வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5


பாகம் 5

மார்டின் ஹாரிஸின் வேண்டுகோளுக்கிணங்க மார்ச் 1829ல், பென்சில்வேனியாவின் ஹார்மனியில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–10, ஜோசப் ஸ்மித் மூலமாக கர்த்தரின் வார்த்தையை இந்த சந்ததி பெறும்; 11–18, மார்மன் புஸ்தகத்தைப்பற்றி மூன்று சாட்சிகள் சாட்சியம் கொடுப்பார்கள்; 19–20, முற்காலத்தைப்போல கர்த்தரின் வார்த்தை மெய்ப்பிக்கப்படும்; 21–35, மார்டின் ஹாரிஸ் மனந்திரும்பி சாட்சிகளில் ஒருவனாயிருக்கலாம்.

1 இதோ, எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனாகிய நீ, தகடுகளை என்னிடமிருந்து பெற்றதாக சாட்சி கொடுத்ததும், சாட்சியாகச் சொன்னதுமானவற்றைக் குறித்து, எனது ஊழியக்காரனான மார்டின் ஹாரிஸ் என்னிடத்திலிருந்து ஒரு சாட்சியை வாஞ்சித்தான் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

2 இதோ, உன்னிடம் பேசுகிற அவனிடம் நீ சொல்லவேண்டுமென உனக்கு நான் சொன்னதாவது: நீ இந்தக் காரியங்களைக் குறித்து ஒரு சாட்சியாக நிற்கவேண்டுமென்று உனக்குக் கட்டளையிடப்பட்டதாக, உனது தேவனாகிய கர்த்தராகிய நான், எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனாகிய உனக்கு, இந்தக் காரியங்களைக் கொடுத்திருக்கிறேன்.

3 நான் உனக்குக் கட்டளையிட்டவர்களேயன்றி வேறொருவருக்கும் நீ அவைகளை காட்டாதபடிக்கு என்னோடு ஒரு உடன்படிக்கையில் பிரவேசிக்கவேண்டுமென உனக்குச் சொன்னேன், அதை நான் உனக்குக் கொடுத்தாலன்றி அவர்களின்மேல் உனக்கு எந்த அதிகாரமுமில்லை.

4 தகடுகளை மொழிபெயர்க்க உனக்கு ஒரு வரமிருக்கிறது; இது நான் உன்மேல் அருளின முதல் வரம்; இதில் எனது நோக்கம் நிறைவேறும்வரைக்கும் வேறெந்த வரமுமில்லாத மாதிரி நீ பாசாங்கு செய்ய வேண்டுமென நான் கட்டளையிட்டிருக்கிறேன்; ஏனெனில் இது முடியும்வரைக்கும் வேறெந்த வரத்தையும் நான் உனக்குக் கொடுக்கமாட்டேன்.

5 பூமியின் குடிகள் எனது வார்த்தைகளுக்கு செவிகொடாமற்போனால், அவர்களுக்கு ஐயோ என மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்;

6 ஏனெனில், இதன்பின் நீ நியமிக்கப்படுவாய், போய் எனது வார்த்தைகளை மனுபுத்திரருக்குச் சொல்.

7 இதோ, அவர்கள் எனது வார்த்தைகளை நம்பவில்லையெனில், எனது ஊழியக்காரனாகிய ஜோசப், நான் உன்னிடம் ஒப்படைத்த இந்தக் காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு நீ காண்பிப்பது சாத்தியமானாலும், அவர்கள் உன்னையும் நம்பமாட்டார்கள்.

8 அவநம்பிக்கையும், வணங்காக்கழுத்துமுள்ள இந்த சந்ததிக்கு எதிராக எனது கோபம் அவர்கள்மேல் மூளும்.

9 இதோ, எனது ஊழியக்காரனான ஜோசப், என்னில் இருக்கிற ஞானமான நோக்கத்திற்காக உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் காரியங்களை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன், வருங்கால சந்ததியருக்கு அவை தெரிவிக்கப்படும் என மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

10 ஆனால், இந்த சந்ததி உன் மூலமாக எனது வார்த்தையைப் பெறும்;

11 உனது சாட்சியுடனேகூட நான் அழைத்து நியமிக்கப்போகிற, இந்தக் காரியங்களை நான் காட்டப்போகிற எனது மூன்று ஊழியக்காரர்களின் சாட்சிகளுமிருக்கும், உன் மூலமாகக் கொடுக்கப்படும் எனது வார்த்தைகளுடன் அவர்கள் புறப்பட்டுப்போவார்கள்.

12 ஆம், இந்தக் காரியங்கள் மெய்யானவையென அவர்கள் நிச்சயமாய் அறிவார்கள், ஏனெனில் வானத்திலிருந்து அவர்களுக்கு நான் இதை அறிவிப்பேன்.

13 அவைகள் இருக்கிறபடியே இந்தக் காரியங்களைப் பார்க்கும்படியாகவும் காணும்படியாகவும் நான் அவர்களுக்கு அதிகாரங்கொடுப்பேன்;

14 சந்திரனைப் போல தெளிவும், சூரியனைப்போல அழகும், கொடிகள் உடைய படையைப்போல பயங்கரமாயும், வனாந்தரத்திலிருந்து எழுந்து வருகிற எனது சபையின் இந்த ஆரம்பகாலத்தில், இந்த சந்ததியருக்கு மத்தியில் இதே சாட்சியைப்பெற இந்த வல்லமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.

15 எனது வார்த்தையைப்பற்றிய மூன்று சாட்சிகளின் சாட்சியத்தை நான் அனுப்புவேன்.

16 இதோ, எனது வார்த்தைகளை நம்புகிறவர்களுக்கு, என் ஆவியினால் வெளிப்படுத்தி, அவர்களை சந்திப்பேன், தண்ணீரினாலும் ஆவியினாலும் அவர்கள் என்னில் பிறப்பார்கள்,

17 இன்னமும் நீ நியமிக்கப்படவில்லை என்பதால், இன்னும் கொஞ்சகாலம் நீ காத்திருக்கவேண்டும்,

18 அவர்களுக்கு எதிராக, தங்கள் இருதயங்களை கடினப்படுத்தினால் இந்த சந்ததி ஆக்கினைக்குட்படத்தக்கதாக அவர்களது சாட்சி போகும்;

19 ஏனெனில் அவர்கள் மனந்திரும்பவில்லையெனில் பூமி வெறுமையாகும் வரை பூமியின் குடிகளுக்கு மத்தியில் ஒரு பாழாக்கும் சவுக்கடி விழுந்து, அது அவ்வப்போது தொடர்ந்து அடிக்கப்படும், அதன் குடிகள் எனது வருகையின் பிரகாசத்தால் விழுங்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள்.

20 இதோ, எருசலேமின் அழிவைக் குறித்து நான் ஜனங்களுக்கு அறிவித்ததைப் போலவே, இந்தக் காரியங்களை நான் உனக்கு சொல்லுகிறேன், இதுவரைக்கும் நிரூபிக்கப்பட்டது போலவே எனது வார்த்தை இந்த முறையும் நிரூபிக்கப்படும்.

21 எனது ஊழியக்காரனாகிய ஜோசப், மனந்திரும்பும்படியும், எனக்கு முன்பாக மிகவும் நிமிர்ந்து நடக்கும்படியும் இனியும் மனுஷர்களின் வசமாகாதிருக்கும்படியும் இப்போது நான் உனக்கு கட்டளையிடுகிறேன்;

22 இதனால் நான் உனக்குக் கட்டளையிட்ட கட்டளைகளைக் கைக்கொள்வதில் திடமாயிரு; அப்படிச் செய்தால் நீ கொல்லப்பட்டாலும், இதோ, உனக்கு நான் நித்திய ஜீவனை அருளுவேன்.

23 எனது ஊழியக்காரனாகிய ஜோசப், சாட்சியத்தை வாஞ்சிக்கிற மனுஷனைக் குறித்து மீண்டும் இப்போது நான் உன்னோடு பேசுகிறேன்,

24 இதோ, அவனிடம் நான் சொல்லுகிறேன், அவன் தன்னை உயர்த்துகிறான், எனக்கு முன்பாக போதுமான அளவு தன்னை தாழ்த்தவில்லை, ஆனால் எனக்கு முன்பாக தலை வணங்கி, வல்லமையான ஜெபத்திலும் விசுவாசத்திலும், தனது இருதயத்தின் உத்தமத்திலே தன்னை தாழ்த்தினால், அவன் விரும்புகிற காரியங்களின் காட்சியை நான் அவனுக்குக் கொடுப்பேன்.

25 பின்னர் இந்த சந்ததியரின் ஜனங்களுக்கு அவன் சொல்வான், இதோ, ஜோசப் ஸ்மித் இளையவருக்கு கர்த்தர் காட்டிய காரியங்களை நான் கண்டேன், நான் அவைகளைக் கண்டதாலும் மனுஷருடையதல்லாமல் தேவனின் வல்லமையால் அவைகள் எனக்குக் காண்பிக்கப்பட்டதால் அவைகள் மெய்யானவை என்பதை நிச்சயமாக நான் அறிவேன்.

26 நான் அவைகளைக் கண்டேன், தேவனின் வல்லமையால் அவைகள் எனக்குக் காண்பிக்கப்பட்டது, என்ற வார்த்தைகளை மட்டும் அவன் சொல்ல வேண்டும், இது தவிர இந்தக் காரியங்களைக் குறித்து அவன் எதையும் சொல்லக்கூடாதென்று, எனது ஊழியக்காரனாகிய மார்டின் ஹாரிஸுக்கு கர்த்தராகிய நான் கட்டளையிட்டேன்.

27 ஆனால் இதை அவன் மறுதலித்தால், முன்பு என்னுடன் அவன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுவான். இதோ, அவன் ஆக்கினைக்குள்ளாகிறான்.

28 இப்பொழுது அவன் தன்னைத் தாழ்த்தி, அவன் செய்த தவறான காரியங்களை என்னிடம் அறிக்கையிட்டு, எனது கட்டளைகளைக் கைக்கொள்வதாக என்னுடன் உடன்படிக்கை செய்து, என்னில் விசுவாசத்தை பிரயோகித்தாலொழிய, இதோ, அத்தகைய காட்சிகள் எதையும் அவன் காண்பதில்லை என நான் அவனுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் நான் பேசிய காரியங்களைக்குறித்து எந்த காட்சியையும் அவனுக்கு நான் கொடுக்கமாட்டேன்.

29 அப்படியானால், எனது ஊழியக்காரனாகிய ஜோசப், இந்த காரியத்தைக்குறித்து இனி அவன் எதையும் செய்யவேண்டாம், இனியும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாமென நீ அவனுக்குச் சொல்லவேண்டுமென நான் உனக்கு கட்டளையிடுகிறேன்.

30 அப்படியானால், இதோ, ஜோசப் உனக்குச் சொல்லுகிறேன், ஒரு சில பக்கங்களை நீ, மொழிபெயர்த்தபின் மீண்டும் நான் உனக்குக் கட்டளையிடும்வரைக்கும் சில காலத்திற்கு நீ அதை நிறுத்தவேண்டும், பின்னர் மீண்டும் நீ மொழிபெயர்க்கலாம்.

31 இதை நீ செய்யவில்லையெனில், இதோ, உனக்கு எந்த வரமுமில்லை, உன்னிடத்தில் நான் ஒப்படைத்த காரியங்களை நான் எடுத்துப்போடுவேன்.

32 இப்பொழுது, உன்னை அழிக்க பதிவிருப்பதை நான் முன்னறிவதால், ஆம், எனது ஊழியக்காரனாகிய மார்டின் ஹாரிஸ் தன்னைத் தாழ்த்தாமலிருந்தால், என்னிடத்திலிருந்து ஒரு சாட்சியைப் பெறாமலிருந்தால் அவன் மீறுதலினுள் விழுவானென்பதை நான் முன்னறிகிறேன்.

33 பூமியின் மேலிருந்து உன்னை அழிக்க அநேகர் பதிவிருக்கிறார்கள், இந்த காரணத்திற்காகவே உன் வாழ்நாள் நீடித்திருக்கும்படி இந்த கட்டளைகளை உனக்குக் கொடுத்திருக்கிறேன்.

34 ஆம், இந்த காரணத்திற்காகவே, நான் உனக்குக் கட்டளையிடும்வரை நிறுத்தவும், அமைதியாயிருக்கவும் நான் சொன்னேன், நான் உனக்குக் கட்டளையிட்ட காரியத்தை நீ நிறைவேற்றும்படியாக உனக்கு வழியை ஏற்படுத்துவேன்.

35 எனது கட்டளைகளைக் கைக்கொள்வதில் நீ உண்மையுள்ளவனாயிருந்தால், கடைசி நாளில் நீ உயர்த்தப்படுவாய். ஆமென்.