சுற்றிலும் பார்க்காதீர், மேலே பாருங்கள்!
பிறர் கிறிஸ்துவண்டை வர அழைப்பதுவே நமது நோக்கம், கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பதால் நாம் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
“பிறரைக் கிறிஸ்வண்டை வர அழைப்பதே” எனது நோக்கமாகும்.1 உங்கள் நோக்கமும் அதுவே. இயேசு கிறிஸ்துவைப் பார்த்து இந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற முடியும்.
நான் 16 வயதாயிருந்தபோது என் பெற்றோருடன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டேன். 14 வயதாயிருந்த எனது தம்பி க்யூங் ஹ்வான் எனது மாமா யங் ஜிக் லீ மூலம் சபையில் சேர்ந்தான். தனது சபைக்கு அவன் எங்களை அழைத்தான். எங்கள் குடும்பத்தின் 10 பேரில் ஒவ்வொருவரும் வெவ்வேறு சபையைச் சேர்ந்தவர்கள், ஆகவே சத்தியத்தை அறிய நாங்கள் மகிழ்ந்தோம், நாங்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நாங்கள் கண்ட சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினோம்.
சத்தியத்தைக் கற்கவும் பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு மத்தியில் என் அப்பா மிகவும் ஆர்வமாயிருந்தார். அவர் அதிகாலையில் எழுந்து தினமும் இரண்டு மணிநேரம் வேதங்களைப் படிப்பார். வேலையை முடித்த பிறகு எங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும், அக்கம்பக்கத்தினரையும் சந்திக்க ஊழியக்காரர்களுடன் அநேகமாக ஒவ்வொரு நாளும் செல்வார். நாங்கள் ஞானஸ்நானம் பெற்ற ஏழு மாதங்களுக்குப் பிறகு எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களின் 23 பேர் சபை அங்கத்தினர்களானார்கள். தொடர்ந்த வருடத்தில் எனது அப்பாவின் அங்கத்தினர் ஊழியப்பணி மூலம் 130 பேர் ஞானஸ்நானம் பெற்றதைப் பார்க்கும் அதிசயம் அதைத் தொடர்ந்து வந்தது.
அவருக்கு குடும்ப வரலாறும் முக்கியமாக இருந்தது, எங்கள் முன்னோரின் எட்டு தலைமுறைகளை முடித்தார். எனது 14 வயது தம்பியால் தொடங்கப்பட்டதிலிருந்து எங்கள் குடும்ப மனமாற்றத்தின் கனி உயிரோடிருப்பவர்கள் மட்டுமின்றி மரித்தோரிடையேயும் எண்ணற்ற வழிகளில் அதிகரித்திருக்கிறது. எனது அப்பா மற்றும் பிறரது வேலையிலிருந்து தொடங்கி, இப்போது எங்களது குடும்ப மரம் 32 தலைமுறைகளை அடக்கியுள்ளது. அநேக கிளைகளுக்கு இப்போது நாங்கள் ஆலய பணியை நிறைவு செய்திருக்கிறோம். எங்களது முன்னோர்களையும் எங்கள் சந்ததியையும் இணைத்ததால் இன்று நான் வியந்து மகிழ்கிறேன்.
தலைவர் கார்டன் பி, ஹிங்க்லி கொலம்பஸ் ஓஹையோ ஆலயத்தில் அப்படிப்பட்ட அனுபவத்தைப் பதிவு செய்தார்:
“நான் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா வாழ்க்கைகளை நினைத்தபோது, நான் என் மகள், அவளது பிள்ளைகள், என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளையும் நினைத்தேன். எனக்கு முன்பு மூன்றும், எனக்குப் பின்பு மூன்றும் ஆக ஏழு தலைமுறைகளுக்கு மத்தியில் நான் நிற்பதை திடீரென உணர்ந்தேன்.
“எனது முன்னோரிலிருந்து எனக்குப் பின்னால் வரவிருக்கிற தலைமுறைகள் வரை நான் சுதந்திரமாகப் பெற்றிருந்த நான் கடத்தவிருந்த கடுமையான எனது கடமை உணர்ச்சி அந்த பரிசுத்த வீட்டில் என் மனதினூடே கடந்து சென்றது.”2
நாம் அனைவரும் ஒரு நித்திய குடும்பத்தின் மத்தியில் இருக்கிறோம். நேர்மறையான அல்லது எதிர்மறையான வழிகளில் நிகழக்கூடிய முக்கிய மாற்றங்களுக்கு நமது பங்கு திருப்பு முனையாக இருக்க முடியும். தலைவர் ஹிங்க்லி தொடர்ந்து சொன்னார், உங்கள் தலைமுறைச் சங்கிலியில் ஒரு பலவீனமான இணைப்பாக நீங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதியாதீர்கள்.3 சுவிசேஷத்தில் உங்கள் விசுவாசம் உங்கள் குடும்பத்தை பலப்படுத்தும். நமது நித்திய குடும்பத்தில் நாம் பலமான இணைப்பாக இருப்பதை நாம் எப்படி உறுதி செய்ய முடியும்
எனது ஞானஸ்நானத்துக்கு சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், சபையில் சிலர் ஒருவரையொருவர் குறைசொல்வதைக் கேட்டேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் வீட்டுக்குச் சென்று என் அப்பாவிடம் இனிமேல் நான் சபைக்குச் செல்லக்கூடாதா எனக் கேட்டேன். பிறரை அப்படி அங்கத்தினர்கள் குறைகூறுவதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. கேட்ட பிறகு, சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது, அது பரிபூரணமானது, ஆனால் இன்னும் அங்கத்தினர்கள் அப்படியில்லை, அவரும் நானும் கூட, என என் அப்பா, எனக்குப் போதித்தார். அவர் உறுதியாகச் சொன்னார், “உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களினிமித்தம் உன் விசுவாசத்தை இழக்காதே, ஆனால் இயேசு கிறிஸ்துவுடன் ஒரு பலமான உறவை உருவாக்கு. சுற்றிலும் பார்க்காதே, மேலே பார்!”
இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார், வாழ்க்கையில் சவால்களை நான் எதிர்கொள்ளும்போதெல்லாம் என் அப்பாவின் ஞானமிக்க புத்திமதி என்னை பலப்படுத்துகிறது. “எல்லா சிந்தனையிலும் என்னை நோக்கிப் பார் சந்தேகப்படாதே, பயப்படாதே”4 என்ற இந்த வார்த்தைகளில் உள்ளது போல கிறிஸ்துவின் போதனைகளை எப்படிப் பயன்படுத்துவது என அவர் எனக்குப் போதித்தார்.
நான் வாஷிங்டன் சியாட்டில் ஊழியத்தில் தலைமையேற்றிருந்தபோது, அந்த ஆண்டில் பல நாட்கள் மழை பெய்தது. ஆயினும் எங்கள் ஊழியக்காரர்கள் வெளியே சென்று மழையில் ஊழியம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நான் அவர்களுக்குச் சொல்வேன், “மழையில் செல்லுங்கள், வானத்தைப் பாருங்கள், வாயைத் திறவுங்கள், அதைக் குடியுங்கள்! நீங்கள் மேலே பார்க்கும்போது பயமில்லாமல் ஒவ்வொருவரிடமும் வாயைத் திறக்க பலப்படுத்தப்படுவீர்கள்.” அவர்களது ஊழியத்துக்குப் பிறகும் கூட அவர்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது, மேலே பார்க்க இது ஒரு அடையாளப் பாடம். மாசு படிந்த பகுதிகளில் இதை முயற்சி செய்யாதீர்கள்.
சியாட்டில் ஊழியத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, பியானோ வாசிக்கிற என் மூத்த மகன் சன்பீமிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் ஒரு சர்வதேச போட்டியில் ஜெயித்ததால் நியூயார்க்கின் கார்னகி அரங்கில் வாசிக்கும் சிலாக்கியம் பெறுவதாக சொன்னான். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம், அவனுக்காக உணர்ச்சி வசப்பட்டோம். எனினும் அன்று மாலை நன்றியுணர்வுடன் ஜெபித்தபோது, அவனது நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்க முடியாது என அறிந்து பரலோக பிதாவிடம் என் மனைவி இப்படிச் சொன்னாள், “பரலோக பிதாவே சன்பீமுக்கு நீர் கொடுத்த ஆசீர்வாதத்துக்காக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். அப்படியே அங்கு செல்ல முடியாததற்காக நான் வருந்துகிறேன். இந்த ஆசீர்வாதத்தை இந்த ஊழியத்துக்கு முன்போ அல்லது பின்போ கொடுத்திருந்தால் நான் போயிருக்க முடியும். நான் புகார் சொல்லவில்லை, ஆனால் சிறிது வருத்தப்படுகிறேன்.”
அவள் இந்த ஜெபத்தை முடித்த உடனே அவள் ஒரு தெளிவான குரலைக்கேட்டாள். “நீ போக முடியாததால் உனது மகனுக்கு அந்த சிலாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. நீ அதை மாற்றிக்கொள்வாயா?”
எனது மனைவி ஆச்சரியமடைந்தாள். கர்த்தரின் இராஜ்யத்தில் தங்களின் பெற்றோரின் விசுவாசமிக்க பணி மூலம் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என அவள் அறிந்தாள், ஆனால் அவ்வளவு தெளிவாக அவளது பங்கை அவள் செய்தது அதுதான் முதல் முறை.. அவள் அவருக்கு உடனே பதிலளித்தாள். “இல்லை, இல்லை, போகாமலிருப்பது எனக்கு சரிதான். அவன் அந்த மரியாதையைப் பெறட்டும்.”
அன்பு சகோதர சகோதரிகளே, நாம் முதலில் அசௌகரியத்தையும், இழப்பையும், பாரங்களையும், அல்லது தனிமையையும் பார்ப்பதால், நமது உலகப்பிரகார கண்களால் சுற்றிலும் பார்க்கும்போது, பரலோக பிதாவின் அன்பை நாம் அடையாளம் காண்பது எளிதல்ல. மாறாக நாம் மேலே பார்க்கும்போது, தூரத்திலுள்ள ஆசீர்வாதங்களையும் நாம் பார்க்க முடியும். கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறார், “தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் நாம் பெறும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதாலேயே, அது ஆகும்.”5 தேவனின் எந்த விதமான சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சொல்கிறேன், உங்களுக்கு முன்னால் உள்ளவர்களுக்கும், உங்களுக்குப் பின்னுள்ள சந்ததிகளுக்கும் வல்லமை மிக்க ஆசீர்வாதங்களுக்கு நீங்கள் ஒரு உறுதியான இணைப்பு என்பதை அறியுங்கள்.
இன்று உடன்படிக்கையின் பாதையில் நமது குடும்ப அங்கத்தினர் பலர் விசுவாசமாக இருப்பதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆனால் நமக்கு அருகிலுள்ள காலியான இருக்கைகளை கற்பனை செய்ய கவலைப்படுகிறேன். மூப்பர் எம். ரசல் பல்லார்ட் சொன்னார்: “நீங்கள் ஆர்வமற்றிருக்க தெரிந்து கொண்டால், அல்லது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபையை விட்டுப் போனால் எங்கே போவீர்கள்? என்ன செய்வீர்கள்? சபையாருடனும் கர்த்தரின் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களுடனும் நடக்காமலிருக்க தீர்மானிப்பது, இப்போது பார்க்க முடியாத நீண்ட நாள் தாக்கத்தை ஏற்படுத்தும்.”6 தலைவர் தாமஸ் எஸ். மான்சன் நம்மை ஊக்குவித்தார், “எளிதான தவறை விட கடினமான சரியானதைத் தெரிந்து கொள்வோமாக.”7
இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க ஒருபோதும் தாமதமாகவில்லை. அவரது கரங்கள் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கின்றன. நாம் தேவனின் நித்திய குடும்பமாக இருக்கும்படியாக, கிறிஸ்துவைப் பின்பற்ற நமக்கு முன்னும் பின்னும் நம்மைச் சார்ந்துள்ள தலைமுறைகள் உள்ளன..
ஒரு பிணையத் தலைவராக என் அழைப்பிலிருந்து நான் விடுவிக்கப்பட்டபோது, என்னுடன் அதிக நேரம் செலவிடுவதைப்பற்றி என் மகன்கள் மிக மகிழ்ந்தனர். மூன்று வாரங்களுக்குப் பின்பு, நான் எழுபதின்மராக அழைக்கப்பட்டேன். முதலில் அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என நினைத்தேன், ஆனால் எனது இளைய மகனின் தாழ்மையான பதில், “அப்பா கவலைப்படாதீர்கள். நாம் ஒரு நித்திய குடும்பம்.” அது எவ்வளவு எளிய தெளிவான சத்தியம். நான் அநித்திய வாழ்க்கையை முதலில் சுற்றிலும் பார்த்தேன், ஆனால் என் மகன், சுற்றிலும் பார்க்காததால் மகிழ்ந்தான், நித்தியத்துக்கு நேராக கண்களை ஏறெடுத்து கர்த்தரின் நோக்கங்களைப் பார்த்தான்.
உங்கள் பெற்றோர் சுவிசேஷத்தை எதிர்த்தால், ஒரு சிறிய சபையில் நீங்கள் அங்கத்தினராக இருந்தால், உங்கள் துணைவர் அங்கத்தினராக இல்லாவிட்டால், திருமணம் செய்ய நன்கு முயன்றாலும் இன்னும் நீங்கள் தனிமையாயிருக்கும்போது, ஒரு பிள்ளை வழிதவறிப்போனபோது, ஒரு ஒற்றைப் பெற்றோராக உங்களை நீங்கள் காணும்போது, சரீரபிரகாரமாக அல்லது உணர்வுபூர்வமாக சவால் இருக்கும்போதும், ஒரு பேரழிவிலும், மேலும் அதைப் போன்றவற்றாலும் நீங்கள் பாதிக்கப்படும்போதும், மேலே நோக்கிப் பார்ப்பது எளிதல்ல. அந்தக் கடினமான நேரங்களில் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். பெலனுக்காகவும், சீராயிருக்கவும் குணப்படவும் கிறிஸ்துவைப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை மூலம், “உங்கள் நன்மைக்கேதுவாக அனைத்தும் ஒன்றாக கிரியை செய்யும்.”8
அவர் நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து என நான் சாட்சியளிக்கிறேன். நாம் நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியாகிய தலைவர் தாமஸ் எஸ். மான்சனைப் பின்பற்றும்போது, இயேசு கிறிஸ்துவைப் பார்க்கிறோம். தினமும் நாம் ஜெபித்து, வேதம் வாசிக்கும்போது, ஒவ்வொரு வாரமும் திருவிருந்தில் உண்மையாகப் பங்கேற்கும்போது, எப்போதும் அவரைப் பார்க்க நாம் பெலன் பெறுகிறோம். இந்த சபையின் அங்கத்தினராயிருப்பதற்காகவும் நித்திய குடும்பத்தின் பகுதியாக இருப்பதற்காகவும் மகிழ்கிறேன். பிறரோடு சுவிசேஷத்தைப் பகிர விரும்புகிறேன். கிறிஸ்துவிடம் வர பிறரை அழைப்பது நமது நோக்கம், இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து இந்நோக்கத்தை நாம் நிறைவேற்ற முடியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவை குறித்து நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.