தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம்
மார்மன் புஸ்தகம் வெளியே வருவதைப்பற்றிய தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சொந்த வார்த்தைகளாவன:
“[1823] செப்டம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் சாயங்காலத்தில் சர்வ வல்ல தேவனுக்கு ஜெபத்தையும் வேண்டுதலையும் ஏறெடுத்தேன்.
“இவ்விதமாக நான் தேவனை நோக்கி அழைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தபொழுது, என்னுடைய அறையில் ஒரு ஒளி தோன்றுவதைக் கண்டேன். நடுப்பகலின் வெளிச்சத்தைக் காட்டிலும் அதிகமாய் அந்த அறை ஒளியடையும்வரை அந்த ஒளி அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்போது ஒருவன் என் படுக்கையினருகே தோன்றினான். அவன் ஆகாயத்தில் நின்றுகொண்டிருந்தான், ஏனெனில் அவன் பாதங்கள் தரையைத் தொடவில்லை.
“மிகவும் நேர்த்தியான வெண்மையுடைய ஒரு தளர்ந்த அங்கியை அவன் தன்மேல் அணிந்திருந்தான். இந்த வெண்மையானது பூமியில் நான் என்றும் கண்டிராத ஒன்றாயிருந்தது. பூமியின் எந்தப் பொருளும் இவ்விதமான அதிக வெண்மையுடனும் பிரகாசத்துடனும் தோன்றும்படி செய்யப்படக்கூடும் என்றும் நான் நம்புகிறதில்லை. அவனுடைய கைகளும் மணிக்கட்டுக்கு கொஞ்சம் மேலே கரங்களும் வெறுமையாயிருந்தன. அதுபோலவே அவனுடைய பாதங்களும், கணுக்காலுக்கு கொஞ்சம் மேல் கால்களும் வெறுமையாயிருந்தன. அவனது தலையும் கழுத்தும் கூட வெறுமையாயிருந்தன. இந்த அங்கியைத் தவிர வேறு எந்த உடையையும் அவன் அணிந்திருக்கவில்லை என்பதை நான் காண முடிந்தது. அது திறந்திருந்தபடியால் நான் அவனது மார்பைப் பார்க்க முடிந்தது.
“அவனுடைய அங்கி மிகுந்த வெண்மையுடையதாயிருந்தது என்பது மட்டுமின்றி, அவனுடைய முழு சரீரமும் விவரிக்கவொண்ணா மகிமை பொருந்தியதாயும், அவனுடைய முகம் உண்மையாகவே மின்னலுக்கொப்பானதாகவும் காணப்பட்டது. அந்த அறையானது மிகவும் ஒளிமயமாயிருந்தது, ஆனால் அவனைச் சுற்றிலும் பிரகாசமாயிருந்ததைப்போல அது அவ்வளவு பிரகாசமாயிருக்கவில்லை. முதன் முறையாக அவனைப் பார்த்தவுடன் நான் பயப்பட்டேன், ஆனால் அந்தப் பயம் சீக்கிரம் என்னை விட்டகன்றது.
“அவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்து அவன் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட தூதுவன் என்றும், தன் பெயர் மரோனி என்றும், நான் செய்வதற்கு ஒரு வேலையை தேவன் வைத்திருக்கிறார் என்றும், மேலும் என் நாமம், எல்லா தேசத்தாருக்குள்ளும், இனத்தாருக்குள்ளும், பாஷைக்காரருக்குள்ளும், நன்மையாகவும் தீமையாகவும் கருதப்பட வேண்டுமென்றும், அல்லது எல்லா ஜனங்களுக்குள்ளும் நன்மையாகவும் தீமையாகவும் பேசப்படவேண்டுமென்றும் சொன்னான்.
“தங்கத்தகடுகளின் மீது எழுதப்பட்டு, இந்தக் கண்டத்தின் முந்தய குடிமக்களின் விவரத்தையும், அவர்கள் எழுந்த ஆதாரத்தையும் கொடுத்து ஒரு புஸ்தகம் புதைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். பூர்வீகக் குடிமக்களுக்கு இரட்சகரால் கொடுக்கப்பட்டு, நித்திய சுவிசேஷத்தின் முழுமையும் அதில் அடங்கியிருக்கிறது என்றும் சொன்னான்;
“மேலும் அங்கே வெள்ளியிலான வளைந்த சட்டத்தினுள் இரண்டு கற்கள் இருந்தன, மார் பதக்கத்துடன் கட்டப்பட்ட, தகடுகளுடனே புதைக்கப்பட்ட, இக்கற்கள் ஊரீம் மற்றும் தும்மீம் என அழைக்கப்பட்டன. இக்கற்களை வைத்திருந்து உபயோகப்படுத்துவோர் பூர்வ காலங்களில் அல்லது முற்காலத்தில் ‘ஞானதிருஷ்டிக்காரர்’ எனப்பட்டனர். இந்த புஸ்தகத்தை மொழிபெயர்க்க உதவியாக இருக்கும் நோக்கத்திற்காக தேவன் அவைகளை ஆயத்தப்படுத்தினார் என்றும் சொன்னான்.
“என்னிடத்தில் அவன் சொன்ன தகடுகளை நான் பெற்றுக்கொண்டபோது, அவைகளைப்பெற வேண்டிய காலம் இன்னும் நிறைவேறவில்லை என்பதால், நான் அவற்றையும், மார் கவசத்துடன் உள்ள ஊரீம், தும்மீம் ஆகியவற்றையும் ஒருவருக்கும் காண்பிக்கக்கூடாதென்றும், யாருக்கு அவற்றைக் காண்பிக்க வேண்டுமென்று நான் உத்தரவிடப்படுவேனோ, அவர்களுக்கு மட்டுமே காண்பிக்கவேண்டுமென்றும், அப்படி நான் மற்றொருவருக்குக் காண்பித்தால் நான் அழிக்கப்பட்டுப்போவேன் என்றும் அவன் மறுபடியும் என்னிடம் சொன்னான். இந்தத் தகடுகளைக் குறித்து அவன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அந்தத் தகடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை நான் பார்க்கும்படியாகவும், மறுபடியும் நான் அந்த இடத்திற்குச் சென்றபொழுது அந்த இடத்தை தெளிவாகவும் குறிப்பாகவும் அறிந்துகொள்ளும்படியாகவும் ஒரு காட்சி என் மனக்கண் முன் திறக்கப்பட்டது.
“இந்த உரையாடலுக்குப் பின்பு, உடனே அந்த அறையிலிருந்த ஒளி என்னோடு பேசிக்கொண்டிருந்தவனின் சரீரத்தைச் சுற்றி திரள்வதை நான் கண்டேன், அந்த அறையானது மறுபடியும் இருட்டாகும்வரை அந்த ஒளி அவனைச் சுற்றிலும் மட்டுமே தொடர்ந்து இருக்கும்படியானது. நான் அது இருந்தவண்ணமே அதை உடனே பார்த்தபொழுது பரலோகம்வரை நேராகத் திறக்கப்பட்ட ஒரு குழாயைப்போல, தான் முற்றிலும் மறையும் வரை அவன் உயர எழும்பினான். இந்த பரலோக ஒளி தோன்றுவதற்கு முன்பு இருந்ததைப்போலவே அந்த அறை விடப்பட்டது.
“இந்த காட்சியின் தனித்தன்மையைக் குறித்து நான் ஆழ்ந்த யோசனை பண்ணிக்கொண்டு படுத்திருந்தேன், மேலும் இந்த அசாதாரணமான தூதுவனால் எனக்குச் சொல்லப்பட்டவைகளைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன். நான் என் தியானத்தில் இருக்கும்பொழுது என்னுடைய அறையானது மறுபடியும் ஒளி பெறத்தொடங்கியதை நான் திடீரெனக் கண்டேன். அந்தக் கணப்பொழுதிலே முன்பு வந்ததைப்போலவே அதே பரலோக தூதுவன் என்னுடைய படுக்கையருகில் நிற்பதை நான் கண்டேன்.
“முதல் சந்திப்பில் என்னிடத்தில் கூறிய காரியங்களையே, யாதொரு வேறுபாடின்றி என்னிடம் அவன் மறுபடியும் எடுத்துரைக்கத் தொடங்கினான். இவைகளைச் சொல்லிய பின்னர், பஞ்சம், பட்டயம் கொள்ளைநோயிலான பெரும் பாழ்க்கடிப்புகளுடன் பூமியின்மேல் வரப்போகும் பெரிய நியாயத்தீர்ப்புகளைக் குறித்தும், இந்த வருந்தத்தக்க நியாயத்தீர்ப்புகள் பூமியின்மீது இந்தத் தலைமுறையிலேயே வரும் என்றும் எனக்குத் தெரியப்படுத்தினான். இந்தக் காரியங்களை எடுத்துக் கூறிய பின்னர் முன்போலவே அவன் எழும்பிச் சென்றுவிட்டான்.
“இந்த நேரத்திற்குள்ளாக என் மனதில் அவை ஆழமாகப் பதிந்துவிட்டபடியால் என் கண்களிலிருந்து தூக்கம் பறந்தோடிவிட்டது. நான் கண்டவைகளாலும், கேட்டவைகளாலும் அடைந்த ஆச்சரியத்தால் மேற்கொள்ளப்பட்டு படுத்துக்கொண்டிருந்தேன். இந்நிலையில் என் படுக்கையருகில் மூன்றாம் முறையும் நான் மறுபடியும் அதே பரலோகத் தூதுவனைக் கண்டு முன்பு சொல்லிய அதே காரியங்களையே மறுபடியும் அவன் என்னிடம் திருப்பிச் சொல்வதைக் கேட்டது எனக்கு சொல்லவொண்ணாத ஆச்சரியத்தைக் கொடுத்தது. (என் தகப்பனின் குடும்பத்தின் ஏழ்மை நிலையின் காரணமாக) செல்வந்தனாகும்படி நான் அந்தத் தகடுகளைப் பெறச் சாத்தான் என்னை சோதனைக்குட்படுத்த முயற்சிப்பான் என்று எனக்குச் சொல்லி ஒரு எச்சரிப்பை எனக்குக் கொடுத்தான். நான் இதைச் செய்யக்கூடாது என்று தடுத்து, அந்தத் தகடுகளைப் பெறுவதில் தேவனை மகிமைப்படுத்துவதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடாது என்றும் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவதைத் தவிர மற்றெந்த நோக்கத்தாலும் நான் ஆட்கொண்டுவிடப்படக்கூடாது என்றும் சொன்னான். இல்லாவிடில் நான் அவைகளைப் பெறமுடியாது என்றும் சொன்னான்.
“இந்த மூன்றாம் சந்திப்பிற்குப் பின்னர் முன்போலவே அவன் பரலோகத்திற்கு ஏறிச் சென்றான். இப்பொழுது நான் அனுபவித்த அதிசயமான காரியங்களைக் குறித்து மறுபடியும் சிந்திக்கும்படி விடப்பட்டேன். மூன்றாம் முறையாக அந்த பரலோக தூதுவன் என்னிடத்திலிருந்து பரலோகத்திற்கு ஏறிச் சென்றவுடனே சேவல் கூவிற்று. பகல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கண்டு, இதிலிருந்து எங்களுடைய சம்பாஷணைகள் இரவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்ததை அறிந்தேன்.
“அதன் பின்னர் நான் சற்றுநேரத்திற்குள்ளேயே, என் படுக்கையிலிருந்து எழுந்து, வழக்கம்போல் அந்த நாளில் நான் செய்யவேண்டிய அவசியமான வேலைகளைச் செய்வதற்குச் சென்றேன். மற்ற சமயங்களில் வேலை செய்ததுபோல வேலை செய்ய நான் முயலுகையில் வேலை செய்யக்கூடாதபடி என் பெலத்தை முற்றிலும் இழந்தவனாக உணர்ந்தேன். என்னுடன் வேலை செய்துகொண்டிருந்த என் தகப்பன் எனக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறதென்று கண்டு என்னை வீட்டுக்குப் போகும்படி சொன்னார். நான் வீட்டுக்குச் செல்லும் எண்ணத்துடன் புறப்பட்டேன்; ஆனால் நாங்கள் இருந்த வயலுக்கு வெளியேயுள்ள வேலியைக் கடந்து செல்ல முயலுகையில் என் பெலன் என்னைவிட்டு முற்றிலும் நீங்கியது, உதவியற்றவனாக தரையில் விழுந்தேன். கொஞ்ச நேரம் ஒன்றையும் அறியாதபடி முற்றிலும் மூர்ச்சையடைந்தேன்.
“என்னை பெயர் சொல்லி அழைத்து என்னோடு பேசிய சத்தத்தைத்தான் நான் முதற்காரியமாக நினைவுகூர முடிந்தது. நான் மேலே பார்த்தேன். அதே தூதுவன் முன்போலவே ஒளியால் சூழப்பட்டு என் தலைக்கு மேல் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அப்பொழுது அவன் முந்தின இரவு என்னிடம் எடுத்துரைத்த காரியங்களையே மறுபடியும் எனக்குச் சொல்லி, என் தகப்பனிடம்போய் நான் பெற்ற தரிசனத்தையும், கட்டளைகளையும் சொல்லும்படியாக எனக்கு உத்தரவிட்டான்.
“நான் கீழ்ப்படிந்தேன்; வயலிலிருந்த என் தகப்பனிடம் திரும்பிப்போய் நடந்த எல்லாக் காரியங்களையும் அவரிடம் சொன்னேன். அவர் இது தேவனால் உண்டானது எனக்கூறி, அந்தத் தூதுவன் கட்டளையிட்ட பிரகாரமே செய்யும்படி என்னிடம் சொன்னார். நான் வயலைவிட்டு அந்தத் தகடுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்தத் தூதுவன் சொன்ன இடத்திற்குச் சென்றேன். இதைக் குறித்து நான் கண்ட குறிப்பிடத்தக்க தரிசனம் தெளிவாக இருந்தபடியால், நான் அங்கே சென்ற கணத்திலே அந்த இடத்தை அறிந்துகொண்டேன்.
“நியூயார்க்கில் ஒன்டாரியோ மாகாணம், மான்செஸ்டர் கிராமத்திற்கு அருகாமையில் சுற்றுவட்டாரத்திலுள்ள எந்த ஒரு மலையைக்காட்டிலும் உயரமான ஒரு பெரிய மலையிருக்கிறது. இதற்கு மேற்புறம் மலையுச்சிக்கருகில் அளவில் பெரிதான ஒரு கல்லுக்கீழ் இந்தத் தகடுகள் ஒரு கற்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கல் மேல் பாகத்தில் மத்தியில் கனமாகவும், வட்டவடிவமாகவும் ஓரங்கள் சன்னமாகவும் இருந்தது. இதனால் நடுப்பாகம் தரைக்கு மேலே நன்றாகக் காணப்பட்டது. ஆனால் அதைச் சுற்றிலும் உள்ள ஓரம் மண்ணால் மூடப்பட்டிருந்தது.
“மண்ணை அப்புறப்படுத்திய பின்னர், ஒரு கோலை எடுத்து கல்லுக்கு ஓரத்தில் பதித்து, சிறிது பலத்தை உபயோகித்துக் கல்லை உயர்த்தினேன். உள்ளே பார்த்தேன், அங்கே தூதுவன் உரைத்த வண்ணமே உண்மையாகவே அந்தத் தகடுகளையும் ஊரீம் மற்றும் தும்மீம், மார்க்கவசம் ஆகியவைகளையும் கண்டேன். அவைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியானது கற்களை ஒன்றாக ஒருவித பசையின் மூலமாக சேர்த்து வைத்ததைப்போல அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு கற்கள் பெட்டிக்குள், பெட்டியின் அடித்தளத்தில் குறுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கற்களின் மேல் தகடுகளும் அவைகளுடன் இருந்த மற்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
“அவைகளை வெளியே எடுக்க முயற்சி செய்தேன், ஆனால் தூதுவனால் தடுக்கப்பட்டேன். அவைகளை வெளியே கொண்டுவரக்கூடிய காலம் இன்னும் வரவில்லை. அக்காலம் அன்றிலிருந்து இன்னும் சரியாக நான்கு வருஷங்கள் வரை வராது என்று மறுபடியும் அறிவிக்கப்பட்டேன். ஆனால் அன்றிலிருந்து சரியாக ஒரு வருஷம் சென்று, நான் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்றும், அப்போது அவன் என்னை அந்த இடத்தில் சந்திப்பதாகவும் மேலும் அவ்விதமாகவே அந்தத் தகடுகளைப் பெறும் காலம் வரும்வரை நான் தொடர்ந்து வரவேண்டும் என்றும் சொன்னான்.
“எனக்கு இவ்வித கட்டளை கொடுக்கப்பட்டபடியே ஒவ்வொரு வருஷ முடிவிலும் சென்றேன், ஒவ்வொரு தடவையும் அதே தூதுவனை அங்கே கண்டேன். மேலும் எங்களுடைய ஒவ்வொரு சந்திப்பிலும் கர்த்தர் என்ன செய்யப் போகிறார், எப்படி எவ்விதமாக அவருடைய ராஜ்யம் இந்தக் கடைசி காலங்களில் நிர்வகிக்கப்படவேண்டும் என்பவைகளைக் குறித்த போதனைகளையும் ஞானத்தையும் அவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
“கடைசியாக, தகடுகள், ஊரீம், தும்மீம், மார்க்கவசம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளும் காலம் வந்தது. ஆயிரத்து எண்ணூற்று இருபத்து ஏழு, செப்டம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் நாள் தகடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வழக்கம்போல் வருஷக் கடைசியில் சென்றிருந்தபொழுது அதே பரலோக தூதுவன் அவைகளை என்னிடத்தில் ஒப்படைத்துக் கட்டளையிட்டதாவது, அவைகளுக்கு நான் பொறுப்பாளியாக வேண்டும், அவைகளைக் கவனக் குறைவாலோ, அல்லது என்னுடைய அசட்டையினாலோ போகும்படி விட்டுவிட்டால் நான் நிர்மூலமாக்கப்படுவேன். ஆனால் நான் என் சக்திக்குட்பட்ட எல்லா முயற்சிகளையும் உபயோகித்து, அந்தத் தூதுவன் மறுபடியும் அவைகளைக் கேட்கும்வரை, அவைகளை வைத்திருந்தால், அவைகள் பாதுகாக்கப்படும்.
“நான் உடனே அவைகளை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும் என்ற கண்டிப்பான கட்டளையைப் பெற்றது ஏன் என்பதையும் என்னால் தேவைப்பட்டதை நான் செய்து முடித்த பின்னர் ஏன் அந்த தூதுவன் அவைகளைக் கேட்பான் என்று சொன்னதின் காரணத்தையும் உணர்ந்தேன். ஏனெனில் அவைகளை என் வசத்தில் வைத்திருக்கிறேன் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொண்டவுடனேயே என்னிடத்திலிருந்து அவைகளை எடுத்துக்கொள்ள மிகவும் கடுமையான பிரயத்தனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தக் காரியத்திற்காக என்னென்ன சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கக்கூடுமோ அவை எல்லாம் பயன்படுத்தப்பட்டன. முன்னிருந்தததைக் காட்டிலும் துன்புறுத்தல்கள் மிகவும் கசப்பாகவும் கொடூரமாகவும் ஆயின. கூடுமானால் அவைகளை என் வசமிருந்து பறித்துக்கொள்ள திரளான ஜனங்கள் தொடர்ந்து விழிப்புடனே இருந்தார்கள். ஆனால் தேவனுடைய ஞானத்தினால் என்னால் செய்யப்படவேண்டிய காரியங்களை அவைகளால் நான் நிறைவேற்றுமளவும் அவை என்னிடமே பாதுகாப்பாக இருந்தன. ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தபடி அந்த தூதுவன் அவைகளை என்னிடத்தில் கேட்டபொழுது அவைகளை அவனிடத்தில் திருப்பிக் கொடுத்தேன். அவைகள் அவனுடைய பொறுப்பில் இன்றுவரை அதாவது ஆயிரத்து எண்ணூற்று முப்பத்து எட்டு, மே மாதம், 2 ஆம் நாள் வரை இருக்கின்றன.”
அதிக முழு விவரத்துக்கு விலையேறப்பெற்ற முத்துவிலிருக்கும் ஜோசப் ஸ்மித்—வரலாற்றைப் பார்க்கவும்.
புழுதியிலிருந்து பேசுகிற ஜனங்களின் சத்தமாக இவ்வாறு பூமியிலிருந்து கொண்டுவரப்பட்ட, பூர்வகாலப் பதிவேடு தேவனுடைய வரத்தினாலும் வல்லமையினாலும் உண்மையானவைகளென்று தெய்வீக உறுதிமொழியின்படியே இன்றைய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1830 ஆம் ஆண்டில் The Book of Mormon (மார்மன் புஸ்தகம்) என உலகிற்கு முதலாவதாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.