்தைகள் அவர்கள் எட்டு வயது அடையும் வரை ஞானஸ்நானம் பெறுவதில்லை. அந்த வயதிற்கு முன் இறந்த குழந்தைகள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் மீட்கப்படுகிறார்கள்.

  • இயேசுவின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், தேவனுடனான நமது உடன்படிக்கைகளைப் புதுப்பிப்பதற்காகவும் ஒவ்வொரு வாரமும் திருவிருந்தில் பங்கு கொள்கிறோம்.

பரிசுத்த ஆவியின் வரம்

  • பரிசுத்த ஆவி தேவத்துவத்தின் மூன்றாம் நபர்.

  • நாம் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, திடப்படுத்துதல் எனப்படும் நியமத்தில் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறோம்.

  • பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறும்போது, நாம் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய தோழமையைக் கொண்டிருக்கலாம்.

  • பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார், நம்மை வழிநடத்துகிறார், ஆறுதலளிக்கிறார், சத்தியத்தை அறிய உதவுகிறார்.

இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல்

  • நிலைத்திருத்தல் என்பது ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவில் தொடர்ந்து விசுவாசம் வைப்பதை உள்ளடக்குகிறது. நாம் தேவனுடன் நமது உடன்படிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம், மனந்திரும்புகிறோம், பரிசுத்த ஆவியின் தோழமையை நாடுகிறோம், மற்றும் திருவிருந்தில் பங்குபெறுகிறோம்.

  • நாம் விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முற்படும்போது, நாம் நித்திய ஜீவனைப் பெறுவோம் என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனின் குழந்தைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது

  • சுவிசேஷத்தின்படி ஜீவித்தல் நமது மகிழ்ச்சிகளை ஆழமாக்குகிறது, நமது செயல்களை உணர்த்துகிறது, மேலும் நமது உறவுகளை வளப்படுத்துகிறது.

  • இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி நாம் வாழும்போது, நாம் தனிநபர்களாகவும், குடும்பங்களாகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம், குடும்பங்கள் இந்த வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்படுகின்றன, மேலும் நித்தியத்திற்கும் ஒன்றாக தேவனின் முன்னிலையில் வாழ முடியும்.

நீங்கள் மக்களிடம் கேட்கக்கூடிய கேள்விகள்

பின்வரும் கேள்விகள் நீங்கள் மக்களிடம் என்ன கேட்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தவும் ஒரு நபரின் தேவைகள் மற்றும் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவும்.

  • இயேசுவைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

  • நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் அர்த்தம் என்ன?

  • உங்கள் வாழ்க்கையில் எதை மாற்ற வேண்டும் என உணர்கிறீர்கள்?

  • மனந்திரும்புதல் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

  • ஞானஸ்நானம் பற்றிய உங்கள் புரிதல் என்ன? ஞானஸ்நானத்திற்குத் தயாராக நீங்கள் இப்போது என்ன செய்யலாம்?

  • தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கான உங்கள் பயணத்தில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

  • நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால் என்ன? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உதவக்கூடிய சில வழிகளை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாமா?

நீங்கள் கொடுக்கக்கூடிய அழைப்புகள்

  • நாங்கள் கற்பித்தது உண்மை என்பதை அறிய உதவும்படி தேவனிடம் ஜெபத்தில் கேட்பீர்களா? (பாடம் 1ன் கடைசிப் பாகத்தில் உள்ள “கற்பித்தல் உள்ளுணர்வுகள்: ஜெபம்” பார்க்கவும்.)

  • நாங்கள் கற்பித்ததைப் பற்றி மேலும் அறிய இந்த ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வருவீர்களா?

  • நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அது தேவனுடைய வார்த்தை என்பதை அறிய ஜெபிப்பீர்களா? (குறிப்பிட்ட அத்தியாயங்கள் அல்லது வசனங்களை நீங்கள் பரிந்துரைக்கலாம்.)

  • நீங்கள் இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி ஞானஸ்நானம் பெறுவீர்களா? (இந்த1 பாடத்திற்கு உடனடி முந்திய “ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்படுவதற்கான அழைப்பு” பார்க்கவும்.)

  • எங்கள் அடுத்த வருகைக்கான நேரத்தை தீர்மானிக்கலாமா?

கோட்பாட்டு அஸ்திபாரம்

சுவிசேஷத்தைப் பற்றிய உங்கள் அறிவையும் சாட்சியத்தையும் பலப்படுத்த படிக்கவும், கற்பிக்க உங்களுக்கு உதவவும், இந்தப் பகுதி உங்களுக்குக் கோட்பாடு மற்றும் வசனங்களை வழங்குகிறது.

இயேசு அனுப்பிய பன்னிருவர் இவர்களே-வால்டர் ரானே

இயேசு கிறிஸ்துவின் தெய்வீக ஊழியம்

நாம் அனைவரும் இந்த உலகில் மகிழ்ச்சியையும், வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவனையும் அனுபவிப்பதை சாத்தியமாக்க, பரலோக பிதா தம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார், “இதுவே சுவிசேஷம், நற்செய்தி, … உலகத்தின் பாவங்களை சுமக்கவும், உலகத்தை பரிசுத்தப்படுத்தவும், சகல அநீதிகளிலிருந்தும் அதை சுத்தப்படுத்தவும், அவர் மூலமாய் எல்லோரும் இரட்சிக்கப்படும்படிக்கு [இயேசு கிறிஸ்து ]… உலகத்தில் வந்தார்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:40–42).

அநித்தியர்களாக நாம் அனைவரும் பாவம் செய்து மரிப்போம். நமக்கு ஒரு மீட்பர் இல்லையென்றால் பாவமும் மரணமும் தேவனுடன் நித்திய ஜீவனைப் பெறுவதைத் தடுக்கும் (2 நேபி 9 பார்க்கவும்). உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன், பரலோக பிதா இயேசு கிறிஸ்துவை நம்மை மீட்க தேர்ந்தெடுத்தார். அன்பின் உச்ச வெளிப்பாடாக, இயேசு பூமிக்கு வந்து இந்த தெய்வீக ஊழியத்தை நிறைவேற்றினார். அவர் நம் பாவங்களிலிருந்து மீட்கப்படுவதை சாத்தியமாக்கினார், மேலும் நாம் இறந்த பிறகு நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவதை உறுதி செய்தார்.

இயேசு ஒரு பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய பூலோக ஊழியத்தின் முடிவில், கெத்செமனேயிலும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் அவர் பாடுபட்டதன் மூலம் நம்முடைய பாவங்களைத் தானே ஏற்றுக்கொண்டார் (1 நேபி 11:33 பார்க்கவும்). இயேசுவின் துன்பம் மிக அதிகமாக இருந்தது, அது அவரை, “வேதனையினிமித்தம் நடுங்கி, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து, சரீரம் ஆவி இரண்டிலும் பாடுபடவைத்தது.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18) சிலுவையில் அறையப்பட்ட பிறகு, இயேசு உயிர்த்தெழுந்தார், மரணத்தின் மீது வெற்றி பெற்றார். ஒன்றாக, இந்த நிகழ்வுகள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாகும்.

ஆனால் நம்முடைய பாவங்கள் நம்மை அசுத்தமாக்குகின்றன, “எந்த ஒரு அசுத்தமுள்ள பொருளும் தேவனோடு வாசம் செய்ய முடியாது” (1 நேபி 10:21 ). கூடுதலாக, நீதியின் நியாயப்பிமாணம் நம் பாவங்களுக்கு ஒரு விளைவைக் கோருகிறது.

இயேசுவின் பாவநிவாரண பலி, நாம் மனந்திரும்பும்போது பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கும் பரிசுத்தமாக்கப்படுவதற்கும் வழி வழங்குகிறது. இது நீதியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான வழியையும் வழங்குகிறது (ஆல்மா 42:15, 23–24 பார்க்கவும்). இரட்சகர் சொன்னார், “அவர்கள் மனந்திரும்பினால் அவர்கள் பாடுபடாதிருக்க, தேவனாகிய நான் எல்லோருக்காகவும் இவற்றை அனுபவித்தேன்; ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லையென்றால் என்னைப்போலவே அவர்களும் பாடுபடவேண்டும்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:16–17). இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால், பரலோக பிதாவுடன் எதிர்கால ஜீவியத்துக்கான எல்லா நம்பிக்கையையும் பாவம் முடிவுக்குக் கொண்டுவரும்.

நமக்காக தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து, நம்முடைய தனிப்பட்ட பொறுப்பை இயேசு நீக்கவில்லை. நாம் அவர் மீது விசுவாசம் வைத்து, மனந்திரும்பி, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முயற்சி செய்ய வேண்டும். நாம் மனந்திரும்பும்போது, இயேசு தம்முடைய பிதாவின் இரக்கத்தின் உரிமைகளை நமக்காகக் கோருவார் (மரோனி 7:27–28 பார்க்கவும்). இரட்சகரின் பரிந்துரையின் காரணமாக, பரலோக பிதா நம்மை மன்னித்து, நம்முடைய பாவங்களின் சுமை மற்றும் குற்ற உணர்விலிருந்து நம்மை விடுவிக்கிறார் (மோசியா 15:7–9 பார்க்கவும்). நாம் ஆவிக்குரிய விதமாக சுத்திகரிக்கப்படுகிறோம், இறுதியில் தேவனின் பிரசன்னத்திற்கு வரவேற்கப்படுகிறோம்.

இயேசுவின் தெய்வீக ஊழியமும் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். அவர் உயிர்த்தெழுந்ததால், நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், மேலும் நாம் ஒவ்வொருவரும் பரிபூரணமான, உயிர்த்தெழுந்த சரீரத்தில் என்றென்றும் வாழ்வோம். இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால், பரலோக பிதாவுடன் எதிர்கால ஜீவியத்துக்கான அனைத்து நம்பிக்கையையும் மரணம் முடிவுக்குக் கொண்டுவரும்.

வேதப் படிப்பு

தேவன் தன் குமாரனை அனுப்பினார்

இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிப்பு

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்

சுவிசேஷத்தின் முதல் கொள்கை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமாகும். மற்ற எல்லா சுவிசேஷ கொள்கைகளுக்கும் விசுவாசமே அடித்தளம்.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது அவர் தேவனின் ஒரே பேறான குமாரன் என்ற நம்பிக்கையை உள்ளடக்கியது. நம் இரட்சகராகவும் மீட்பராகவும் அவரை நம்புவதும் அடங்கும்—தேவ பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கான ஒரே வழி அவர்தான். (அப்போஸ்தலர் 4:10–12; மோசியா 3:17; 4:6–8 பார்க்கவும்). “அவரிலே உண்டான அசைக்கமுடியாத விசுவாசத்தினாலும், இரட்சிக்க வல்லமையுடையவருடைய நற்குணங்களில் முழுமையாய் சார்ந்திருத்தலை”, பிரயோகிக்க நாம் அழைக்கப்படுகிறோம். (2 நேபி 31:19).

இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசம், அவருடைய பாவநிவாரண பலியில் அவர் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார் என்று நம்புவதும் அடங்கும். அவருடைய தியாகத்தின் காரணமாக, நாம் மனந்திரும்பும்போது நாம் சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்பட முடியும். இந்த சுத்திகரிப்பு இந்த வாழ்க்கையில் அமைதியையும் நம்பிக்கையையும் பெற உதவுகிறது. இது நாம் மரித்த பிறகு ஒரு முழு மகிழ்ச்சியையும் பெற அனுமதிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம், அவர் மூலமாக நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம் என்று நம்புவதும் அடங்கும். இந்த விசுவாசம் இழப்புக் காலங்களில் நம்மைத் தாங்கி ஆறுதல்படுத்தும். மரணத்தின் துக்கத்தை உயிர்த்தெழுதலின் வாக்குறுதி மூலம் அகற்ற முடியும்.

இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்தில், அவர் நம்முடைய துன்பங்களையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டார் என்று நம்புவதும் அடங்கும்.(ஏசாயா 53:3–5 பார்க்கவும்). வாழ்க்கையின் சவால்களின் மூலம் இரக்கத்துடன் நம்மை எவ்வாறு ஆதரிப்பது என்பதை அவர் தனது அனுபவத்தால் அறிந்திருக்கிறார் (ஆல்மா 7:11–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:8 பார்க்கவும்). நாம் விசுவாசத்தைக் கடைப்பிடிக்கும்போது, கஷ்டங்களைச் சமாளிக்க அவர் நமக்கு உதவுகிறார்.

அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம், இயேசு நம்மை சரீர ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் குணப்படுத்த முடியும். அவருடைய அழைப்பை நாம் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, நமக்கு உதவ அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்“ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36).

செயல் மற்றும் வல்லமையின் கொள்கை

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் செயலுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு நாளும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் நன்மை செய்வதன் மூலமும் நம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம். நம் பாவங்களுக்காக மனந்திரும்புகிறோம். நாம் அவருக்கு விசுவாசமாக இருக்கிறோம். நாம் அவரைப் போல் அதிகமாக ஆக முயற்சி செய்கிறோம்.

நாம் விசுவாசத்தைப் பிரயோகிக்கும்போது, நம் அன்றாட வாழ்வில் இயேசுவின் வல்லமையை அனுபவிக்க முடியும். நம்முடைய சிறந்த முயற்சிகளை அவர் சிறப்பாக்குவார். அவர் நம்மை வளரவும், சோதனையை எதிர்க்கவும் உதவுவார்.

நமது விசுவாசத்தை பெலப்படுத்துதல்

விசுவாசத்தை வளர்த்தல், எளிமையாக “விசுவாசிக்க வாஞ்சிப்பதால்” தொடங்குகிறது என தீர்க்கதரிசி ஆல்மா போதித்தான் (ஆல்மா 32:27). பின்னர், இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசம் வளர, அவருடைய வார்த்தைகளைக் கற்று, அவருடைய போதனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆல்மா கற்பித்தான், நாம் பொறுமையாக, கருத்துடன் தேவனுடைய வார்த்தையை நம் இருதயங்களில் வளர்த்துக் கொள்ளும்போது, அது வேர் விடும்; இதோ, அது நித்திய ஜீவன் வரை வளர்கிற விருட்சமாயிருக்கும்—அதனால் நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்தும் (ஆல்மா 32:41; வசனங்கள் 26–43 பார்க்கவும்).

வேதப் படிப்பு

விசுவாசம், வல்லமை மற்றும் இரட்சிப்பு

விசுவாசக் கோட்பாடு

விசுவாசத்தின் எடுத்துக் காட்டுகள்

வேலைகளும் கீழ்ப்படிதலும்

மனந்திரும்புதலுக்கான விசுவாசம்

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

  • Guide to the Scriptures: “Jesus Christ,” “Atone, Atonement,” “Faith

  • Bible Dictionary, “Faith.”

  • Gospel Topics: “Jesus Christ,” “Atonement of Jesus Christ,” “Faith in Jesus Christ

மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் என்றால் என்ன?”

மனந்திரும்புதல் என்பது சுவிசேஷத்தின் இரண்டாவது கொள்கை. இயேசு கிறிஸ்து மீது விசுவாசமும் அவர்மீது உள்ள நமது அன்பும் நம்மை மனந்திரும்ப வழிவகுக்கின்றன (ஏலமன் 14:13 பார்க்கவும்). மனந்திரும்புதல் என்பது தேவனிடம் திரும்புவதும் பாவத்திலிருந்து விலகிச் செல்வதும் ஆகும். நாம் மனந்திரும்பும்போது, நம்முடைய செயல்கள், வாஞ்சைகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக மாறுகின்றன. பாவமன்னிப்பு இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரண பலி மூலம் சாத்தியமாகும்.

மனந்திரும்புதல் என்பது ஒரு நடத்தையை மாற்றுவதற்கு அல்லது ஒரு பலவீனத்தை மேற்கொள்ள மன உறுதியைப் பயன்படுத்துவதை விட அதிகம். மனந்திரும்புதல் என்பது கிறிஸ்துவிடம் உண்மையாகத் திரும்புவது, அவர் நம் இருதயங்களில் ஒரு “பெரும் மாற்றத்தை” அனுபவிக்கும் வல்லமையை நமக்குத் தருகிறார் (ஆல்மா 5:12–14). இந்த இருதய மாற்றத்தை நாம் அனுபவிக்கும்போது, நாம் ஆவிக்குரிய விதமாக மீண்டும் பிறக்கிறோம் (மோசியா 27:24–26 பார்க்கவும்).

மனந்திரும்புதலின் மூலம், தேவன், நாம், உலகம் பற்றிய புதிய பார்வையை வளர்த்துக் கொள்கிறோம். அவருடைய குழந்தைகளாகிய நம்மீது தேவன் வைத்திருக்கும் அன்பையும், நம் மீட்பரின் அன்பையும் நாம் புதிதாக உணர்கிறோம். மனந்திரும்புவதற்கான வாய்ப்பு, தேவன் தம்முடைய குமாரன் மூலம் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும்.

மனந்திரும்பும் செயல்முறை

நாம் மனந்திரும்பும்போது, நம்முடைய பாவங்களை அடையாளம் கண்டு, உண்மையான வருத்தத்தை உணர்கிறோம். நாம் நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கிறோம். அங்கீகரிக்கப்பட்ட சபைத் தலைவர்களிடம் நாங்கள் மிகவும் கடுமையான பாவங்களை அறிக்கையிடுகிறோம், அவர்கள் மனந்திரும்பும்போது நமக்கு ஆதரவளிப்பார்கள். சரிசெய்ய நம்மால் இயன்றதைச் செய்கிறோம், அதாவது நமது செயல்கள் ஏற்படுத்திய சிக்கல்களைச் சரிசெய்ய முயற்சிப்பதாகும். உண்மையான மனந்திரும்புதல் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீதியான செயல்களால் சிறப்பாக காட்டப்படுகிறது.

மனந்திரும்புதல் என்பது நம் வாழ்நாள் முழுவதும் அன்றாடம் நடக்கும் செயலாகும். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்.” (ரோமர் 3:23). “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13) என்பதை நினைத்து நாம் தொடர்ந்து மனந்திரும்ப வேண்டும். கர்த்தர் நமக்கு உறுதியளித்துள்ளார், “எவ்வெப்போது என் ஜனங்கள் மனந்திரும்புவார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமான அவர்களது மீறுதல்களை நான் மன்னிப்பேன். (மோசியா 26:30).

மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்கள்

மனந்திரும்புதல் என்பது மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தரும் ஒரு நேர்மறையான கொள்கையாகும். “[நமது] ஆத்தும இரட்சிப்புக்கேதுவாய் மீட்பரின் வல்லமையைப் பெறத் தக்கதாக, மனந்திரும்புதலின் நிபந்தனைகளை” அது கொண்டுவருகிறது” (ஏலமன் 5:11).

நாம் மனந்திரும்பும்போது, நமது குற்ற உணர்வும் துக்கமும் காலப்போக்கில் குணமாகும். ஆவியின் செல்வாக்கை நாம் ஏராளமாக உணர்கிறோம். தேவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நமது ஆசை வலுவடைகிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன்

“பல மக்கள் மனந்திரும்புதலை ஒரு தண்டனையாகவும்—தவிர்க்க வேண்டிய ஒன்று. … எனவும் கருதுகின்றனர். ஆனால் தண்டிக்கப்படுவதான இந்த உணர்வை சாத்தான் தோற்றுவிக்கிறான். நம்மைக் குணப்படுத்தவும், மன்னிக்கவும், சுத்தப்படுத்தவும், பலப்படுத்தவும், சுத்திகரிக்கவும், பரிசுத்தப்படுத்தவும், தயாராகவும், நம்பிக்கையுடனும், திறந்த கரங்களோடு நிற்கும் இயேசு கிறிஸ்துவைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் தடுக்க அவன் முயற்சிக்கிறான். (Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67).

வேதப் படிப்பு

மனந்திரும்புதல்

மீட்பு மற்றும் மன்னிப்பு

மனந்திரும்புபவர்கள் மீது இரக்கம்

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

இளம் பெண் ஞானஸ்நானம் பெறுதல்

ஞானஸ்நானம்: தேவனுடனான நமது முதல் உடன்படிக்கை

இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் மனந்திரும்புதலும் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் நியமங்களுக்கு நம்மை தயார்படுத்துகிறது. ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முதல் இரட்சிப்பின் நியமம். நம்பிக்கையின் இந்த மகிழ்ச்சியான நியமத்தை நாம் பெறுகையில், நாம் தேவனுடன் நமது முதல் உடன்படிக்கையை செய்கிறோம்.

ஒரு நியமம் என்பது ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் நிறைவேற்றப்படும் ஒரு பரிசுத்தமான செயல் அல்லது நியமமாகும். ஞானஸ்நானம் போன்ற சில நியமங்கள் நம் இரட்சிப்புக்கு இன்றியமையாதவை.

நியமங்கள் மூலம், நாம் தேவனுடன் உடன்படிக்கை செய்கிறோம். இந்த உடன்படிக்கைகள் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள பரிசுத்த வாக்குறுதிகள். நாம் அவருடன் செய்த நம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது அவர் நம்மை ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் செய்கிறார். நாம் தேவனிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பலமான ஒப்புக்கொடுத்தல்களை கொண்டிருக்க வேண்டும்.

தேவன் தம்மிடம் வந்து நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நமக்கு உதவி செய்ய நியமங்களையும் உடன்படிக்கைகளையும் வழங்கியுள்ளார். நாம் ஆசாரியத்துவ நியமங்களைப் பெற்று, அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, நம் வாழ்வில் “தேவ தன்மையின் வல்லமையை” அனுபவிக்க முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20).

ஞானஸ்நான உடன்படிக்கை

நாம் பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்று இரட்சகர் கற்பித்தார் (யோவான் 3:5 ஐப் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் சபையில் நாம் உறுப்பினர்களாக மாறுவதும் அவசியம். நம் இரட்சகர் ஞானஸ்நானம் பெற்று உதாரணம் ஏற்படுத்தினார் (மத்தேயு 3:13–17 பார்க்கவும்).

நாம் ஞானஸ்நானம் பெற்று நமது உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும்போது, தேவன் நம் பாவங்களை மன்னிப்பதாக வாக்களிக்கிறார் (அப்போஸ்தலர் 22:16; 3 நேபி 12:1–2). “நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவும்” இந்த மாபெரும் ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் மூலம் சாத்தியமாகிறது (வெளிப்படுத்தல் 1:5). பரிசுத்த ஆவியின் தோழமையுடன் நம்மை ஆசீர்வதிப்பதாகவும் தேவன் வாக்குறுதி அளித்துள்ளார், அதனால் நாம் பரிசுத்தமாக்கப்படவும், வழிநடத்தப்படவும், ஆறுதலடையவும் முடியும்.

நமது பங்காக, ஞானஸ்நான உடன்படிக்கையின்போது, நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று சாட்சியளிக்கிறோம். எப்போதும் அவரை நினைவுகூருவோம், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம் என்று வாக்களிக்கிறோம் பிறரை நேசிக்கவும் சேவை செய்யவும் “துயரப்படுபவர்களுடன் துயரப்படவும்; ஆறுதலற்று நிற்போருக்கு ஆறுதலளிக்கவும், சதா காலங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனின் சாட்சிகளாக நிற்க” நாம் வாக்களிக்கிறோம் (மோசியா 18:9; வசனங்கள் 8–10, 13 பார்க்கவும்). நம் வாழ்வின் இறுதிவரை இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய தீர்மானத்தை வெளிப்படுத்துகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37; மோசியா 2:17 ஐப் பார்க்கவும்).

ஞானஸ்நானத்துடன் தொடர்புடைய நமது உடன்படிக்கை கடமைகள் ஒரு பெரிய பொறுப்பு. அவை உணர்த்துபவையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவை நமக்கும் பரலோக பிதாவுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவை உருவாக்குகின்றன, இதன் மூலம் அவர் தனது அன்பை எப்போதும் கொடுக்கிறார்.

மூழ்குவதால் ஞானஸ்நானம்

நம்முடைய பாவங்களின் மன்னிப்புக்காக முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு போதித்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20: 72– 74 பார்க்கவும்). மூழ்குவதால் ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலின் அடையாளமாகும் (ரோமர் 6:3–6 ஐப் பார்க்கவும்).

மூழ்கி ஞானஸ்நானம் பெறுவது தனிப்பட்ட முறையில் நமக்கு வல்லமைவாய்ந்த அடையாளத்தையும் கொண்டுள்ளது. இது நமது பழைய வாழ்க்கையின் மரணம், அந்த வாழ்க்கையின் அடக்கம் மற்றும் ஆவிக்குரிய மறுபிறப்பில் நாம் வெளிப்படுவதைக் குறிக்கிறது. நாம் ஞானஸ்நானம் பெறும்போது, மீண்டும் பிறந்து கிறிஸ்துவின் ஆவிக்குரிய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் மாறுவதற்கான செயல்முறையைத் தொடங்குகிறோம் (மோசியா 5:7–8; ரோமர் 8:14–17 பார்க்கவும்).

பிள்ளைகள்

பிள்ளைகள் பொறுப்பேற்கும் வயதை எட்டும் வரை ஞானஸ்நானம் பெறுவதில்லை, அதாவது எட்டு வயது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:27). அந்த வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் மீட்கப்படுகிறார்கள் (மரோனி 8:4–24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:10). குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், அவர்களுக்கு சுவிசேஷம் கற்பிக்கப்பட வேண்டும், எனவே அவர்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்ய தங்கள் வாழ்க்கையில் இந்த முக்கியமான படிக்கு தயாராக இருப்பார்கள்.

திருவிருந்து

அவருடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளுக்கு நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நமது பரலோக பிதா விரும்புகிறார். இதைச் செய்ய நமக்கு உதவுவதற்காக, சபையில் திருவிருந்தில் பங்குபெற அடிக்கடி சந்திக்கும்படி கட்டளையிட்டுள்ளார். திருவிருந்து என்பது ஒரு ஆசாரியத்துவ நியமமாகும், இது இயேசு தம்முடைய பாவநிவிர்த்திக்கு சற்று முன்பு தனது அப்போஸ்தலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திருவிருந்தில் பங்கேற்பது ஒவ்வொரு வாரமும் திருவிருந்து கூட்டத்தின் மைய நோக்கமாகும். அப்பமும் தண்ணீரும் ஆசீர்வதிக்கப்பட்டு சபையாருக்கு கொடுக்கப்படுகின்றன. அப்பம் நமக்காக இரட்சகர் தனது சரீரத்தை பலியாகக் கொடுத்ததை குறிக்கிறது. தண்ணீர் அவர் நமக்காக சிந்திய அவருடைய இரத்தத்தை குறிக்கிறது.

இரட்சகரின் பலியை நினைவுகூரவும், தேவனுடனான நமது உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும் இந்த அடையாளங்களில் பங்கு கொள்கிறோம். ஆவியானவர் நம்முடன் இருப்பார் என்ற வாக்குறுதியை நாம் புதிதாகப் பெறுகிறோம்.

வேதப் படிப்பு

கிறிஸ்துவின் எடுத்துக்காட்டு

ஞானஸ்நான உடன்படிக்கை

ஞானஸ்நான தகுதிகள்

ஞானஸ்நானத்தின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்

அதிகாரத்தின் தேவை

இயேசு திருவிருந்தை நிறுவுதல்

திருவிருந்து ஜெபங்கள்

திருவிருந்தில் பங்கேற்றல்

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

கிறிஸ்து பெண் மீது கை வைத்தல்

பரிசுத்த ஆவியின் வரம்

பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதல்

ஞானஸ்நானம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு நாம் “ஜலத்தினாலும் ஆவியினாலும்” பிறக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார் (யோவான் 3:5; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது). ஜோசப் ஸ்மித் போதித்தார், “தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவது பாதி ஞானஸ்நானம், மற்ற பாதி இல்லாமல் ஒன்றுமில்லாதது— அதாவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 95).

தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவதைத் தொடர்ந்து ஆவியினால் ஞானஸ்நானம் முழுமையடைய வேண்டும். நாம் இரண்டு ஞானஸ்நானங்களையும் பெறும்போது, ​​நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு ஆவிக்குரிய விதமாக மறுபிறவி எடுக்கிறோம். நாம் கிறிஸ்துவின் சீடர்களாக ஒரு புதிய ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

திடப்படுத்தல் எனப்படும் ஓர் நியமம் மூலம் நாம் ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுகிறோம். இந்த நியமம் நம் தலையில் கைகளை வைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவர்களால் செய்யப்படுகிறது. முதலில் அவர்கள் நம்மை சபையின் உறுப்பினராக திடப்படுத்துகிறார்கள், பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை நமக்கு வழங்குகிறார்கள். இதுவே புதிய ஏற்பாடு மற்றும் மார்மன் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே நியமமாகும் (அப்போஸ்தலர் 8:14–17; 3 நேபி 18:36–37 பார்க்கவும்).

பரிசுத்த ஆவி தேவத்துவத்தின் மூன்றாம் நபர். அவர் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து கிரியை செய்கிறார். நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறும்போது, நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய தோழமையைக் கொண்டிருக்கலாம்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்படி ஆசீர்வதிக்கிறார்

பரிசுத்த ஆவியின் வரம் பரலோக பிதாவின் மிகப் பெரிய வரங்களில் ஒன்றாகும். பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்துகிறார், மேலும் நம்மை அதிக பரிசுத்தமாகவும், அதிக முழுமையாகவும், தேவனைப் போலவும் ஆக்குகிறார் (3 நேபி 27: 20 பார்க்கவும்). நாம் தேவனின் கட்டளைகளைப் பின்பற்ற முற்படுகையில், ஆவிக்குரிய ரீதியில் மாறவும் வளரவும் அவர் நமக்கு உதவுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவும், அடையாளம் காணவும் நமக்கு உதவுகிறார் (மரோனி 10:5 பார்க்கவும்). அவர் நம் இருதயங்களுக்கும் மனங்களுக்கும் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறார். கூடுதலாக, பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைப் போதிக்க உதவுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42: 14 பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாம் சத்தியத்தைக் கற்று, கற்பிக்கும்போது, அவர் அதை நம் இருதயங்களுக்குக் கொண்டு செல்கிறார் (2 நேபி 33:1 பார்க்கவும்).

நாம் தாழ்மையுடன் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வழிநடத்துதலைத் தேடும்போது, அவர் நம்மை வழிநடத்துவார் (2 நேபி 32:5 பார்க்கவும்). மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு சேவை செய்யலாம் என்று நம்மைத் தூண்டுவதும் இதில் அடங்கும்.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு பலவீனத்தை மேற்கொள்ள உதவும் ஆவிக்குரிய பலத்தை அளிக்கிறார். சோதனையை எதிர்க்க அவர் நமக்கு உதவுகிறார். ஆவிக்குரிய மற்றும் சரீர ஆபத்தைப் பற்றி அவர் நம்மை எச்சரிக்க முடியும்.

வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார். பாடு அல்லது துக்கத்தின் போது அவர் நம்மை ஆறுதல்படுத்துவார், நம்பிக்கையால் நம்மை நிரப்புவார் (மரோனி 8:26 பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் மூலம், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் உணர முடியும்.

வேதப் படிப்பு

பரிசுத்த ஆவியானவரின் இயல்பு

பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்கள் மற்றும் செல்வாக்கு

பரிசுத்த ஆவியின் வரத்தின் முக்கியத்துவம்

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

இயேசு குழந்தைகளை வைத்திருத்தல்

இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல்

நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டபோது, நாம் தேவனுடன் உடன்படிக்கையில் பிரவேசிக்கிறோம். மற்றவற்றுடன், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாகவும், நம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சேவை செய்வதாகவும் உறுதியளிக்கிறோம் ( மோசியா 18:8–10, 13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 பார்க்கவும்).

ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் மூலம் நாம் சுவிசேஷ பாதையில் நுழைந்த பிறகு, அதில் தொடர்ந்து இருக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறோம். நாம் பாதையில் இருந்து சிறிது விலகினாலும், மனந்திரும்புவதற்கு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறோம். மனந்திரும்புதலின் ஆசீர்வாதம், சுவிசேஷ பாதைக்குத் திரும்பவும், தேவனுடனான நமது உடன்படிக்கைகளின் ஆசீர்வாதங்களைத் தக்கவைக்கவும் அனுமதிக்கிறது. நாம் உண்மையாக மனந்திரும்பும்போது, தேவன் எப்போதும் நம்மை மன்னித்து வரவேற்க தயாராக இருக்கிறார்.

இறுதிபரியந்தம் நிலைத்திருப்பது என்பது நம் வாழ்வின் இறுதிவரை—நல்ல நேரங்களிலும் கடினமான நேரங்களிலும், செழிப்பு மற்றும் துன்பத்தின் மூலம் தேவனுக்கு உண்மையாக இருப்பது. கிறிஸ்து நம்மை வடிவமைக்கவும், அவரைப் போல நம்மை உருவாக்கவும் நாம் தாழ்மையுடன் அனுமதிக்கிறோம். நம் வாழ்வில் என்ன வந்தாலும் கிறிஸ்துவை விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் பார்க்கிறோம்.

இறுதிபரியந்தம் நிலைத்திருப்பது என்பது நாம் இறக்கும் வரை நிலைத்திருப்பது மட்டுமல்ல. மாறாக, நம் வாழ்க்கையையும், எண்ணங்களையும், செயல்களையும் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதாகும். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவில் தொடர்ந்து விசுவாசம் வைப்பது இதில் அடங்கும். நாமும் தொடர்ந்து மனந்திரும்புகிறோம், தேவனுடன் நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கிறோம், பரிசுத்த ஆவியின் தோழமையை நாடுகிறோம்.

இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரண நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடும் நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்” என்பதை உள்ளடக்கியது நாம் இறுதிவரை நிலைத்திருக்கையில், “நித்திய ஜீவனைப் பெறுவோம்” (2 நேபி 31:20) என்று நம்முடைய பரலோக பிதா வாக்குத்தத்தம் செய்கிறார்.

வேதப் படிப்பு

இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல்

நிலைத்திருப்பவர்களுக்கு ஆசீர்வாதங்கள்

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

  • Gospel Topics: “Adversity

  • Guide to the Scriptures: “Endure,” “Adversity

குடும்பம் புன்னகைத்தல்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனின் குழந்தைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனின் எல்லா பிள்ளைகளுக்குமானதாகும். நம்முடைய பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் “அனைவரும் தேவனுக்கு சமமானவர்களே” என்று வேதங்கள் கற்பிக்கின்றன. அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார்,தம்மிடம் வரும் ஒருவரையும் அவர் தடைபண்ணுவதில்லை” (2 நேபி 26:33).

சுவிசேஷம் நம் பூலோக வாழ்வு முழுவதும் மற்றும் நித்தியம் முழுவதும் நம்மை ஆசீர்வதிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி நாம் வாழும்போது, தனி நபர்களாகவும், குடும்பங்களாகவும் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். (மோசியா 2:41; “The Family: A Proclamation to the World,” ChurchofJesusChrist.org). சுவிசேஷத்தின்படி ஜீவித்தல் நமது மகிழ்ச்சிகளை ஆழமாக்குகிறது, நமது செயல்களை உணர்த்துகிறது, மேலும் நமது உறவுகளை வளப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வது சரீர ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ நமக்கு தீங்கு விளைவிக்கும் தேர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். சோதனை மற்றும் துக்கத்தின் போது வலிமையையும் ஆறுதலையும் கண்டறிய உதவுகிறது. இது மகிழ்ச்சியான நித்திய ஜீவனுக்கு வழி காட்டுகிறது.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் சிறந்த செய்திகளில் ஒன்று, நாம் அனைவரும் தேவனின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் அவருடைய ஆவி மகன்கள் மற்றும் மகள்கள். பூமியில் நம் குடும்ப சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாம் ஒவ்வொருவரும் தேவனின் குடும்பத்தின் உறுப்பினர்.

நமது செய்தியின் மற்றொரு பெரிய பகுதி என்னவென்றால், குடும்பங்கள் நித்தியத்திற்கும் இணைக்கப்பட்டிருக்க முடியும். குடும்பம் தேவனால் நியமிக்கப்பட்டது. பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம் குடும்ப உறவுகளை கல்லறைக்கு அப்பால் தொடர உதவுகிறது. பரிசுத்த ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் குடும்பங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்பதை சாத்தியமாக்குகின்றன.

சுவிசேஷத்தின் வெளிச்சத்தின் மூலம், குடும்பங்கள் தவறான புரிதல்கள், சச்சரவுகள் மற்றும் சவால்களைத் தீர்க்க முடியும். முரண்பாட்டால் பிரிந்த குடும்பங்கள் மனந்திரும்புதல், மன்னிப்பு மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையில் விசுவாசம் ஆகியவற்றின் மூலம் குணமடையலாம்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் வலுவான குடும்ப உறவுகளை வளர்க்க உதவுகிறது. சுவிசேஷ கொள்கைகளை கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும் வீடு சிறந்த இடம். சுவிசேஷ கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட வீடு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பிற்கான இடமாக இருக்கும். அது கர்த்தருடைய ஆவி தங்கக்கூடிய இடமாக இருக்கும்.

வேதப் படிப்பு

இந்தக் கொள்கையைப்பற்றி அதிகம் கற்கவும்

குறுகிய, நடுத்தர பாட குறிப்பு

உங்களுக்கு ஒரு குறைவான நேரம் மட்டுமே இருந்தால், நீங்கள் ஒருவருக்கு என்ன கற்பிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு பின்வரும் குறிப்பு. இந்த குறிப்பைப் பயன்படுத்தும் போது, கற்பிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கொள்கைக்கும் கோட்பாட்டு அடித்தளம் பாடத்தில் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கற்பிக்கும்போது, கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் செவிகொடுங்கள். தேவனிடம் எப்படி நெருங்கி வளர்வது என்பதை மக்கள் அறிய உதவும் அழைப்புகளை கொடுக்கவும். ஒரு முக்கியமான அழைப்பு அந்த நபர் உங்களை மீண்டும் சந்திப்பதற்கானதாகும். பாடத்தின் நீளம் நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் நீங்கள் கேட்கும் விதத்தைப் பொறுத்தது.

பெண்ணுக்கு ஊழியக்காரர்கள் கற்பித்தல்

3–10 நிமிடங்களில் நீங்கள் மக்களுக்கு என்ன கற்பிக்கலாம்

  • பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்காக தேவன் தம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார்.

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது செயல் மற்றும் வல்லமையின் கொள்கை. நம் வாழ்வில் இரட்சகரின் பலப்படுத்தும் வல்லமையை அனுபவிக்க விசுவாசம் நமக்கு உதவுகிறது.

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது மனந்திரும்புதல் என்பது தேவனிடம் திரும்புவதும் பாவத்திலிருந்து விலகிச் செல்வதும் ஆகும். நாம் மனந்திரும்பும்போது, நம்முடைய செயல்கள், வாஞ்சைகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக மாறுகின்றன.

  • நாம் மனந்திரும்பும்போது, தேவன் நம்மை மன்னிக்கிறார். நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாவநிவர்த்தி செய்ததால் மன்னிப்பு நமக்கு சாத்தியமாகிறது.

  • ஞானஸ்நானம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: தண்ணீரால் மற்றும் ஆவியானவரால் ஞானஸ்நானம். நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது, வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் தரப்பட்டு, நம் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம்.

  • நாம் தண்ணீரால் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, திடப்படுத்தும் நியமம் மூலம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறோம்.

  • நம் வாழ்வின் இறுதிவரை நாம் விசுவாசத்துடன் சுவிசேஷ வழியைப் பின்பற்றும்போது, நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.