மூன்று சாட்சிகளின் சாட்சியம்
இந்த மொழிபெயர்ப்பைப் பெறும் எல்லா தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும், ஜனங்களும் இதனால் அறிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், நேபியர், அவர்களின் சகோதரர்களாகிய லாமானியர் மற்றும் சொல்லப்பட்டிருக்கிற கோபுரத்திலிருந்து வந்த யாரேதியர் வரலாறாகிய, இந்த வரலாற்றை அடக்கியுள்ள தகடுகளை பிதாவாகிய தேவன் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகியோரது கிருபையின்மூலம் நாங்கள் கண்டோம். அவை தேவனுடைய வரத்தினாலும், வல்லமையினாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதையும் நாங்கள் அறிவோம், ஏனெனில் தேவனுடைய சத்தம் அதை எங்களுக்கு அறிவித்தது. ஆகையால் இந்த மொழிபெயர்ப்பு உண்மையானது என்பதை நிச்சயமாக அறிவோம். இந்தத் தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தவைகளை நாங்கள் பார்த்தோம் என்பதையும் சாட்சியமளிக்கிறோம். மேலும் அவைகள் மனுஷனால் அல்லாமல், தேவனுடைய வல்லமையினால் எங்களுக்குக் காண்பிக்கப்பட்டன. மேலும் நாங்கள் தகடுகளையும் அவற்றின்மேல் பொறிக்கப்பட்டிருந்தவைகளையும் நோக்கிப் பார்க்கும்படியாக, பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் இறங்கிவந்து இவைகளை எங்கள் கண்கள் முன்பாகக் கொண்டுவந்து வைத்தான் என்பதைத் தெளிவான புத்தியின் வார்த்தைகளால் நாங்கள் அறிவிக்கிறோம். பிதாவாகிய தேவன், மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் நாங்கள் கண்டு, இந்தக் காரியங்கள் உண்மையென சாட்சி கொடுக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் இது எங்கள் கண்களுக்கு அற்புதமாயிருக்கிறது. இருந்தபோதிலும் நாங்கள் இதைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டுமென கர்த்தருடைய சத்தம் எங்களுக்குக் கட்டளையிட்டபடியால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படியாய் இந்தக் காரியங்களைக் குறித்து சாட்சி கொடுக்கிறோம். நாம் கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாய் இருப்போமெனில், எல்லா மனுஷருடைய இரத்தத்தையும் நம் வஸ்திரங்களிலிருந்து நீக்கிப்போட்டு, கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் கறையற்றவர்களாய் காணப்பட்டு, நித்தியமாய் பரலோகத்தில் அவருடன் வாசம் செய்வோம் என்பதை நாங்கள் அறிவோம். ஒரே தேவனாயிருக்கிற பிதாவுக்கும் குமாரனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் கனமுண்டாவதாக, ஆமென்.
ஆலிவர் கௌட்ரி
டேவிட் விட்மர்
மார்ட்டின் ஹாரிஸ்