வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24


பாகம் 24

ஜூலை 1830ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபை அமைக்கப்பட்டதிலிருந்து நான்கு மாதங்களுக்கும் குறைவாக கடந்துபோனாலும்கூட, துன்புறுத்தல்கள் தீவிரமாகி, சிலநேரங்களில் தனிமையில் பாதுகாப்பை தலைவர்கள் நாடவேண்டியதாயிற்று. அவர்களை பலப்படுத்த, ஊக்குவிக்க, மற்றும் அறிவுறுத்த இந்த நேரத்தில் பின்வரும் மூன்று வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டன.

1–9, வேதங்களை மொழிபெயர்க்க, பிரசங்கிக்க, மற்றும் வியாக்கியானம் செய்ய ஜோசப் ஸ்மித் அழைக்கப்பட்டார்; 10–12, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆலிவர் கௌட்ரி அழைக்கப்பட்டார்; 13–19, அற்புதங்கள், சாபங்கள் கொடுத்தல், ஒருவர் பாதத்தின் தூசிகளைத் தட்டுதல், மற்றும் பணமில்லாமலும், பயணப்பை இல்லாமலும் போவது சம்பந்தமான பிரமாணம் வெளிப்படுத்தப்பட்டது.

1 இதோ, மார்மன் புஸ்தகத்தை எழுதவும், எனது ஊழியத்துக்காகவும், நீ அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டாய், உனது உபத்திரவங்களிலிருந்து உன்னை நான் தூக்கி எடுத்திருக்கிறேன், உனக்கு ஆலோசனையளித்திருக்கிறேன், உனது எதிரிகள் எல்லாரிடமிருந்தும் நீ விடுவிக்கப்பட்டாய், சாத்தானின் வல்லமைகளிடமிருந்தும் அந்தகாரத்திலிருந்தும் நீ விடுவிக்கப்பட்டாய்!

2 ஆயினும், உனது மீறுதல்களுக்காக நீ மன்னிக்கப்படமாட்டாய்; ஆயினும் உனது வழிகளில் நீ சென்று இனி பாவஞ் செய்யாதே.

3 உனது அலுவலை சிறப்பாகச் செய்; உனது வயல்வெளிகளை விதைத்து, அவைகளைப் பாதுகாத்த பின்பு, பயெட்டியின் கோல்ஸ்வில் மற்றும், மான்செஸ்டரிலுள்ள சபைக்கு விரைவாகப்போ, அவர்கள் உன்னை ஆதரிப்பார்கள், ஆவிக்குரிய பிரகாரமாயும், உலகப்பிரகாரமாகவும் நான் அவர்களை ஆசீர்வதிப்பேன்;

4 ஆனால் அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபத்தை அவர்கள்மேல் நான் அனுப்புவேன்.

5 எனது நாமத்தில் நீ தேவனை அழைப்பதையும், தேற்றரவாளனால் உனக்குக் கொடுக்கப்படும் காரியங்களை எழுதுவதையும், வேதங்கள் அனைத்தையும் சபைக்கு வியாக்கியானம் செய்வதையும் தொடர்ந்து செய்வாயாக.

6 நீ எதைப் பேசவேண்டுமென்றும் எழுதவேண்டுமென்றும் அக்கணமே உனக்குக் கொடுக்கப்படும், அவர்கள் அதைக் கேட்பார்கள், அல்லது ஒரு ஆசீர்வாதத்திற்குப் பதிலாக ஒரு சாபத்தை அவர்களுக்கு நான் அனுப்புவேன்.

7 சீயோனில் உனது சேவை முழுவதையும் அர்ப்பணிப்பாயாதலால் இதில் நீ பெலத்தைப் பெறுவாய்.

8 அநேக உபத்திரவங்கள் உனக்கு வருமென்பதால் பொறுமையாயிரு; ஆனால் அவைகளை சகித்திரு, ஏனெனில், இதோ, உனது நாட்களின் முடிவுவரை நான் உன்னுடனேயே இருக்கிறேன்.

9 உலகப்பிரகாரமான பிரயாசங்களில் உனக்கு பெலமிருக்காது, ஏனெனில் அது உனது அழைப்பு இல்லை. உனது அழைப்பில் பிரயாசப்படு, இதன் மூலம், வேதங்கள் அனைத்தையும் வியாக்கியானம் செய்யவும், தொடர்ந்து கைகளை வைக்கவும், சபைகளை திடப்படுத்தவும் உனது அலுவலை சிறப்பாகச் செய்.

10 உனது சகோதரன் ஆலிவர், உலகத்திற்கும் சபைக்கும் முன்பாக தொடர்ந்து எனது நாமத்தைக் குறித்து சாட்சி பகருவான். எனது காரியத்தில் போதுமானதை அவன் சொல்ல முடியுமென அவன் நினைக்கவேண்டாம்; இதோ முடிவுபரியந்தம் அவனோடே கூட நானிருக்கிறேன்.

11 பெலவீனத்திலோ பெலத்திலோ, அடிமைத்தனத்திலோ விடுதலையிலோ, என்னில் அவன் மகிமை பெறுவான், தானாக பெறுவதில்லை;

12 சதா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இரவும் பகலும் ஒரு எக்காள சத்தம் போல, அவன் தனது வாயைத்திறந்து, எனது சுவிசேஷத்தை அறிவிப்பான். மனுஷர்களுக்கு மத்தியிலே அறியப்படாதது போல அவனுக்கு நான் பெலம் கொடுப்பேன்.

13 நான் உங்களுக்கு கட்டளையிட்டாலொழிய, பிசாசுகளைத் துரத்துகிறதையும், வியாதியஸ்தர்களை குணமாக்குவதையும், விஷ சர்ப்பங்களுக்கு எதிராகவும், கொடிய விஷங்களுக்கு எதிராகவும் சொஸ்தப்படுத்துகிறதையும் தவிர அற்புதங்களுக்காக வேண்டாதிருங்கள்.

14 வசனங்கள் நிறைவேறத்தக்கதாக, அதை வாஞ்சிக்கிறவர்களால் உன்னிடம் கேட்கப்பட்டாலொழிய, இந்தக் காரியங்களை நீ செய்யக்கூடாது; ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறவைகளின்படி நீ செய்யவேண்டும்.

15 நீங்கள் எந்த இடத்தில் பிரவேசித்தாலும், எனது நாமத்தில் உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், ஒரு சாட்சியாக அவர்களுக்கெதிராக உங்கள் பாதங்களிலுள்ள தூசைத் தட்டி, பாதை ஓரத்தில் உங்கள் பாதங்களைக் கழுவி, ஒரு ஆசீர்வாதத்திற்குப் பதிலாக ஒரு சாபத்தைக் கொடுங்கள்.

16 அப்போது, யாரெல்லாம் பலாத்காரத்தால் தங்கள் கைகளை உங்கள் மேல் வைக்கிறார்களோ, எனது நாமத்தில் அவர்கள் அடிக்கப்பட நீங்கள் கட்டளையிடுவீர்களாக; இதோ, எனது சொந்த நேரத்தில் உங்களது வார்த்தைகளின்படி நான் அவர்களை அடிப்பேன்.

17 உங்களோடு யாரெல்லாம் வழக்காடுகிறார்களோ அவர்கள் வழக்கால் சபிக்கப்படுவார்கள்.

18 பணப்பையையோ, பயணப்பையையோ, தடிகளையோ, இரண்டு அங்கிகளையோ, நீங்கள் எடுத்துப்போகவேண்டாம், ஏனெனில் ஆகாரமோ, உடையோ, பாதரட்சைகளோ, பணமோ, பயணப்பையோ தேவைப்படுகிற அந்தமணி நேரத்திலே சபை உங்களுக்கு அவற்றைக் கொடுக்கும்.

19 ஆம், கடைசி நேரத்திலும்கூட; பலமான அரிவாளால் எனது திராட்சைத் தோட்டத்தை கிளை நறுக்க நீங்கள் அழைக்கப்பட்டதால், ஆம், நீங்கள் நியமித்தவர்கள் யாவரும்கூட, இந்த மாதிரியின்படி செய்வார்கள். ஆமென்.