என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜூன் 3–9: “அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்” மோசியா 29–ஆல்மா 4


ஜூன் 3–9: “அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்” “மோசியா 29–ஆல்மா 4,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“ஜூன் 3–9. மோசியா 29–ஆல்மா 4” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)

இளைய ஆல்மா பிரசங்கித்தல்

ஆல்மா இளையவன் பிரசங்கித்தல் – காரி எல்.காப்

ஜூன் 3–9: “அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்”

மோசியா 29ஆல்மா 4

இராஜாக்களுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயாதிபதிகளை நியமிக்க மோசியா இராஜாவின் முன்மொழிதலை வெறும் ஞானமான அரசியல் சீரமைப்பாக, சிலர் பார்க்கலாம். ஆனால் நேபியர்களுக்கு, குறிப்பாக துன்மார்க்க இராஜா நோவாவின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு இந்த மாற்றம் ஆவிக்குரிய முக்கியத்துவமாகவுமிருந்தது. ஒரு அநீதியான ராஜா தன் மக்களை எப்படிப் பாதித்திருக்கிறான் என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், அப்படிப்பட்ட செல்வாக்கிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் “மிகவும் ஆர்வமாக” இருந்தார்கள். தங்களுடைய சொந்த நீதிக்கு பொறுப்புள்ளவர்களாயிருக்கவும், “[தங்களுடைய] சொந்த பாவங்களுக்காக பதிலளிக்கவும்” இந்த மாற்றம் அவர்களை அனுமதிக்கும் (மோசியா 29:38).

நிச்சயமாக, இராஜாக்களின் ஆட்சியின் முடிவு, நேபியர்களின் சமுதாயத்தில் பிரச்சினைகளின் முடிவென்று அர்த்தமாகாது. நிகோர் மற்றும் அம்லிசி போன்ற தந்திரமான ஜனங்கள் பொய்யான கருத்துக்களை ஊக்குவித்தார்கள், அவிசுவாசிகள் பரிசுத்தவான்களை துன்புறுத்தினார்கள், சபையின் அநேக உறுப்பினர்கள் பெருமைக்காரர்களாகி வீழ்ந்துபோனார்கள். இருந்தும், “தேவனை தாழ்மையுடன் பின்பற்றியவர்கள்” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், “நிலைநிற்பவர்களாயும் அசைக்கமுடியாதவர்களுமாய்” நிலைத்திருந்தார்கள் (ஆல்மா 4:15, 1:25)

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

மோசியா 29:26–27; ஆல்மா 2:1–7

என்னுடைய சமுதாயத்தில் ஒரு நேர்மறையான செல்வாக்காய் நானிருக்கமுடியும்.

வெறும் ஐந்து வருட நியாயாதிபதிகளின் ஆட்சியில், எது சரியென்பதை வழக்கமாக ஜனங்களின் குரல் தேர்ந்தெடுக்குமென்ற மோசியாவின் அறிவிப்பை பரிட்சை பார்க்கிற ஒரு குழப்பம் எழுந்தது (மோசியா 29:26 பார்க்கவும்). ஆல்மா 2:1–7ஐப் படிக்கவும், பிரச்சினை என்ன, அதற்கு நேபியர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டறியவும். “சபையின் ஜனங்கள்” தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவில்லையென்றால் என்ன நடந்திருக்கும்? உங்கள் சமூகத்தில் நீங்கள் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைப் பற்றி இந்த விவரத்திலிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (மோசியா 29:26–27ஐயும் பார்க்கவும்).

உங்கள் சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? உங்கள் குரல் “ஜனங்களின் குரலோடு” சேர்க்கப்பட்டிருக்கிறதென்பதை நேபியர்களைப்போல நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவராகிய நீங்கள் வேறு எந்த வழிகளில் உங்கள் சமூகத்தில் நன்மைக்காக செல்வாக்கு ஏற்படுத்தலாம்?

டாலின் எச். ஓக்ஸ், “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்,” லியஹோனா, நவ. 2020, 26–29 பார்க்கவும்.

ஆல்மா 1

தவறான கோட்பாட்டை அடையாளம் காண தேவனுடைய வார்த்தை எனக்கு உதவும்.

நிகோர் இறுதியில் தான் கற்பித்தது பொய் என்று ஒப்புக்கொண்டாலும், அவனது போதனைகள் பல ஆண்டுகளாக நேபியர்களை தொடர்ந்து பாதித்தன. நிகோர் கற்பித்ததை மக்கள் விரும்பினார்கள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? ஆல்மா 1:2–6ல், நிகோரின் போதனைகளில் உள்ள பொய்களையும், அந்த பொய்களை மறைக்க அவன் பயன்படுத்திய உண்மையையும் தேடுங்கள்.

“தேவனுடைய வார்த்தைகளுடன்” கிதியோன், நிகோரை எதிர்த்து நின்றான் (ஆல்மா 1:7, 9). நிகோரின் பொய்களை மறுக்கும் சில வசனங்கள் இங்கே உள்ளன: மத்தேயு 7:21–23; 2 நேபி 26:29–31; மோசியா 18:24–26; மற்றும் ஏலமன் 12:25–26. ஒவ்வொரு வசனத்தையும் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கவும். தீர்க்கதரிசிகளிடமிருந்து நம் நாளில் தவறான போதனைகளை மறுக்கும் எதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்?

ஆல்மா 33:1:19–31; 4:6–15

இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் “தேவனைப் பின்பற்றும் தாழ்மையானவர்கள்”.

சபை விருத்தியடைந்த நேரங்கள், ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபை உறுப்பினர்கள் அந்த வளர்ச்சியை வேறுவிதமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை ஆல்மாவின் அதிகாரங்கள் 1 மற்றும் 4 விவரிக்கின்றன. உதாரணமாக, ஆல்மா 1:19–30ஐ ஆல்மா 4:6–15 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள், சில வருடங்களிலேயே சபை உறுப்பினர்கள் எப்படி மாறினர் என்பதைப் பார்க்கவும். நீங்கள் வாசித்தவற்றின் அடிப்படையில், இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களைப் பற்றி எப்படி உணருகிறார்கள்? கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்கள் செல்வத்தையும் செழுமையையும் பற்றி என்ன மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்? உங்களுடைய சொந்த மனப்பாங்கை மாற்ற என்ன உணர்த்தியதாக நீங்கள் உணருகிறீர்கள்?

உங்களோடு வேதங்களை ஒப்பிடுங்கள். வேதங்களின் கதைகளும் போதனைகளும் எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, இன்று நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் ஆல்மா 1–4ல் நேபியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்குமிடையில் உள்ள ஒற்றுமைகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

வேத பாட வகுப்பு சின்னம்

ஆல்மா 4:6–20

எனது உதாரணமும் சாட்சியமும் இருதயங்களை மாற்ற முடியும்.

ஆல்மா தனது மக்களிடையே என்ன நடந்தது என்பதைப் பார்த்தபோது அவன் அடைந்த சோகத்துடன் நீங்கள் ஒப்பிடலாம். ஆல்மா 4:6–15ல் அவன் கண்ட பிரச்சனைகளைத் தேடுங்கள். இதே போன்ற பிரச்சனைகளை நீங்கள் கவனித்தீர்களா? ஒருவேளை இந்த பிரச்சனைகளுடன் போராடும் அன்பானவரைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். உதவ நீங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசித்திருக்கிறீர்களா?

தலைமை நியாயாதிபதியாக ஆல்மா இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த நபர் என்று சிலர் கூறலாம். ஆனால் ஒரு சிறந்த வழியிருந்ததென ஆல்மா நினைத்தான். வசனங்கள் 16–20, நீங்கள் வாசிக்கும்போது அவனுடைய ஜனங்களுக்கு உதவ அவனுடைய அணுகுமுறையில் எது உங்களை கவர்கிறது?

ஆல்மா தேவனின் வார்த்தையிலும் “தெளிவான சாட்சியிலும்” மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான் (வசனம் 19). தெளிவான சாட்சியின் வல்லமைக்கு நீங்கள் என்ன உதாரணங்கள் பார்த்தீர்கள்? நீங்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப் பற்றிய உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகளில் சிந்திக்கும்போது, நீங்கள் ஆல்மா 4:6–14ஐ மீண்டும் வாசிக்கலாம். இந்த வசனங்களில் உள்ள சபை உறுப்பினர்களின் செயல்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய போதனைகளைப் பற்றிய அவர்களின் சாட்சியங்களைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன? தங்கள் மீதும் மற்றவர்களின் மீதும், அவர்களின் செயல்களின் தாக்கம்பற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? அது வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் பகிரப்பட்டாலும், மற்றவர்களின் தெளிவான சாட்சியால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வழிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் சாட்சியை வார்த்தைகளிலோ அல்லது செயலிலோ பகிர்ந்துகொள்ளும் வழிகளைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் சாட்சியால் யார் பயனடைவார்கள்?

காரி ஈ. ஸ்டீவென்சன், “உங்கள் சாட்சியை போஷித்தலும் சொல்லுதலும்,” லியஹோனா, நவ. 2022, 111–14 பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஆல்மா 1:2–9

தவறான போதனைகளை அடையாளம் காண கர்த்தர் எனக்கு உதவக்கூடும்.

  • ஆல்மா 1:2–4ஐ உங்கள் குழந்தைகளுடன் படிப்பதற்கான ஒரு வழி, தவறான போதகனான நிகோர் கற்பித்த வாசகங்களைப் பயன்படுத்தி உண்மை அல்லது பொய்யான வினாடி வினாவை உருவாக்க அவர்களுக்கு உதவுவதாகும். சாத்தான் ஏன் அடிக்கடி உண்மைகளையும் பொய்களையும் இணைக்கிறான் என்பதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேசலாம். சில உதாரணங்களைச் சிந்திக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். 7–9 வசனங்களில், நிகோரின் பொய்களை கிதியோன் எவ்வாறு எதிர்த்தான்?

ஆல்மா 1:19–25

இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினராக, நான் மற்றவர்களை நேசிக்கிறேன், சேவை செய்கிறேன்.

  • ஆல்மாவின் நாளில் கர்த்தரின் சபையின் சில உறுப்பினர்கள் தாராள மனப்பான்மையுடனும், கொடுப்பவர்களாகவும் இருந்தனர், மற்ற உறுப்பினர்கள் இரக்கமற்றவர்களாகவும் பெருமைக்குரியவர்களாகவும் இருந்தனர். இந்த அனுபவங்களிலிருந்து உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள உதவ, நீங்கள் ஆல்மா 1:27, 30ஐ ஒன்றாக வாசித்து, கர்த்தரின் சபையின் அங்கத்தினர்கள் உதவிய விதமான நபர்களின் பட்டியலை உருவாக்கலாம். நம் அன்பு மற்றும் உதவி “[தேவைப்படுவர்கள்]” (ஆல்மா 1:30) யார் என்று நமக்குத் தெரியும்?

  • மக்கள் நம்மிடம் கருணையற்றவர்களாயிருந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? ஆல்மா 1:19–20 இல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை உங்கள் குழந்தைகளுடன் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். வசனங்கள் 22 மற்றும் 25ல் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி பேசுங்கள். மற்றவர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கும்போது பதிலளிப்பதற்கான வழிகளை நீங்கள் பயிற்சி செய்யலாம்.

ஆல்மா 4:8–20

என்னுடைய சாட்சி மற்றவர்களை பலப்படுத்தலாம்.

  • பெரும்பாலும் ஒரு குழந்தையின் “தெளிவான சாட்சி” (ஆல்மா 4:19) மற்றவர்கள் மீது வலுவான செல்வாக்கை ஏற்படுத்தலாம். இதைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, நீங்கள் அவர்களுடன் சேர்ந்து ஆல்மா 4:8–12, 15ஐ வாசிக்கலாம், இது சபையில் நடக்கும் பிரச்சனைகளை அடையாளம் காண அவர்களுக்கு உதவுகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ஆல்மா என்ன செய்ய முடியும்? ஆல்மா 4:16–20இல் என்ன செய்ய முடிவு செய்தான் என்பதை அறிய அவர்களுக்கு உதவுங்கள். கிறிஸ்துவைப் பற்றிய வேறொருவரின் சாட்சி உங்களை எவ்வாறு பலப்படுத்தியது என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

  • உங்கள் பிள்ளைகளுக்கு சாட்சியம் என்றால் என்ன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தேவைப்பட்டால், பொது மாநாட்டில் சாட்சி பகரும் ஒரு செய்தியாளரின் காணொலி பகுதியைக் காட்டவும். இந்த ஆதாரங்களிலிருந்து சாட்சிகள்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? உங்கள் பிள்ளைகள் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்வதை பயிற்சி செய்யட்டும்.

அம்லிசியர்களுடன் நேபியர்கள் போராடுகிறார்கள்

Alma and Amlici (ஆல்மாவும் அம்லிசியும்) – ஸ்காட் எம். ஸ்நோ