பழைய ஏற்பாடு 2022
மனதில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்: உடன்படிக்கை


“மனதில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்: உடன்படிக்கை,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“மனதில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்: உடன்படிக்கை,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

சிந்தனைகள் சின்னம்

மனதில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்

உடன்படிக்கை

பழைய ஏற்பாடு முழுவதும், நீங்கள் அடிக்கடி உடன்படிக்கை என்ற வார்த்தையை வாசிப்பீர்கள். இன்று நாம் வழக்கமாக உடன்படிக்கைகளை தேவனுடனான புனிதமான வாக்குறுதிகள் என்று நினைக்கிறோம், ஆனால் பூர்வகால உலகில், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் உடன்படிக்கைகளும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. அவர்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்விற்காக, மக்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ள வேண்டியது தேவைப்பட்டது, மேலும் அந்த நம்பிக்கையை பாதுகாக்க உடன்படிக்கைகள் ஒரு வழியாக இருந்தன.

நோவா, ஆபிரகாம் அல்லது மோசேயுடன் உடன்படிக்கைகளைப்பற்றி தேவன் பேசியபோது, தம்முடன் நம்பிக்கையின் உறவில் பிரவேசிக்க அவர் அவர்களை அழைத்தார். பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு உடன்படிக்கையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, தேவன் ஆபிரகாம் மற்றும் சாராளுடன் செய்துகொண்டதாகும், பின்னர் அவர்களின் சந்ததியினரான ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் (இஸ்ரேல் என்றும் அழைக்கப்படுகிறான்) புதுப்பிக்கப்பட்டது. இதை நாம் அடிக்கடி ஆபிரகாமிய உடன்படிக்கை என்று அழைக்கிறோம், இருப்பினும் பழைய ஏற்பாட்டில் இது “உடன்படிக்கை” என்று அறியப்பட்டது. பழைய ஏற்பாடு அடிப்படையில் இந்த உடன்படிக்கையை சுதந்தரித்துக் கொண்டவர்களாக தங்களைக் கண்ட ஜனத்தின் கதை, உடன்படிக்கையின் ஜனம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஆபிரகாமிய உடன்படிக்கை, விசேஷமாக பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு, இன்றும் முக்கியமானதாகத் தொடர்கிறது. ஏன்? ஏனென்றால், நாம் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் நேரடி சந்ததியினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாமும் உடன்படிக்கையின் ஜனமாக இருக்கிறோம் ( கலாத்தியர் 3: 27–29 பார்க்கவும்). இந்த காரணத்திற்காக, ஆபிரகாமிய உடன்படிக்கை என்ன, அது இன்று நமக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

ஆபிரகாமிய உடன்படிக்கை என்றால் என்ன?

ஆபிரகாம் “நீதியை மிகவும் பின்பற்றுபவனாக” இருக்க விரும்பினான் (ஆபிரகாம் 1: 2 ), எனவே தேவன் அவனை ஒரு உடன்படிக்கை உறவுக்கு அழைத்தார். ஆபிரகாம் இந்த வாஞ்சையைக் கொண்ட முதல் நபர் அல்ல, அவன் ஒரு உடன்படிக்கையைப் பெற்ற முதல் நபரும் அல்ல. ஆதாம் மற்றும் ஏவாளுக்கு உடன்படிக்கை மூலம் வழங்கப்பட்ட ஆசீர்வாதங்கள், மற்றும் அதன்பிறகு இந்த ஆசீர்வாதங்களை கருத்துடன் தேடியவர்களுக்கு வழங்கப்பட்ட, “பிதாக்களின் ஆசீர்வாதங்களை” அவன் நாடினான் ( ஆபிரகாம் 1: 2 ),

ஆபிரகாமுடனான தேவனின் உடன்படிக்கை அற்புதமான ஆசீர்வாதங்களை வாக்களித்தது: தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுதல், ஒரு பெரிய சந்ததி, ஆசாரிய நியமங்களைப் பெறுதல் மற்றும் வரப்போகிற தலைமுறைகளாக கௌரவிக்கப்படும் பெயர். ஆனால் இந்த உடன்படிக்கையின் கவனம் ஆபிரகாமும் அவனது குடும்பத்தினரும் பெறும் ஆசீர்வாதங்களில் மட்டுமல்ல, தேவனின் மற்ற பிள்ளைகளுக்கும் கிடைக்கும் ஆசீர்வாதத்திலும் இருக்கும். “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய், பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன்னில் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று தேவன் அறிவித்தார் (ஆதியாகமம் 12: 2-3 ).

இந்த உடன்படிக்கை ஆபிரகாம், சாராள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு தேவனின் பிள்ளைகளிடையே ஒரு சிலாக்கியத்தை கொடுத்ததா? பிறரை ஆசீர்வதிப்பது ஒரு சிலாக்கியம் என்ற பொருளில் மட்டுமே. ஆபிரகாமின் குடும்பம் இந்த ஊழியத்தையும் ஆசாரியத்துவத்தையும் சகல தேசங்களுக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களாகிய நித்திய ஜீவனென்னும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களையும் கொண்டு செல்ல வேண்டியதிருந்தது. ஆபிரகாம் 2:9, 11

இந்த உடன்படிக்கை ஆபிரகாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆசீர்வாதமாகும். அதைப் பெற்ற பின் ஆபிரகாம் தன் இருதயத்தில் சொன்னான், “உம்முடைய ஊழியக்காரன் உம்மைக் கருத்தாய் தேடினேன்; இப்பொழுது நான் உம்மைக் கண்டேன் (ஆபிரகாம் 2:12).

அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, ஆனால் இந்த உடன்படிக்கை நமது நாளில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது (1 நேபி 22:8–12 பார்க்கவும்). இது தற்போது தேவனின் ஜனத்தின் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில், உலகெங்கிலும் உள்ள குடும்பங்களை ஆசீர்வதித்து, தேவனின் பணி முன்னேறிக்கொண்டிருக்கும்போது, உடன்படிக்கையின் நிறைவேறுதல் பிற்காலத்தில் வேகமெடுக்கிறது. ஆபிரகாமைப் போலவே, நீதியை அதிகமாக பின்பற்றுபவராக இருக்க விரும்பும் எவரும், கர்த்தரை நேர்மையாகத் தேடும் எவரும், அதில் ஒரு பங்காக இருக்க முடியும்.

ஆலயத்ததின் முன் குடும்பம்

ஆபிரகாமிய உடன்படிக்கை எனக்கு என்னவாக இருக்கிறது?

நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளை. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது தேவனோடு ஒரு உடன்படிக்கை செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் திருவிருந்தில் பங்குபெறும் போது அந்த உடன்படிக்கையை புதுப்பிக்கிறீர்கள். நீங்கள் ஆலயத்தில் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்கிறீர்கள். ஒன்றிணைந்து, இந்த உடன்படிக்கைகள் உங்களை ஆபிரகாமிய உடன்படிக்கையில் ஒரு பங்காளியாக ஆக்குகின்றன, இதன் முழுமை ஆலய நியமங்களில் காணப்படுகிறது. தலைவர் ரசல். எம். நெல்சன் கற்பித்தபடி, “இறுதியில், பரிசுத்த ஆலயத்தில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு ஒரு முறை வாக்களிக்கப்பட்டபடி, ஒரு நித்திய குடும்பத்தின் ஆசீர்வாதங்களுக்கு நாம் உடன் வாரிசுகளாக மாறலாம்.” 1

இந்த உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களின் மூலம், நாம் தேவ ஜனமாகிறோம் (யாத்திராகமம் 6: 7 ; உபாகமம் 7: 6 ; 26:18 ; எசேக்கியேல் 11: 20 பார்க்கவும்). நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து நாம் வேறுபடுகிறோம். நம்முடைய உடன்படிக்கைகள் இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள, ஒப்புக்கொடுத்த சீடர்களாக இருப்பதை சாத்தியமாக்குகின்றன. தலைவர் நெல்சன் விளக்கினார், “நமது உடன்படிக்கைகள் அவருடன் நம்மை இணைக்கிறது, தெய்வீக வல்லமையை நமக்குக் கொடுக்கிறது.”2 தேவன் தம் ஜனத்தை தம்முடைய வல்லமையால் ஆசீர்வதிக்கும்போது, “பூமியின் எல்லா குடும்பங்களுக்கும்” அவர்கள் ஆசீர்வாதமாக இருப்பார்கள், அவர்கள் மற்றவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்ற அழைப்புடனும் எதிர்பார்ப்புடனும் அது இருக்கிறது. (ஆபிரகாம் 2: 9, 11 ).

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் ஆபிரகாமிய உடன்படிக்கை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதன் நிமித்தம் இது நமக்கு வழங்கப்பட்ட அருமையான புரிதல் ஆகும். ஆகவே, பழைய ஏற்பாட்டில் உள்ள உடன்படிக்கைகளைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடனான தேவனின் உறவைப்பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். உங்களுடனான அவருடைய உறவைப்பற்றியும் சிந்தியுங்கள். எண்ணற்ற சந்ததியினரைப்பற்றிய வாக்குத்தத்தத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது ( ஆதியாகமம் 28:14 பார்க்கவும்), இன்று ஆபிரகாமைத் தங்கள் தகப்பன் என்று அழைக்கும் மில்லியன் கணக்கானவர்களைப்பற்றி மட்டும் நினைக்க வேண்டாம். நித்திய குடும்பங்கள் மற்றும் அதிகப்படியான நித்திய ஆசீர்வாதத்தைப்பற்றிய உங்களுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தைப்பற்றியும் சிந்தியுங்கள் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131: 1–4 ; 132: 20-24 பார்க்கவும்). சுதந்தர தேசத்தின் வாக்குத்தத்தத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைப்பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். பூமியின் சிலஸ்டியல் இலக்கைப்பற்றியும், ”கர்த்தருக்காக காத்திருக்கிற சாந்தகுணமுள்ளவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சுதந்தரம்” (மத்தேயு 5:5; சங்கீதம் 37:9, 11; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:17–20ஐயும் பார்க்கவும்). தேவனின் உடன்படிக்கையின் ஜனம் “பூமியின் எல்லா குடும்பங்களையும்” ஆசீர்வதிப்பார்கள் என்ற வாக்குறுதியைப்பற்றி நீங்கள் படிக்கும்போது ( ஆபிரகாம் 2:11), ஆபிரகாம் அல்லது அவனிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளின் ஊழியத்தைப்பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். உங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்க இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையை பின்பற்றுபவராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றியும் சிந்தியுங்கள்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Covenants,” Liahona, Nov. 2011, 88.

  2. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 41. தலைவர் லின்டா கே. பர்ட்டன் கூறினார்: “உடன்படிக்கைகளைச் செய்து, காத்துக்கொள்வது என்பது பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நம்மைப் பிணைத்துக் கொள்வதைத் தேர்ந்தெடுப்பதாகும். இது இரட்சகரைப் பின்பற்ற ஒப்புக்கொடுப்பதாகும் ”(“The Power, Joy, and Love of Covenant Keeping,” Liahona, Nov. 2013, 111).