வீடு திரும்புவதற்கான வழியை நினைவில் வைத்திருங்கள்
பின்பற்றுவதற்கு இயேசு கிறிஸ்துவின் சரியான முன்மாதிரி நம்மிடம் உள்ளது, அவருடைய போதனைகள், அவருடைய வாழ்க்கை மற்றும் பாவநிவாரண பலியினால் மட்டுமே நம்முடைய நித்திய வீட்டை நோக்கிய பயணம் சாத்தியமாகிறது.
1946 ஆம் ஆண்டில், இளம் ஆராய்ச்சியாளர் ஆர்தர் ஹஸ்லர் தனது சிறுவயது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மலை ஓடையில் நடந்தபோது, அவருக்கு ஒரு அனுபவம் கிடைத்தது, மீன்கள் எவ்வாறு தாங்கள் பிறந்த நீரோடைகளுக்குத் திரும்புகின்றன என்பதைப்பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புக்கு அது வழிவகுத்தது.
ஒரு மலையில் ஏறினாலும், அவருக்குப் பிடித்த குழந்தை பருவ நீர்வீழ்ச்சியைக் காணாமல், ஹஸ்லர் திடீரென்று மறந்துபோன நினைவுக்கு கொண்டு வரப்பட்டார். அவர் சொன்னார், “பாசி மற்றும் கொலம்பைனின் நறுமணத்தைத் தாங்கி, குளிர் காற்று பாறைகளைச் சுற்றி வீசியதால், இந்த நீர்வீழ்ச்சியின் விவரங்களும், மலையின் முக அமைப்பும் திடீரென்று என் மனக்கண்ணில் நுழைந்தன.”1
இந்த வாசனைகள் அவரது குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் புதுப்பித்து, வீட்டை நினைவுபடுத்தின.
வாசனைகள் அவருக்கு அத்தகைய நினைவுகளைத் தூண்டினால், பல வருடங்கள் திறந்த கடலில் இருந்தபின், அவைகள் பிறந்த சரியான ஓடைக்குத் திரும்ப, சால்மனுக்கு வாசனை ஒருவேளை தூண்டக்கூடியதாக இருக்கலாம் என்று அவர் நியாயப்படுத்தினார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில், ஹஸ்லர், மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, சால்மன் கடலில் இருந்து வீடு திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான மைல்கள் செல்ல உதவும் வாசனைகளை நினைவில் வைத்திருப்பதை நிரூபித்தார்.
இந்த விவரம் இந்த வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, நம்முடைய பரலோக பிதாவிடம் செல்லும் பாதையை அடையாளம் கண்டுகொள்வதும், நினைவில் கொள்வதும், பயணம் முழுவதும் உண்மையுடனும் மகிழ்ச்சியுடனும் விடாமுயற்சியுடன் செயல்படுவதுதான் என என்னை நினைக்க வைத்தது.
நான்கு நினைவூட்டல்களைப்பற்றி நான் நினைத்தேன், நம் வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது, நம்முடைய பரலோக வீட்டின் உணர்வுகளை மீண்டும் எழுப்ப முடியும்.
முதலில், நாம் தேவனின் பிள்ளைகள் என்பதை நினைவில் கொள்ளலாம்
நமக்கு ஒரு தெய்வீக பாரம்பரியம் உள்ளது. நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதையும், நாம் அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் அறிவது நமது பரலோக வீட்டிற்குத் திரும்பும் பயணத்தின் முதல் படிகளில் ஒன்றாகும்.
இந்த பாரம்பரியத்தை நினைவுகொள்ளுங்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆவிக்குரிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தவறாமல் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் தனிப்பட்ட மதிப்பை அளவிடுவதற்கும் உங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும் உலகத்திடம் மட்டும் திரும்புவதை விட, அவரிடமிருந்து உங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டிகளை நம்புங்கள்.
சமீபத்தில் நான் ஒரு அன்பானவரை, அவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு சந்தித்தேன். அவர் மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, “நான் தேவனின் பிள்ளை” என்ற பாடலை அவருக்காக யாராவது பாடுவதே அவர் விரும்பியதெல்லாம் என்று அவர் உணர்ச்சியுடன் என்னிடம் சொன்னார். அந்த எண்ணம் மட்டுமே, துன்பத்தின் அந்த நேரத்தில் தனக்குத் தேவையான அமைதியைக் கொடுத்தது என்று அவர் சொன்னார்.
நீங்கள் யார் என்பதை அறிவது, நீங்கள் என்ன உணர்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை மாற்றுகிறது.
நீங்கள் உண்மையிலேயே யார் என்பதைப் புரிந்துகொள்வது, நமது பரலோக வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியை அடையாளம் காணவும், அங்கிருக்க ஏங்கவும் உங்களை ஆயத்தப்படுத்துகிறது.
இரண்டாவதாக, நம்மைப் பாதுகாக்கும் அஸ்திவாரத்தை நாம் நினைவில் கொள்ளலாம்
பரலோக பிதாவுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் நீதியுள்ளவர்களாகவும், உண்மையாகவும், விசுவாசமுள்ளவர்களாகவும் இருக்கும்போது, மற்றவர்கள் கட்டளைகளையும் இரட்சிப்பின் கொள்கைகளையும் பெரிதும் மதிக்காதபோதும் கூட, வலிமை நமக்கு வருகிறது.2
மார்மன் புத்தகத்தில், ஏலமன் தனது மகன்களுக்கு சத்துருவின் சோதனையைத் தாங்கும் வலிமையைப் பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் மீது தங்கள் அஸ்திவாரங்களை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்தான். சாத்தானின் பலத்த காற்று மற்றும் புயல்கள் நம்மீது அடித்துக்கொண்டிருக்கின்றன, ஆனால் பாதுகாப்பான இடமாகிய, நம் மீட்பரில் நம் நம்பிக்கையை வைத்திருந்தால், நம்மை கீழே இழுத்துச் செல்ல அவற்றுக்கு அதிகாரம் இருக்காது.3
அவருடைய குரலைக் கேட்கவும், அவரைப் பின்பற்றவும் நாம் தேர்வு செய்யும்போது, அவருடைய உதவியைப் பெறுவோம் என்பதை தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் அறிவேன். நமது சூழ்நிலைகளின் பரந்த கண்ணோட்டத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும் பெறுவோம். நமது பரலோக வீட்டிற்கு வழிகாட்டும் ஆவிக்குரிய தூண்டுதலை நாம் உணருவோம்.
மூன்றாவதாக, நாம் ஜெபத்தோடு இருப்பதை நினைவில் கொள்ளலாம்
ஒற்றை தொடுதல் அல்லது குரல் கட்டளை மூலம், பரந்த மற்றும் சிக்கலான கணினிகளின் இணையதளத்தில் சேமிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட, ஏராளமான தரவுகளிலுள்ள எந்தவொரு தலைப்பிலும் பதில்களைத் தேட ஆரம்பிக்க முடிகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மறுபுறம், பரலோகத்திலிருந்து பதில்களைத் தேடத் தொடங்குவதற்கான அழைப்பின் எளிமை நமக்கு உள்ளது. “எப்போதும் ஜெபியுங்கள், நான் என் ஆவியை உங்கள் மீது ஊற்றுவேன்.” அப்பொழுது கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார், “உங்களுடைய ஆசீர்வாதம் மிகப் பெரியது, ஆம், நீங்கள் பூமியின் பொக்கிஷங்களைப் பெறுவதை விடவும் அதிகம்.”4
தேவன் நம் ஒவ்வொருவரையும் முழுமையாக அறிந்தவர், நம்முடைய ஜெபங்களைக் கேட்கத் தயாராக இருக்கிறார். நாம் ஜெபிக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய நீடித்த அன்பைக் காண்கிறோம், கிறிஸ்துவின் நாமத்தில் பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவிடம் நாம் எவ்வளவு அதிகமாக ஜெபிக்கிறோமோ, அவ்வளவு இரட்சகரை நம் வாழ்வில் கொண்டு வருகிறோம், நம்முடைய பரலோக வீட்டிற்கு, அவர் குறித்த பாதையை நாம் சிறப்பாக அடையாளம் காண்கிறோம்.
நான்காவதாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதை நாம் நினைவில் கொள்ளலாம்
மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், தயவைக் காட்டுவதன் மூலமும், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிக்கும்போது, உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறோம்.
நம்முடைய செயல்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் நம் சொந்த வாழ்க்கையையும் கணிசமாக ஆசீர்வதிக்கும். அன்பான சேவை செய்பவர் மற்றும் பெறுபவர், இருவரின் வாழ்க்கையிலும் அர்த்தத்தை சேர்க்கிறது.
உங்கள் செயல்களின் சேவையினாலும், உங்கள் முன்மாதிரியின் சேவையினாலும், மற்றவர்களை நன்மைக்காக நீங்கள் செல்வாக்கடையச் செய்யக்கூடிய திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
மற்றவர்களுக்கு அன்பான சேவை, நம்முடைய பரலோக வீட்டிற்கு செல்லும் பாதையில், நம்முடைய இரட்சகரைப் போல மாறுவதற்கான பாதையில், நம்மை வழிநடத்துகிறது.
1975 ஆம் ஆண்டில், ஒரு உள்நாட்டுப் போரின் விளைவாக, அர்னால்டோ மற்றும் யூஜீனியா டெல்ஸ் கிரிலோ மற்றும் அவர்களது குழந்தைகள் தங்கள் வீட்டையும், பல தசாப்த கால உழைப்பால் அவர்கள் கட்டிய அனைத்தையும், விட்டு வெளியேற வேண்டியிருந்தது, தங்கள் சொந்த நாடான போர்ச்சுகல் திரும்பி, சகோதரர் மற்றும் சகோதரி டெல்ஸ் கிரிலோ மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதற்கான சவாலை எதிர்கொண்டனர். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேர்ந்த பிறகு, அவர்கள் சொன்னார்கள்,” எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் இழந்தோம், ஆனால் அது ஒரு நல்ல விஷயம், ஏனென்றால் அது நித்திய ஆசீர்வாதங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது.”5
அவர்கள் தங்கள் பூலோக வீட்டை இழந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் பரலோக வீட்டிற்கு திரும்புவதற்கான வழியைக் கண்டார்கள்.
வீட்டிற்கு செல்லும் பாதையைப் பின்பற்ற நீங்கள் எதை விட்டுச் செல்ல வேண்டியதிருந்தாலும், அது ஒரு நாளில் தியாகம் இல்லாததுபோலத் தோன்றும்.
பின்பற்றுவதற்கு இயேசு கிறிஸ்துவின் சரியான முன்மாதிரி நம்மிடம் உள்ளது, அவருடைய போதனைகள், அவருடைய வாழ்க்கை மற்றும் அவருடைய மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் உட்பட, அவரது பாவநிவாரண பலிநிமித்தம் மட்டுமே நம் நித்திய வீட்டை நோக்கிய பயணம் சாத்தியமாகும்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதையும், அவர் பாதையை நமக்குக் காண்பிப்பதற்காக தனது குமாரனை6 அனுப்பும்படி, அவர் உலகை மிகவும் நேசித்தார் என்பதையும் நினைவில் கொள்வதன் மகிழ்ச்சியை அனுபவிக்க உங்களை அழைக்கிறேன். உண்மையுள்ளவர்களாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும், உங்கள் வாழ்க்கையை இரட்சகரை நோக்கித் திருப்பவும், அவர்மீது உங்கள் அஸ்திவாரத்தை கட்டமைக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் பயணத்தில் ஜெபத்துடன் இருக்கவும், பிறருக்கு சேவை செய்யவும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, இயேசு கிறிஸ்து உலகின் மீட்பர் மற்றும் இரட்சகர் என நான் சாட்சியமளிக்கிறேன். அவர் தான் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையின் மேஜைக்கு நம்மை அழைத்துச் செல்லவும், நமது பயணத்தில் நமக்கு வழிகாட்டவும் முடியும். நாம் அவரை நினைவில் வைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்ல அவரைப் பின்பற்றுவோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.