அதிகாரம் 6
பென்யமீன் ராஜா ஜனங்களின் பெயர்களை எழுதி அவர்களுக்கு உபதேசம் செய்யும்படி ஆசாரியர்களை நியமித்தல் – மோசியா நீதியுள்ள ராஜாவாக அரசாளுதல். ஏறக்குறைய கி.மு. 124–121.
1 இப்பொழுதும் ஜனங்களிடம் பேசி முடித்த பின்பு பென்யமீன் ராஜா, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி தேவனோடுகூட ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசித்த, அனைவருடைய பெயர்களையும் குறித்துக்கொள்ளுவது அவசியமென்று எண்ணினான்.
2 அந்தப்படியே, சிறு பிள்ளைகளைத் தவிர அங்கிருந்த ஒரு ஆத்துமாவும் உடன்படிக்கையினுள் பிரவேசித்து கிறிஸ்துவினுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ளாமலிருக்கவில்லை.
3 மீண்டும் அந்தப்படியே, பென்யமீன் ராஜா இவைகள் எல்லாவற்றையும் முடித்து, தன் ஜனத்திற்கு தன்னுடைய குமாரனாகிய மோசியாவை அதிகாரியாகவும், ராஜாவாகவும் அபிஷேகம்பண்ணி, ராஜ்யத்தின் சகல பொறுப்புகளையும் அவனிடத்திலே ஒப்படைத்து, ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கேட்டு அறியவும், அவர்கள் செய்துகொண்ட அந்த உறுதிமொழியை நினைக்கும்படி உணர்த்தப்படவும் போதிக்கப்படவும் ஆசாரியர்களை நியமித்தபின் கூட்டத்தாரை அனுப்பிவைத்தான். அனைவரும் தங்களின் வீட்டாரோடே கூட தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
4 மோசியா தன் தகப்பனின் ஸ்தானத்திலே அரசாளத் தொடங்கினான். எருசலேமை லேகி விட்டு வந்த காலத்திலிருந்து மொத்தமாக நானூற்று எழுபத்தாறு வருஷங்களில் அவன் தனது முப்பதாவது வயதிலே அரசாளத் துவங்கினான்.
5 பின்பு பென்யமீன் ராஜா மூன்றாண்டுகள் ஜீவித்து மரித்துப்போனான்.
6 அந்தப்படியே, மோசியா ராஜா கர்த்தருடைய பாதைகளிலே நடந்து, அவருடைய நியாயத்தையும், அவருடைய நியமங்களையும் கைக்கொண்டு, அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டான்.
7 மோசியா ராஜா தன் ஜனத்தாரை பூமியை பண்படுத்தச் செய்வித்தான். தன் ஜனத்தாருக்கு தான் பாரமாயிராதபடிக்கு, சகல காரியங்களிலும் தன் தகப்பன் செய்திருந்தபடியே தானும் செய்யும்படி, தானே பூமியை பண்படுத்தினான். மூன்று வருஷமளவும் அவன் ஜனத்தார் யாவருக்குள்ளும் கலகம் ஒன்றுமில்லாதிருந்தது.