வேதங்கள்
அதிகாரப்பூர்வ பிரகடனம் 2


அதிகாரப்பூர்வ பிரகடனம் 2

“வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் தேவனுக்கு யாவரும் சமமானவர்களே” (2நேபி 26:33) என மார்மன் புஸ்தகம் போதிக்கிறது. சபை வரலாறு முழுவதிலும் அந்த தேசங்களிலுள்ள சகல இனம் மற்றும் கலாச்சார ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்று சபையின் உண்மையுள்ள அங்கத்தினர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஜோசப் ஸ்மித்தின் வாழ்நாளில் சபையின் ஒரு சில கறுப்பு ஆண் அங்கத்தினர்கள் ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கபக்கப்பட்டார்கள். அந்த ஆரம்ப வரலாற்றில் ஆப்ரிக்க வம்சத்திலிருந்து வந்த கறுப்பு ஆண்களுக்கு ஆசாரியத்துவத்தை அருளுதலை சபைத் தலைவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த பழக்கத்தின் ஆரம்பத்தைப்பற்றி சபை பதிவுகள் எந்த தெளிவான குறிப்புகளையும் கொடுக்கவில்லை. இந்த பழக்கத்தை மாற்ற ஒரு வெளிப்படுத்தல் அவசியமென சபைத் தலைவர்கள் நம்பி வழிகாட்டுதலுக்காக ஜெபத்தில் நாடினார்கள். சபைத் தலைவர் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பலுக்கு வெளிப்படுத்தல் வந்து ஜூன் 1, 1978ல் சால்ட் லேக் ஆலயத்தில் பிற சபைத் தலைவர்களுக்கு அது உறுதி செய்யப்பட்டது. ஒருசமயம் ஆசாரியத்துவத்திற்கு தொடர்புடைய இனம் சம்பந்தப்பட்ட எல்லா தடைகளையும் வெளிப்படுத்தல் நீக்கியது.

இது சம்மந்தப்பட்டவர்களுக்கு

செப்டம்பர் 30, 1978ல், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 148வது அரையாண்டு பொது மாநாட்டில், சபையின் பிரதான தலைமையின் முதல் ஆலோசகரான தலைவர் என். எல்டன் டானரால் பின்வருபவை சமர்ப்பிக்கப்பட்டன:

இந்த வருஷத்தின் ஜூன் மாத ஆரம்பத்தில், சபையின் தகுதியான எல்லா ஆண் அங்கத்தினர்களுக்கும் ஆசாரித்துவமும் ஆலய ஆசீர்வாதங்களும் கொடுப்பதுபற்றிய ஒரு வெளிப்படுத்தல் தலைவர் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பலால் பெறப்பட்டதென பிரதான தலைமை அறிவித்தது. பரிசுத்த ஆலயத்தின் புனிதமான அறைகளில் நீண்ட நேர தியானத்திலும் ஜெபத்திலுமிருந்த பின்பு இந்த வெளிப்படுத்தலை அவர் பெற்று, அதை தம்முடைய ஆலோசகர்களுக்கு அவர் சமர்ப்பித்தார், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தனர். பின்னர் அது பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் குழுமத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது, அவர்கள் அதை ஒருமனதாய் அங்கீகரித்தார்கள், அதற்குப்பின் மற்ற பொது அதிகாரிகளிடத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களும் அதே போல ஒரு மனதாக அதை அங்கீகரித்தனர் என மாநாட்டிற்கு நான் அறிவுரை கூறவேண்டுமென தலைவர் கிம்பல் கேட்டுக்கொண்டார்.

இப்பொழுது இந்த கடிதத்தை நான் படிக்கும்படியாக தலைவர் கிம்பல் கேட்டுக்கொண்டார்:

ஜூன் 8, 1978

உலகமுழுவதிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் எல்லா பொது மற்றும் உள்ளூர் ஆசாரியத்துவ அலுவலர்களுக்கும்:

அன்புள்ள சகோதரரே:

பூமியின்மீது கர்த்தரின் பணியின் விரிவை நாங்கள் கண்டபோது, அதனால், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் செய்திக்கு அநேக தேசத்தின் ஜனங்கள் பிரதியுத்தரம் அளித்து, எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணிக்கையில் சபையில் சேர்ந்தவர்களுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருந்திருக்கிறோம். இதனிமித்தம், சுவிசேஷம் கொடுக்கிற எல்லா சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் சபையிலுள்ள தகுதியான ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் கொடுக்க ஒரு வாஞ்சையுடன் அது எங்களை உணர்த்தியது.

ஒரு சமயம், தேவனின் நித்திய திட்டத்தில் தகுதியுள்ள நம் சகோதரர்கள் யாவரும் ஆசாரியத்துவத்தைப் பெறுவார்கள், என எங்களுக்கு முன்னிருந்த சபையின் தீர்க்கதரிசிகளாலும் தலைவர்களாலும் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை அறிந்து, ஆசாரியத்துவம் கொடுக்கப்படாதவர்களின் விசுவாசத்தைக் கண்டு, நம்முடைய விசுவாசமிக்க சகோதரர்களான இவர்களுக்காக தெய்வீக வழிநடத்துதலுக்காக கர்த்தரை பணிந்து நீண்ட நேரமாயும் கருத்தாயும் வேண்டிக்கொண்டு ஆலயத்தின் மேல்அறையில் பலமணிநேரங்களைச் செலவழித்து கெஞ்சியிருக்கிறோம்.

அவர் எங்களுடைய ஜெபங்களைக் கேட்டு, அதன் தெய்வீக அதிகாரத்தை வல்லமையுடன் செயல்படுத்த சபையிலுள்ள விசுவாசமிக்க தகுதியான ஒவ்வொரு மனுஷனும் பரிசுத்த ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கான நீண்டகால வாக்குத்தத்தத்தின் நாள் வந்ததெனவும், ஆலய ஆசீர்வாதங்களையும் சேர்த்து அங்கிருந்து வழிந்தோடுகிற ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அவனுக்கு அன்பானவர்களுடன் அனுபவிக்கவும் வெளிப்படுத்தல் முலம் உறுதி செய்திருக்கிறார். அதன்படி, ஜாதி இனம் பொருட்டின்றி சபையின் எல்லா தகுதியுள்ள ஆண் அங்கத்தினர்களும் ஆசாரித்துவத்திற்கு நியமிக்கப்படுவார்கள். ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திற்கு நியமிக்க தகுதிக்காக ஏற்படுத்தப்பட்ட தரங்களில் அவர்கள் இருக்கிறார்களாவென உறுதிசெய்ய எல்லா அங்கத்தினர்களையும் கவனமாக நேர்காணல் செய்யும் கொள்கையைப் பின்பற்ற ஆசாரியத்துவத் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரம்பெற்ற அவருடைய ஊழியக்காரர்களின் சத்தத்திற்கு செவி கொடுக்கும், சுவிசேஷத்தின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பெற தங்களை ஆயத்தப்படுத்தும் உலக முழுவதிலுமுள்ள அவருடைய பிள்ளைகளுடைய ஆசீர்வாதத்திற்காக அவருடைய சித்தத்தை கர்த்தர் இப்பொழுது அறியப்படுத்தியிருக்கிறாரென திடமனதாய் நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

உங்கள் உண்மையுள்ள,

ஸ்பென்சர் டபுள்யு.கிம்பல்

என்.எல்டன் டானர்

மரியன் ஜி.ரோம்னி

பிரதான தலைமை

ஸ்பென்சர் டபுள்யு.கிம்பலை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் அங்கீகரித்து ஒரு அதிகாரமளிக்கப்பட்ட சபையாக நாம் இந்த வெளிப்படுத்தலை கர்த்தரின் வார்த்தையாகவும் சித்தமாகவும் ஏற்றுக்கொண்டு இதை முன் மொழிகிறோம். ஆதரிக்கிற யாவரும் தயவுசெய்து உங்கள் வலது கையை உயர்த்தி தெரிவியுங்கள். எதிர்க்கிறவர்கள் யாராவதிருந்தால் அதே அடையாளத்தால் தெரிவியுங்கள்.

முன்னறிவிக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்கும் வாக்கெடுப்பு ஒருமனதானது மற்றும் உறுதியானது.

சால்ட் லேக் சிட்டி, யூட்டா, செப்டம்பர் 30, 1978.