அதிகாரம் 29
ராஜாவின் ஸ்தானத்திலே நியாயாதிபதிகளை தேர்ந்தெடுக்கும்படி மோசியா ஆலோசனை சொல்லுதல் – அநீதியான ராஜாக்கள் தங்கள் ஜனத்தை பாவத்திற்குள் வழிநடத்துகிறார்கள் – இளைய ஆல்மா ஜனங்களின் குரலால் பிரதான நியாயாதிபதியாய் தேர்ந்தெடுக்கப்படுதல் – அவன் சபைக்கு பிரதான ஆசாரியனாயுமிருத்தல் – மூத்த ஆல்மாவும், மோசியாவும் மரணமடைதல். ஏறக்குறைய கி.மு. 92–91.
1 இப்பொழுது இதை மோசியா செய்த பின்பு, தேசம் முழுவதும் எல்லா ஜனங்களுக்குள்ளும், ராஜாவாக யார் இருக்கவேண்டுமென்ற அவர்களுடைய விருப்பத்தை அறிய ஆவலுள்ளவனாய் அறிக்கையை அனுப்பினான்.
2 அந்தப்படியே, ஜனங்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து, உமது குமாரனாகிய ஆரோன் எங்களுடைய ராஜாவாகவும் அதிகாரியாகவும் இருக்க விரும்புகிறோம், என்று ஜனங்களின் குரல் வந்தது.
3 இப்பொழுது ஆரோன் நேபியர்களின் தேசத்திற்கு போயிருந்தமையால், ராஜா அவன்மீது ராஜ்யபாரத்தை சூட்டமுடியவில்லை; ஆரோனும் தன் மீது ராஜ்யபாரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை; மோசியாவின் குமாரர்களிலே எவரும் தங்கள் மீது ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களாயிருந்தார்கள்.
4 ஆதலால் மோசியா ராஜா ஜனங்களுக்குள்ளே மறுபடியும் அனுப்பினான்; ஆம், ஒரு எழுதப்பட்ட செய்தியை ஜனங்களுக்குள்ளே அனுப்பினான். எழுதப்பட்ட வார்த்தைகள் இவைகளே.
5 இதோ, என் ஜனமே, நான் உங்களை என் சகோதரர்களாக எண்ணுகிறேன். ராஜா ஒருவர் இருக்கவேண்டுமென்று விரும்புவதால், அதைக்குறித்து சிந்திக்கவும் எண்ணவும் வேண்டுமென வாஞ்சிக்கிறேன்.
6 இப்பொழுது நான் உங்களுக்கு அறிவிப்பது என்னவெனில், ராஜ்யம் எவனுக்கு நியாயப்படி சொந்தமானதாயிருக்கிறதோ, அவன், தன் மீது ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்திருக்கிறான்.
7 இப்பொழுது அவனுக்குப் பதிலாக வேறொருவன் நியமிக்கப்பட்டால், இதோ, உங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படுமென்று நான் அஞ்சுகிறேன். யாருக்குத் தெரியும். தனக்கு இந்த ராஜ்யம் சொந்தமானதென்று என் குமாரன் உக்கிரம்கொண்டு, இந்த ஜனங்களில் சிலரை தனக்குப் பின்னே அழைத்துச் சென்று, அதிகமாய் இரத்தம் சிந்துதலுக்கும், கர்த்தருடைய வழியைப் புரட்டுதலுக்கும் காரணமாயிருந்து, அநேக ஜனங்களுடைய ஆத்துமாக்களை அழிக்கலாம் அல்லவா.
8 இப்பொழுதும் ஞானமாக இந்தக் காரியங்களை சிந்தித்துப் பார்ப்போம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஏனெனில் என் குமாரனை அழிக்க நமக்கு எந்த உரிமையுமில்லை. அதேபோல மற்றொருவன் இவனுடைய ஸ்தானத்திலே நியமிக்கப்பட்டால், அவனையும் அழித்துப்போட நமக்கு எந்த உரிமையும் இருக்கக்கூடாது.
9 என் குமாரன் மறுபடியும் தனது மேட்டிமைக்கும், வீணான காரியங்களுக்கும் திரும்புவானேயாகில், தான் சொன்ன காரியங்களிலிருந்து மாறுபட்டு, ராஜ்யத்தை உரிமை பாராட்டுவான். அது அவனையும் இந்த ஜனத்தையும் அதிக பாவங்களைச் செய்யச் செய்யும்.
10 இப்பொழுது நாம் ஞானமாயிருந்து, இந்தக் காரியங்களை எதிர்நோக்கி இந்த ஜனத்திற்கு சமாதானத்தை உண்டுபண்ணுகிறவைகளையே செய்வோமாக.
11 ஆதலால் என் மீதி நாட்கள் முழுவதிலும் நானே உங்கள் ராஜாவாயிருப்பேன்; இருப்பினும் நம்முடைய சட்டத்தின்படி இந்த ஜனத்தை நியாயம் விசாரிக்க நியாயாதிபதிகளை ஏற்படுத்துவோம்; நாம் இந்த ஜனத்தினுடைய கட்டுப்பாடுகளை சீர்திருத்துவோம். ஏனெனில் தேவனுடைய கட்டளைகளுக்கேற்ப இந்த ஜனத்தாரை நியாயம் விசாரிக்கும் ஞானவான்களை நாம் நியாயாதிபதிகளாய் நியமிப்போம்.
12 இப்பொழுது, ஒருவன் மனுஷனால் நியாயம் விசாரிக்கப்படுவதைக்காட்டிலும் தேவனால் நியாயம் விசாரிக்கப்படுவதே மேல். ஏனெனில் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நியாயமுள்ளதாயிருக்கும். ஆனால் மனுஷனுடைய தீர்ப்புகளோ எப்பொழுதும் நியாயமுள்ளதாயிருக்காது.
13 ஆதலால், உங்களுடைய ராஜாக்கள் நியாயவான்களாயிருந்து தேவனுடைய நியாயப்பிரமாணங்களை ஸ்தாபிக்கப்பண்ணி, அவருடைய கட்டளைகளுக்கேற்ப இந்த ஜனத்தை நியாயம் விசாரிப்பவர்களாயும், இந்த ஜனத்திற்காக என் தகப்பன் பென்யமீன் செய்ததைப்போல உங்களின் ராஜாக்களாயிருக்கப் போகிறவர்கள் செய்தால், அப்படியே ஆட்சி செய்வதற்கு ராஜாக்கள் எப்போதும் நீங்கள் பெற்றிருப்பது அவசியம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 நான்தானே உங்களுக்கு தேவனுடைய கட்டளைகளைப் போதித்து, எந்த ஒரு யுத்தமோ, வாக்குவாதமோ, திருட்டோ, களவோ, கொள்ளையோ, கொலையோ மற்ற எந்தவித அக்கிரமும் இல்லாமலிருக்க, தேசமுழுவதிலும் சமாதானத்தை ஸ்தாபிக்கும்படி சகல வல்லமையோடும், நான் பெற்றிருக்கிற திறமைகளோடும் முயற்சித்திருக்கிறேன்.
15 அக்கிரமத்தை எவன் செய்திருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்குத் தக்கதாய், நம்முடைய பிதாக்களால் நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தின்படி அவனைத் தண்டித்தேன்.
16 இப்பொழுதும், எல்லா மனுஷரும் நியாயவான்களாயில்லாததினிமித்தம், உங்களை ஆட்சி செய்வதற்கு ஒரு ராஜாவோ அல்லது ராஜாக்களோ அவசியமில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 ஏனெனில் இதோ, ஒரு துன்மார்க்கனான ராஜா எவ்வளவு அதிக அக்கிரமங்களைச் செய்யத் தூண்டுகிறான், ஆம் அது எவ்வளவு பெரிய அழிவாயிருக்கிறது!
18 நோவா ராஜாவையும், அவன் அக்கிரமங்களையும், அவன் அருவருப்புகளையும், அவன் ஜனங்களுடைய அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் எண்ணிப்பாருங்கள். இதோ எவ்வளவு பெரிய அழிவு அவர்களின் மேல் வந்தது. அவர்களின் அக்கிரமங்களினிமித்தம் அவர்கள் அடிமைத்தனத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டார்கள்.
19 அவர்களின் சர்வஞானசிருஷ்டி மத்தியஸ்தம் இல்லாமலும், அவர்களுடைய உருக்கமான மனந்திரும்புதல் நிமித்தமும் இல்லாமல் இருக்குமேயானால் அவர்கள் இதுவரைக்கும் தவிர்க்க இயலாமல் அடிமைத்தனத்திலேயே இருக்க வேண்டும்.
20 ஆனால் இதோ, அவருக்கு முன்பாக அவர்கள் தங்களை தாழ்த்தியதினாலேயே அவர் அவர்களை விடுவித்தார்; அவர்கள் அவரிடத்திலே ஊக்கமாய்க் கூக்குரலிட்டதினிமித்தம் அடிமைத்தனத்திலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்; இவ்விதமாய் கர்த்தர் தன் மீது தங்கள் நம்பிக்கையை வைக்கிறவர்களுக்கு நேராக இரக்கத்தின் கரத்தை நீட்டி, தம்முடைய வல்லமையாலே மனுபுத்திரருக்குள்ளே எல்லா சூழ்நிலைகளிலும் கிரியை செய்கிறார்.
21 இதோ, ஒரு அக்கிரமமான ராஜாவை அதிக வாக்குவாதங்களாலும், அதிக இரத்தம் சிந்துதலினாலுமேயன்றி, அவனை ஆட்சியிலிருந்து உங்களால் நீக்கமுடியாது, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ஏனெனில் இதோ, அவனது சிநேகிதர்களும் அக்கிரமத்திலே இருக்கிறார்கள். அவனைச் சுற்றிலும் தன் காவலாளிகளை வைத்திருக்கிறான்; தனக்கு முன்பு நீதியிலே ஆட்சி செய்தவர்களின் சட்டங்களைக் கிழித்துப் போடுகிறான்; அவன் தேவனுடைய கட்டளைகளைத் தன் காலால் மிதித்துப் போடுகிறான்.
23 தன் சொந்த துன்மார்க்கத்தின்படியே சட்டங்களை அமலாக்குகிறான். அவைகளைத் தன் ஜனங்களுக்குள்ளே அனுப்புகிறான்; ஆம், தன் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவனை சங்கரிக்கப்படும்படி செய்வான். தனக்கு விரோதமாய் கலகம் செய்கிறவர்களுக்கு எதிராக தன் சேனையை யுத்தத்திற்கு அனுப்பி, தன்னால் இயலுமானால் அவர்களை அழித்துப்போடுவான்; இவ்விதமாய் அநீதியுள்ள ராஜா எல்லா நீதியான வழிகளையும் புரட்டிப்போடுகிறான்.
24 இப்பொழுதும் இதோ, அம்மாதிரியான அருவருப்புகள் உங்கள் மீது வருவது அவசியமற்றதாயிருக்கிறது, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 ஆதலால் கர்த்தருடைய கரத்தால் நம்முடைய பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்டு, அவர்களால் உங்களுக்கு கொடுக்கப்பட்டதுமான சரியான சட்டங்களின்படியே நீங்கள் நியாயம் விசாரிக்கப்படுவதற்கு, இந்த ஜனத்தின் குரலால் நியாயாதிபதிகளைத் தேர்ந்தெடுங்கள்.
26 இப்பொழுது நீதிக்கு புறம்பான எந்த ஒரு காரியத்தையும் ஜனங்கள் விரும்புவது அசாதாரணமே. ஆனால் ஜனங்களில் சிலர் நீதிக்கு புறம்பானவைகளை வாஞ்சிப்பது பொதுவானதே; ஆதலால் ஜனங்களுடைய குரலால் உங்கள் வேலைகளைச் செய்ய இதை நீங்கள் கைக்கொண்டு உங்களுடைய சட்டமாக்குங்கள்.
27 ஜனங்களுடைய குரல், அக்கிரமத்தை தேர்ந்தெடுக்கும் காலம் வருமானால், தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் உங்கள்மீது வருவதற்கு இதுவே சமயமாயிருக்கிறது. ஆம், இதுவரை அவர் இந்த தேசத்திலே கொண்டுவந்ததைப்போல மகா அழிவினால் உங்களை சந்திக்கும், சமயம் இதுவே.
28 இப்பொழுது உங்களுக்கு நியாயாதிபதிகள் இருந்து, அவர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின்படி நியாயம் விசாரிக்காமல் போவார்களானால், ஒரு உயர் நியாயாதிபதியால் அவர்கள் விசாரிக்கப்படும்படி நீங்கள் செய்யலாம்.
29 உங்களுடைய உயர் நியாயாதிபதிகள் நீதிக்கடுத்த நியாயவிசாரணைகளைச் செய்யாமல் போவார்களானால், உங்களில் கீழான நியாயாதிபதிகளில் சிறிய எண்ணிக்கையிலானோர் ஒன்றாய்க்கூடும்படி செய்வீர்களாக. அப்பொழுது அவர்கள் ஜனத்தினுடைய குரலுக்கேற்ப உங்களுடைய உயர் நியாயாதிபதிகளை நியாயம் விசாரிப்பார்களாக.
30 இந்தக் காரியங்களைக் கர்த்தரிடத்திலுள்ள பயத்திலே செய்யும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; உங்களுக்கு ராஜா இராமலிருக்கவும், நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்யும்படிக்கும் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; இந்த ஜனங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் செய்வார்களெனில், அவைகள் அவர்களின் தலைகள் மேல் சுமரும்.
31 ஏனெனில் இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அநேக ஜனங்களினுடைய பாவங்கள் அவர்களின் ராஜாக்களின் அக்கிரமங்களினால் செய்யப்பட்டவை; ஆதலால் அவர்களின் அக்கிரமங்கள் அவர்களுடைய ராஜாக்களின் சிரசுகளின் மேல் சுமரும்.
32 இப்பொழுதும் இந்த சமத்துவமற்ற நிலை இனிமேலும் இந்த தேசத்திலே, குறிப்பாக என் ஜனத்திற்குள்ளே இருக்கக்கூடாது என விரும்புகிறேன்; ஆனால் இந்த தேசம் சுதந்தர தேசமாயிருக்கவும், இந்த தேசத்திலே நாம் எவ்வளவு காலம் ஜீவித்து, சுதந்தரித்திருக்க தேவன் ஏற்றதென்று காண்கிறாரோ, அவ்வளவு காலமளவும், இத்தேசத்தின் மீது நம்முடைய சந்ததிகள் நிலைக்கும் வரையிலும், ஒவ்வொரு மனுஷனும் தன் உரிமைகளையும், சிலாக்கியங்களையும் ஒன்றுபோல் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
33 நீதியுள்ள ராஜாவினுடைய சகல துன்பங்களையும் கஷ்டங்களையும், ஆம், அவர்களின் ஜனங்களுக்காக சகல ஆத்தும வேதனைகளையும், ஜனங்களின் எல்லா முணுமுணுப்புகளையும் ராஜாவுக்கு தெரிவித்து, இன்னும் அநேக காரியங்களை மோசியா ராஜா அவர்களுக்கு எழுதினான், அவையனைத்தையும் அவர்களுக்கு விளக்கினான்.
34 இந்தக் காரியங்கள் இனி இல்லாமற் போகவேண்டுமென்றும், அந்த சுமை எல்லா ஜனங்களின் மீதும் வந்து, அவனவன் தன் பங்கை சுமக்கவேண்டும் என்றும், அவர்களுக்குச் சொன்னான்.
35 அவர்களின் மீது ஒரு அநீதியுள்ள ராஜா ஆட்சி செய்தால் அவர்கள் அடைகிற கஷ்டங்களின் பாதகங்களையும் அவர்களுக்குத் தெரிவித்தான்;
36 ஆம், அவனுடைய சகல அக்கிரமங்களையும் அருவருப்புகளையும், யுத்தங்களையும், வாக்குவாதங்களையும், இரத்தம் சிந்துதலையும், திருட்டுத்தனங்களையும், கொள்ளைகளையும், வேசித்தனங்களையும், விவரிக்கமுடியாத சகலவிதமான அக்கிரமங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தான்; இந்தக் காரியங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு ஒவ்வாதவைகளானதால் இவைகளை செய்யக்கூடாதென்று அவர்களுக்குச் சொன்னான்.
37 இப்பொழுதும், அந்தப்படியே, இந்த காரியங்களை ஜனங்களுக்குள்ளே மோசியா ராஜா அனுப்பிய பிறகு, அவனுடைய வார்த்தைகளின் சத்தியத்திலே திருப்தியானார்கள்.
38 ஆதலால் ஒரு ராஜா வேண்டுமென்ற தங்களின் விருப்பங்களை விட்டுவிட்டு, தேசமுழுவதிலும் இருக்கிற ஒவ்வொரு மனுஷனும், சமமான வாய்ப்பை, சமமாக பெற்றிருக்க அதிக ஆவலுள்ளவர்களானார்கள். ஆம், ஒவ்வொரு மனுஷனும் தன் சொந்த பாவங்களுக்காக பதிலளிக்க மனமுள்ளவனாயிருப்பதை தெரிவித்தான்.
39 ஆதலால், அந்தப்படியே, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்படியே தங்களை நியாயந்தீர்க்கும்படி, நியாயாதிபதிகளைத் தேர்ந்தெடுக்க, தங்கள் வாக்குகளைப் போட, அவர்கள் தேசமுழுவதிலும் ஒன்றாய்க் கூடினார்கள்; தங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரத்தினிமித்தம் மிகவும் களிகூர்ந்தார்கள்.
40 அவர்கள் மோசியாவின் மீதான அன்பிலே பெலப்பட்டார்கள்; ஆம், மற்ற எந்த மனுஷனைக் காட்டிலும் அவனை அதிகமாய் மதித்தார்கள். அவர்களிடமிருந்து ஐஸ்வரியங்களை பிடுங்காமலும் இரத்தம் சிந்துதலிலே களிகூராமலும் ஆத்துமாவை மாசுபடுத்துகிற பொருளின் ஆதாயத்திற்காக எதிர் நோக்குகிற ஒரு கொடுங்கோலனாயிராமல் தேசத்திலே சமாதானத்தை ஸ்தாபித்து ஜனங்களை சகல விதமான அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்கும்படிச் செய்ததினிமித்தம் அளவிற்கதிகமாய் அவனை மதித்தார்கள்.
41 அந்தப்படியே, அவர்கள்மீது ஆட்சி செய்யவும், அல்லது சட்டத்தின்படி அவர்களை நியாயம் விசாரிக்கவும், நியாயாதிபதிகளை நியமித்தார்கள்; தேசம் முழுவதிலும் அப்படியே செய்தார்கள்.
42 அந்தப்படியே, தன் தகப்பன், தன் மீது பொறுப்பை அளித்து, சபையின் சகல நடவடிக்கைகளைக் குறித்து பொறுப்பைத் தனக்குக் கொடுத்து, தான் பிரதான ஆசாரியனாயும் இருந்ததினால், ஆல்மா முதலாம் தலைமை நியாயாதிபதிபாய் இருக்கும்படி நியமிக்கப்பட்டான்.
43 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா கர்த்தருடைய வழிகளிலே நடந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, நீதியுடன் நியாயம் விசாரித்தான். தேசம் முழுவதிலும் சமாதானம் தொடர்ந்து நிலவியது.
44 இப்படியாக, நேபியர்கள் என்று அழைக்கப்பட்ட சகல ஜனங்களுக்குள்ளேயும், சாரகெம்லா தேசம் முழுவதிலும் நியாயாதிபதிகளின் ஆட்சி துவங்கியது; ஆல்மா முதல் தலைமை நியாயாதிபதியாய் இருந்தான்.
45 இப்பொழுதும், அந்தப்படியே, அவனது தகப்பன் தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றும்படி ஜீவித்து, தன்னுடைய எண்பத்திரண்டாவது வயதில் மரித்துப்போனான்.
46 அந்தப்படியே, மோசியாவும் தன் ஆளுகையின் முப்பத்து மூன்றாம் வருஷத்திலே, அறுபத்தி மூன்று வயதாயிருந்து மரித்தான்; மொத்தத்திலே லேகி எருசலேமைவிட்டு வந்த காலத்திலிருந்து ஐநூற்று ஒன்பது வருஷங்களாயின.
47 இவ்விதமாய் நேபியின் ஜனங்கள்மீது ராஜாக்களின் ஆளுகை முடிவுற்றது. சபையின் ஸ்தாபகனான ஆல்மாவின் நாட்களும் இவ்விதமாய் முடிவடைந்தது.