“ஜனுவரி 1–7: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு. மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)
“ஜனுவரி 1–7. மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)
ஜனுவரி 1–7: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு
மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்
நீங்கள் 1 நேபி அதிகாரம் 1, க்குள் புகுவதற்கு முன்னரே மார்மன் புஸ்தகம் ஒரு சாதாரண புஸ்தகம் இல்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். தூதர்களின் வருகை, ஒரு மலையருகில் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த ஒரு பழைய பதிவேடு, மற்றும் ஒரு இளைஞன் பதிவேடுகளை தேவ வல்லமையால் மொழிபெயர்த்தல் ஆகிய மற்ற எதையும் போல் அல்லாத முன்கதையை அதன் முன்னுரைப் பக்கங்கள், விவரிக்கின்றன. மார்மன் புஸ்தகம் பூர்வ அமெரிக்க நாகரிகங்களைப்பற்றிய ஒரு வரலாறு மட்டுமே அல்ல. இது “இயேசுவே கிறிஸ்து” (மார்மன் புத்தகத்தின் தலைப்புப் பக்கம்) என்று அனைவரையும் நம்ப வைக்க முயல்கிறது, மேலும் அது எவ்வாறு எழுதப்பட்டது, பாதுகாக்கப்பட்டது மற்றும் நமக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது என்பதை தேவனே வழிநடத்தினார். இந்த ஆண்டு, நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும்போது, அதைப்பற்றி ஜெபித்து, அதன் போதனைகளை பயன்படுத்தும்போது, இரட்சகரின் வல்லமையை உங்கள் வாழ்க்கைக்குள் வரவேற்பீர்கள். மேலும், மூன்று சாட்சிகள் தங்கள் சாட்சியத்தில் கூறியது போல், “இது [என்] கண்களுக்கு அற்புதமாக இருக்கிறது” என்று சொல்ல நீங்கள் தூண்டப்படலாம்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்
மார்மன் புஸ்தகம் வாசித்தல் இயேசு கிறிஸ்துவில் என் விசுவாசத்தை பலப்படுத்த முடியும்.
மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம் ஒரு தலைப்பை விட அதிகமாக வழங்குகிறது. பிற காரியங்களுக்கு மத்தியில், இந்த பரிசுத்தப் பதிவேட்டின் ஏராளமான நோக்கங்களை அது பட்டியலிடுகிறது. தலைப்புப் பக்கத்தில் இந்த நோக்கங்களைத் தேடுங்கள். நீங்கள் சிந்திக்கும்போது இது போன்ற கேள்விகள் உங்களுக்கு உதவும்: நாம் ஏன் மார்மன் புஸ்தகத்தைப் பெற்றிருக்கிறோம்? மார்மன் புஸ்தகம் மற்ற புத்தகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இந்த ஆண்டு மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதற்காக தனிப்பட்ட அல்லது குடும்பத் திட்டத்தை உருவாக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். எப்போது, எங்கே வாசிப்பீர்கள்? உங்கள் படிப்பிற்கு ஆவியை எப்படி அழைப்பீர்கள்? நீங்கள் படிக்கும் போது நீங்கள் தேடும் குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா? எடுத்துக்காட்டாக, தலைப்புப் பக்கத்தில் நீங்கள் கண்ட நோக்கங்களை நிறைவேற்றும் பத்திகளை நீங்கள் தேடலாம். இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வளர்க்கும் வசனங்களின் பட்டியலை நீங்கள் வைத்திருக்கலாம்.
2 நேபி 25:26; மோசியா 3:5–8; ஆல்மா 5:48; 7:10–13; ஏலமன் 5:12; 3 நேபி 9:13–18; 11:6–14; மரோனி 10:32–33ஐயும் பார்க்கவும்.
மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை; “மூன்று சாட்சிகளின் சாட்சியம்”; “எட்டு சாட்சிகளின் சாட்சியம்”
மார்மன் புஸ்தகத்துக்கு நானும் ஒரு சாட்சியாக முடியும்.
மூன்று சாட்சிகள் மற்றும் எட்டு சாட்சிகளைப் போல நீங்கள் தங்கத் தகடுகளைப் பார்க்கவில்லை என்றாலும் கூட மார்மன் புஸ்தகம் உண்மையானது என பரிசுத்த ஆவி உங்களுக்கு சாட்சி பகர முடியும். அவர்களின் வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது, அவர்களின் சாட்சியங்கள் உங்களை எவ்வாறு பலப்படுத்துகின்றன என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
இந்த சாட்சிகள் மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய தங்கள் சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்ட விதத்தில் உங்களுக்கு உணர்த்துவது எது? மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய உங்கள் சாட்சியத்தை, குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் சாட்சியத்தை நீங்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளலாம் என்று சிந்தியுங்கள். உதாரணமாக, மார்மன் புஸ்தகத்தைப் பற்றி முன்பு கேள்விப்படாத ஒரு நண்பருடன் நீங்கள் பேசுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அதைப் பற்றி அவரிடம் அல்லது அவளிடம் என்ன சொல்வீர்கள்? அதைப் படிக்க உங்கள் நண்பரை எப்படி உணர்த்த முயற்சிப்பீர்கள்? மார்மன் புஸ்தகத்திற்கான முன்னுரையை மதிப்பாய்வு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் விவரங்களை நீங்கள் அங்கு காணலாம். பின்வரும் காணொலிகளும் உங்களுக்கு ஆலோசனைகளைத் தரக்கூடும்:
மார்மன் புஸ்தகம்பற்றி நண்பருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களின் பட்டியலை உருவாக்கவும். மார்மன் புஸ்தக செயலியைப் பயன்படுத்தி மார்மன் புஸ்தகத்தைப் பகிர முயற்சிக்கவும்.
ரோனால்ட் ஏ. ராஸ்பாண்ட், “இத்தினம்,” லியஹோனா, Nov. 2022, 25–28 பார்க்கவும்.
“தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம்”
மார்மன் புஸ்தகம் வெளிவந்தது ஒரு அற்புதமாகும்.
மார்மன் புஸ்தகம் எங்கிருந்து வந்தது என்று உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டு வந்ததில் கர்த்தருடைய கரம் இருந்ததை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? ஜோசப் ஸ்மித்தின் சாட்சியத்தை நீங்கள் படிக்கும்போது, அவர் அதை எப்படி விவரித்தார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் வாசித்தவற்றின் அடிப்படையில், மார்மன் புஸ்தகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி தேவன் எப்படி உணருகிறார் என்று நினைக்கிறீர்கள்?
உலிசஸ் சோயர்ஸ், “மார்மன் புஸ்தகம் வெளிவருதல்,” லியஹோனா, மே 2020, 32–35.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்
மார்மன் புஸ்தகத்தை வாசித்தல் இயேசு கிறிஸ்துவில் எனக்கு விசுவாசம் வைக்க உதவுகிறது.
-
உங்கள் பிள்ளைகள் மார்மன் புஸ்தகத்தின் பிரதியை பார்க்கட்டும், வைத்திருக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடு என்ற துணைத் தலைப்பை சுட்டிக்காட்ட அவர்களுக்கு உதவுங்கள். தலைப்புப் பக்கத்தில், “எல்லா தேசங்களுக்கும் தம்மை வெளியரங்கமாக்குகிற இயேசுதான் கிறிஸ்துவாகிய நித்திய தேவன்” என்ற சொற்றொடரைக் கண்டறிய நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி மார்மன் புஸ்தகம் நமக்கு போதிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்தியது என்பதை சுருக்கமாக அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களுக்கு பிடித்த மார்மன் புஸ்தக கதைகள் பற்றியும் அவர்களிடம் கேட்கலாம்.
மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை
மார்மன் புஸ்தகமே நமது மதத்தின் முக்கியக்கல்.
-
மார்மன் புஸ்தகத்தின் முன்னுரையில் ஜோசப் ஸ்மித்தின் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இந்த வாரத்தின் நிகழ்ச்சி பக்கமும் கீழே உள்ள படமும் உதவும்: “மார்மன் புஸ்தகம் நமது மதத்தின் முக்கியக் கல்.” மேலே ஒரு முக்கியக்கல்லைக் கொண்டு ஒரு வளைவை கட்டுவது அல்லது வரைவது வேடிக்கையாக இருக்கலாம். முக்கியக்கல் அகற்றப்பட்டால் என்ன நேரிடலாம்? நம்மிடம் மார்மன் புஸ்தகம் இல்லையென்றால் என்ன நடக்கும்? மார்மன் புஸ்தகத்தின் சத்தியத்தை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் வேறு என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதை அறிய, முன்னுரையின் கடைசிப் பத்தியை நீங்கள் ஒன்றாகப் படிக்கலாம். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நமது விசுவாசத்துக்கு மார்மன் புஸ்தகத்தை நாம் எவ்வாறு மூலைக்கல்லாக்கலாம்?
“மூன்று சாட்சிகளின் சாட்சியம்”; “எட்டு சாட்சிகளின் சாட்சியம்”
மார்மன் புஸ்தகத்துக்கு நானும் ஒரு சாட்சியாக இருக்க முடியும்.
-
சாட்சியாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க, அவர்கள் காணாத, நீங்கள் பார்த்த ஒன்றை அவர்களுக்கு விவரிக்கலாம். பிறகு அவர்கள் உங்களுக்கும் அவ்வாறே செய்யட்டும். மார்மன் புஸ்தகம் மொழிபெயர்க்கப்பட்ட தங்கத் தகடுகளைப் பார்த்த 11 பேரைப் பற்றிய உரையாடலுக்கு இது வழிவகுக்கும். நீங்கள் சாட்சியங்களை ஒன்றாகப் படிக்கும்போது, இந்த சாட்சிகள் ஏன் தங்கள் சாட்சியங்களைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம். மார்மன் புஸ்தகத்தைப் பற்றி யாரிடம் சொல்ல விரும்புகிறோம்?
“தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம்”
மார்மன் புஸ்தகம் தேவனின் வல்லமையால் நமக்கு கொடுக்கப்பட்டது.
-
தேவன் நமக்கு மார்மன் புஸ்தகத்தை எப்படிக் கொடுத்தார் என்பதை உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவ, அவர்களுக்கு “ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசியின் சாட்சியம்” பகுதிகளை நீங்கள் வாசிக்கலாம். உங்கள் பிள்ளைகளும் கதையை சில முறை நடித்து மகிழ்வார்கள்.