அதிகாரம் 4
ஆல்மா மனமாறிய ஆயிரக்கணக்கானோருக்கு ஞானஸ்நானம் கொடுத்தல் – அக்கிரமம் சபையினுள் பிரவேசித்தலும், சபையின் வளர்ச்சி தடைபடுதலும் – நேபிகா, தலைமை நியாயாதிபதியாக நியமிக்கப்படுதல் – ஆல்மா, பிரதான ஆசாரியனானதால் ஊழியத்திற்கென தன்னை அர்ப்பணித்தல். ஏறக்குறைய கி.மு. 86–83.
1 இப்பொழுது, அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆறாம் வருஷ ஆளுகையிலே, சாரகெம்லா தேசத்திலே வாக்குவாதங்களோ, யுத்தங்களோ உண்டாயிருக்கவில்லை;
2 ஆனால் ஜனங்கள் உபத்திரவப்பட்டார்கள், ஆம், ஜனங்கள் தங்களுடைய சகோதரரை இழந்தமையாலும், தங்களுடைய ஆடுகளையும், மந்தைகளையும் இழந்தமையாலும், லாமானியரின் காலால் மிதியுண்டு அழிக்கப்பட்ட தங்களுடைய வயல் வெளிகளின் தானியங்களை இழந்தமையாலும், பெரிதும் உபத்திரவப்பட்டார்கள்.
3 அனைத்து ஆத்துமாக்களும் துக்கிக்கும்படியாக அவர்களுடைய உபத்திரவம் கொடியதாயிருந்தது; இந்த நியாயத்தீர்ப்பு தங்களுடைய துன்மார்க்கத்தினாலும், அருவருப்பானவைகளாலும், தேவனிடத்திலிருந்து வந்ததென்று நம்பினார்கள். ஆகவே அவர்களுடைய கடமையைக் குறித்து நினைவூட்டப்பட்டார்கள்.
4 அவர்கள் பூரணமாய் சபையை ஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள்; ஆம், அநேகர் சீதோன் தண்ணீர்களிலே ஞானஸ்நானம் பெற்று, தேவனுடைய சபையிலே சேர்ந்து கொண்டார்கள்; ஆம், தன் தகப்பனாகிய ஆல்மாவினால், சபையின் ஜனத்தாரின் மீது பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆல்மாவினுடைய கரத்தால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
5 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஏழாம் வருஷத்திலே, ஏறக்குறைய மூவாயிரத்து ஐநூறு ஆத்துமாக்கள் தேவனுடைய சபையிலே தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்விதமாய் நேபியின் ஜனத்தின்மீது நியாயாதிபதிகளின் ஆளுகையினுடைய ஏழாவது வருஷமும் முடிவுற்றது; அக்காலம் முழுவதிலும் சமாதானம் நிலவியது.
6 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே, தங்களுடைய உழைப்பினிமித்தமும், தாங்கள் அடைந்த மிகுந்த ஐஸ்வரியத்தினாலும், மென்மையான பட்டினாலும், பஞ்சு நூலினாலும், அநேக ஆடுகளையும், மந்தைகளையும், பொன்னையும் வெள்ளியையும் மற்றும் பலவிதமான விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றதினாலும், சபையின் மக்கள் பெருமை கொள்ளத் துவங்கினார்கள், இவையெல்லாவற்றினிமித்தமும் தங்களுடைய கண்களின் மேட்டிமையில், விலையுயர்ந்த வஸ்திரங்களை உடுத்தத் தொடங்கினார்கள்.
7 இதுவே ஆல்மாவும், ஆல்மாவினால் சபையின் ஆசிரியர்களாயும், ஆசாரியர்களாயும், மூப்பர்களாயும் நியமிக்கப்பட்டவர்களில் அநேகரும் உபத்திரவம் அடையக் காரணமாயிற்று; ஆம், அவர்களில் அநேகர் ஜனங்கள் மத்தியிலே, துன்மார்க்கம் தொடங்குவதை தாங்கள் கண்டதினிமித்தம் மிகவும் வேதனையடைந்தார்கள்.
8 சபையின் ஜனங்கள் தங்கள் கண்களின் மேட்டிமையால் உயர்த்தப்பட்டு, இருதயங்களை ஐஸ்வரியங்கள் மீதும், உலகத்தின் வீணானவைகளின் மீதும் வைத்து, ஒருவரையொருவர் இகழ்ந்து தங்களுடைய இஷ்டப்படியும், விருப்பத்தின்படியும், நம்பாதவர்களை துன்புறுத்த தொடங்குவதையும் அவர்கள் மிகுந்த வேதனையோடே கண்டார்கள்.
9 இப்படியாய் நியாயாதிபதிகளின் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே சபையின் ஜனங்களுக்குள்ளே மிகுந்த பிணக்குகள் உண்டானது; ஆம், அவர்களுக்குள்ளே உண்டான பொறாமையும், தர்க்கமும், துர்க்குணமும், துன்புறுத்தல்களும், பெருமையும், தேவனுடைய சபையைச் சேராதோரிலே உண்டான பெருமையையும் மிஞ்சுவதாய் இருந்தது.
10 இப்படியாக நியாயாதிபதிகளுடைய ஆளுகையின் எட்டாம் வருஷமும் முடிவுற்றது; சபையில் உண்டான துன்மார்க்கம், சபையைச் சார்ந்திராதோருக்கு பெரிய தடைக்கல்லாயிற்று; ஆகவே சபையின் வளர்ச்சி குறையத் தொடங்கியது.
11 அந்தப்படியே, ஒன்பதாம் வருஷ தொடக்கத்திலே ஆல்மா சபையிலே உண்டான துன்மார்க்கத்தைக் கண்டான். சபையின் உதாரணம், அவிசுவாசிகளை அக்கிரமத்தை ஒவ்வொன்றாய் செய்யத்தூண்டி, ஜனத்தின் அழிவை வருஷிக்கப்பண்ணுவதையும் கண்டான்.
12 ஆம், சிலர் பெருமையால் தங்களை உயர்த்தி, பிறரை தூஷிப்பதையும், சிறுமையானவர்களையும், வஸ்திரமில்லாதவர்களையும், பட்டினியாயிருப்போரையும் விடாய்த்திருப்போரையும், வியாதியஸ்தரையும், உபத்திரவப்படுவோரையும், முதுகைக்காட்டி புறக்கணிக்கிற மிகுதியான பட்சபாதங்களையும் ஜனங்களுக்குள்ளே கண்டான்.
13 ஜனங்களுக்குள்ளே மிகுந்த புலம்பல் உண்டாக இதுவே காரணமாயிற்று, மற்ற சிலர் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, தரித்திரருக்கும் சிறுமையானோருக்கும், தங்களுடைய பொருளையளித்தும், பட்டினியானோரை போஷித்தும், தங்களுடைய உதவியை நாடி நின்ற சிறுமையானோருக்கு உதவிசெய்து, தீர்க்கதரிசன ஆவியின்படியே வரவிருக்கிற கிறிஸ்துவின் நிமித்தம் சகலவிதமான உபத்திரவங்களையும் சகித்து;
14 இயேசு கிறிஸ்துவின் சித்தம், வல்லமை மற்றும் மரணக்கட்டுக்களிலிருந்து விடுதலை ஆகியவற்றின்படி, மரித்தோரின் உயிர்த்தெழுதலினிமித்தம், மிகுந்த சந்தோஷத்தினாலே நிரப்பப்பட்டு பாவமன்னிப்பை தக்கவைக்கும்படிக்கு அந்நாளை எதிர்நோக்கினார்கள்.
15 இப்பொழுதும், அந்தப்படியே, தேவனை தாழ்மையாய் பின்பற்றுகிறவர்களுடைய உபத்திரவங்களையும், மீதியான ஜனங்கள் அவர்கள் மீது துன்புறுத்தல்களைக் குவிப்பதையும், பட்சபாதமாய் இருப்பதையும், ஆல்மா கண்டு மிகவும் துக்கித்தான்; இருப்பினும் கர்த்தருடைய ஆவியானவர் அவனைவிட்டு நீங்கவில்லை.
16 அவன் சபையின் மூப்பர்களுக்குள்ளே புத்திமான் ஒருவனை தெரிந்துகொண்டு, ஜனங்களுடைய ஒப்புதலின்படியே கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களின்படி, சட்டங்களை அமல்படுத்தும்படிக்கு அதிகாரம் பெற்றிருக்கும்படிக்கு, ஜனங்களுடைய துன்மார்க்கத்திற்கு தக்கதாயும், குற்றங்களுக்கேற்றபடியும், சட்டங்களை அமல்படுத்த அதிகாரத்தைக் கொடுத்தான்.
17 இந்த மனுஷனுடைய பெயர் நேபிகா என்பதாகும். அவன் பிரதான நியாயாதிபதியாக நியமிக்கப்பட்டான்; அவன் நியாயம் விசாரிக்கவும், ஜனங்களை ஆளவும், நியாயாசனத்திலே வீற்றிருந்தான்.
18 சபையின் பிரதான ஆசாரிய ஸ்தானத்தை அவனுக்குக் கொடாமல், ஆல்மா பிரதான ஆசாரிய அலுவலை தானே வைத்துக்கொண்டான்; நியாயாசனத்தையோ நேபிகாவிற்கு கொடுத்தான்.
19 அவன் தன் ஜனம் அல்லது நேபியின் ஜனத்திற்குள்ளே போய், அவர்களது கடமையைக் குறித்து அவர்களுக்கு நினைவூட்ட ஏவும்படியாக, தேவனின் வார்த்தையை போதிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் தெளிவான சாட்சியமைக் கொண்டு மாத்திரம் அவர்களை அடக்கவல்லது எனக்கண்டு, தேவனுடைய வார்த்தையாலே அவர்களுக்குள்ளே உண்டாயிருந்த சகல மேட்டிமையையும், தந்திரங்களையும், பிணக்குகளையும் நீக்கிப்போடும்படிக்கே அப்படிச் செய்தான்.
20 நேபியினுடைய ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் ஒன்பதாம் வருஷ துவக்கத்திலே, ஆல்மா நேபிகாவிற்கு நியாயாசனத்தை ஒப்புவித்துவிட்டு, அவன் வெளிப்படுத்தல் மற்றும் தீர்க்கதரிசன ஆவிக்கேற்றபடி, வசனத்திற்கு சாட்சியமாயிருக்கவும், தேவனுடைய பரிசுத்த முறைமையிலான பிரதான ஆசாரியத்துவத்திற்கு தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தான்.