என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஏப்ரல் 27–மே 3. மோசியா 7–10: “கர்த்தருடைய பெலத்தாலே”


“ஏப்ரல் 27–மே 3. மோசியா 7–10: ‘கர்த்தருடைய பெலத்தாலே’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஏப்ரல் 27–மே 3. மோசியா 7–10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

லிம்கி இராஜாவுக்கு அம்மோன் போதித்தல்

மினர்வா கே. டெய்ச்சர்ட் (1888–1976), லிம்கி இராஜாவின் முன்பு அம்மோன், 1949–1951, மாசனைட்டில் ஆயில், 35 15/16x48 அங்குலங்கள். ப்ரிகாம் யங் பல்கலைக்கழக கலை அருங்காட்சியகம், 1969.

ஏப்ரல் 27–மே 3

மோசியா 7–10

“கர்த்தருடைய பெலத்தாலே”

நீங்கள் வாசிக்கும்போது, சில சொற்றொடர்கள் அல்லது பாகங்களை உங்கள் கவனத்துக்கு ஆவியானவர் கொண்டு வரலாம். அந்த பாகங்கள் உங்களுக்கு எப்படி பொருந்துகின்றன என நீங்கள் உணர்வதை எழுதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சாரகெம்லாவில் மோசியா இராஜாவின் ஜனங்கள் “தொடர்ச்சியான சமாதானத்தை” அனுபவித்துக்கொண்டிருந்தபோது,(மோசியா 7:1), லேகி–நேபி தேசத்தில் தங்க பல ஆண்டுகளுக்கு முன்பே சென்ற மற்றொரு நேபிய குழுவினர் மேல் அவர்களது சிந்தனை திரும்பியது. தலைமுறைகள் கடந்திருக்கின்றன, மோசியாவின் ஜனம் அவர்களிடமிருந்து எதையும் கேள்விப்படவில்லை. ஆகவே விட்டுச்சென்ற நேபியர்களைக் கண்டு பிடிக்க ஒரு தேடுதல் குழுவை நடத்திச் செல்ல, மோசியா அம்மோனிடம் கேட்டான். அந்த நேபியர்கள் “அக்கிரமத்தினாலே”(மோசியா 7:24) லாமானியரிடத்திலே சிறையிருப்புக்குள்ளிருந்தார்கள் என அக்குழு கண்டு பிடித்தது. ஆனால் அம்மோன் மற்றும் அவனது சகோதரர்களின் வருகையால் திடீரென அங்கு ஒரு விடுதலையின் நம்பிக்கை வந்தது.

சில சமயங்களில் நாம் அந்த சிறைப்பட்ட நேபியரைப் போல, நமது பாவங்களுக்காக பாடுபட்டு, நாம் மீண்டும் எப்போது சமாதானத்தைக் காண்போம் என ஆச்சரியப்படுகிறோம். சில சமயங்களில் நாம் அம்மோன் போல பிறரை அணுக உணர்த்தப்பட்டதாக உணர்ந்து, முடிவில் நமது முயற்சிகள் அவர்களை “[தங்கள்] தலைகளை உயர்த்தி, களிகூர்ந்து,[தங்கள்] தேவனிடத்தில் பற்றுதலாயிருக்க” உணர்த்தியதைக் காண்கிறோம்.(மோசியா 7:19) நமது சூழ்நிலைகள் எதுவானாலும், நாமனைவரும் மனந்திரும்பி, “உள்ளத்தின் முழு நோக்கத்தோடு” “அவர் [நம்மைத்] … தப்புவிப்பார் என்ற விசுவாசத்துடன் கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும்.”(மோசியா 7:33).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

மோசியா 7:14–33

நான் கர்த்தரிடத்தில் திரும்பி, அவரில் நம்பிக்கை வைத்து, அவருக்கு சேவை செய்தால், அவர் என்னை விடுவிப்பார்.

சாரகெம்லாவின் நேபியனாகிய அம்மோனைச் சந்தித்தது, லிம்கி இராஜாவுக்கு ஒரு நம்பிக்கையின் பொறியைக் கொடுத்தது, அவன் அந்த நம்பிக்கையை தன் ஜனத்துக்கு கொடுக்க விரும்பினான். நீங்கள் மோசியா 7:14–33 வாசிக்கும்போது, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது விசுவாசத்தை பெலப்படுத்தவும், தேவன் அவர்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையை கொடுக்கவும், தன் ஜனங்களிடத்தில் லிம்கி என்ன சொன்னான் என கவனிக்கவும். லிம்கியின் ஜனங்களைப்போல அதே பாவங்களுக்காக நீங்கள் குற்றமற்றவர்களாயிருந்தாலும், கர்த்தரிடம் திரும்ப அவனது வார்த்தைகள் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? உதாரணமாக தேவன் விடுவித்த கடந்த கால விவரங்களைப்பற்றி தன் ஜனங்களுக்கு லிம்கி நினைவூட்டியதை நீங்கள் கவனிப்பீர்கள்( வசனங்கள் 18–20 பார்க்கவும்). இந்த விவரங்களும், அப்படியே பிற வேத விவரங்களும் அல்லது தனிப்பட்ட அனுபவங்களும் தேவனை நம்ப உங்களுக்கு எப்படி உதவுகின்றன?

மோசியா 8:5–12

லிம்கியின் ஜனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 24 தகடுகள் எவை?

சாரகெம்லா தேசத்தை லிம்கி ஜனத்தின் ஒரு குழு தேடிக்கொண்டிருந்ததில் வெற்றியடையாதபோது, பரிச்சயமில்லாத பாஷையில் பொறிக்கப்பட்டிருந்த 24 தங்கத் தகடுகளை அவர்கள் கண்டார்கள். இறுதியாக, மோசியா இராஜாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தகடுகள், பாபேல் கோபுரத்திலிருந்து வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு வந்து இறுதியில் அழிக்கப்பட்ட யாரேதியர் என அழைக்கப்பட்ட ஜனத்தைப்பற்றி பேசியது (மோசியா 28:11–19 பார்க்கவும்). பின்னர் மரோனி இத்தகடுகளின் சுருக்கத்தை எழுதினான்(ஏத்தேர் 1:1–2பார்க்கவும்), அது ஏத்தேரின் புஸ்தகமானது. மோசியா 28:18ல் மோசியாவின் ஜனத்தின் மீது இப்புஸ்தகத்தின் தாக்கத்தை கவனிக்கவும்.

மோசியா 8:12–19

மனுக்குலத்துக்கு ஆதாயமாக கர்த்தர் தீர்க்கதரிசிகளையும், ஞானதிருஷ்டிக்காரர்களையும், வெளிப்படுத்துபவர்களையும் அளிக்கிறார்.

ஒரு ஞானதிருஷ்டிக்காரனை கர்த்தர் எழுப்பியிருக்கிறார் என்ற அம்மோனின் சாட்சியை லிம்கி கேட்டபோது, லிம்கி “மிகவும் களிகூர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்தினான்” (மோசியா 8:19). அவன் அவ்விதமாக உணர்ந்தான் என ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? மோசியா 8:13–19ல் அம்மோனின் வார்த்தைகளிலிருந்து ஞானதிருஷ்டிக்காரர்களைப்பற்றி நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்? நமது நாளில் பிரதான தலைமையும், பன்னிருவர் குழுமமும், தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் ஆதரிக்கப்படுகிறார்கள்(Bible Dictionary, “Seer”). பூமியின் மீது தீர்க்கதரிசிகளையும், ஞானதிருஷ்டிக்காரர்களையும், வெளிப்படுத்துபவர்களையும் பெற்றிருப்பதன் ஆசீர்வாதத்தைப்பற்றி நீங்கள் சிந்தித்த கடைசி முறை எப்போது? தீர்க்கதரிசிகளும், ஞானதிருஷ்டிக்காரர்களும், வெளிப்படுத்துபவர்களும் எவ்வாறு உங்களுக்கு “மகா பிரயோஜனமுள்ளவர்களாக” இருக்கிறார்கள் என்பதை ஒருவேளை நீங்கள் பதிவு செய்யலாம் மோசியா 8:18.

நமது ஊழியக்காலத்தின் தலைவராக நிற்கிற தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒரு பெரும் ஞானதிருஷ்டிக்காரர்( கோ.&உ 21:1; 124:125; Joseph Smith—History 1:62 பார்க்கவும்). அவரது ஊழியத்தின்போது, ஞானதிருஷ்டிக்காரரைப்பற்றிய அம்மோனின் விவரிப்புக்கு அவர் எப்படி எடுத்துக்காட்டாயிருந்தார்?

மோசியா 9–10

“கர்த்தருடைய பெலத்தினால்” நான் என் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

அவன் தவறுகளைச் செய்ததாக சீனிப் ஒப்புக்கொண்டான். சில சமயங்களில் அவன் அதிக ஆர்வமுடையவனாய் இருந்தான், லாமான் இராஜாவுடன் தப்பான உடன்பாடு செய்து, லிம்கியின் ஜனத்தின் முன்னோராகிய தன் ஜனத்தை கஷ்டமான சூழ்நிலையில் வைத்தான். ஆனால் பின்னர், லாமானியர்களுக்கு எதிராக யுத்தம் செய்தபோது, விசுவாசத்தோடு சவால்களை எதிர்கொள்ள தன் ஜனத்துக்கு அவன் உதவினான். நீங்கள் மோசியா 9–10 வாசிக்கும்போது, தங்கள் விசுவாசத்தைக் காட்ட சீனிப்பின் ஜனம் என்ன செய்தார்கள் என்பதைத் தேடவும். தேவன் அவர்களை எவ்வாறு பெலப்படுத்தினார்? “கர்த்தருடைய பெலத்தாலே” செல்வது என்றால் என்ன அர்த்தமென நீங்கள் நினைக்கிறீர்கள்?(மோசியா 9:17; 10:10–11).

மோசியா 10:11–17

என் தேர்ந்தெடுப்புகள் தலைமுறைகளுக்கு செல்வாக்கு ஏற்படுத்தும்.

மோசியா 10:11–17ன்படி, லாமானியரின் முன்னோரின் செயல்களும் மனப்பான்மைகளும் சத்தியத்தை அறிந்துகொள்வதிலிருந்து லாமானியர்களை எப்படி தடுத்தது? லாமானியரின் முன்னோரின் தேர்ந்தெடுப்புகள் எப்படி வருங்கால தலைமுறைகளை பாதித்தன? உங்கள் நம்பிக்கைகளாலும் தேர்ந்தெடுப்புகளாலும் செல்வாக்கடையக் கூடிய ஜனங்களைப்பற்றி சிந்தியுங்கள். கிறிஸ்துவில் முழு விசுவாசம் பெற்றிருக்க அவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மோசியா 7:19–20

அவனது ஜனம் விசுவாசம் பெற ஊக்குவிக்கும்படியாக லிம்கி சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுகளைக் கவனிக்கவும். வேதங்களிலிருந்து என்ன எடுத்துக்காட்டுகள் “தேவனில் நம்பிக்கை வைக்க” நம்மை உணர்த்துகிறது? தேவனில் நமது நம்பிக்கையை வைப்பது என்பதன் அர்த்தம் என்ன?(மோசியா 9:17; 10:19ஐயும் பார்க்கவும்). நமது வாழ்க்கை அல்லது நமது முன்னோரின் வாழ்க்கை கதைகளிலிருந்து எந்த கதைகளை தேவனில் அதிக நம்பிக்கையை உணர்த்தும்படியாக நாம் பகிர்ந்து கொள்ளமுடியும்?

மோசியா 7:26–27

இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22 ஐயும் பார்க்கவும்). இந்த காரியங்களை அறிவதற்காக நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்?

மோசியா 8:13–18

ஞானதிருஷ்டிக்காரர் யார் என புரிந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவ, பைனாகுலர்கள், தொலைநோக்கிகள், அல்லது உருப்பெருக்கி போன்ற நாம் பார்க்க முடியாதவற்றைப் பார்க்க உதவுகிற, கருவிகளின் படங்களை அவர்களுக்கு நீங்கள் காட்டலாம். இந்த கருவிகள் எப்படி ஞானதிருஷ்டிக்காரர் போல இருக்கின்றன? (மோசே 6:35–36 பார்க்கவும்). நாம் பார்க்காத எதை ஞானதிருஷ்டிக்காரர்கள் பார்க்கிறார்கள்? ஜோசப் ஸ்மித் ஞானதிருஷ்டிக்காரராயிருந்தார் என்பதற்கு நம்மிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், மற்றும் வெளிப்படுத்துபவர்களின் படங்களைக் காட்டி, அவர்களைப்பற்றி அவர்கள் என்ன அறிகிறார்கள் என உங்கள் குடும்பத்தினரிடம் கேட்கவும். நாம் அவர்களை எப்படி பின்பற்றுகிறோம்?

மோசியா 9:14–18; 10:1–10

சீனிப்பின் ஜனத்தை லாமானியர்கள் தாக்கியபோது, அவர்கள் சரீர பிரகாரமாயும், ஆவிக்குரிய பிரகாரமாயும் ஆயத்தமாயிருந்தார்கள். சவால்களுக்காக ஆயத்தம் செய்வதைப்பற்றி, சீனிப் மற்றும் அவனது ஜனத்திடமிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படித்தலை மேம்படுத்துதல்

உங்கள் சொந்த ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை நாடுங்கள். இந்த குறிப்பு கவனிக்கும்படி பாகங்களையும் கொள்கைகளையும் ஆலோசனையளிக்கின்றன, ஆனால் இந்த ஆலோசனைகள் உங்கள் படிப்பை மட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். இங்கு குறிப்பிடப்படாத வசனங்களால் நீங்கள் கவரப்படலாம் அல்லது கொள்கைகளைக் கண்டுபிடிக்கலாம். ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக.

மரோனியுடன் ஜோசப் ஸமித்

ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனம் –க்ளார்க் கெல்லி ப்ரைஸ்