வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 81


பாகம் 81

மார்ச் 15, 1832ல் ஒஹாயோவிலுள்ள ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். பிரதான ஆசாரியனாகவும் பிரதான ஆசாரியத்துவத்தின் தலைமையில் ஆலோசகராகவும் பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ் அழைக்கப்பட்டார். மார்ச் 1832ல் இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டபோது, தலைமையில் ஜோசப் ஸ்மித்துக்கு ஆலோசகர் அலுவலுக்கு ஜெஸ்ஸி காஸ் அழைக்கப்பட்டார் என்று வரலாற்று குறிப்புகள் காட்டுகின்றன. ஆயினும், இந்த நியமிப்பை ஒரு சீரான வகையில் தொடர அவர் தவறியபோது, அதைத் தொடர்ந்து பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூக்கு அழைப்பு மாற்றப்பட்டது. அந்த வெளிப்படுத்தல் (மார்ச் 1832 தேதியிட்ட), பிரதான தலைமையின் விதிமுறைக்கு ஒரு படியாக கருதப்படவேண்டும். மற்றும் அந்த முறையில் ஆலோசகரின் அலுவலுக்கு அழைத்து அந்த நியமிப்பின் கௌரவத்தை விவரிக்கவேண்டும். சகோதரர் காஸ் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் டிசம்பர் 1832ல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 18, 1833ல் குறிப்பிட்ட அலுவலுக்கு சகோதரர் வில்லியம்ஸ் நியமனம் செய்யப்பட்டார்.

1–2, ராஜ்யத்தின் திறவுகோல்கள் எப்போதும் பிரதான தலைமையினால் தரிக்கப்பட்டுள்ளது; 3–7, பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ் அவருடைய ஊழியத்தில் உண்மையுள்ளவராயிருந்தால், அவருக்கு நித்திய ஜீவன் உண்டு.

1 என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ், மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்: உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் வார்த்தையை பேசுகிற அவனுடைய சத்தத்துக்கு செவிகொடு, என்னுடைய சபையில் ஒரு பிரதான ஆசாரியனாக இருக்கவும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுக்கு ஒரு ஆலோசகராகவும் நீ அழைக்கப்பட்ட அழைப்புக்குச் செவிகொடு.

2 எப்போதுமே பிரதான ஆசாரியத்துவத்தின் தலைமைக்கு சொந்தமான ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் அவனிடம் கொடுத்திருக்கிறேன்.

3 ஆகவே, மெய்யாகவே நான் அவனை ஏற்றுக்கொள்கிறேன், அவனை ஆசீர்வதிப்பேன், நான் உன்னை நியமித்த அலுவலில் ஆலோசனையிலும், உன்னுடைய இருதயத்தில், பகிரங்கமாகவும் தனியாகவும், சத்தமாகவும் எப்போதுமே ஜெபிப்பதிலும், ஜீவிக்கிறவர்களின் தேசத்திலும் உன்னுடைய சகோதரருக்கு மத்தியிலும் உன்னுடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற ஊழியத்தில் நீ உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் உன்னையும் ஆசீர்வதிப்பேன்.

4 இந்த காரியங்களைச் செய்வதில் உன்னுடைய சக மனுஷர்களுக்கு நீ மகத்தான நன்மையைச் செய்வாய், உன்னுடைய கர்த்தரின் மகிமையை கனம்பண்ணுவாய்.

5 ஆகவே, உண்மையுள்ளவனாயிரு; நான் உன்னை நியமித்த அலுவலில் உறுதியாய் இரு; பலவீனமானவர்களுக்கு உதவு, தொங்கிய கைகளை நிமிர்த்து, தளர்ந்த முழங்கால்களை பெலப்படுத்து.

6 முடிவுபரியந்தம் நீ உண்மையுள்ளவனாயிருந்தால் அழியாமையின் கிரீடத்தையும், என்னுடைய பிதாவின் வீட்டில் நான் ஆயத்தம் செய்து வைத்திருக்கிற வாசஸ்தலங்களில் நித்திய ஜீவனையும் பெறுவாய்.

7 இதோ, இந்த வார்த்தைகள் அல்பாவும் ஓமெகாவுமான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள். ஆமென்.