வேதங்கள்
மோசியா 20


அதிகாரம் 20

லாமானியர்களின் சில குமாரத்திகள் நோவாவினுடைய ஆசாரியர்களால் அபகரிக்கப்படுதல் – லாமானியர்கள் லிம்கி மற்றும் அவனது ஜனத்தின் மீது போர் தொடுத்தல் – அவர்கள் துரத்தப்பட்டு அமைதியாக்கப்படுதல். ஏறக்குறைய கி.மு. 145–123.

1 இப்பொழுதும் லாமானியர்களின் குமாரத்திகள் சேம்லோன் என்ற இடத்திலே பாடி, ஆடி மகிழ்ச்சியாயிருக்க ஒன்றுகூடியிருந்தார்கள்.

2 அந்தப்படியே, ஒருநாள் அவர்களில் சிலர் ஆடவும், பாடவும் ஒன்றாய்க் கூடியிருந்தார்கள்.

3 இப்பொழுதும் நோவா ராஜாவின் ஆசாரியர்கள், நேபியின் பட்டணத்திற்குள் பிரவேசிக்க வெட்கப்பட்டு, ஜனங்கள் தங்களை வெட்டிப்போடுவார்கள் என்று பயந்தவர்களாயும், தங்களின் மனைவிகளிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் திரும்பாமலிருந்தார்கள்.

4 வனாந்தரத்திலே தங்கியிருந்ததால், லாமானியர்களின் குமாரத்திகளை கண்டவுடன், அவர்கள் பதுங்கி அவர்களை நோட்டமிட்டார்கள்.

5 அவர்களில் சிலர் ஆட ஒன்றாய் கூடியிருந்தபோது, அவர்கள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து, அவர்களை வனாந்தரத்தினுள் தூக்கிச் சென்றார்கள்; ஆம், லாமானியர்களின் இருபத்தி நான்கு குமாரத்திகளை வனாந்தரத்தினுள் தூக்கிச் சென்றார்கள்.

6 அந்தப்படியே, லாமானியர்கள் தங்கள் குமாரத்திகள் தொலைந்துபோனதைக் கண்டவுடன், அவர்கள் அது லிம்கியின் ஜனமாயிருக்கும் என்று நினைத்ததால், லிம்கி ஜனத்தின்மீது கோபம்கொண்டார்கள்.

7 ஆதலால் அவர்கள் தங்கள் சேனைகளை அனுப்பினார்கள். ஆம், ராஜாவே தன் ஜனத்திற்கு முன்சென்றான். லிம்கி ஜனத்தை அழிக்க நேபியின் தேசத்திற்குப் போனார்கள்.

8 லிம்கி கோபுரத்திலிருந்து அவர்களைக் கண்டு, அவர்களுடைய போர் ஆயத்தங்களை அறிந்துகொண்டான். ஆதலால் அவன் தன் ஜனத்தை ஒன்றாய்க் கூட்டி வயல்களிலும், கானகங்களிலும் அவர்களுக்காக பதுங்கியிருந்தான்.

9 அந்தப்படியே, லாமானியர்கள் வந்தபோது, லிம்கியின் ஜனத்தார் தங்கள் மறைவிடங்களிலிருந்து வந்து, அவர்கள்மீது விழுந்து, அவர்களைக் கொலை செய்யத் துவங்கினார்கள்.

10 அந்தப்படியே, யுத்தம் மிகவும் கொடியதாகி, அவர்கள் இரைக்காக சண்டையிடுகிற சிங்கங்களைப்போல சண்டையிட்டார்கள்.

11 அந்தப்படியே, லிம்கியின் ஜனங்கள் லாமானியர்களுடைய எண்ணிக்கையிலே பாதியளவு இல்லாமற்போனாலும் கூட, லாமானியர்களை தங்கள் முன்பிருந்து விரட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் ஜீவன்களுக்காகவும், மனைவிகளுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் சண்டையிட்டார்கள்; ஆதலால் முழுமூச்சாய் முயன்று வலுசர்ப்பங்களைப் போல சண்டையிட்டார்கள்.

12 அந்தப்படியே, அவர்கள் லாமானியர்களுடைய ராஜாவை அவர்களுடைய மரித்தோரிடையே கண்டார்கள்; ஆயினும் அவன் மரித்துப்போகவில்லை. காயத்துடனேயிருந்ததாலும் தரையின் மீது விட்டுவிடப்படும் அளவுக்கு அவனது ஜனத்தின் ஓட்டம் அதிவேகமாய் இருந்தது.

13 அவர்கள் அவனைத் தூக்கி, அவன் காயங்களைக் கட்டி, லிம்கியின் முன்பு கொண்டுவந்து, இதோ லாமானியர்களின் ராஜா, அவன் காயமுற்று, அவர்களுடைய மரித்தோரிடையே விழுந்து கிடந்தான். அவர்கள் அவனை விட்டுச்சென்றார்கள். இதோ அவனை உம் முன்னே கொண்டு வந்திருக்கிறோம். நாம் இவனை இப்பொழுதே கொன்று போடுவோமென்றார்கள்.

14 ஆனால் லிம்கியோ அவர்களை நோக்கி: அவனைக் கொன்றுபோடாமல், அவனை நான் காணும்படி இங்கே கொண்டு வாருங்களென்றான். அவர்கள் அவனைக் கொண்டு வந்தார்கள். லிம்கி அவனை நோக்கி: என் ஜனத்திற்கு விரோதமாய் யுத்தம்புரிய நீர் வந்த காரணம் என்ன? இதோ நான் உம்மிடம் செய்த ஆணையை என் ஜனம் முறித்துப்போடவில்லையே. ஆயினும் நீர் என்னுடைய ஜனத்திடம் செய்த ஆணையை ஏன் முறித்துப்போடவேண்டும் என்றான்.

15 இப்பொழுதும் ராஜா, என் ஜனத்தாருடைய குமாரத்திகளை உம்முடைய ஜனத்தார் தூக்கிச் சென்றதினாலே நான் ஆணையை முறித்துப்போட்டேன்; ஆதலால் என்னுடைய உக்கிரத்திலே என் ஜனத்தாரை உம் ஜனத்திற்கு விரோதமாய் யுத்தம் புரிய வைத்தேன், என்றான்.

16 இப்பொழுதும் லிம்கி இந்தச் சங்கதியைக் குறித்து ஒன்றும் கேள்விப்படவில்லை; ஆதலால் அவன்: நான் என் ஜனத்திற்குள்ளே தேடுவேன். இந்தக் காரியத்தை எவன் செய்தானோ அவன் அழிவான். அதினிமித்தம் தன் ஜனத்திற்குள்ளே தேடும்படிச் செய்தான்.

17 இப்பொழுது இந்தக் காரியங்களை கிதியோன் கேள்விப்பட்டபோது, ராஜாவினுடைய சேனாதிபதியாய் இருப்பதினிமித்தம் அவன் போய், ராஜாவினிடத்திலே நீர் பொறுமையாயிருக்கும்படியும், இந்த ஜனத்தைத் தேடாமலும், அவர்களைக் குற்றம் சாட்டாமலும் இருப்பீராக, என்று உம்மை வேண்டுகிறேன்.

18 ஏனெனில் இந்த ஜனம் அதம் பண்ண வகை தேடின, உமது தகப்பனுடைய ஆசாரியர்களை நீர் நினைவுகூரவில்லையா? அவர்கள் வனாந்தரத்தில் இல்லையா? லாமானியர்களின் குமாரத்திகளை திருடிச் சென்றவர்கள் அவர்களல்லவா?

19 இப்பொழுதும் இதோ, இந்தக் காரியங்களை ராஜாவினிடத்திலே சொல்வீர்களானால் அவன் தன் ஜனத்திற்கு அவைகளைச் சொல்லி அவர்கள் நம்முடனே சமாதானமாவார்கள். இதோ அவர்கள் நமக்கு விரோதமாய் எழும்ப ஆயத்தமாயிருக்கிறார்கள்; இதோ, நம்மிடத்திலே கொஞ்சம்பேர் மாத்திரமே இருக்கிறார்கள்.

20 இதோ அவர்கள் திரளான சேனைகளோடு வருகிறார்கள்; அவர்களை ராஜா சமாதானம் பண்ணவில்லையெனில் நாம் சங்கரிக்கப்படுவோம்.

21 ஏனெனில் நமக்கு எதிராக தீர்க்கதரினமுரைத்த அபிநாதியின் வார்த்தைகள் இவ்விதமாய் நிறைவேறவில்லையா. கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடாமலும், நம்முடைய அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பாமலும் இருந்ததினிமித்தமே, இவைகளனைத்தும் சம்பவித்தன.

22 இப்பொழுது ராஜாவை நாம் சமாதானப்படுத்தி அவனிடத்திலே நாம் செய்த ஆணையை நிறைவேற்றுவோம்; நம்முடைய ஜீவனை விடுவதைக் காட்டிலும், அடிமைத்தனத்திலே இருப்பதே நலம்; ஆதலால் அதிகமாய் இரத்தம் சிந்தாமல் தடுப்போம், என்றான்.

23 இப்பொழுதும் லிம்கி தன் தகப்பனைக் குறித்தும், வனாந்தரத்தினுள் ஓடிப்போன ஆசாரியர்களைக் குறித்தும், சகலகாரியங்களையும் ராஜாவினிடத்திலே கூறி, அவர்களின் குமாரத்திகள் தூக்கிச் செல்லப்பட்டதை அவர்கள் மீது சாட்டினான்.

24 அந்தப்படியே, அவனுடைய ஜனத்தாரோடு ராஜா சமாதானமானான். அவன் அவர்களை நோக்கி: ஆயுதந்தரிக்காமல் என்னுடைய ஜனத்தை சந்திக்கப்போவோம், வாருங்கள். என் ஜனம், உம்முடைய ஜனத்தை வெட்டிப்போடமாட்டார்களென்று, ஒரு ஆணையோடு கூடிய சத்தியத்தைச் செய்கிறேன், என்றான்.

25 அந்தப்படியே, அவர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து, ஆயுதமில்லாமல் லாமானியர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அந்தப்படியே, அவர்கள் லாமானியர்களைச் சந்தித்தார்கள். லாமானியர்களுடைய ராஜா அவர்களின் முன்பாக வணங்கி, லிம்கியினுடைய ஜனத்தாருக்காக அவர்களிடத்திலே மன்றாடினான்.

26 லாமானியர்கள் ஆயுதமில்லாத லிம்கியினுடைய ஜனத்தைக் கண்டபோது, அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களோடு சமாதானமடைந்தார்கள். தங்களுடைய ராஜாவோடு கூட சேர்ந்து, சமாதானத்துடன் தங்களின் சொந்த தேசத்திற்குத் திரும்பினார்கள்.