வேதங்கள்
ஆல்மா 56


அதிகாரம் 56

லாமானியரோடான யுத்தத்தின் நிலைமையைச் சொல்லி, மரோனிக்கு ஏலமன் ஒரு நிருபம் எழுதுதல் – அந்திபஸ்ஸூம் ஏலமனும் லாமானியர் மேல் பெரியதோர் ஜெயத்தைப் பெறுதல் – ஏலமனின் ஈராயிரம் இளம் குமாரர்கள் அதிசயமான வல்லமையோடு போர் புரிதல், அவர்களில் ஒருவனும் மடிந்து போகவில்லை. வசனம் 1, ஏறக்குறைய கி.மு. 62; வசனங்கள் 2–19. ஏறக்குறைய கி.மு. 66; வசனங்கள் 20–57. ஏறக்குறைய கி.மு. 65–64.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பதாவது வருஷத்தின் துவக்கமாகிய முதல் மாதத்தின் இரண்டாம் நாளில், மரோனி அப்பகுதியிலிருக்கும் ஜனங்களின் வர்த்தமானங்களைக் குறித்து ஏலமனால் எழுதப்பட்ட ஒரு நிருபத்தைப் பெற்றான்.

2 அவன் எழுதின வார்த்தைகளாவன: கர்த்தருக்குள்ளும், எங்களுடைய யுத்தத்தின் உபத்திரவத்தினுள்ளும் எனக்கு மிகவும் பிரியமான சகோதரனாக இருக்கும் மரோனியே, இதோ, என் அன்பான சகோதரனே, தேசத்தின் இப்பகுதியிலுள்ள நம்முடைய யுத்த நடவடிக்கையைக் குறித்து உன்னிடம் சொல்ல சில உள்ளன.

3 இதோ, நேபியின் தேசத்திலிருந்து அம்மோன் கூட்டிவந்த அந்த மனுஷருடைய ஈராயிரம் குமாரர்கள், நீங்கள் அறிந்திருக்கிறபடி நம்முடைய தகப்பனாகிய லேகியின், மூத்த குமாரனாகிய லாமானின் சந்ததியே.

4 இப்பொழுது நான் அவர்களின் பாரம்பரியங்களைப் பற்றியோ அல்லது அவர்களின் அவிசுவாசத்தைப் பற்றியோ, உனக்கு மறுபடியும் சொல்ல அவசியமில்லை. ஏனெனில் நீ இக்காரியங்கள் அனைத்தையும் குறித்து அறிந்திருக்கிறாய்.

5 ஆதலால், இந்த ஈராயிரம் வாலிபர் தங்களின் யுத்தக் கருவிகளை எடுத்தார்களென்றும், நான், அவர்களின் தலைவனாய் இருக்க விரும்பினார்களென்றும், நம்முடைய தேசத்தைத் தற்காக்கப் புறப்பட்டு வந்திருக்கிறோம் என்றும், உனக்குச் சொல்வது எனக்குப் போதுமானதாயிருக்கிறது.

6 இப்பொழுது, இரத்தம் சிந்தும்படியாக, தங்கள் சகோதரருக்கு விரோதமாய், தங்களின் யுத்தக் கருவிகளை எடுக்க மாட்டோமென்று, அவர்களின் தகப்பன்மார்கள் செய்துகொண்ட உடன்படிக்கையைக் குறித்தும், நீ அறிந்திருக்கிறாய்.

7 ஆனால் இருபத்தி ஆறாம் வருஷத்தில் அவர்களுக்காக நாங்கள் பட்ட உபத்திரவங்களையும் கஷ்டங்களையும் அவர்கள் கண்டபோது, அவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட உடன்படிக்கையை முறித்துப்போட்டு, எங்களைக் காப்பதற்காக தங்களுடைய யுத்த ஆயுதங்களை எடுக்க இருந்தார்கள்.

8 ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆணையை நிறைவேற்றுதலினிமித்தம், நாங்கள் அதிகமாய்த் துன்பப்படாத அளவிற்கு, தேவன் எங்களை பெலப்படுத்துவார் என்று நான் எண்ணி, அவர்கள் செய்த இந்த உடன்படிக்கையை முறித்துப்போட அவர்களை அனுமதிக்கமாட்டேன்.

9 ஆனால் இதோ, நாம் மிகவும் சந்தோஷப்படும்படியான ஓர் காரியம். ஏனெனில் இதோ, இருபத்தி ஆறாம் வருஷத்திலே, ஏலமனாகிய நான் இந்த ஈராயிரம் வாலிபருக்குத் தலைமை தாங்கி, அவர்களை யூதேயா பட்டணத்திற்கு அணிவகுத்து, அப்பகுதியில் இருந்த ஜனங்களுக்கு தலைவனாக, நீ நியமித்திருந்த அந்திபஸ்ஸூக்கு உதவிபுரியும்படியாகக் கூட்டிவந்தேன்.

10 நான் என் ஈராயிரம் குமாரர்களை (ஏனெனில் அவர்கள் குமாரர்கள் என்று அழைக்கப்பட பாத்திரவான்களாயிருக்கிறார்கள்) அந்திபஸ்ஸின் சேனையோடே சேர்த்தேன். அந்த பெலத்தினிமித்தம் அந்திபஸ் மிகவும் களிகூர்ந்தான்; ஏனெனில் இதோ, லாமானியர்களின் சேனைகள், நம்முடைய மனுஷரில் அநேகரை வெட்டிப்போட்டதினிமித்தம், அவர்களால் அவனுடைய சேனை குறைந்து போயிற்று. இதினிமித்தம் நாம் துக்கிக்க வேண்டும்.

11 இருப்பினும், அவர்கள் தங்கள் தேசத்திற்காகவும், தங்கள் தேவனுக்காகவும் மரித்தார்கள், ஆம், அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள், என்றும் நினைத்து நாம் நம்மையே தேற்றிக்கொள்ளலாம்.

12 லாமானியரும் அநேகக் கைதிகளைத் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள். அவர்களில் யாவரும் பிரதான சேர்வைக்காரர்களே. ஏனெனில் மற்றொருவரையும் அவர்கள் உயிரோடு விட்டதில்லை. அவர்கள் கொல்லப்படாதிருந்தால், இச்சமயத்தில் நேபியின் தேசத்தில் இருப்பார்களென்று எண்ணுகிறோம்.

13 நம்முடைய வலிமைமிக்க மனுஷர் அநேகரின் இரத்தத்தைச் சிந்தி, லாமானியர் கைப்பற்றியுள்ள பட்டணங்கள் இவைகளே:

14 மேன்தி தேசம், அல்லது மேன்தி பட்டணம். சீஸ்ரம் பட்டணம், குமேனி பட்டணம், மற்றும் அந்திப்பரா பட்டணம்.

15 நான் யூதேயா பட்டணத்தை அடைந்தபோது அவர்கள் வைத்திருந்த பட்டணங்கள் இவைகளே; அந்திபஸ்ஸும் அவன் மனுஷரும் பட்டணத்தை அரணித்துக் காக்க, தங்கள் பெலத்தோடு கடினமாக உழைப்பதைக் கண்டேன்.

16 ஆம், அவர்கள் தங்கள் பட்டணங்களைப் பாதுகாக்க பகலிலே பராக்கிரமமாய் யுத்தம் பண்ணி, இரவிலே கடினமாய் உழைத்ததினாலே அவர்கள் சரீரத்திலும் ஆவியிலும் சோர்ந்து போனார்கள். இவ்விதமாய் அவர்கள் சகல விதமான, மகா உபத்திரவங்களையும் அனுபவித்தார்கள்.

17 இப்பொழுது அவர்கள் அவ்விடத்திலே ஜெயம் கொள்வது, இல்லாவிடில் மடிந்து போவது, என்று தீர்மானித்திருந்தார்கள்; ஆதலால் என்னோடு நான் அழைத்து வந்த இந்தச் சிறு சேனை, ஆம், என்னுடைய அந்த குமாரர்கள், அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், அதிக சந்தோஷத்தையும் கொடுத்தார்கள், என்று நீ உறுதியாய் எண்ணிக் கொள்ளலாம்.

18 இப்பொழுதும், அந்தப்படியே, அந்திபஸ் தன் சேனைக்கு அதிக பெலத்தைப் பெற்றான், என்று லாமானியர் கண்டபோது, அவர்கள் யூதேயா பட்டணத்திற்கு விரோதமாகவோ, அல்லது எங்களுக்கு விரோதமாகவோ, யுத்தம் பண்ணப் போகக்கூடாதென்ற அம்மோரோனின் கட்டளைகளால் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

19 இப்படியாக நாங்கள் கர்த்தரால் அனுக்கிரகம் பண்ணப்பட்டிருந்தோம். ஏனெனில் நாங்கள் பெலவீனராயிருந்தபோது, அவர்கள் எங்கள் மேல் வந்திருந்தார்களெனில், எங்களுடைய சிறு சேனையை அழித்துப் போட்டிருக்கக்கூடும்; ஆனாலும் இப்படியாக நாங்கள் காக்கப்பட்டோம்.

20 அவர்கள் தாங்கள் கைப்பற்றியிருந்த பட்டணங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று, அம்மோரோனால் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். இப்படியாக இருபத்தி ஆறாம் வருஷமும் முடிவுற்றது. இருபத்தி ஏழாம் வருஷத் துவக்கத்திலே, நாங்கள் எங்கள் பட்டணத்தையும், எங்களையும் தற்காத்துக்கொள்ள ஆயத்தப்பட்டிருந்தோம்.

21 இப்பொழுது லாமானியர் எங்கள்மேல் வரவேண்டுமென்று, நாங்கள் வாஞ்சித்தோம். ஏனெனில் நாங்கள் அவர்களுடைய கொத்தளங்களில், அவர்கள் மீது தாக்குதல் நடத்த விரும்பவில்லை.

22 அந்தப்படியே, இரவிலாகிலும், பகலிலாகிலும் லாமானியர் எங்களைக் கடந்து போய் வடக்கிலிருந்த, எங்களின் மற்ற பட்டணங்களைத் தாக்கக் கூடாதபடிக்கு, அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சுற்றிலும் வேவுகாரரை நிறுத்தினோம்.

23 ஏனெனில் அப்பட்டணங்களிலிருந்தவர்கள், அவர்களைச் சந்திக்க போதுமான பெலன் இல்லாமலிருந்தார்கள், என்று நாங்கள் அறிந்தோம். ஆதலால் அவர்கள் எங்களைக் கடந்து போனால், நாங்கள் அவர்களைப் பின்னால் தாக்கவும், அந்தப்படியே அவர்களைப் பின்னால் கொண்டுவந்து அதே சமயத்தில் அவர்களை முன்னால் சந்திக்கவும் வாஞ்சையாயிருந்தோம். நாங்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று எண்ணினோம்; ஆனால் இதோ, எங்களது இந்த விருப்பத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.

24 அவர்கள் போதுமான பெலனற்று விழுந்து விடாதபடி, தங்களது முழு சேனையோடு கூடவோ, அல்லது ஒரு பகுதி சேனையோடு கூடவோ, எங்களைக் கடந்து செல்ல அவர்கள் துணியவில்லை.

25 அவர்கள் சாரகெம்லா பட்டணத்திற்கு அணிவகுத்துச் செல்லவும் துணியவில்லை; நேபிகா பட்டணத்திற்குச் செல்லும்படி, சீதோன் ஆற்றுமுகப்பைக் கடக்கவும் அவர்கள் துணியவில்லை.

26 அந்தப்படியே, அவர்கள் தாங்கள் கைப்பற்றின பட்டணங்களைத் தங்கள் சேனைகளைக் கொண்டு பாதுகாப்பதில் தீர்மானமாயிருந்தார்கள்.

27 இப்பொழுதும், அந்தப்படியே, இவ்வருஷத்தின் இரண்டாம் மாதத்தில், அந்த என் ஈராயிரம் குமாரர்களுடைய தகப்பன்மார்களிடமிருந்து அநேக உணவுப்பொருட்கள் எங்களுக்குக் கொண்டுவரப்பட்டது.

28 சாரகெம்லா தேசத்திலிருந்து எங்களுக்கு ஈராயிரம் மனுஷரும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இப்படியாக நாங்கள் பதினாயிரம் மனுஷருடனும், அவர்களுக்கும், அவர்கள் மனைவிகளுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்குமான ஆகாரத்துடனும் ஆயத்தமாயிருந்தோம்.

29 லாமானியர் எங்கள் சேனைகள் அனுதினமும் அதிகரிப்பதையும், எங்களை ஆதரிக்க உணவு வந்து சேருவதையும் கண்டு, பயந்துபோய் எங்களுக்கு வருகிற உணவையும், பெலத்தையும் தடுத்து நிறுத்தும்படியாக அதிவேகமாகப் போகத் தொடங்கினார்கள்.

30 இப்பொழுது லாமானியர் இதைப்பற்றி சஞ்சலப்படத் துவங்குவதை நாங்கள் கண்டபோது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த, ஒரு உபாயம் பண்ண வாஞ்சித்தோம்; ஆதலால் நான் என் சிறு குமாரரோடு ஓர் அருகாமையிலிருக்கும் பட்டணத்திற்கு, உணவுப் பொருட்களைக் கொண்டு போவதைப்போல, அணிவகுத்துப் போகவேண்டுமென்று அந்திபஸ் கட்டளையிட்டான்.

31 நாங்கள் கடற்கரையோரங்களில் அமைந்த பட்டணத்திற்குப் போவதைப்போல, அந்திப்பரா பட்டணத்திற்கு அருகாமையில் அணிவகுத்துச் செல்லவேண்டும்.

32 அந்தப்படியே, நாங்கள் எங்களுடைய உணவுகளோடு அந்தப் பட்டணத்திற்குப் போவதைப்போல அணிவகுத்துப் போனோம்.

33 அந்தப்படியே, அந்திபஸ் தன் சேனையில் ஒரு பகுதியைக் கூட்டிக்கொண்டு, மீதியானோரை பட்டணத்தைக் காக்க விட்டுச் சென்றான். ஆனால் நான் என் சிறிய சேனையோடு சென்று, அந்திப்பரா பட்டணத்திற்கு அருகே வரும்வரைக்கும், அவன் புறப்படாமலிருந்தான்.

34 இப்பொழுது, அந்திப்பரா பட்டணத்திலே லாமானியரின் வலிமைமிக்க சேனை நிறுத்தப்பட்டிருந்தது; ஆம், மிகவும் எண்ணிறைந்தோர் இருந்தார்கள்.

35 அந்தப்படியே, தங்கள் வேவுகாரரால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் சேனையோடு எங்களுக்கு விரோதமாய் வந்தார்கள்.

36 அந்தப்படியே, நாங்கள் அவர்களுக்கு முன்னே வடக்குநோக்கி பறந்தோடினோம். இப்படியாக நாங்கள் லாமானியரின் மிகுந்த வலிமையான சேனையை புறம்பே நடத்திப் போனோம்.

37 ஆம், வெகு தொலைவில், அவர்கள் தங்களை அந்திபஸ்ஸின் சேனை, தங்கள் ஊக்கத்தோடு பின் தொடர்வதைக் கண்டு, வலதோ அல்லது இடதோ, திரும்பாமல் எங்களுக்குப் பின்னாக நேர்மார்க்கமாய்த் பின்தொடர்ந்தார்கள்; நாங்கள் எண்ணுகிறபடி, எங்கள் ஜனங்களால் தாங்கள் சூழப்படுவதைத் தவிர்க்க, அந்திபஸ் தங்களை மேற்கொள்ளும் முன்பே, எங்களை வெட்டிப் போடவேண்டுமென்பது அவர்களின் நோக்கமாயிருந்தது.

38 இப்பொழுது அந்திபஸ் எங்களுடைய அபாயத்தைக் கண்டவனாய், தன் சேனையின் வேகத்தைத் துரிதப்படுத்தினான். ஆனால் இதோ, அது இரவாயிருந்தபடியினாலே, அவர்கள் எங்களை நெருங்கவில்லை; அந்திபஸ்ஸூம் எங்களை நெருங்கவில்லை; ஆதலால் இரவிற்காக நாங்கள் பாளயமிறங்கினோம்.

39 அந்தப்படியே, இதோ, காலை விடியுமுன்னே, லாமானியர் எங்களைப் பின்தொடர்ந்தார்கள். நாங்கள் அவர்களோடு போராடப் போதுமான பெலன் பெற்றிருக்கவில்லை. ஆம், என் சிறு குமாரர்கள் அவர்களுடைய கைகளுக்குள் விழ நான் விடவில்லை; ஆதலால் எங்கள் அணிவகுப்பை நாங்கள் தொடர்ந்து, வனாந்தரத்தினுள் அணிவகுத்துப் போனோம்.

40 இப்பொழுது அவர்கள் தாங்கள் சூழப்பட்டுவிடுவோமோ என்று பயந்து, வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ திரும்பத் துணியவில்லை. அவர்கள் என்னை மேற்கொண்டு, நாங்கள் அவர்களுக்கு எதிராய் நிற்க முடியாமல் கொல்லப்பட்டுப்போகாதபடியும், அவர்கள் தப்புவித்துப்போய் விடாதபடியும், நானும் வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பவில்லை. இப்படியாக அத்தினம் முழுவதுமாக இருள் சூழும் வரைக்குமாய் வனாந்தரத்தினுள் பறந்தோடினோம்.

41 அந்தப்படியே, விடியற்கால வெளிச்சம் உதித்தபோது லாமானியர் மறுபடியும் எங்களைக் கிட்டிச் சேருவதைக் கண்டு, அவர்களுக்கு முன்பாகப் பறந்தோடினோம்.

42 ஆனால், அந்தப்படியே, எங்களை வெகுதூரம் தொடராமல் நின்றார்கள்; அது ஏழாவது மாதத்தின் மூன்றாம் நாளின் காலையாயிருந்தது.

43 இப்பொழுது அவர்கள் அந்திபஸ்ஸினால் மேற்கொள்ளப்பட்டார்களா என்பது, எங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் என் மனுஷரை நோக்கி: இதோ, அவர்கள் நம்மை அவர்களுடைய கண்ணியிலே பிடிக்கும்படி, நாம் அவர்களுக்கு விரோதமாய் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் நின்றிருக்கிறார்கள், என்பதேயன்றி வேறொன்றும் நாம் அறியோம்.

44 ஆதலால் என் குமாரரே, நீங்கள் அவர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு போவீர்களா, என்ன சொல்லுகிறீர்கள்? என்றேன்.

45 என் பிரியமான சகோதரனாகிய மரோனியே, இப்பொழுதும் நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருபோதும், சகல நேபியருக்குள்ளும் இப்படிப்பட்ட மன உறுதியை நான் கண்டதில்லை.

46 ஏனெனில் நான் என்றுமே அவர்களை என் குமாரர்கள் என்று அழைத்தபடியால் (ஏனெனில் அவர்கள் அனைவரும் இளைஞர்களே) அவர்களும் என்னிடம்: தகப்பனே, இதோ, நம்முடைய தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் விழுந்துபோக அவர் அனுமதியார்; ஆதலால் நாம் போவோம், அவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் விடுவார்களெனில், நம் சகோதரரை நாம் கொல்லமாட்டோம்; ஆதலால் அவர்கள் அந்திபஸ்ஸின் சேனையை மேற்கொள்ளாதபடி, நாம் போவோம், என்றார்கள்.

47 இப்பொழுதும் அவர்கள் என்றுமே யுத்தம் பண்ணினதில்லை. இருப்பினும் அவர்கள் மரணத்தைக் குறித்துப் பயப்படவில்லை. அவர்கள் தங்கள் ஜீவனைக் குறித்து நினைப்பதைக் காட்டிலும் தங்கள் தகப்பன்மார்களின் சுதந்திரத்தைக் குறித்து அதிகமாய் எண்ணினார்கள்; ஆம், தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் தங்களை விடுவிப்பார் என்று, அவர்கள் தங்களின் தாய்மாரால் போதிக்கப்பட்டிருந்தார்கள்.

48 அவர்கள் தங்கள் தாய்மாரின் வார்த்தைகளை என்னிடம் மறுபடியும் சொல்லி, எங்கள் தாய்மார்கள் அதை அறிந்திருந்தார்களா என்று, நாங்கள் சந்தேகிப்பதில்லை, என்றார்கள்.

49 அந்தப்படியே, எங்களைப் பின்தொடர்ந்து வந்த லாமானியருக்கு விரோதமாக நான் என் இரண்டாயிரம் பேரோடு திரும்பிப்போனேன். இப்பொழுதும் இதோ, அந்திபஸ்ஸின் சேனைகள் அவர்களை மேற்கொண்டு, ஒரு பயங்கரமான யுத்தம் தொடங்கியிருந்தது.

50 அந்திபஸ்ஸின் சேனை இந்த மிகக் குறுகிய காலத்தில் தாங்கள் மேற்கொண்ட அந்த வெகுதூர அணிவகுப்பின் நிமித்தம் களைப்படைந்து லாமானியர்களின் கைக்குள் விழவிருந்தார்கள்; நான் என்னுடைய இரண்டாயிரம் பேரோடு திரும்பியிராவிடில், அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேறப்

51 ஏனெனில் அந்திபஸ்ஸும் அவனுடைய தலைவர்களில் அநேகரும் தீவிரித்து அணிவகுப்பை நடத்தியதால் களைப்படைந்து, பட்டயத்தினால் வீழ்ந்து போனார்கள். ஆதலால் அந்திபஸ்ஸின் மனுஷர், தங்கள் தலைவர்களின் வீழ்ச்சியினால் குழப்பமடைந்து லாமானியருக்கு முன்பாக வழிவிடத் துவங்கினார்கள்.

52 அந்தப்படியே, லாமானியர் திடன்கொண்டு, அவர்களைப் பின்தொடரத் துவங்கினார்கள். இப்படியாக லாமானியர் அவர்களை அதிக பெலத்தோடே துரத்திக்கொண்டிருக்கும்போது, ஏலமன் அவர்களின் பின்னால் தன்னுடைய இரண்டாயிரம் பேரோடு வந்து, லாமானியரின் முழு சேனையுமே நின்று, ஏலமனின் மீது திரும்புமளவும், அவர்களை வெகுவாய்க் கொன்றுபோடத் துவங்கினான்.

53 இப்பொழுது லாமானியர் திரும்பியதை அந்திபஸ்ஸின் ஜனம் கண்டபோது, அவர்கள் தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு லாமானியரைப் பின்னே தாக்கினார்கள்.

54 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியின் ஜனங்களும், அந்திபஸ்ஸின் ஜனங்களும், என்னுடைய இரண்டாயிரம் பேரோடு நானும் லாமானியரைச் சூழ்ந்துகொண்டு, ஆம், அவர்கள் தங்கள் யுத்தக் கருவிகளையும், யுத்தக் கைதிகளாய் தங்களையும், ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படும் அளவில் அவர்களை வெட்டிப் போட்டோம்.

55 இப்பொழுதும், அந்தப்படியே, அவர்கள் எங்களிடம் சரணடைந்தபோது, இதோ, என்னோடு யுத்தம் பண்ணின வாலிபரில் அநேகர் கொல்லப்பட்டிருக்கக்கூடுமோ என்று பயந்து, அவர்களை இலக்கமிட்டேன்.

56 ஆனால் இதோ, நான் மிகுந்த சந்தோஷமடையும்படிக்கு, அவர்களில் ஒரு ஆத்துமாவாகிலும் பூமியில் விழுந்து போகவில்லை; ஆம், அவர்கள் தேவபலத்தோடுகூட யுத்தம் பண்ணுவதுபோல யுத்தம் பண்ணினார்கள். ஆம், மனுஷர் ஒருபோதும் அப்படிப்பட்ட அற்புதமான பெலத்தோடு யுத்தம் பண்ணினதாக அறியப்படவில்லை; அப்படிப்பட்ட பலத்த வல்லமையோடு அவர்கள் லாமானியர்கள்மேல் விழுந்து, அதனால் அவர்களைப் பயப்படுத்தினார்கள்; இதினிமித்தமாகவே லாமானியர் யுத்தக் கைதிகளாகத் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள்.

57 எங்களுடைய கைதிகளை லாமானிய சேனைகளிடமிருந்து விலக்கி, அவர்களுக்கு காவல் காப்பதற்கு எந்த இடமும் எங்களுக்கு இல்லாதபடியினால், அவர்களை அந்திபஸ்ஸினால் கொல்லப்படாத மனுஷர் சிலருடன் சாரகெம்லா தேசத்திற்கு அனுப்பினோம். மீதியானோரை நான் கூட்டிக்கொண்டு, அவர்களை என் இள அம்மோனியருடன் சேர்த்து யூதேயா பட்டணத்திற்குத் திரும்பவும் அணிவகுத்துப் போனோம்.