வேதங்கள்
மோசியா 7


அதிகாரம் 7

லிம்கி ராஜாவாயிருக்கிற லேகி-நேபி தேசத்தை அம்மோன் கண்டடைதல் – லிம்கியின் ஜனத்தார் லாமானியர்களுக்கு அடிமைகளாயிருத்தல் – லிம்கி தங்களின் வரலாற்றை விவரித்தல் - கிறிஸ்துவே தேவனென்றும், எல்லாவற்றுக்கும் பிதாவென்றும் அபிநாதி எனும் தீர்க்கதரிசி சாட்சி கொடுத்திருந்தான் – அசுத்தமானதை விதைக்கிறவர்கள் சுழல் காற்றை அறுவடையாய்ப் பெறுவார்கள், கர்த்தரிலே தங்கள் நம்பிக்கையை வைக்கிறவர்கள் தப்புவிக்கப்படுவார்கள். ஏறக்குறைய கி.மு. 121.

1 இப்பொழுதும் அந்தப்படியே, மூன்று வருஷகாலமளவும் மோசியா ராஜா தொடர்ந்து சமாதானமாயிருந்த பின்பு, லேகி-நேபி பட்டணத்திற்கோ அல்லது லேகி-நேபி தேசத்திலோ வாசம் செய்யச் சென்ற ஜனங்களைக் குறித்தறிய ஆவலாயிருந்தான். ஏனெனில் சாரகெம்லா தேசத்தைவிட்டு அவர்கள் சென்ற காலம் முதல் அவன் ஜனத்தார் அவர்களைக் குறித்து ஒன்றும் கேள்விப்படாமல் இருந்ததால், அவர்கள் தொந்தரவுபடுத்தி அவனுக்குத் தொல்லை கொடுத்தனர்.

2 அந்தப்படியே, தங்களின் சகோதரர்களைக் குறித்து விசாரிக்க, அவர்களில் பராக்கிரமசாலிகள் பதினாறு பேரை லேகி-நேபி தேசத்திற்கு அனுப்ப மோசியா ராஜா அனுமதித்தான்.

3 அந்தப்படியே, சாரகெம்லாவின் சந்ததியும், பராக்கிரமசாலியும், பெலவானுமான அம்மோன் எனப்பட்டவன் அவர்களுள் ஒருவனாக, மறுநாள் அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவன் அவர்களின் தலைவனாயுமிருந்தான்

4 இப்பொழுது லேகி-நேபி தேசத்திற்குச் செல்ல அவர்கள் வனாந்தரத்தினுள் பிரயாணம் செய்ய வேண்டிய மார்க்கத்தை அறியாது, அநேக நாட்கள் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தார்கள்; நாற்பது நாட்களளவும் அவர்கள் அலைந்தார்கள்.

5 நாற்பது நாட்கள் அலைந்து திரிந்த பின்னர், சீலோம் தேசத்திற்கு வடக்கேயிருந்த மலையை அடைந்து அங்கே பாளையமிறங்கினார்கள்.

6 அமலேக்கி, ஏலேம், ஏம் என்று பெயர்கள் கொண்ட தன் சகோதரர்கள் மூவரை அம்மோன் கூட்டிச்சென்றான். அவர்கள் நேபியின் தேசத்திற்குச் சென்றார்கள்.

7 இதோ அவர்கள் நேபியின் தேசத்திலும், சீலோம் தேசத்திலும் இருந்த ஜனங்களுடைய ராஜாவைச் சந்தித்தார்கள்; அவர்கள் ராஜாவினுடைய காவற்காரர்களால் சூழப்பட்டு, பிடிக்கப்பட்டு, கட்டப்பட்டு, சிறைக்குள் போடப்பட்டார்கள்.

8 அந்தப்படியே, அவர்கள் சிறையினுள் இரண்டு நாட்கள் இருந்த பின்னர், ராஜ சமுகத்தில் மறுபடியும் கொண்டு வரப்பட்டார்கள், அவர்களின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன; அவர்கள் ராஜாவின் முன் நின்றார்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பிரதியுத்தரமளிக்க வேண்டுமென அனுமதிக்கப்பட்டார்கள் அல்லது கட்டளையிடப்பட்டார்கள்.

9 அவன் அவர்களை நோக்கி சொன்னான்: இதோ, சாரகெம்லாவின் தேசத்திலிருந்து, தங்களின் பிதாக்களின் தேசமாகிய இந்த தேசத்தை சுதந்தரிக்க வந்தவரும், ஜனங்களின் ஆதரவுடனே ராஜாவாக்கப்பட்டவருமான, சீநிப்பின் குமாரனாகிய, நோவாவின் குமாரனாகிய லிம்கி நானே.

10 இப்பொழுதும் வாசல்களுக்கு வெளியே நானே என் காவற்காரருடன் இருக்கும்போது, நீங்கள் எக்காரணத்தால் தைரியமாக பட்டணத்தின் மதில்களருகே வந்தீர்கள், என நான் அறிய ஆவலாய் உள்ளேன்.

11 இப்பொழுது, இக்காரணத்திற்காகவே, நான் உங்களை விசாரிக்கும்படிக்கு, நீங்கள் பாதுகாக்கப்படும்படி அனுமதித்தேன். இல்லாவிடில் என் காவற்காரர் உங்களை கொன்றுபோடும்படி செய்திருப்பேன். நீங்கள் இப்பொழுது பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள், என்றான்.

12 இப்பொழுது தான் பேச அனுமதிக்கப்பட்டதை அம்மோன் கண்டபோது அவன் சென்று, ராஜாவை பணிந்துகொண்ட பின்னர், மறுபடியும் எழுந்து, ராஜாவே நான் இன்னும் ஜீவித்திருந்து பேச அனுமதிக்கப்பட்டதற்கு தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; நான் தைரியமாய் பேச முயற்சிக்கிறேன்.

13 என்னை நீர் அறிந்திருந்தீரேயானால் இந்தக் கட்டுகளால் நான் கட்டப்பட அனுமதித்திருக்க மாட்டீர் என்று நன்கு அறிவேன். ஏனெனில் சாரகெம்லாவின் சந்ததியானான அம்மோன் என்னப்படுகிற நான், சாரகெம்லாவைவிட்டு சீநிப் நடத்திவந்த எங்களின் சகோதரர்களைக்குறித்து விசாரிக்கவே அத்தேசத்தைவிட்டு வந்திருக்கிறேன், என்றான்.

14 இப்பொழுதும், அந்தப்படியே, லிம்கி, அம்மோனுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சாரகெம்லாவிலே இருந்த என் சகோதரர்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள், என்று இப்பொழுது மெய்யாகவே அறிவேன். இப்பொழுது நான் களிகூருவேன், நாளை என் ஜனத்தாரும் களிகூரும்படிச் செய்வேன்.

15 ஏனெனில் இதோ, லாமானியர்களுக்கு அடிமைகளாக இருக்கிற நாங்கள் கொடுமையான வரிகள் விதிக்கப்படுகிறோம். இப்பொழுதும் இதோ, நம்முடைய சகோதரர்கள் நம்மை அடிமைத்தனத்திலிருந்தும், லாமானியர்களின் கைகளிலிருந்தும் தப்புவிப்பார்கள், நாம் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்போம். ஏனெனில் லாமானியர்களின் ராஜாவிற்கு வரி செலுத்துவதைக் காட்டிலும், நேபியர்களுக்கு அடிமைகளாயிருப்பதே நலம், என்றான்.

16 இப்பொழுது லிம்கி ராஜா அம்மோனையும் அவன் சகோதரரையும் கட்டக்கூடாதென்று தன் காவற்காரருக்கு கட்டளையிட்டான். ஆனால் அவர்கள் சீலோமுக்கு வடக்கேயுள்ள மலைக்குச் சென்று, அவர்களுடைய சகோதரர்கள் பலபாடுகள் அனுபவித்து, பசியாலும் தாகத்தினாலும், களைப்பினாலும், வாடிப்போனதினிமித்தம், அவர்கள் பிரயாணத்தின் பாரத்திலிருந்து ஓய்வெடுத்து, புசித்து பானம்பண்ணும்படி, பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு வரும்படி செய்தான்.

17 இப்பொழுதும் அந்தப்படியே, மறுதினம் லிம்கி ராஜா தன்னுடைய ஜனங்கள் யாவரும், தான் அவர்களுக்கு பேசவிருக்கும் வார்த்தைகளை கேட்க ஆலயத்திலே ஏகமாய்க்கூட வேண்டுமென்று, ஒரு அறிக்கையை அவர்களுக்குள்ளே அனுப்பினான்.

18 அந்தப்படியே, அவர்கள் யாவரும் ஏகமாய்க் கூடினபோது அவன் அவர்களிடம் இவ்வண்ணம் சொன்னான்: என் ஜனமே, உங்கள் சிரசுகளை உயர்த்தி, ஆறுதலடையுங்கள். இதோ நம்முடைய அநேக போராட்டங்கள் அவமாய்ப் போயிருப்பினும், நம்முடைய சத்துருக்களுக்கு இனி ஒருபோதும் அடிமைகளாயிராத காலம் தூரமாய் அல்லாமல் சமீபமாய் இருக்கிறது; ஆகிலும் திறமையான போராட்டத்தை போராடுவது அவசியம், என நான் நம்புகிறேன்.

19 ஆகையால் உங்கள் தலைகளை உயர்த்தி களிகூர்ந்து, ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபின்,தேவனாகிய அந்த தேவனும் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து நடத்தினவரும், சிவந்த சமுத்திரத்தினூடாக வெட்டாந்தரையிலே நடக்கும்படிச் செய்து, வனாந்தரத்திலே அழிந்துபோகாதபடி மன்னாவால் போஷித்தவரும், இன்னும் அநேகவற்றை அவர்களுக்குச் செய்தவருமான அந்த தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள்.

20 மேலும், நம்முடைய பிதாக்களை எருசலேம் தேசத்திலிருந்து நடத்திவந்து, இதுவரைக்கும் பத்திரமாக பாதுகாத்து வந்த தேவன், அவரே இதோ, நம்முடைய அக்கிரமங்களினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமே நம்மை அடிமைத்தனத்தினுள் கொண்டு வந்துள்ளார்.

21 இந்த ஜனத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்ட சீநிப், தன் பிதாக்களின் தேசத்தை சுதந்தரிக்க மிகுந்த வைராக்கியம் கொண்டான்; ஆகவே ராஜாவாகிய சீநிப்புடன் ஒரு ஒப்பந்தத்தினுள் பிரவேசித்து, லேகி-நேபி பட்டணத்தோடு கூடிய தேசத்தின் ஒரு பகுதியின் உரிமையையும், சீலோம் தேசத்தையும், சுற்றிலுமுள்ள நிலத்தையும், அவனுடைய கைகளுக்கு ஒப்புவித்த லாமான் ராஜாவினுடைய தந்திரத்தாலும், சூதினாலும் அவன் வஞ்சிக்கப்பட்டான் என்பதற்கு, இத்தினத்திலே நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

22 அவன் இந்த ஜனத்தாரை கட்டுப்பாட்டுக்குள் அல்லது அடிமைத்தனத்திற்குள் கொண்டுவரவேண்டும், என்ற ஒரே நோக்கத்திற்காகவே இவையனைத்தையும் செய்தான். இதோ, நாங்கள் இச்சமயத்தில் எங்களுடைய சோளம், வாற்கோதுமை மற்றும் எல்லா விதமான தானியம் யாவிலும் அரைப்பங்கையும், மற்றும் எங்கள் மந்தைகள் மற்றும் கால்நடைகளின் குட்டிகளின் அரை பங்கையும், லாமானியர்களின் ராஜாவுக்கு இச்சமயம் வரி கொடுக்கிறோம். நாங்கள் பெற்றுள்ள அல்லது வைத்துள்ள எல்லாவற்றின் பாதியை அவன் பிடுங்கிக் கொள்கிறான். இல்லையெனில் எங்களின் ஜீவனை வாங்கிப்போடுவான்.

23 இப்பொழுது, இதனைத் தாங்கிக்கொள்ளுவது கடினமல்லவோ? எங்களுடைய இந்த உபத்திரவம் கொடியதல்லவோ? இதோ, நாங்கள் துக்கப்பட எவ்வளவு பெரிய காரணமிருக்கிறது.

24 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாங்கள் துக்கப்படுவதற்கு பெரிய காரணங்கள் உண்டு. இதோ, அக்கிரமத்தினாலே, எங்களுடைய சகோதரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டு, அவர்களின் இரத்தம் வீணாய் சிந்தப்பட்டது.

25 இந்த ஜனத்தார் மீறுதலினுள் விழாமல் இருந்திருப்பார்களெனில் இந்த மகா பொல்லாப்பு அவர்கள் மீது வர கர்த்தர் அனுமதித்திருக்கமாட்டார். ஆனால் இதோ, அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் போனார்கள். தங்களுக்குள்ளே அதிகமாய் இரத்தம் சிந்துமளவிற்கு அவர்கள் மத்தியில் பிணக்குகள் எழுந்தன.

26 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவனும், அவர்களின் துன்மார்க்கத்தையும், அருவருப்புகளையும் உரைத்தவனும், கிறிஸ்துவினுடைய வருகை உள்பட, இன்னும் வரவிருக்கிற அநேகத்தைக் குறித்து, தீர்க்கதரிசனமுரைத்தவனுமாகிய கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசியைக் கொன்றுபோட்டார்கள்.

27 அவன் அவர்களை நோக்கி, சகல காரியங்களுக்கும் பிதாவான கிறிஸ்துவே தேவனென்றும், ஆதியிலே மனுஷன் சிருஷ்டிக்கப்பட்ட சாயலின்படி மனுஷ சாயலை தம்மீது அவர் எடுத்துக்கொள்வார் என்றான்; அல்லது, வேறு வார்த்தைகளிலெனில், மனுஷன் தேவ சாயலின் பிரகாரமாய் சிருஷ்டிக்கப்பட்டானென்றும், தேவன் மனுபுத்திரருக்குள்ளே வந்து தம்மீது மாம்சம் மற்றும், இரத்த சரீரத்தோடு, பூமியின் பரப்பின் மீதெங்கும் செல்வார் என்றும் சொன்னான்.

28 இப்பொழுது, இதை அவன் சொன்னதினிமித்தம் அவனைக் கொன்று போட்டார்கள்; இன்னும் அநேகக் காரியங்களைச் செய்து தேவனுடைய கோபாக்கினையை தங்கள்மீது வரவழைத்தார்கள். ஆதலால், அவர்கள் அடிமைத்தனத்திலே, கொடிய உபத்திரவங்களினாலே நிந்திக்கப்படுகிறார்கள் என்று யார் ஆச்சரியப்படுகிறார்கள்?

29 ஏனெனில் இதோ, கர்த்தர் சொன்னார்: என் ஜனத்தின் மீறுதலின் நாளில் நான் அவர்களுக்கு ஆதரவாயிராமல் அவர்கள் விருத்தியடையாமலிருக்க அவர்களின் பாதைகளை அடைப்பேன்; அவர்களின் கிரியைகள் அவர்களுக்கு முன்பு இடறுதலாய் இருக்கும்.

30 மறுபடியும் அவர் சொல்கிறார்: என் ஜனத்தார் அசுசியை விதைப்பார்களெனில், அதன் பதரை சுழல்காற்றில் அறுவடை செய்வார்கள். அதனுடைய விளைவோ விஷமாயிருக்கிறது.

31 மறுபடியும் அவர் என் ஜனம் அசுசியை விதைத்தால், சடிதியாய் அழிவைக் கொண்டுவருகிற கீழ்க்காற்றை அறுவடை செய்வார்கள் என்றார்.

32 இப்பொழுதும் இதோ, கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது. நீங்கள் அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள்.

33 ஆனாலும், நீங்கள் உள்ளத்தின் முழு நோக்கத்தோடு கர்த்தரிடத்திலே திரும்பி, அவரில் நம்பிக்கை வைத்து, மனதின் எல்லா கருத்தோடும் அவரைச் சேவித்தால், ஆம், அப்படிச் செய்தால் அவர் தமது சொந்த சித்தம் மற்றும் விருப்பத்திற்கேற்ப, உங்களை அடிமைத்தனத்திலிருந்து தப்புவிப்பார்.