“தேவத்துவம் என்றால் என்ன,” லியஹோனா, ஜூன் 2021
லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூன் 2021
தேவத்துவம் என்றால் என்ன?
பரலோக பிதா, இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் மூவரும் ஒரே நோக்கமுடைய, தனித்தனியானவர்கள்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உறுப்பினர்கள் எதை நம்பினார்கள் என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் ஒருசமயம் ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார். பதிலாக, விசுவாசப் பிரமாணங்கள் என நாம் அழைக்கிற 13 விசுவாச அறிக்கைகளை தீர்க்கதரிசி எழுதினார். “நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என முதல் வாசகம் சொல்கிறது (விசுவாசப் பிரமாணங்கள் 1:1). தேவத்துவம் என நாம் அழைப்பதில் இந்த மூவரும் உள்ளனர்.
நித்திய பிதாவாகிய தேவன்
மாம்சமும் எலும்பும் கொண்ட உயிர்த்தெழுந்த சரீரம் தேவனுக்கிருக்கிறது. நமது ஆவிகளுக்கு, அவர் பிதாவாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர் பரிபூரணமாக நேசிக்கிறார். தேவன் பரிபூரணர், சகல வல்லமையையும் கொண்டவர், சகலத்தையும் அறிகிறார். அவர் நீதியுள்ளவர், இரக்கமானவர், தயவுள்ளவர். நாம் பிறப்பதற்கு முன்பே, ஆவிகளாக தேவனுடன் நாம் வாழ்ந்தோம். கற்றுக்கொள்ளவும் வளரவும் அவர் நம்மை பூமிக்கு அனுப்பினார். நாம் மரித்த பின்பு, மீண்டும் அவருடன் வாழ அவரிடத்திற்குத் திரும்புவது, அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதுமுள்ள தேவனின் மகத்தான விருப்பம். தேவனுடைய பிரசன்னத்திற்குத் திரும்ப நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும் என தேவன் நமக்குப் போதிக்கிறார்.
இயேசு கிறிஸ்து
மாம்சமும் எலும்புகளும் கொண்ட உயிர்த்தெழுந்த சரீரமும் இயேசு கிறிஸ்துவுக்கு இருக்கிறது. அவர் தேவனுடைய முதற்பேறானவராயிருக்கிறார். நாம் பிறப்பதற்கு முன்பு, நமது இரட்சகராயிருக்க தேவன் அவரைத் தெரிந்துகொண்டார். நமக்கு ஒரு எடுத்துக்காட்டாயிருக்க, அவருடைய சுவிசேஷத்தைப் போதிக்க, நமது பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்ய, மரணத்திலிருந்து நம்மை மீட்க, இயேசு பூமிக்கு வந்தார் என்பது இதன் அர்த்தம். நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, நமது பாவங்களுக்காக நாம் மன்னிக்கப்பட முடியும். நம்மைப் புரிந்து கொள்ளவும் நமக்குதவும்படியாகவும் இயேசு கிறிஸ்து அநேகக் காரியங்களுக்காகவும் பாடுபட்டார். இயேசு கிறிஸ்து மரித்தார், மீண்டும் வாழ ஒவ்வொருவருக்கும் சாத்தியமாக்கி, பின்னர் மீண்டும் ஜீவித்தார்
பரிசுத்த ஆவி
பரிசுத்த ஆவி, ஒரு மாம்ச சரீரமில்லாத, தேவத்துவத்தின் ஒரு அங்கத்தினர். அவர் ஆவியாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக நமது ஆத்துமாக்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். தேவன் உண்மையானவரென்றும், இயேசு கிறிஸ்து நமது இரட்சகரென்றும் அவர் நமக்கு சாட்சியமளிக்கிறார். அன்பு, வழிநடத்துதல், அல்லது ஆறுதலின் உணர்வுகளை நமக்குக் கொடுக்க தேவனின் தூதுவராக பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார். நாம் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டபோது, பரிசுத்த ஆவியின் வரத்தை நாம் பெறுகிறோம். நமது ஞானஸ்நானத்திற்குப் பின்னர், தேவனின் கட்டளைகளை நாம் கைக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம்முடன் வாசம் செய்யமுடியும்.
ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம்
காலப்போக்கில் தேவத்துவத்தைப்பற்றி ஜனங்கள் குழப்பப்பட்டிருக்கின்னர். தேவன், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி மக்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம் ஏன் மிக முக்கியமானதென்பதற்கு இது ஒரு காரணம். பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் சரீரங்களிருந்ததையும் அவர்கள் இரு தனித்தனியானவர்கள் என்பதையும் அவர் கண்டார்.
தனித்தனியானவர்கள் ஆனால் இணைந்தவர்கள்
தேவனும், இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே நோக்கமுள்ள தனித்தனியானவர்கள் என வேதங்களும், தற்கால தீர்க்கதரிசிகளும் நமக்குப் போதிக்கிறார்கள்: நமது அழியாமை மற்றும் நித்திய ஜீவன்(மோசே 1:39 பார்க்கவும்). ஒரே அணியின் அங்கத்தினர்களைப்போல, ஒவ்வொரு நாளும் நமக்குதவ அவர்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்றுகிறார்கள். நமது பாவங்களுக்காக நாம் மனந்திரும்பி சரியானதைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களுக்கு நெருக்கமாக நாம் உணரமுடியும்.
தேவத்துவத்தைப்பற்றி வேதங்கள்
-
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் நோக்கத்தில் ஒன்றாயிருக்கிறார்கள். (யோவான் 10:30 பார்க்கவும்).
-
பரலோக பிதா அவருடைய குமாரனிடத்தில் பேசினார் (மத்தேயு 3:16–17 பார்க்கவும்).
-
இயேசு கிறிஸ்து அவருடைய பிதாவுடன் பேசினார் (யோவான் 11:41 பார்க்கவும்).
-
ஒருநாள், ஒன்றாயிருக்க இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்தார் (யோவான் 17:11 பார்க்கவும்).
-
ஜோசப் ஸ்மித், பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் கண்டார் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17 பார்க்கவும்).
-
இயேசு கிறிஸ்து நமது இரட்சகர் என பரிசுத்த ஆவியானவர் சாட்சியமளிக்கிறார் (யோவான் 15:26 பார்க்கவும்).
© 2021 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, June 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17470 418