வேதங்கள்
ஆல்மா 63


அதிகாரம் 63

சிப்லோனும், பின்பு ஏலமனும் பரிசுத்த பதிவேடுகளைப் பெற்றுக்கொள்ளுதல் – அநேக நேபியர் வடக்கேயுள்ள தேசத்திற்குப் பயணமாகுதல் – ஆகோத் கப்பல்களைக் கட்டுதல். அவை மேற்கு சமுத்திரத்தில் போகுதல் – மரோனிகா போரில் லாமானியரை வீழ்த்துதல். ஏறக்குறைய கி.மு. 56–52.

1 அந்தப்படியே, நேபியின் ஜனங்கள் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தாறாம் வருஷ துவக்கத்திலே, சிப்லோன், ஆல்மாவினால் ஏலமனுக்குக் கொடுக்கப்பட்ட அந்த பரிசுத்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டான்.

2 அவன் நியாயவானாயிருந்து அவன் தேவனுக்கு முன்பாக தலைநிமிர்ந்து நடந்தான்; தன்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள, அவனும் அவன் சகோதரனும் தொடர்ந்து நன்மையைச் செய்ய முயற்சித்து வந்தார்கள்.

3 அந்தப்படியே, மரோனியும் மரித்துப் போனான். இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தாறாம் வருஷமும் முடிவுற்றது.

4 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தேழாம் வருஷத்தில், ஒரு பெரும் கூட்டத்தினர், ஆம் ஐந்தாயிரத்து நானூறு மனுஷர் தங்கள் மனைவிகளுடனும், தங்கள் பிள்ளைகளுடனும், சாரகெம்லா தேசத்திலிருந்து புறப்பட்டு, வடக்கேயுள்ள தேசத்திற்குப் போனார்கள்.

5 அந்தப்படியே, ஆகோத் மிகவும் ஆர்வமுள்ள மனுஷனாயிருந்தபடியால், அவன் போய், பாழ்க்கடிப்பு தேசத்திற்கு அருகேயுள்ள உதாரத்துவஸ்தலத்தின் எல்லைகளில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய கப்பலைக் கட்டினான். அதை வடதேசத்திற்குச் செல்லும் இடுக்கமான நீண்டிருக்கிற நிலத்தின் பக்கமாய் உள்ள மேற்கு சமுத்திரத்தினுள்ளே செலுத்தினான்.

6 இதோ, அநேக நேபியர் அதனுள் பிரவேசித்து, அதிக உணவுப் பொருட்களையும், அநேக ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். அவர்கள் வடக்கு திசை மார்க்கமாய் பயணம் சென்றார்கள். இப்படியாக முப்பதேழாவது வருஷமும் முடிவுற்றது.

7 முப்பத்தெட்டாம் வருஷத்தில், இம்மனுஷன் மற்ற கப்பல்களைக் கட்டினான். முதல் கப்பலும் திரும்ப வந்தது, இன்னும் அநேக ஜனங்கள் அதில் ஏறிக்கொண்டார்கள்; அவர்கள் அதிக உணவுப்பொருட்களையும் எடுத்துக் கொண்டு வடதேசத்திற்கு மறுபடியுமாய் பயணப்பட்டார்கள்.

8 அந்தப்படியே, அதற்குப் பின்பு அவர்களைப்பற்றி கேள்விப்படவேயில்லை. அவர்கள் சமுத்திரத்தின் ஆழங்களிலே அமிழ்ந்து போனார்கள் என்று எண்ணுகிறோம், அந்தப்படியே, மற்றொரு கப்பலும் புறப்பட்டுப்போனது; அதுவும் எங்கு போனதென்று அறியோம்.

9 அந்தப்படியே, இவ்வருஷத்தில் அநேக ஜனங்கள் வடதேசத்திற்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்படியாக முப்பத்தெட்டாம் வருஷமும் முடிவுற்றது.

10 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தொன்பதாவது வருஷத்தில், சிப்லோனும் மரித்துப் போனான். வடக்கேயுள்ள தேசத்திற்குப் போன ஜனங்களுக்கு உணவை எடுத்துச் செல்லும்படியாக கொரியாந்தன் கப்பலில் அத்தேசத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

11 ஆதலால், சிப்லோன் தான் மரிப்பதற்கு முன்பாக ஏலமனின் குமாரனாகிய ஏலமன் என்ற தன் தகப்பனின் நாமத்தின்படியே அழைக்கப்பட்டவனுக்கு, இந்தப் பரிசுத்த பொருட்களை ஒப்படைப்பது அவசியமாயிற்று.

12 இப்பொழுதும் இதோ, வெளிப்படுத்தப்படக்கூடாது, என்று ஆல்மாவினால் கட்டளையிடப்பட்ட அந்த பகுதிகளைத் தவிர, ஏலமன் வசத்திலிருந்த அந்த எல்லா பொறிக்கப்பட்ட வார்த்தைகளும் எழுதப்பட்டு, தேசமுழுவதிலுமுள்ள மனுபுத்திரருக்கு அனுப்பப்பட்டது.

13 இருப்பினும் இக்காரியங்கள் பரிசுத்தமாய் வைக்கப்பட்டு, ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு கையளிக்கப்படவேண்டும்; ஆதலால் சிப்லோனின் மரணத்திற்கு முன்பாகவே, இவை இந்த வருஷத்தில் ஏலமனிடத்தில் ஒப்படைக்கப்பட்டன.

14 அந்தப்படியே, இந்த வருஷத்திலும் லாமானியருக்குள்ளே சில பிரிவினைக்காரர் இருந்தார்கள்; அவர்கள் நேபியர்களுக்கு விரோதமாய் கோபம்கொள்ளும்படி மறுபடியும் தூண்டிவிடப்பட்டார்கள்.

15 அதே வருஷத்திலே, அவர்கள் மரோனிகாவின் ஜனங்களுக்கு, அல்லது மரோனிகாவின் சேனைக்கு விரோதமாய் யுத்தம்பண்ண, எண்ணிறைந்த சேனையோடு வந்தார்கள், அதில் அவர்கள் அடிக்கப்பட்டு, அதிக இழப்பை அனுபவித்து, தங்களுடைய சொந்த தேசங்களுக்கே திரும்ப துரத்தப்பட்டார்கள்.

16 இப்படியாக, நேபியின் ஜனத்தின்மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தொன்பதாம் வருஷமும் முடிவுற்றது.

17 இப்படியாக ஆல்மா அவனுடைய குமாரனான ஏலமன் மற்றும் அவனுடைய குமாரனான சிப்லோன் ஆகியோரது விவரம் முடிவுற்றது.

அச்சிடவும்