அதிகாரம் 12
ஜனத்தினுடைய அழிவைக் குறித்தும் நோவா ராஜாவினுடைய மரணத்தைக் குறித்தும் அபிநாதி தீர்க்கதரிசனமுரைத்ததினிமித்தம், சிறையில் அடைக்கப்படுதல் – கள்ள ஆசாரியர்கள் வேதவாக்கியங்களை எடுத்துரைத்து, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதுபோல நடித்தல் – அபிநாதி பத்துக் கட்டளைகளை அவர்களுக்குப் போதிக்கத் துவங்குதல். ஏறக்குறைய கி.மு. 148.
1 அந்தப்படியே, அபிநாதி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, அவர்கள் யாரும் தன்னை அறியாதிருக்கும்படி மாறுவேஷத்திலே அவர்களுக்குள்ளே வந்து, அவர்கள் மத்தியில் தீர்க்கதரிசனமுரைக்கத் துவங்கி சொன்னான், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவெனில், அபிநாதியே, என் ஜனம் தங்கள் இருதயங்களை என் வார்த்தைகளுக்கு விரோதமாய் கடினப்படுத்தினதாலே, அவர்களுக்குள்ளே போய் தீர்க்கதரிசனமுரைப்பாயாக. அவர்கள் தங்களின் பொல்லாத செய்கைகளிலிருந்து மனந்திரும்பாததினிமித்தம், என்னுடைய கோபாக்கினையால் அவர்களை விசாரிப்பேன். ஆம் அவர்களின் அக்கிரமங்களையும், அருவருப்புகளையும், என்னுடைய கொடிய கோபாக்கினையால் விசாரிப்பேன், என்றார்.
2 ஆம், இந்தத் தலைமுறைக்கு ஐயோ! கர்த்தர் என்னை நோக்கி சொன்னார், உன் கரத்தை நீட்டி. தீர்க்கதரிசனமுரைத்து சொல்லவேண்டியதாவது: கர்த்தர் சொல்வது என்னவென்றால், இந்த தலைமுறை தங்களின் அக்கிரமங்களினிமித்தம் அடிமைத்தனத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டு கன்னத்திலே அடிக்கப்படுவார்கள்; ஆம், மனுஷர்களால் துரத்தப்பட்டு, கொலை செய்யப்படுவார்கள்; ஆகாயத்தின் கழுகுகளும், நாய்களும், ஆம், துஷ்டமிருக ஜீவன்களும், அவர்களின் மாம்சத்தை பட்சித்துப்போடும்.
3 எரிகிற அடுப்பிலே இருக்கிற வஸ்திரத்தைப் போல நோவா ராஜாவினுடைய ஜீவனும் எண்ணப்படும்; அப்போது நானே கர்த்தர் என்று அறிந்துகொள்வான்.
4 மகா உபத்திரவங்களினால் இந்த ஜனத்தைச் சபிப்பேன், ஆம், பஞ்சத்தாலும் கொள்ளை நோயினாலும். நாள் முழுவதும் நான் அவர்களைப் புலம்பச் செய்வேன்.
5 ஆம், அவர்களின் முதுகுகளிலே சுமைகளை ஏற்றும்படிச் செய்வேன். ஒரு பேசாத கழுதையைப்போல அவர்கள் முன்னடத்தப்படுவார்கள்.
6 நான் அவர்களுக்குள்ளே கல்மழையை அனுப்புவேன். அது அவர்களை அடிக்கும். கீழ்காற்றினாலும் அடிக்கப்படுவார்கள்; பூச்சிகள் அவர்களின் தேசத்திலே பெருகி, அவர்களுடைய தானியங்களைப் பட்சிக்கும்.
7 ஒரு பெரும் வாதையினாலே அவர்கள் வாதிக்கப்படுவார்கள்; அவர்களின் அக்கிரமங்களினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும், இதைச் செய்வேன்.
8 அவர்கள் மனந்திரும்பாவிடில் பூமியின் பரப்பின் மீதிலிருந்து அவர்களை முழுமையாக அழிப்பேன்; ஆயினும் தங்களுக்குப் பின்பு ஒரு பதிவேட்டினை விட்டுச்செல்வார்கள். இந்நிலத்தை சுதந்தரிக்கும் மற்ற ஜாதிகளுக்காக அவைகளை பாதுகாப்பேன். ஆம், இந்த ஜனத்தினுடைய அக்கிரமங்களை மற்ற தேசங்களுக்கு அம்பலப்படுத்துவற்காகவே இதைச் செய்வேன். மேலும் அபிநாதி இந்த ஜனத்திற்கு எதிராக அநேகமானவற்றை தீர்க்கதரிசனமாக உரைத்தான்.
9 அந்தப்படியே, அவர்கள் அவன்மேல் கோபம் கொண்டு, அவனைப் பிடித்து, ராஜாவிற்கு முன்பு கட்டியெடுத்துச் சென்று, ராஜாவை நோக்கி சொன்னார்கள்: இதோ உமது ஜனத்தைக்குறித்து பொல்லாப்பை தீர்க்கதரிசனமாய் உரைத்து, தேவன் அவர்களை அழிப்பார் என்று சொல்கிற, மனுஷனை உமக்கு முன்னே கொண்டு வந்திருக்கிறோம்.
10 உமது ஜீவனைக் குறித்தும் பொல்லாதவைகளை தீர்க்கதரிசனமாய் உரைத்து, உமது ஜீவன் அக்கினி சூளையிலிருக்கிற வஸ்திரத்தைப் போலிருக்கும் என்றும், சொல்கிறான்.
11 மேலும் நீர் தண்டைப்போல் இருப்பீரென்றும் மிருகஜீவன்களால் அழிக்கப்படுகிறதும், காலால் மிதிக்கப்படுகிறதுமான வெளியின் காய்ந்துபோன தண்டைப்போலுமிருப்பீர் என்றும், சொல்கிறான்.
12 முழுவதுமாய் பழுத்திருந்து, காற்றடித்தவுடன் பூமியின்மீதெங்கும் பறந்துபோகிற முட்செடியின் புஷ்பங்களைப்போல இருப்பீர், என்றும் சொல்கிறான். கர்த்தர் இதை பேசியதுபோல பாவனை செய்கிறான். நீர் மனந்திரும்பாவிடில், உமது அக்கிரமங்களினிமித்தம் இவைகள் அனைத்தும் உம் மீது வருமென்கிறான்.
13 இப்பொழுதும், ராஜாவே. தேவனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதற்கும், இந்த மனுஷனால் நியாயம் தீர்க்கப்படுவதற்கும் நீர் என்ன மகா பொல்லாப்பைச் செய்தீர்? உமது ஜனம் அப்படி என்ன மகா பாவங்களைப் புரிந்தார்கள்?
14 இப்பொழுதும் ராஜாவே, நாம் குற்றமற்றவர்களாயிருக்கிறோம். ராஜாவே நீர் பாவம் செய்யாதவராயிருக்கிறீர்; ஆதலால் இந்த மனுஷன் உம்மைக்குறித்து பொய்யுரைத்து வீணிலே தீர்க்கதரிசனமுரைத்தான்.
15 இதோ, நாம் பராக்கிரமசாலிகள். நாம் அடிமைத்தனத்திற்குள்ளாகப் போவதுமில்லை, அல்லது நம்முடைய சத்துருக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுப் போவதுமில்லை; ஆம் இத்தேசத்திலே நீர் விருத்தியடைந்திருக்கிறீர். இன்னும் விருத்தியடைவீர்.
16 இதோ, அந்த மனுஷன், உம்முடைய கைகளிலே அவனை ஒப்படைக்கிறோம்; உமக்கு நன்மையாய்ப்படுகிறபடியே அவனுக்குச் செய்வீராக, என்றார்கள்.
17 அந்தப்படியே, நோவா ராஜா, அபிநாதியைச் சிறையில்போடும்படிச் செய்து, அவனைக்குறித்து தான் என்ன செய்யவேண்டுமென, ஆசாரியர்களுடன் ஆலோசனையை நடத்தும்பொருட்டு, அவர்களெல்லோரும் ஏகமாய்க்கூடும்படி கட்டளையிட்டான்.
18 அந்தப்படியே, அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் அவனைக் கேள்வி கேட்கும்படி இங்கே அவனை அழைத்துவாரும் என்றார்கள்; அவர்களுக்கு முன்னே அவன் கொண்டுவரப்படும்படி ராஜா கட்டளையிட்டான்.
19 அவனை குறுக்கு விசாரணை செய்து, குற்றம் சாட்டும் நோக்கத்தோடு அவனைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்; ஆனால் அவன் அவர்கள் ஆச்சரியப்படும்படிக்கு அவர்களுடைய சகல கேள்விகளையும் எதிர்த்து, தைரியமாய்ப் பதிலளித்தான். அவர்கள் கேள்விகள் அனைத்தையும் அவன் எதிர்த்து, அவர்களின் அனைத்து வார்த்தைகளிலும் அவர்களைத் தாறுமாறாக்கினான்.
20 அந்தப்படியே, அவர்களில் ஒருவன் அவனை நோக்கி: எழுதப்பட்டிருக்கிறதும், நம்முடைய பிதாக்களால் போதிக்கப்பட்ட வார்த்தைகளுமான:
21 நற்செய்தியைக் கொண்டுவந்து, சமாதானத்தை பிரஸ்தாபமாக்கி, நன்மையான செய்தியை அறிவித்து, இரட்சிப்பை பிரசங்கித்து, சீயோனை நோக்கி, உனது தேவன் ராஜரீகம்பண்ணுகிறார், என்று சொல்லுகிறவனின் பாதங்கள் பர்வதங்களின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
22 உன் காவற்காரன் சத்தத்தை உயர்த்துவான்; அவர்களெல்லோரும் ஒரே சத்தமாய்க் கீர்த்தனம் பண்ணுவார்கள்; கர்த்தர் மறுபடியும் சீயோனைக் கொண்டுவருகிறதை கண்ணாரக் காண்பார்கள்.
23 சந்தோஷத்தோடே புறப்படுங்கள்; எருசலேமின் பாழான இடங்களே ஏகமாய் ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில் கர்த்தர் தன் ஜனத்தைத் தேற்றி, எருசலேமை மீட்டுக்கொண்டார்;
24 சகல தேசங்களின் கண்களுக்கு முன்பாக கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்முடைய தேவனின் இரட்சிப்பை பூமியின் கடையாந்திரங்கள் யாவும் காணும், என்கிற இவைகளின் அர்த்தம் என்ன? என்றான்.
25 அபிநாதி அவர்களை நோக்கி சொன்னான்: இந்த ஜனத்துக்குப் போதிப்பது போலவும், தீர்க்கதரிசனத்தின் ஆவியை அறிந்துகொள்வது போலவும் நடித்து, இக்காரியங்களின் அர்த்தத்தை இன்னும் என் மூலமாய் அறிய விரும்பும் நீங்கள் ஆசாரியர்களா?
26 கர்த்தருடைய வழிகளைப் புரட்டுகிறதினால் உங்களுக்கு ஐயோ! ஏனெனில் நீங்கள் இவைகளை அறிவதால், இவைகளை நீங்கள் போதிக்கவில்லை. ஆதலால் கர்த்தருடைய வழியை நீங்கள் புரட்டிப் போட்டீர்கள்.
27 நீங்கள் உங்கள் இருதயங்களிலே புரிந்துகொள்ளாததினிமித்தம், புத்திமான்களாய் இருக்கவில்லை. ஆகையால் இந்த ஜனத்திற்கு எதை போதிக்கிறீர்கள் என்றான்.
28 அதற்கு அவர்கள் நாங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதிக்கிறோம், என்றார்கள்.
29 அவன் மறுபடியும் அவர்களை நோக்கி: நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் போதிப்பீர்களெனில், ஏன் அதைக் கைக்கொள்ளுவதில்லை? ஏன் உங்கள் மனதை ஐஸ்வரியத்தின்மீது வைக்கிறீர்கள்? ஆம், மகா பொல்லாப்பை, இந்த ஜனத்திற்கு விரோதமாய், தீர்க்கதரிசனமுரைக்க இந்த ஜனத்திற்குள்ளே கர்த்தர் என்னை அனுப்பி வைக்கும்படிக்கு, ஏன் வேசித்தனங்களைச் செய்து, வேசிகளோடு உங்கள் பெலத்தை வீணாக்கி, இந்த ஜனமும் பாவம் செய்ய வழிவகுக்கிறீர்கள்?
30 நான் சத்தியத்தையே பேசுகிறேன் என்று நீங்கள் அறியவில்லையா? ஆம், நான் சத்தியத்தையே பேசுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்; தேவனுக்கு முன்பாக நீங்கள் நடுக்கம் கொள்ளவேண்டும்.
31 நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதிக்கிறோம் என்று சொன்னதினிமித்தம், உங்களின் அக்கிரமங்களுக்காக நீங்கள் அடிக்கப்படுவீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் குறித்து நீங்கள் எதை அறிவீர்கள்? இரட்சிப்பு மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் வருகிறதா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள், என்றான்.
32 அவர்கள் பிரதியுத்திரமாய், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே இரட்சிப்பு வந்தது, என்றார்கள்.
33 இப்பொழுதும் அபிநாதி அவர்களை நோக்கி: நீங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவீர்களெனில் இரட்சிக்கப்படுவீர்கள்; என நான் அறிவேன். ஆம், சீனாய் மலையிலே மோசேயிடம் கர்த்தர் கட்டளைகளைக் கொடுத்துச் சொன்னதாவது:
34 எகிப்தின் தேசத்திலிருந்தும், அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்தும் உன்னைக் கொண்டுவந்த, உன் தேவனாகிய உன் கர்த்தர் நானே.
35 என்னையன்றி வேறெந்த தேவனும் உங்களுக்கு உண்டாயிருக்கவேண்டாம்.
36 மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான யாதொரு வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையாகிலும் உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
37 இப்பொழுதும் அபிநாதி அவர்களை நோக்கி: இவையனைத்தையும் நீங்கள் செய்திருக்கிறீர்களா? இல்லை, நீங்கள் செய்யவில்லை, என்று உங்களுக்குச் சொல்கிறேன். இந்தக் காரியங்கள் அனைத்தையும் இந்த ஜனங்கள் செய்யவேண்டுமென்று அவர்களுக்குப் போதித்துள்ளீர்களா? இல்லை. நீங்கள் செய்யவில்லை, என்று உங்களுக்குச் சொல்கிறேன்.