பழைய ஏற்பாடு 2022
மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டை வாசித்தல்


“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

சிந்தனைகளின் சின்னம்

மனதில் கொள்ள வேண்டிய சிந்தனைகள்

பழைய ஏற்பாட்டை வாசித்தல்

தனிப்பட்ட அர்த்தம் காணுங்கள்

இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டைப் படிப்பதற்கான வாய்ப்பை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? ஆர்வமாகவா? நிச்சயமின்மையா? பயப்படுகிறீர்களா? அந்த உணர்ச்சிகள் அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடியவை. பழைய ஏற்பாடு உலகின் மிகப் பழமையான எழுத்துக்களின் தொகுப்புக்களில் ஒன்றாகும், மேலும் இது உற்சாகமானதாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். இந்த எழுத்துக்கள் ஒரு பண்டைய கலாச்சாரத்திலிருந்து வந்தவை, அவை வெளிநாட்டு மற்றும் சில நேரங்களில் விசித்திரமானவை அல்லது அசௌகர்யமானவை என்று தோன்றலாம். இன்னும் இந்த எழுத்துக்களில் மக்கள் பழக்கமான அனுபவங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம், மேலும் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தின் தெய்வீகத்தன்மையின் சாட்சியாக இருக்கும், சுவிசேஷ தலைப்புக்களை நாம் அடையாளம் காண்கிறோம்.

ஆம், ஆபிரகாம், சாராள், அன்னாள், தானியேல் போன்றவர்கள், சில வழிகளில், நம்மிடமிருந்து மிகவும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களும் நம்மைப்போல குடும்ப மகிழ்ச்சி மற்றும் குடும்ப முரண்பாடு, விசுவாசத்தின் தருணங்கள் மற்றும் நிச்சயமற்ற தருணங்கள் மற்றும் வெற்றிகள் மற்றும் தோல்விகளை அனுபவித்தார்கள். மிக முக்கியமாக, அவர்கள் விசுவாசத்தைப் பயன்படுத்தினார்கள், மனந்திரும்பினார்கள், உடன்படிக்கைகளைச் செய்தார்கள், ஆவிக்குரிய அனுபவங்களைக் கொண்டிருந்தார்கள், தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான தங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை.

இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட அர்த்தத்தைக் காண முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், லேகி மற்றும் சரயாவின் குடும்பத்தினர் செய்ததை நினைவில் கொள்ளுங்கள். தனது சகோதரர்களுக்கு ஊக்கம் அல்லது திருத்தம் அல்லது பார்வை தேவைப்பட்டபோது மோசேயைப்பற்றிய கதைகளையும், ஏசாயாவின் போதனைகளையும் நேபி பகிர்ந்து கொண்டான். “என் ஆத்துமா வேதவசனங்களில் களிகூர்கிறது” (2 நேபி 4:15) என்று நேபி சொன்னபோது, அவன் இப்போது பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் வசனங்களைப்பற்றி பேசினான்.

இரட்சகரை நாடுங்கள்

பழைய ஏற்பாட்டைப் படிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கி வர முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவ்வாறு செய்ய இரட்சகரே நம்மை அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யூதர்களின் தலைவர்களிடம், “வேதவாக்கியங்கள்… என்னைக் குறித்து சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே” ( யோவான் 5:39 )என்று அவர் சொன்னபோது, பழைய ஏற்பாடு என நாம் அழைக்கும் எழுத்துக்களைப்பற்றி அவர் பேசினார். நீங்கள் வாசிப்பதில் இரட்சகரைக் கண்டுபிடிக்க, நீங்கள் பொறுமையாக சிந்தித்து ஆவிக்குரிய வழிகாட்டுதலைப் பெற வேண்டியிருக்கலாம். “நமக்கு ஒரு குமாரன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், … அவரது நாமம் சமாதான பிரபு என்னப்படும்” என ஏசாயா அறிவித்ததுபோல, (ஏசாயா 9:6) சில சமயங்களில் அவரைப்பற்றிய குறிப்புக்கள் மிக நேரிடையாகத் தோன்றுகிறது. மற்ற இடங்களில், இரட்சகர் மிகவும் நுட்பமாக, சின்னங்கள் மற்றும் ஒற்றுமைகள் மூலம் குறிப்பிடப்படுகிறார். உதாரணமாக, மிருக ஜீவன்களின் பலிகளைப்பற்றிய விவரிப்புகள் மூலம் ( லேவியராகமம் 1: 3–4 பார்க்கவும்) அல்லது பஞ்சத்திலிருந்து யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்து காப்பாற்றிய விவரத்தின் மூலம்.

நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது இரட்சகர் மீது அதிக விசுவாசத்தை நாடினால், நீங்கள் அதைக் காண்பீர்கள். ஒருவேளை இது இந்த ஆண்டு உங்கள் படிப்பின் நோக்கமாக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவுடன் உங்களை நெருக்கமாக கொண்டுவரும் பாகங்கள், கதைகள் மற்றும் தீர்க்கதரிசனங்களைக் கண்டுபிடித்து கவனம் செலுத்த பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துமாறு ஜெபியுங்கள்.

பூர்வகால தீர்க்கதரிசியின் எழுத்து

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி–ஜூடித் ஏ. மெர்

தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டு

பழைய ஏற்பாடு மனுக்குலத்தின் முழுமையான மற்றும் துல்லியமான வரலாற்றை கொடுக்கிறது என்று எதிர்பார்க்க வேண்டாம். முதன்மை எழுத்தாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் உருவாக்க முயற்சிப்பது அதுவல்ல. தேவனைப்பற்றியும் அவருடைய பிள்ளைகளுக்கான அவருடைய திட்டத்தைப்பற்றியும், அவருடைய உடன்படிக்கை ஜனமாக இருப்பதன் அர்த்தம் மற்றும் நம்முடைய உடன்படிக்கைகளுக்கு ஏற்ப நாம் வாழாதபோது மீட்பை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப்பற்றியும், ஏதேனும் ஒன்றைக் கற்பிப்பதே அவர்களின் பெரிய அக்கறை. சில சமயங்களில் வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் புரிந்துகொண்டபடியே தொடர்புபடுத்துவதன் மூலம் பெரிய தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையின் கதைகள் உட்பட ஒப்பிட்டு அதைச் செய்தார்கள். யோசுவா, நியாயாதிபதிகள் மற்றும் 1 மற்றும் 2 இராஜாக்கள் போன்ற புத்தகங்களைப் போலவே ஆதியாகமமும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் மற்ற பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் வரலாற்று ரீதியாக எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கவிதை, இலக்கியம் போன்ற கலைப் படைப்புகள் மூலம் கற்பித்தனர். சங்கீதங்களும் நீதிமொழிகளும் இந்த வகைக்கு பொருந்துகின்றன. ஏசாயா முதல் மல்கியா வரை தீர்க்கதரிசிகளின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் உள்ளன, அவர்கள் தேவனுடைய வார்த்தையை பண்டைய இஸ்ரவேலிடம் பேசினார்கள், வேதாகமத்தின் அதிசயம் மூலம் இன்றும் நம்மிடம் பேசுகிறார்கள்.

இந்த தீர்க்கதரிசிகள், கவிஞர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வார்த்தைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள மக்களால் படிக்கப்படும் என்று அறிந்தனரா? நமக்குத் தெரியாது. ஆனால் இதுதான் நடந்தது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். நாடுகள் உயர்ந்தன, வீழ்ந்தன, நகரங்கள் கைப்பற்றப்பட்டன, ராஜாக்கள் வாழ்ந்து இறந்தார்கள்; ஆனால் பழைய ஏற்பாடு தலைமுறை தலைமுறையாக, எழுத்தாளர் முதல் எழுத்தாளர் வரை, மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்ப்பு வரை அனைத்தையும் விஞ்சியது. நிச்சயமாக சில விஷயங்கள் காணாமற்போயின அல்லது மாற்றியமைக்கப்பட்டன, ஆனாலும் எப்படியாவது அதிசயமானவை பாதுகாக்கப்பட்டன.1

இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டை நீங்கள் வாசிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை. தேவன் இந்த பண்டைய எழுத்துக்களைப் பாதுகாத்திருக்கலாம், ஏனென்றால் அவர் உங்களையும் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். இந்த வார்த்தைகளில் அவர் உங்களுக்காக ஒரு ஆவிக்குரிய செய்தியை ஆயத்தப்படுத்தியிருக்கலாம், அது உங்களை அவரிடம் நெருங்கி வந்து அவருடைய திட்டத்திலும் அவருடைய அன்பான குமாரனிடத்திலும் உங்கள் விசுவாசத்தை வளர்க்கும். ஒருவேளை உங்களுக்குத் தெரிந்த ஒருவரை ஆசீர்வதிக்கும் ஒரு பாகத்துக்கு அல்லது ஒரு உள்ளுணர்வுக்கு, ஒரு நண்பர், குடும்ப அங்கத்தினர் அல்லது சக பரிசுத்தவான் ஆகியோருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய செய்திக்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார். அநேக சாத்தியங்கள் உள்ளன. அதைப்பற்றி சிந்திப்பது உற்சாகமில்லையா?

பழைய ஏற்பாட்டு புத்தகங்கள்

பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான கிறிஸ்தவ பதிப்புகளில், புத்தகங்கள் முதலில் ஒரு தொகுப்பில் தொகுக்கப்பட்டபோது அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டன என்பதிலிருந்து வித்தியாசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எபிரேய வேதாகமம், புத்தகங்களை நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் எழுத்துக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவ வேதாகமங்கள் புத்தகங்களை நான்கு பிரிவுகளாக ஒழுங்குபடுத்துகின்றன: நியாயப்பிரமாணம் (ஆதியாகமம்-உபாகமம்), வரலாறு (யோசுவா-எஸ்தர்), கவிதை புத்தகங்கள் (யோபு-சாலொமோனின் பாடல்கள் ), மற்றும் தீர்க்கதரிசிகள் (ஏசாயா-மல்கியா).

இந்த பிரிவுகள் ஏன் முக்கியமானவையாய் இருக்கின்றன? ஏனென்றால், நீங்கள் படிப்பது என்ன வகையான புத்தகம் என அறிந்துகொள்வது எப்படி அதைப் படிப்பதென்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

“நியாயப்பிரமாணம்” அல்லது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று இதோ. மோசேக்கு உரிமைப்பட்ட இந்த புத்தகங்கள், காலப்போக்கில் ஏராளமான எழுத்தாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களின் கைகளில் கடந்து சென்றிருக்கலாம். இருப்பினும், மோசேயின் புத்தகங்கள் தேவனின் உணர்த்தப்பட்ட வார்த்தையாகும், அவை மனிதர்களின் மூலம் கடத்தப்பட்ட தேவனின் எந்த வேலையும் போலவே இருந்தாலும், அவை மனித குறைபாடுகளுக்கு உட்பட்டவை (மோசே 1:41; விசுவாசப் பிரமாணங்கள் 1:8 பார்க்கவும்). அவன் தொகுக்க உதவிய பரிசுத்த மார்மன் பதிவைக் குறிப்பிடும் மரோனியின் வார்த்தைகள் இங்கே உதவியாக இருக்கும்: “குறைபாடுகள் இருந்தால் அவை மனிதர்களின் தவறுகள்; ஆகையால், தேவனுடைய காரியங்களைக் கண்டிக்காதீர்கள்” (மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்). வேறு வார்த்தைகளில் எனில், வேதப் புத்தகம் தேவனின் வார்த்தையாக இருக்க மனித பிழையிலிருந்து விடுபட வேண்டியதில்லை.

குறிப்பு

  1. தலைவர் எம். ரசல் பல்லார்ட் கூறினார்: “தற்செயலாகவோ அல்லது சந்தர்ப்ப வசமாகவோ இன்று நம்மிடம் வேதாகமம் இல்லை. நீதியுள்ள நபர்கள் அவர்கள் பார்த்த புனிதமான விஷயங்களையும் அவர்கள் கேட்ட மற்றும் பேசிய உணர்த்தப்பட்ட வார்த்தைகளையும் பதிவு செய்ய ஆவியால் தூண்டப்பட்டனர். இந்த பதிவேடுகளை பாதுகாக்கவும் பத்திரப்படுத்தவும் அர்ப்பணிப்புள்ள மற்ற ஜனங்கள் தூண்டப்பட்டனர்” (“The Miracle of the Holy Bible,” Liahona, May 2007, 80).