வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112


பாகம் 112

ஜூலை 23, 1837ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தாமஸ் பி.மார்ஷூக்கு ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரு அப்போஸ்தலர்களைக் குறித்து தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மூப்பர்கள் ஹீபர் சி. கிம்பல் மற்றும் ஆர்சன் ஹைட் முதலில் இங்கிலாந்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த நாளில் இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது. இந்த நேரத்தில் தாமஸ் பி. மார்ஷ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்திற்கு தலைவராயிருந்தார்.

1–10, பன்னிருவர் சுவிசேஷத்தை அனுப்பி, சகல தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் எச்சரிக்கைக் குரலை எழுப்பவேண்டும்; 11–15, அவர்கள் தங்களுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றி அவருடைய ஆடுகளைப் போஷிக்கவேண்டும்; 16–20, பிரதான தலைமையை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; 21–29, இருள் பூமியை மூடுகிறது, நம்பிக்கையுள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றவர்களும் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள்; 30–34, காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்கால திறவுகோல்களை பிரதான தலைமையும் பன்னிருவரும் தரித்திருக்கிறார்கள்.

1 என்னுடைய ஊழியக்காரனாகிய தாமஸ், மெய்யாகவே உனக்கு கர்த்தர் சொல்லுகிறார்: நான் உன்னுடைய ஜெபங்களைக் கேட்டேன். என்னுடைய நாமத்தில் சாட்சி கொடுக்க தெரிந்து கொள்ளப்பட்ட, சகல தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும், வெளி இடங்களுக்கு அனுப்பப்பட்டவர்களும், என்னுடைய கருவியான ஊழியக்காரர்கள் மூலமாக நியமனம் செய்யப்பட்ட உன்னுடைய சகோதரர்களான அவர்களின் சார்பாக உன்னுடைய வேண்டுதல்கள் எனக்கு முன்பாக ஒரு நினைவூட்டலாக வந்திருக்கின்றன.

2 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய இருதயத்திலும், உன்னிலும் ஒரு சில காரியங்கள் இருக்கின்றன, அவற்றில் கர்த்தராகிய நான் பிரியமாயிருந்ததில்லை.

3 ஆயினும், உன்னை நீ தாழ்த்துகிற அளவில் நீ உயர்த்தப்படுவாய்; ஆகவே, உன்னுடைய சகல பாவங்களும் உனக்கு மன்னிக்கப்படுகின்றன.

4 என்னுடைய முகத்திற்கு முன்பாக உன்னுடைய இருதயம் திடன் கொண்டிருப்பதாக; புறஜாதியாருக்கு மட்டுமல்ல யூதர்களுக்கும் என்னுடைய நாமத்தைக் குறித்து நீ சாட்சி கொடுப்பாயாக; பூமியின் எல்லைவரை என்னுடைய வார்த்தையை நீ அனுப்புவாயாக.

5 ஆகவே, ஒவ்வொரு காலையும் நீ வழக்காடு; ஒவ்வொரு நாளும் உன்னுடைய எச்சரிக்கையின் குரல் கேட்கப்படுவதாக; இரவு வரும்போது உன்னுடைய பேச்சால் பூமியின் குடிகள் உறங்காதிருக்கட்டும்.

6 உன்னுடைய குடிகள் சீயோனில் அறியப்படுவார்களாக, உன்னுடைய வீட்டை மாற்றாதே; ஏனெனில் மனுபுத்திரர்களுக்கு மத்தியில் என்னுடைய நாமத்தை விளங்கப்பண்ண கர்த்தராகிய நான் உனக்கு ஒரு மகத்தான வேலையை வைத்திருக்கிறேன்.

7 ஆகவே, வேலைக்காக உன்னுடைய அரைக்கச்சையைக் கட்டிக்கொள். நீ தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதால், மலைகளுக்கு மத்தியிலும், அநேக தேசங்களுக்கு மத்தியிலும் உன்னுடைய கால்கள் பாதரட்சைகளை அணிந்திருப்பதாக.

8 உன்னுடைய வார்த்தையால் அநேக மேட்டிமையானவர்கள் தாழ்த்தப்படுவார்கள், உன்னுடைய வார்த்தையால் அநேக தாழ்மையானவர்கள் உயர்த்தப்படுவார்கள்.

9 உன்னுடைய குரல், மீறுகிறவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதலாயிருப்பதாக; உன்னுடைய கடிந்து கொள்ளுதல் நிமித்தம் அவதூறுக்காரர்களின் நாவு அதன் மாறுபாட்டை நிறுத்தும்.

10 தாழ்மையாயிரு; கர்த்தராகிய உன்னுடைய தேவன், கரம் பிடித்து உன்னை நடத்துவார், உன்னுடைய ஜெபங்களுக்காக உனக்கு பதிலளிப்பார்.

11 உன்னுடைய இருதயத்தை நான் அறிவேன், உன்னுடைய சகோதரர்களைக் குறித்த உன்னுடைய ஜெபங்களை நான் கேட்டேன். அநேகருக்கு மேலாக அவர்களிடம் அன்பு கூர்வதில் பட்சபாதமாயிராதே, ஆனால் நீ உன்னில் அன்பு கூருவதுபோல அவர்களிலும் அன்புகூரு; சகல மனுஷர்களிடத்திலும், என்னுடைய நாமத்தில் அன்பு வைத்திருக்கிற யாவரிடத்திலும் உன்னுடைய அன்பு மிகுதியாயிருப்பதாக.

12 உன்னுடைய பன்னிரு சகோதரருக்காகவும் ஜெபம்பண்ணு. என்னுடைய நாமத்தினிமித்தம் அவர்களுக்கு கடிந்து புத்திசொல்லு, அவர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும் அவர்கள் புத்தி சொல்லப்படுவார்களாக, என்னுடைய நாமத்திற்கு எனக்கு முன்பாக விசுவாசமுள்ளவனாயிரு.

13 அவர்களுடைய சோதனைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் பின்பு, இதோ, கர்த்தராகிய நான் அவர்களுக்காக இரங்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாக தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தாதிருந்தால், வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இல்லாதிருந்தால் அவர்கள் மனம் மாறுவார்கள், நான் அவர்களை குணப்படுத்துவேன்.

14 இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உனக்குச் சொல்லுகிறவற்றை பன்னிருவர் யாவருக்கும் நான் சொல்லுகிறேன், எழுந்து உங்கள் அரைக்கச்சையைக் கட்டிக்கொண்டு, உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றுங்கள், என்னுடைய ஆடுகளை மேய்ப்பீர்களாக.

15 உங்களை மேன்மைப்படுத்தாதேயுங்கள்; என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு விரோதமாக கலகம் செய்யாதிருங்கள்; ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அவனோடிருக்கிறேன், என்னுடைய கரம் அவன் மேலிருக்கும்; நான் அவனுக்கும் உங்களுக்கும் கொடுத்த, திறவுகோல்கள் நான் வரும் வரையிலும் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

16 சகல தேசங்களுக்கும் மத்தியில் தூரதேசங்களில் பன்னிருவரைக் குறித்தவரை என்னுடைய ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தரித்திருக்க நான் தெரிந்து கொண்ட நீ அந்த மனுஷன்,

17 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பும், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னியும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமும் வரமுடியாத சகல இடங்களிலுமுள்ள ராஜ்யத்தின் வாசலைத் திறக்கும்படியாக நீ என்னுடைய ஊழியக்காரனாக இருக்கும்படியாக, என்னுடைய ஊழியக்காரனாகிய தாமஸ், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்;

18 ஏனெனில் ஒரு சிறிய காலத்திற்கு சகல சபைகளின் பாரத்தையும் நான் அவர்கள்மீது வைத்திருக்கிறேன்.

19 ஆகவே, எங்கேயெல்லாம் அவர்கள் உன்னை அனுப்புகிறார்களோ, நீ போ, நான் உன்னோடே இருப்பேன் என்னுடைய நாமத்தை எங்கேயெல்லாம் நீ அறிவிக்கிறாயோ, என்னுடைய வார்த்தையை அவர்கள் பெறும்படியாக ஒரு அநுகூல வாசல் உனக்காகத் திறக்கப்படும்.

20 என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் நான் அனுப்பிய, உங்களுக்காக என்னுடைய நாமத்தினிமித்தம் நான் ஆலோசகர்களாக்கிய பிரதான தலைமையை ஏற்றுக்கொள்கிறான்.

21 மீண்டும் நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னால் சிபாரிசு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட, பன்னிருவரான உன் சகோதரரின் குரலால் என்னுடைய நாமத்தில் யாரையெல்லாம் நீ அனுப்புகிறாயோ, நீ அனுப்புகிற எந்த தேசத்திலும் என்னுடைய ராஜ்யத்தின் வாசலைத் திறக்க,

22 எனக்கு முன்பாக அவர்கள் தங்களைத் தாழ்த்தி, என்னுடைய வார்த்தையில் நிலைத்திருந்து, என்னுடைய ஆவியின் குரலைக் கேட்கிற அளவில் அவர்களுக்கு வல்லமையிருக்கும்.

23 மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இருள் பூமியையும், காரிருள் ஜனங்களின் மனங்களையும் மூடும், என்னுடைய முகத்திற்கு முன்பாக சகல மாம்சமும் கெட்டுப்போனது.

24 இதோ, பூமியின் குடிகள் மீது, பழிவாங்குதல் சீக்கிரத்திலேயே வருகிறது, உக்கிரத்தின் நாள், சுட்டெரித்தலின் நாள், பாழ்க்கடிப்பின், அழுகையின், துக்கிப்பின், புலம்பலின் நாள்; பூமியின் பரப்பின் மேல் அது ஒரு சுழல் காற்றைப்போல வருகிறதென கர்த்தர் சொல்லுகிறார்.

25 என்னுடைய வீட்டின் மேல் அது ஆரம்பமாகும், என்னுடைய வீட்டிலிருந்து அது போகுமென கர்த்தர் சொல்லுகிறார்;

26 கர்த்தர் சொல்லுகிறார், உங்களுக்கு மத்தியிலுள்ள என்னுடைய நாமத்தை அறிந்ததாக அறிக்கை செய்தும், என்னை அறியாதவர்களும், என்னுடைய வீட்டினுள்ளேயே எனக்கு விரோதமாக தூஷித்தவர்களுமான முதன்மையானவர்களுக்கு மத்தியில் என கர்த்தர் சொல்லுகிறார்.

27 ஆகவே, இந்த இடத்தில் என்னுடைய சபையின் விவகாரங்களைக் குறித்து கலங்காதிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள் என கர்த்தர் சொல்லுகிறார்.

28 ஆனால் எனக்கு முன்பாக உங்கள் இருதயங்களை பரிசுத்தப்படுத்துங்கள்; பின்னர் உலக முழுவதற்கும் நீங்கள் சென்று, என்னுடைய சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்ளாத ஒவ்வொரு சிருஷ்டிக்கும் பிரசங்கியுங்கள்;

29 நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், நம்பிக்கையில்லாது ஞானஸ்நானம் பெறாதவன் ஆக்கினைக்குள்ளாவான்.

30 பன்னிருவர்களான உங்களுக்கும், உங்களுடைய ஆலோசகர்களாகவும், உங்களுடைய தலைவர்களாகவுமிருக்க, உங்களோடு நியமிக்கப்பட்ட பிரதான தலைமைக்கும், கடைசி நாட்களுக்காகவும் காலங்களின் நிறைவேறுதலான கடைசி ஊழியக்காலத்துக்காகவும்,

31 நீங்கள் தரித்திருக்கிற இந்த அதிகாரம், சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலிருந்து எந்த சமயத்திலும் ஒரு ஊழியக்காலத்தைப் பெற்றிருக்கிற யாவருடனும் தொடர்புடைய, இந்த ஆசாரியத்துவத்தின் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

32 ஏனெனில், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பெற்ற ஊழியக்காலத்தின் திறவுகோல்கள், எல்லாவற்றிற்கும் கடைசியாக பரலோகத்திலிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்டு பிதாக்களிடமிருந்து வந்திருக்கிறது.

33 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடைய அழைப்பு எவ்வளவு மகத்தானதென பாருங்கள். இந்த தலைமுறையின் இரத்தம் உங்களிடம் இருந்து கேட்கப்படாதபடிக்கு உங்கள் இருதயங்களையும் வஸ்திரங்களையும் சுத்தப்படுத்துங்கள்.

34 நான் வரும் வரை விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள், ஏனெனில் சீக்கிரத்திலே நான் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அபராதம் செலுத்த அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நானே அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன். ஆமென்.