2010–2019
வழியை ஆயத்தப்படுத்துங்கள்
ஏப்ரல் 2017


12:14

வழியை ஆயத்தப்படுத்துங்கள்

அவர்கள் வித்தியாசமான ஊழியங்களும் அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இரட்சிப்பின் பணியில் ஆரோனிய ஆசாரியத்துவமும், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும் பிரிக்க முடியாத பங்குதாரர்கள்.

நான் 30 வயதாயிருந்தபோது, பிரான்சில் ஒரு சில்லரை விற்பனை நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினேன். ஒருநாள் மற்றொரு விசுவாசத்தைச் சேர்ந்த நல்ல மனிதரான கம்பெனியின் தலைவர், அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்தார். அவரது கேள்வி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. “நீ உங்கள் சபையில் ஒரு ஆசாரியர் என இப்போதுதான் அறிந்தேன். அது உண்மையா?”

நான் பதிலளித்தேன், “ஆம், அது சரி. நான் ஆசாரியத்துவம் தரித்திருக்கிறேன்.”

எனது பதிலால் சந்தேகப்பட்டவராய், அவர் மேலும் கேட்டார், “ஆனால் நீ இறையியல் கல்லூரியில் படித்தாயா?”

“உண்மையாகவே,” நான் பதிலளித்தேன், “14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடையே நான் வேதபாடங்களை தினமும் கற்றேன்!” அவர் கிட்டத்தட்ட அவரது நாற்காலியிலிருந்து விழுந்தார்.

நான் ஆச்சரியப்படத்தக்க வகையில் பல வாரங்களுக்குப் பின்னர் அந்நிறுவனத்தின் ஒரு கம்பெனியில், நிர்வாக மேலாளர் பதவி கொடுக்க அவரது அலுவலகத்துக்கு அழைத்தார். நான் அதிர்ச்சியடைந்து, அப்படிப்பட்ட முக்கிய பொறுப்பு வகிக்க நான் மிகவும் வயது குறைந்தவன், அனுபவமில்லாதவன், என என் கருத்தைச் சொன்னேன். ஒரு தயாளமிக்க புன்னகையுடன் அவர் சொன்னார், “அது உண்மையாக இருக்கலாம், ஆனால் அது பொருட்டல்ல. நான் உன் கொள்கைகளை அறிவேன், நீ உன் சபையில் என்ன கற்றாய் எனவும் அறிவேன். எனக்கு நீ வேண்டும்.”

சபையில் நான் கற்றதைப் பற்றி சரியாகச் சொன்னார். அதைத் தொடர்ந்த வருஷங்கள் சவால் நிறைந்தவையாயிருந்தன. நான் வாலிபனாக இருந்த நேரத்திலிருந்து சபையில் சேவை செய்ததால் பெற்ற அனுபவம் இல்லாமல், நான் வெற்றி பெற்றிருக்க முடியுமா, என எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு சிறிய கிளையில் வளரும் ஆசீர்வாதம் பெற்றிருந்தேன். எங்கள் எண்ணிக்கை சிறியதாக இருந்ததினால், கிளையின் எல்லா விதமானவற்றிலும் ஆர்வமாக பங்கேற்க வாலிபர்கள் அழைக்கப்பட்டார்கள். நான் மிக சுறுசுறுப்பான பயனுள்ளவனாக இருப்பதை விரும்பினேன். ஞாயிற்றுக் கிழமைகளில் திருவிருந்து மேஜையில் கடமையாற்றினேன், ஆசாரியத்துவக் குழுமத்தில் சேவை செய்தேன். வாரத்தின்போது, நாங்கள் அங்கத்தினர்களுடன் வீட்டுப் போதகம் செய்து, வியாதியஸ்தருக்கும் உபத்திரவப்பட்டோருக்கும் ஆறுதலளித்து, தேவைப்பட்டோருக்கு உதவி செய்ய என் அப்பாவுடனும், வயது வந்த ஆசாரித்துவம் தரித்தோருடனும் நான் அடிக்கடி சென்றேன். சேவை செய்யவோ வழிநடத்தவோ நான் மிகவும் இளைஞன் என யாரும் நினைத்ததாகத் தோன்றவில்லை. எனக்கு யாவும் சாதாரணமாயும் இயற்கையாயும் தோன்றியது.

அந்த பதின்ம வயது ஆண்டுகளில் நான் செய்த சேவை, என் சாட்சியை வளர்க்கவும் என் வாழ்க்கையை சுவிசேஷத்தில் நங்கூரமிடவும் எனக்கு உதவியது. பிறரின் வாழ்க்கையை ஆசீர்வதிக்க ஒப்புக்கொடுத்துள்ள நல்ல மனதுருக்கமுள்ள மனுஷர்களால் நான் சூழப்பட்டிருந்தேன். நான் அவர்களைப் போலிருக்க விரும்பினேன். அவர்களோடு சேவை செய்ததில் அந்நேரத்தில் நான் உணர்ந்தவற்றை விட சபையிலும் உலகத்திலும் நான் தலைவனாக இருக்கக் கற்றேன்.

இன்றிரவு ஆசாரியத்துவம் தரித்த அநேக இளைஞர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். நான் இந்த பார்வையாளர்களைப் பார்க்கும்போது, உங்களில் அநேகர் முதிர்ந்த மனுஷர்களுடன் அமர்ந்திருக்கிறீர்கள். ஒருவேளை உங்கள் அப்பாக்கள், உங்கள் மூத்த சகோதரர்கள், உங்கள் ஆசாரியத்துவத் தலைவர்கள் அனைவரும் ஆசாரியத்துவம் தரித்தவர்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள், முக்கியமாக உங்களோடிருக்கவே அவர்கள் இன்றிரவில் இங்கே இருக்கிறார்கள்.

இத்தலைமுறைகளின் கூடுகை தேவனின் இரண்டு ஆசாரியத்துவங்களிடையே இருக்கிற ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், ஒரு அற்புதமான பார்வையைக் கொடுக்கிறது. அவர்கள் வெவ்வேறு ஊழியங்களுடனும், அதிகாரங்களுடனும் பொறுப்பளிக்கப்பட்டிருந்தாலும், ஆரோனிய ஆசாரியத்துவமும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும், இரட்சிப்பின் பணியில் பிரிக்க முடியாதவர்கள். அவர்கள் கையோடு கைகோர்த்துச் செல்கிறார்கள், ஒருவருக்கொருவர் அதிக தேவையுடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்விரண்டு ஆசாரியத்துவங்களிடையேயும் இருக்கிற நெருக்கமான உறவின் பரிபூரண மாதிரி, இயேசுவுக்கும் யோவான் ஸநானனுக்கும் இடையிலான உறவில் காணப்படுகிறது. ஒருவர் இயேசு இல்லாமல் யோவான் ஸ்நானனை கற்பனை செய்ய முயடியுமா? யோவானால் நிறைவேற்றப்பட்ட ஆயத்தப்பணி இல்லாமல் இயேசுவின் தெய்வீகப்பணி எப்படிப்பட்டதாயிருந்திருக்கும்?

எப்போதும் இருந்திருக்கிற ஒரு மகத்தான ஊழியம் யோவான் ஸ்நானனுக்குக் கொடுக்கப்பட்டது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவது,” 1 அவருக்கு தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பது, அவரை வரவேற்க ஒரு ஜனத்தை ஆயத்தம் செய்வது. இந்த “நீதியும் பரிசுத்தமுமான மனுஷன்,” 2 குறைந்த ஆசீர்வாதத்துக்கு நியமிக்கப்பட்டு  தனது ஊழியம் மற்றும் அதிகாரத்தின் வரையறைகளையும் முக்கியத்துவத்தையும் பரிபூரணமாக அறிந்திருந்தான்.

அவன் சொல்வதைக் கேட்கவும், ஞானஸ்நானம் பெறவும், ஜனங்கள் அவனிடம் குவிந்தனர். ஒரு தேவ மனுஷனாக அவனது உரிமையில் மதிக்கப்பட்டு பயபக்தி செய்யப்பட்டான். ஆனால் இயேசு வந்தபோது, யோவான் தாழ்மையாய் தன்னைவிட உயர்ந்தவரை தடுத்து, அறிவித்தான், “நான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன், நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் இருக்கிறார், அவர் எனக்குப் பின் வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல.” 3

உயர் ஆசாரியத்துவம் தரித்திருந்த, பிதாவின் ஒரேபேறான இயேசு கிறிஸ்து அவரது பங்காக, தாழ்மையாக யோவானின் அதிகாரத்தை அங்கீகரித்தார். அவனைப் பற்றி இரட்சகர் சொன்னார், “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில், யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும், பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை.” 4

இரண்டு ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கு இடையிலான உறவுகள் இயேசுவாலும் யோவான் ஸ்நானனாலும் ஏற்படுத்தப்பட்ட மாதிரியால் உணர்த்தப்பட்டிருந்தால் நமது ஆசாரியத்துவக் குழுமங்களில் என்ன நடக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள். ஆரோனிய ஆசாரியத்துவத்தின் எனது இளம் சகோதர சகோதரிகளே, யோவானுடையதைப்போல, மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தின் மாபெரும் பணிக்கு, வழியை ஆயத்தம் செய்வதே 5 உங்கள் பங்கு. நீங்கள் இதை பல்வேறு வழிகளில் செய்கிறீர்கள். ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் நியமங்களை நீங்கள் நிர்வகிக்கிறீர்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாலும், “ஒவ்வொரு அங்கத்தினர் வீட்டுக்குச் செல்வதாலும்,” 6 “சபையைக் கண்காணிப்பதாலும்,” 7 கர்த்தருக்காக ஜனத்தை ஆயத்தப்படுத்த நீங்கள் உதவுகிறீர்கள். உபவாசக் காணிக்கைகள் சேகரித்து, ஏழைகளுக்கும் தேவையிலிருப்போருக்கும் உதவி செய்கிறீர்கள். சபைக் கூடுமிடங்களையும் பிற உலகப்பிரகார ஆதாரங்களையும் பராமரிப்பதில் நீங்கள் பங்கேற்கிறீர்கள். உங்கள் பங்கு முக்கியமானது, தேவையானது, பரிசுத்தமானது.

என் வயது வந்த சகோதரரே, நீங்கள் அப்பாக்களாகவும், ஆயர்களாகவும், வாலிபர் ஆலோசகர்களாகவும் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்களாக இருந்தாலும் கூட, நீங்கள் குறைந்த ஆசாரியத்துவம் தரித்தவர்களிடம் திரும்பி, உங்களோடு பிரயாசப்பட அவர்களை அழைத்து, நீங்கள் இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்றலாம். அவர் சொன்னார், “ஆகவே குறைந்த ஆசாரியத்துவத்தில் நியமிக்கப்பட்டோரை, உங்களுடன் கூட்டிச் சென்று, சந்திப்புகளை ஒழுங்கு செய்யவும், வழியை ஆயத்தம் செய்யவும், நீங்கள் நிறைவேற்ற முடியாத சந்திப்புகளை செய்யவும் அவர்களை அனுப்புங்கள்.” 8

“வழியை ஆயத்தம்பண்ண,”   நீங்கள் உங்கள் இளம் சகோதரர்களை அழைக்கும்போது, அவர்கள் தரித்திருக்கிற பரிசுத்த அதிகாரத்தை நீங்கள் இனம் கண்டு கௌரவிக்கிறீர்கள். அப்படிச் செய்வதால், அவர்கள் உயர் ஆசாரியத்துவம் பெற்று பிரயோகிக்கிற நாளுக்காக ஆயத்தம் செய்யும்போது, அவர்கள் தங்கள் சொந்த வழியை ஆயத்தம் செய்ய நீங்கள் உதவுகிறீர்கள்.

ஒரு அமைதியான சிந்திக்கிற, புத்திசாலியான இளம் ஆசாரியனாகிய அலெக்ஸின் கதையைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். ஒருநாள் அலெக்ஸின் ஆயர் அவன் ஒரு வகுப்பறையில் தனியாக பெரும் துயரத்தில் இருக்கக் கண்டார். அங்கதினரல்லாத தகப்பனை விட்டுவிட்டு, சபைக்கு வருவது எவ்வளவு வேதனைமிக்க கஷ்டமான காரியம் என அந்த இளைஞன் விளக்கினான். பின் அவன் சபையை விட்டு விலகுவது நல்லதாக இருக்கும் என கண்ணீருடன் சொன்னான்.

இந்த இளைஞன் மீது உண்மையான அக்கறையுடன் அலெக்ஸுக்கு உதவ உடனே தொகுதி ஆலோசனைக்குழுவை ஆயர் கூட்டினார். அவரது திட்டம் எளிதானது: அலெக்ஸ் ஆர்வமாக இருக்கவும், சுவிசேஷம் பற்றி இதயபூர்வ சாட்சியை அவன் விருத்திசெய்யவும் உதவ, “நல்ல மனுஷர்கள் அவனைச் சுற்றியிருக்க வேண்டும், அவன் செய்ய முக்கிய காரியங்களைக் கொடுக்க வேண்டும்.”

விரைவில் ஆசாரியத்துவ சகோதரர்களும், தொகுதி அங்கத்தினர்களும் அலெக்ஸைச் சுற்றிவந்து, தங்கள் பாசத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர். மிகுந்த விசுவாசமும் அன்பும் நிறைந்த மனுஷனாகிய பிரதான ஆசாரியர் குழுத்தலைவர், அவனது வீட்டுப் போதக தோழராக தேர்வு செய்யப்பட்டார். ஆயத்தின் அங்கத்தினர்கள் அவனைத் தங்கள் சிறகுகளுக்குள் எடுத்துக்கொண்டு, அவனைத் தங்கள் நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டார்கள்.

ஆயர் சொன்னார்: “அலெக்ஸை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டோம். அவன் திருமணங்களில் உதவி செய்தான், இறுதிச் சடங்குகளில் உதவினான். கல்லறை பிரதிஷ்டைகளில் எனக்கு உதவினான், பல புதிய அங்கத்தினர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், ஆரோனிய ஆசாரியத்துவ அலுவல்களுக்கு இளைஞர்களை நியமித்தான், இளைஞர் பாடங்கள் கற்பித்தான், ஊழியக்காரர்களுடன் சென்று போதித்தான், மாநாடுகளுக்கு கட்டிடத்தை திறந்து வைத்தான், மாநாடுகளுக்குப் பின் இரவில் தாமதமானாலும் கட்டிடத்தைப் பூட்டினான். பல சேவைகள் செய்தான், முதியோர் இல்லங்களுக்கு முதியோரைச் சந்திக்க என்னோடு வந்தான், திருவிருந்துக் கூட்டத்தில் பேசினான். நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளிலும் அவர்களது வீடுகளிலும் திருவிருந்து நிர்வகித்தான். ஒரு ஆயராக நான் சார்ந்திருக்கக் கூடிய மிகச் சிலரில் ஒருவனாக ஆனான்.”

அலெக்ஸும் அவனது ஆயரும்

சிறிது சிறிதாக அலெக்ஸ் மாறினான். கர்த்தரில் அவனது விசுவாசம் அதிகரித்தது. அவன் தன்னிலும் தான் தரித்திருந்த ஆசாரியத்துவ வல்லமையிலும் நம்பிக்கையை வளர்த்தான். ஆயர் முடித்தார், “நான் ஆயராக இருந்த சமயத்தில், என்னுடைய மிகப்பெரும் ஆசீர்வாதமாக இருந்தான், இருப்பான். அவனோடு தொடர்பு வைத்திருப்பது எவ்வளவு சிலாக்கியம். அவனது ஆசாரியத்துவ சேவையால் அதிக ஆயத்தத்துடன் ஊழியக்களத்துக்கு எந்த இளைஞனும் அவனைப்போல் சென்றதில்லை என மெய்யாகவே நான் நம்புகிறேன்.” 9

எனதன்பு ஆயர்களே, உங்கள் தொகுதியின் ஆயராக பணிக்கப்பட்ட உங்கள் நியமனத்தில், ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் ஆசாரியர் குழும தலைவராகவும், சேவை செய்ய உங்கள் பரிசுத்த அழைப்பையும் சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் சுமக்கிற கனத்த பாரங்களை நான் அறிவேன். ஆனால் இந்த இளைஞர்களுக்கான கடமையை உங்கள் உயர்ந்த பட்ச முன்னுரிமையாக ஆக்க வேண்டும். இந்தப் பொறுப்பில் உங்கள் பங்கை நீங்கள் உதாசீனம் செய்யவோ அல்லது பிறருக்கு ஒதுக்கவோ கூடாது.

உங்கள் தொகுதியிலுள்ள ஒவ்வொரு இளம் ஆசாரியத்துவம் தரித்தவர்களையும் பற்றி சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன். அவர்களில் ஒருவர் கூட ஒதுக்கப்படவோ பயனற்றவர்களாகவோ எண்ண விடப்படக் கூடாது. நீங்களும் பிற ஆசாரியத்துவ சகோதரர்களும் உதவி செய்யக்கூடிய இளைஞன் இருக்கிறானா. உங்களோடு சேவை செய்ய அவனை அழையுங்கள். சுவிசேஷத்தில் விசுவாசமும் அன்பும், ஆசாரியத்துவத்தைச் சிறப்பிப்பதால், விருத்திசெய்யப்பட முடியும்போது, நாம் அடிக்கடி நமது இளைஞர்களை பார்வையாளர்களாக வைத்திருக்க முயற்சி செய்கிறோம். இரட்சிப்பின் பணியில் ஆர்வமாக பங்கேற்பதால், அவர்கள் பரலோகத்துடன் இணைக்கப்பட்டு, அவர்கள் தங்கள் தெய்வீக திறமையை அறிவார்கள்.

ஆரோனிய ஆசாரியத்துவம் ஒரு வயதுக் குழுவோ, கற்பிக்கும் அல்லது பயிற்சி திட்டமோ, அல்லது சபையின் இளைஞர்களை குறிக்கிற ஒரு சொல்லோ என்பதைவிடக் கூட உயர்வானது. அதைத் தரித்திருக்கிற இளைஞர்களின் ஆத்துமாக்கள் மற்றும் அவர்கள் சேவை செய்வோரின் ஆத்துமாக்கள் உட்பட ஆத்துமாக்களை இரட்சிக்கும் மாபெரும் பணியில் பங்கேற்க இது வல்லமையும் அதிகாரமுமாகும். ஆரோனிய ஆசாரியத்துவத்தை அதற்கு உரிமைப்பட்ட இடத்தில், சிறந்த இடத்தில், சேவையின் இடத்தில், சபையின் அனைத்து இளைஞர்களின் ஆயத்தம் மற்றும் சாதிக்கும் இடமாகவும் வைப்போமாக.

என் அன்பு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ சகோதரர்களே, தேவனின் இரண்டு ஆசாரியத்துவங்களின் முக்கிய இணைப்பை பலப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன். உங்களுக்கு முன்பு இருக்கிற வழியை ஆயத்தம்பண்ண உங்கள் ஆரோனிய ஆசாரியத்துவ இளைஞர்களுக்கு பெலனளியுங்கள். தன்னம்பிக்கையோடு அவர்களிடம் சொல்லுங்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவை.” ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்த இளைஞர்களாகிய உங்களுக்கு, நீங்கள் உங்கள் மூத்த சகோதரர்களோடு சேவைசெய்யும்போது, உங்களுக்கு இப்படிச் சொல்லுகிற கர்த்தரின் குரலைக் கேட்பீர்கள், “நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், ஏனெனில் நீ பெரிய காரியங்களைச் செய்வாய். இதோ, எனக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்த, யோவானைப் போல நீ அனுப்பப்ட்டிருக்கிறாய்.” 10 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.