வேதங்கள்
மோசியா 19


அதிகாரம் 19

கிதியோன் நோவா ராஜாவை கொலை செய்ய வகைதேடுதல் – லாமானியர்கள் தேசத்தை ஆக்கிரமித்தல் – நோவா ராஜா அக்கினியால் மரணமடைதல் – லிம்கி வரி செலுத்தும் ஏகாதிபதியாய் அரசாளுதல். ஏறக்குறைய கி.மு. 145–121.

1 அந்தப்படியே, ராஜாவினுடைய சேனை, கர்த்தருடைய ஜனத்தை விருதாவாய்த் தேடிய பின்னர் திரும்பியது.

2 இப்பொழுதும் இதோ, ராஜாவின் சேனைகள் குறைக்கப்பட்டமையால் சிறியதாயிருந்தது, ஜனங்களின் மீதியானவர்களுக்குள்ளே பிரிவினைகள் ஏற்படத் துவங்கின.

3 சிலர் ராஜாவிற்கு விரோதமாய் பயமுறுத்தத் துவங்கினார்கள். அவர்களுக்குள்ளே பயங்கர பிணக்குகள் ஏற்படத் துவங்கின.

4 இப்பொழுதும் அவர்களுக்குள்ளே கிதியோன் என்று பெயர்கொண்ட ஒருவனிருந்தான். அவன் பெலவானாயும், ராஜாவிற்கு விரோதமாயுமிருந்தபடியால், தன் பட்டயத்தை உருவி, தான் ராஜாவைக் கொலை செய்வதாக தன் உக்கிரத்திலே ஆணையிட்டான்.

5 அந்தப்படியே, அவன் ராஜாவுடன் சண்டையிட்டான்; தன்னை அவன் வெல்லப்போகிறான் என்று ராஜா கண்டபோது, அவன் ஓடிப்போய் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த கோபுரத்திலே ஏறினான்.

6 கிதியோன் அவனைப் பின்தொடர்ந்து ஓடி, ராஜாவை வெட்டிப்போட கோபுரத்தின் மேல் ஏற இருக்கையில், சேம்லோன் தேசத்தைச் சுற்றி ராஜா தன் கண்களை ஏறெடுத்தான். இதோ லாமானியர்களின் சேனை தேசத்தின் எல்லைகளினுள்ளிருந்தார்கள்.

7 இப்பொழுதும் ராஜா தன் உள்ளத்தின் சஞ்சலத்தால், கதறி, கிதியோனே, என்னை விட்டுவிடு, ஏனெனில் லாமானியர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள், எங்களை சங்கரித்துப் போடுவார்கள். ஆம், என் ஜனத்தைச் சங்கரித்துப்போடுவார்கள், என்றான்.

8 இப்பொழுதும் ராஜா தன் சொந்த ஜீவனைக்குறித்து கவலைப்படுவதுபோலவே தன் ஜனத்தைக்குறித்து அதிகம் கவலைப்படவில்லை; ஆயினும் கிதியோன் அவன் ஜீவனைத் தப்புவித்தான்.

9 ராஜா லாமானியர்களுக்கு முன்பிருந்து அவர்கள் ஓடவேண்டும் என்று தன் ஜனங்களுக்குக் கட்டளையிட்டு, தானும் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போனான். அவர்கள் தங்கள் ஸ்திரீகளோடும், தங்கள் பிள்ளைகளோடும் வனாந்தரத்தினுள் ஓடிப்போனார்கள்.

10 அந்தப்படியே, லாமானியர் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களுக்கு முந்திச் சென்று, அவர்களைக் கொன்றுபோடத் தொடங்கினார்கள்.

11 இப்பொழுது, அந்தப்படியே, சகல புருஷர்களும் தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், விட்டுவிட்டு லாமானியர்களுக்கு முன்பாய் ஓட வேண்டுமென்று ராஜா கட்டளையிட்டான்.

12 இப்பொழுதும் அநேகர் அவர்களை விட்டுப்போகாமல், அவர்களுடனே தங்கி, அழிந்து போக விரும்பினார்கள். மீதியானோர் தங்கள் மனைவிகளையும், தங்கள் பிள்ளைகளையும் விட்டு விட்டு ஓடிப்போனார்கள்.

13 அந்தப்படியே, தங்கள் மனைவிகளோடும் பிள்ளைகளோடும் தரித்திருந்தவர்கள், லாமானியர்கள் தங்களை கொன்றுபோடாதபடி, தங்களுடைய அழகான குமாரத்திகளை அவர்களுக்கு முன்பு நின்று கெஞ்சும்படிச் செய்தார்கள்.

14 அந்தப்படியே, லாமானியர் அவர்களுடைய ஸ்திரீகளின் அழகால் மயங்கியதால், அவர்கள் மீது இரக்கம் கொண்டார்கள்.

15 ஆதலால் லாமானியர்கள் அவர்களுடைய ஜீவனை வாங்கிப்போடாமல், மறுபடியும் சிறைக்கைதிகளாக அவர்களை நேபியின் தேசத்திற்குக் கொண்டு சென்றார்கள், நோவா ராஜாவை லாமானியர்களின் கைகளிலே ஒப்படைக்கவும், தாங்கள் வைத்திருக்கிற பொன்னில் அரைப்பங்கையும் வெள்ளியிலும், விலையேறப்பெற்ற பொருட்கள் யாவிலும் தாங்கள் பெற்றிருந்த சகலவற்றிலும் அரைப்பங்காக, தங்களின் ஆஸ்திகளை ஒப்படைத்து, இப்படியாக லாமானியர்களின் ராஜாவிற்கு வருஷா வருஷம் அவர்கள் வரியை செலுத்த வேண்டுமென்ற நிபந்தனைகளின்பேரில், தேசத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

16 இப்பொழுதும் லிம்கி எனப் பெயர் கொண்ட ராஜாவினுடைய குமாரர்களில் ஒருவன், பிணைக்கைதிகளாய் எடுத்துச் செல்லப்பட்டவர்களுள் இருந்தான்.

17 இப்பொழுது, லிம்கி தன் தகப்பன் சங்கரிக்கப்படக் கூடாதென்று விரும்பினான். லிம்கி நியாயவானாய் இருப்பினும், தன் தகப்பனுடைய அக்கிரமங்களை அவன் அறியாமலிருக்கவில்லை.

18 அந்தப்படியே, ராஜாவையும் அவனோடிருந்தவர்களையும் தேட, வனாந்தரத்தினுள் இரகசியமாக ஆட்களை கிதியோன் அனுப்பினான். அந்தப்படியே, அவர்கள் ராஜாவையும் அவனுடைய ஆசாரியர்களையும் தவிர, சகல ஜனங்களையும் வனாந்தரத்தில் சந்தித்தார்கள்.

19 இப்பொழுது அவர்கள் நேபியின் தேசத்திற்குத் திரும்பிப்போய், தங்களின் மனைவிகளும், தங்களின் பிள்ளைகளும், அவர்களோடு இருந்தவர்களும், கொலை செய்யப்பட்டிருப்பார்களெனில், பழிவாங்க வகைதேடி, அவர்களோடு செத்துப்போவோம், என்று தங்கள் இருதயங்களிலே ஆணையிட்டுக் கொண்டார்கள்.

20 அவர்கள் திரும்பிப் போகக்கூடாது, என்று ராஜா கட்டளையிட்டான். அவர்கள் ராஜாவின்மீது கோபம்கொண்டு அவனை, அக்கினியால் மரணமடையும்படிச் செய்தார்கள்.

21 அவர்கள் ஆசாரியர்களையும் பிடித்து, கொலைசெய்யவிருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவர்கள் ஓடிப்போனார்கள்.

22 அந்தப்படியே, அவர்கள் நேபியின் தேசத்திற்குத் திரும்பிப்போகையில் கிதியோனின் மனுஷர்களைச் சந்தித்தார்கள். கிதியோனின் மனுஷர்கள் அவர்களின் மனைவிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் சம்பவித்த எல்லாவற்றையும், அவர்கள் வைத்திருந்த எல்லாவற்றிலும் அரைப் பகுதியை வரியாய் செலுத்தி தேசத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, லாமானியர்களுக்கு சொன்னதையும் சொன்னார்கள்.

23 ஜனங்கள், கிதியோனின் மனுஷர்களிடத்தில் அவர்கள் ராஜாவைக் கொன்றுபோட்டார்கள் எனவும், அவனுடைய ஆசாரியர்கள் அவர்களிடமிருந்து தூரமாய் வனாந்தரத்தினுள் ஓடிப்போனார்கள், என்றும் சொன்னார்கள்.

24 அந்தப்படியே, அவர்கள் சடங்குகளை முடித்த பின்னர், தங்கள் மனைவிகளும் தங்கள் பிள்ளைகளும் கொல்லப்படாததினிமித்தம் களிகூர்ந்து, நேபியின் தேசத்திற்கு திரும்பினார்கள். அவர்கள் ராஜாவுக்குச் செய்ததைக்குறித்து கிதியோனிடத்திலே சொன்னார்கள்.

25 அந்தப்படியே, லாமானியர்களின் ராஜா, தன்னுடைய ஜனம் அவர்களைக் கொன்று போடக்கூடாதென்று அவர்களுக்கு ஆணையிட்டான்.

26 ராஜாவினுடைய குமாரனும், ஜனங்களால் ராஜ்யபாரம் சூட்டப்பட்டவனுமாகிய லிம்கி, தன் ஜனம் பெற்றிருக்கிற எல்லாவற்றிலும் பாதியை அவனுக்கு வரியாய் செலுத்துவார்கள், என்று லாமானியர்களின் ராஜாவினிடத்தில் ஆணையிட்டான்.

27 அந்தப்படியே, லிம்கி ராஜ்யத்தையும், தன் ஜனத்திற்குள்ளே சமாதானத்தையும் ஸ்தாபிக்கத் தொடங்கினான்.

28 லாமானியர்களின் ராஜா தேசத்தைச் சுற்றியும், காவற்காரர்களை நிறுத்தி, லிம்கியின் ஜனம் வனாந்தரத்தினுள் போகாதபடி, தேசத்திலே இருக்கும்படிச் செய்தான்; நேபியர்களிடமிருந்து தான் பெற்ற வரியால், தன் காவற்காரர்களை ஆதரித்தான்.

29 இப்பொழுதும் லாமானியர்கள் அவர்களுக்கு தீங்கு செய்யாமலும், அழிக்க வகைதேடாமலும் இருப்பதால், லிம்கி ராஜா தொடர்ந்து இரண்டு வருஷமளவும் தன் ராஜ்யத்திலே சமாதானம் பெற்றிருந்தான்.