வேதங்கள்
ஆல்மா 57


அதிகாரம் 57

அந்திப்பராவை கைப்பற்றுதல் குறித்தும், மற்றும் குமேனி பட்டணம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் தற்காக்கப்படுதல் குறித்தும், ஏலமன் விவரித்தல் – அவனுடைய அம்மோனிய இளைஞர்கள் திடமனதோடு யுத்தம் பண்ணுதல்; அனைவரும் காயமடைதல், ஆனால் ஒருவரும் கொல்லப்படவில்லை – லாமானிய கைதிகள் கொல்லப்பட்டுப் போகுதல் குறித்தும், அவர்கள் தப்பித்துப் போவதைக் குறித்தும், கித் அறிவித்தல். ஏறக்குறைய கி.மு. 63.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நாங்கள் பிடித்து வைத்திருக்கிற யுத்தக் கைதிகளை நான் விடுவித்தால், அவன் அந்திப்பரா பட்டணத்தை எங்களிடம் ஒப்படைப்பதாக குறிப்பிட்டிருந்த ஒரு நிருபத்தை, ராஜாவாகிய அம்மோரோனிடத்திலிருந்து நான் பெற்றேன்.

2 ஆனால் எங்கள் பெலத்தினாலே அந்திப்பரா பட்டணத்தைக் கைப்பற்ற, எங்கள் படைகள் போதுமானதாயிருக்கின்றன என்று நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம் என்றும், அந்தப் பட்டணத்திற்காக கைதிகளை ஒப்படைத்து நாங்கள் எங்களையே அஞ்ஞானிகளாய் கருதவேண்டும் என்றும், கைதிகளை பரிமாற்றத்தில் மாத்திரமே ஒப்படைப்போம் என்றும், நான் ராஜாவிற்கு ஒரு நிருபத்தை அனுப்பினேன்.

3 அம்மோரோன் என் நிருபத்தை நிராகரித்தான். ஏனெனில் அவன் கைதிகளை பரிமாற்றம் செய்ய விரும்பவில்லை. ஆதலால் நாங்கள் அந்திப்பரா பட்டணத்திற்கு எதிராகப் போக ஆயத்தங்களைத் துவக்கினோம்.

4 ஆனால் அந்திப்பரா ஜனங்களோ பட்டணத்தை விட்டுவிட்டு, தாங்கள் கைப்பற்றியிருந்த தங்களின் வசமிருந்த மற்ற பட்டணங்களில் அரண்களை எழுப்பப் போனார்கள்; இப்படியாக அந்திப்பரா பட்டணம் எங்களுடைய கைகளுக்குள் விழுந்தது.

5 இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி எட்டாம் வருஷமும் நிறைவுற்றது.

6 அந்தப்படியே, இருபத்தி ஒன்பதாம் வருஷத் துவக்கத்திலே நாங்கள் உணவுப் பொருட்களைப் பெற்றோம், என்னுடைய சிறு பட்டாளத்திலிருந்த இரண்டாயிரம் மனுஷராகிய, தங்கள் சகோதரருடன் சேரும்படி வந்த அம்மோனியரின் அறுபது குமாரர்களைத் தவிர, சாரகெம்லா தேசத்திலிருந்தும், சுற்றுப்புற தேசத்திலிருந்தும், ஆறாயிரம் எண்ணிக்கை கொண்ட மனுஷரும் எங்களுடைய சேனையில் சேர்க்கப்பட்டார்கள். இப்பொழுதும் இதோ, நாங்கள் பெலமுள்ளவர்களாயிருந்தோம். ஆம், அதிக உணவுப் பொருட்களும் எங்களுக்குக் கொண்டுவரப்பட்டது.

7 அந்தப்படியே, குமேனி பட்டணத்தைக் காக்கும்படி நிறுத்தப்பட்டிருந்த சேனையோடு யுத்தம்பண்ண வேண்டுமென்பது எங்களுடைய ஆவலாயிருந்தது.

8 இப்பொழுதும் இதோ, நாங்கள் சீக்கிரமே எங்களுடைய வாஞ்சையை நிறைவேற்றினோம் என்று, உனக்குக் காண்பிக்கிறேன்; ஆம், எங்களுடைய பெலமான சேனையைக் கொண்டு, அல்லது எங்களுடைய பெலமான சேனையின் ஒரு பகுதியைக் கொண்டு, அவர்கள் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு சற்றுமுன்னே, இரவில் நாங்கள் குமேனி பட்டணத்தை சூழ்ந்துகொண்டோம்.

9 அந்தப்படியே, நாங்கள் பட்டணத்தைச் சுற்றி அநேக இரவுகள் பாளயமிறங்கினோம்; இரவில் லாமானியர் எங்கள் மேல் வந்து எங்களைக் கொன்று போடக்கூடாதென்பதினால், எங்கள் பட்டயங்களோடு உறங்கி, காவல் காத்தோம். அதற்கு அவர்கள் அநேகந் தடவை முயற்சித்தார்கள்; ஆனாலும் அவர்கள் இதை முயற்சித்த எல்லா சமயங்களிலும், அவர்களுடைய இரத்தம் சிந்தப்பட்டது.

10 நெடு நாட்களுக்குப் பின் அவர்களின் உணவு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் இரவிலே பட்டணத்தில் பிரவேசிக்க இருந்தார்கள். நாங்கள் லாமானியராயிராமல் நேபியர்களாயிருந்தபடியால், நாங்கள் அவர்களையும் அவர்களுடைய ஆகாரத்தையும் கைப்பற்றினோம்.

11 இப்படியாக லாமானியரின் ஆதரவு தடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் இன்னமும் பட்டணத்தை ஆட்கொண்டிருக்க தீர்மானித்திருந்தார்கள். ஆதலால் நாங்கள் அந்த உணவுப்பொருட்களை எடுத்து அவற்றை யூதேயாவிற்கும், நம்முடைய கைதிகளை சாரகெம்லா தேசத்திற்கும் அனுப்புவது அவசியமாயிற்று.

12 அந்தப்படியே, சில நாட்களுக்குள்ளாகவே லாமானியர் ஆதரவுக்கான எல்லா நம்பிக்கைகளையும் இழக்கலானார்கள்; ஆதலால் அவர்கள் பட்டணத்தை எங்களின் கைகளில் விட்டுவிட்டார்கள்; இப்படியாக நாங்கள் குமேனி பட்டணத்தை கைப்பற்றுவதிலான எங்களின் திட்டங்களை நிறைவேற்றினோம்.

13 ஆனால், அந்தப்படியே, நாங்கள் திரளானோராயிருந்தும், எங்களுடைய கைதிகள் அநேகராயிருந்ததினிமித்தம், எங்களின் எல்லா சேனைகளையும், அவர்களைக் காவல் காப்பதற்கோ, அல்லது அவர்களைக் கொன்று போடும்படிக்கோ தள்ளப்பட்டோம்.

14 இதோ, அவர்கள் யுத்தக் கைதிகளாக சரணடைந்த பின்னர், அவர்களில் அநேகர், பலவந்தமாய் தப்பிக்க முயற்சித்ததாலும், கற்களாலும், தடிகளாலும், தங்கள் கைகளில் கிடைத்த எதைக்கொண்டும் சண்டை போட்டதினாலும், அவர்களில் இரண்டாயிரம் பேருக்கும் அதிகமாய்க் கொன்றுபோட்டோம்.

15 ஆதலால் நாங்கள் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும், அல்லது சாரகெம்லா தேசம் வரைக்குமாய் பட்டயத்தைக் கையில் பிடித்தவாறு அவர்களைக் காவல் பண்ண வேண்டும் என்பது அவசியமாயிற்று; லாமானியரிடத்தில் இருந்து நாங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோதிலும், எங்களுடைய உணவுப் பொருட்கள் எங்கள் சொந்த ஜனங்களுக்கு மாத்திரம் போதுமானதாயிருந்ததே தவிர அதிகமாயில்லை.

16 இப்பொழுதும், அந்த நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில், இந்த யுத்தக் கைதிகளைக் குறித்து தீர்மானிக்க வேண்டியது ஓர் மிக முக்கிய காரியமாயிற்று; ஆயினும் அவர்களை சாரகெம்லா தேசத்திற்கு அனுப்ப நாங்கள் முடிவெடுத்தோம்; ஆதலால் நாங்கள் எங்களுடைய மனுஷரில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, சாரகெம்லா தேசத்திற்குக் கைதிகளைக் கொண்டு போகும்படியான பொறுப்பை அவர்களுக்கு அளித்தோம்.

17 ஆனால், அந்தப்படியே, மறுநாள் அவர்கள் திரும்பினார்கள். இப்போதும் இதோ, நாங்கள் அவர்களிடத்தில் கைதிகளைக் குறித்து வினவவில்லை; ஏனெனில் இதோ, லாமானியர் எங்களைத் தாக்கினார்கள். அவர்கள் தக்க காலத்தில், திரும்பி, அவர்களுடைய கைகளுக்குள் நாங்கள் விழுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றினார்கள். ஏனெனில் இதோ, அம்மோரோன் அவர்களுடைய ஆதரவுக்கென்று புதிய உணவுப் பொருட்களையும் எண்ணிறைந்த மனுஷ சேனையையும் அனுப்பியிருந்தான்.

18 அந்தப்படியே, அவர்கள் எங்களை மேற்கொள்ள இருந்தபோது, நாங்கள் கைதிகளோடு அனுப்பின அந்த மனுஷர், தக்க காலத்தில் வந்து சேர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.

19 ஆனால் இதோ, இரண்டாயிரத்து அறுபது பேரைக்கொண்ட என்னுடைய சிறிய பட்டாளம் மிக பயங்கரமாக போர் புரிந்தது; ஆம், அவர்கள் லாமானியருக்கு முன்பாக உறுதியாயிருந்து, தங்களை எதிர்த்த அனைவருக்கும் மரணத்தை அளித்தார்கள்.

20 எங்களுடைய சேனையின் மீதியானோர் லாமானியரிடமிருந்து பின்வாங்கவிருந்தபோது, இதோ, அந்த இரண்டாயிரத்து அறுபது பேரும் உறுதியாயும் அஞ்சாதவர்களுமாயிருந்தார்கள்.

21 ஆம், அவர்கள் கட்டளையிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் பூரணமாய் நிறைவேற்ற கவனமாய்க் கீழ்ப்படிந்தார்கள்; ஆம், அவர்களுடைய விசுவாசத்திற்கேற்பவே அவர்களுக்கு நடப்பிக்கப்பட்டது; தங்கள் தாய்மாரால் தங்களுக்குப் போதித்தவையென்று, அவர்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தேன்.

22 இப்பொழுதும் இதோ, இந்த என் குமாரர்களுக்கும், கைதிகளைக்கூட்டிச் செல்லும்படியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மனுஷருக்குமே, இப்பெரும் ஜெயத்துக்காக நாம் கடன்பட்டிருக்கிறோம். ஏனெனில் அவர்களே, லாமானியரை அடித்தார்கள், ஆகவே அவர்களை மேன்தி பட்டணத்திற்கு திரும்பத் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

23 நாங்கள் எங்களுடைய குமேனி பட்டணத்தைத் தற்காத்து வந்தோம். அனைவரும் பட்டயத்தினாலே அழிக்கப்படவில்லையெனினும், நாங்கள் பெரும் இழப்படைந்தோம்.

24 அந்தப்படியே, லாமானியர் முறிந்தோடிய பின்னர், காயப்பட்ட என் மனுஷர் மரித்தோர் மத்தியிலிருந்து எடுக்கப்படவேண்டுமென்று, உடனடியாக கட்டளைகளைப் பிறப்பித்து, அவர்களின் காயங்கள் கட்டுப்போடப்பட வேண்டுமென்று, கட்டளையிட்டேன்.

25 அந்தப்படியே, என்னுடைய இரண்டாயிரத்து அறுபதுபேரில், இருநூறுபேர் இரத்த இழப்பினால் மயக்கமடைந்தார்கள்; ஆயினும் நாங்கள் ஆச்சரியப்படவும், எங்களுடைய முழு சேனை சந்தோஷமடையவும், தேவனுடைய நன்மையினிமித்தம், அவர்களில் ஒரு ஆத்துமாவாகிலும் அழிந்து போகவில்லை; ஆம், அவர்களில் ஒருவரும் அதிகக் காயங்களைப் பெறாமலில்லை.

26 இப்பொழுதும் நம்முடைய சகோதரரில் ஆயிரம்பேர் சங்கரிக்கப்பட்டிருக்க, இவர்கள் காக்கப்பட்டு தப்புவிக்கப்பட்டது, நமது முழுச் சேனைக்கும் ஆச்சரியமாயிருந்தது. நாங்கள் இது தேவனுடைய அற்புதமான வல்லமையினிமித்தமே என்று, நியாயமாய் நிதானிக்கிறோம், ஏனெனில் நியாயமுள்ள தேவன் ஒருவர் உண்டென்றும், சந்தேகிக்காமலிருக்கிற எவரும் அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்படுவார்களென்றும், நம்பும்படி போதிக்கப்பட்டதிலே அவர்களுக்கிருக்கிற மிகுந்த விசுவாசத்தினிமித்தமே ஆனது.

27 நான் யாரைக் குறித்துப் பேசினேனோ, அவர்களின் விசுவாசம் இதுவே; அவர்கள் வாலிபர்கள், அவர்களின் மனங்கள் உறுதியாயிருக்கின்றன, அவர்கள் தொடர்ந்து தேவனில் தங்களின் நம்பிக்கையை வைக்கிறார்கள்.

28 இப்பொழுதும், அந்தப்படியே, இப்படியாக நாங்கள் எங்களுடைய காயப்பட்ட மனுஷருக்கு உதவி புரிந்து, எங்களின் மரித்தோரையும், லாமானியரில் மரித்த அநேகரையும் அடக்கம் பண்ணின பின்பு, சாரகெம்லா தேசம்வரைக்குமாய் தங்களோடு புறப்பட்டுச் சென்ற கைதிகளைக் குறித்து கித்திடம் விசாரித்தோம்.

29 இப்பொழுது கித் அவர்களை, தேசம் மட்டும் போக காவல் காக்க, பட்டாளத்தின் மீது நியமிக்கப்பட்டிருந்த, பிரதான சேர்வைக்காரனாயிருந்தான்.

30 இப்பொழுதும் கித் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இவைகளே: இதோ, நாங்கள் எங்கள் கைதிகளுடனே சாரகெம்லா தேசத்திற்குப் போகப் புறப்பட்டோம். அந்தப்படியே, லாமானியரின் பாளையத்தைக் கண்காணிக்கும்படி அனுப்பப்பட்டிருந்த நமது சேனையின் வேவுகாரரை சந்தித்தோம்.

31 அவர்கள் எங்களை நோக்கி, இதோ லாமானியர்களின் சேனைகள் குமேனி பட்டணத்திற்கு நேராகப் போகிறார்கள். இதோ, அவர்கள் மேல் விழுந்து, நம் ஜனத்தை அழித்துப் போடுவார்கள், என்று கூக்குரலிட்டார்கள்.

32 அந்தப்படியே, எங்களுடைய கைதிகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டார்கள். அது அவர்களை தைரியங்கொள்ளச் செய்தது. அவர்கள் எங்களுக்கு விரோதமாய் கலகம் பண்ணும்படி எழுந்தார்கள்.

33 அந்தப்படியே, அவர்களுடைய கலகத்தினிமித்தம், எங்களுடைய பட்டயங்கள் அவர்கள்மேல் விழப்பண்ணினோம். அந்தப்படியே, அவர்கள் ஒரு கூட்டமாய் எங்கள் பட்டயங்களுக்குத் தப்பி ஓடியபோது, அவர்களில் அநேகர் கொல்லப்பட்டார்கள்; மீதியானோர் தப்பித்து எங்களிடமிருந்து ஓடிப்போனார்கள்.

34 இதோ, அவர்கள் போனபோது நாங்கள் அவர்களை முந்தக்கூடாமல், தீவிரித்து குமேனி பட்டணத்திற்கு அணிவகுத்தோம். இதோ, பட்டணத்தைக் காப்பதில் நம்முடைய சகோதரருக்கு உதவிபுரியும்படி, நாங்கள் தக்க நேரத்தில் வந்து சேர்ந்தோம்.

35 இதோ, நாங்கள் மறுபடியும் நம்முடைய விரோதிகளின் கைகளிலிருந்து தப்புவிக்கப்பட்டோம். நம்முடைய தேவனின் நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக; ஏனெனில் இதோ, நம்மை விடுவித்தவரே, இந்தப் பெரிய காரியத்தை நமக்குச் செய்திருக்கிறார்.

36 இப்பொழுது, அந்தப்படியே, ஏலமனாகிய நான், கித்தின் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, நாங்கள் யாவரும் அழிந்து போகாதபடி, எங்களைக் காப்பதிலான தேவனுடைய அனுக்கிரகத்தினிமித்தம், நான் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைக்கப்பட்டேன்; ஆம், கொல்லப்பட்டுப் போனவர்களின் ஆத்துமாக்கள் தங்கள் தேவனுடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசித்திருக்கின்றன, என்று நம்புகிறேன்.