வேதங்கள்
ஆல்மா 53


அதிகாரம் 53

உதாரத்துவஸ்தலத்தில் அரண்களை எழுப்ப லாமானியக் கைதிகள் பயன்படுத்தப்படுதல் – நேபியருக்குள்ளே எழும் வாக்குவாதங்கள் லாமானியரின் ஜெயத்திற்கு வழிவகுத்தல் – அம்மோன் ஜனங்களினுடைய ஈராயிரம் இளங்குமாரர்கள் மேல் ஏலமன், பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 64–63.

1 அந்தப்படியே, அவர்கள் லாமானிய கைதிகளுக்கு காவற்காரரை நிறுத்தி, அவர்கள் போய் தங்களின் மரித்தோரையும், ஆம், நேபியர்களில் கொல்லப்பட்டு மரணத்திற்குள்ளானோரையும் அடக்கம்பண்ணும்படி வற்புறுத்தினார்கள்; அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்யும்போது அவர்களைக் காவற்காக்கும்படி மரோனி ஆட்களை நிறுத்தினான்.

2 லேகியுடன் மூலெக் பட்டணத்திற்கு மரோனி போய், பட்டணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றி அதை லேகிக்குக் கொடுத்தான். இப்பொழுதும் இதோ, இந்த லேகி என்பவன் மரோனியின் பல யுத்தங்களில் அவனோடு கூட இருந்தவன்; அவன் மரோனியைப் போன்ற ஒரு மனுஷனாயிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவரின் பாதுகாப்பில் களிகூர்ந்திருந்தனர்; ஆம், ஒருவருக்கொருவர் மிகவும் பிரியமாகவும், நேபியின் ஜனங்கள் யாவருக்கும் பிரியமானோராயும் இருந்தார்கள்.

3 அந்தப்படியே, லாமானியர் தங்களில் மரித்தோரையும், நேபியரில் மரித்தோரையும், புதைத்த பின்பு, அவர்கள் உதாரத்துவஸ்தலத்திற்குள் திரும்பிக் கூட்டிக்கொண்டு போகப்பட்டார்கள்; மரோனியின் ஆணைகளின்படி அவர்கள் உதாரத்துவஸ்தலமாகிய இடத்தை அல்லது பட்டணத்தைச் சுற்றிலும் குழியைத் தோண்டும் வேலையைத் தொடங்க தியான்கும் கட்டளையிட்டான்.

4 அவன் குழியின் உட்கரையிலே மரத்தினாலான தடுப்பை அவர்கள் கட்டும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அக்குழியின் மண்ணை, மரத்தடுப்பை தாங்கும்படி போட்டார்கள். அவ்விதமாக, மரத்தாலும் மண்ணாலுமான பெலமான சுவரை உதாரத்துவஸ்தல பட்டணத்தைச் சுற்றிலும் எழுப்பி, தாங்கள் சூழ்ந்துகொள்ளும்படியாக லாமானியரை அவர்கள் பிரயாசப்படச் செய்தார்கள்.

5 அதன் பின்பு இப்பட்டணம் மிகவும் பெலமுள்ள கொத்தளமாய் என்றென்றுமாய் விளங்கிற்று; இப்பட்டணத்திலே அவர்கள் லாமானியர்களின் கைதிகளைக் காவல் காத்தார்கள்; ஆம், அவர்கள் சொந்த கைகளினாலே அவர்கள் எழும்பச் செய்திருந்த சுவற்றினுள்ளாகவே அவர்களை காவல் வைத்தார்கள். லாமானியர் வேலையிலிருக்கும்போது அவர்களைக் காவல் காப்பது சுலபமாயிருந்தபடியினாலே, அவர்களை வேலை செய்ய கட்டளையிடும்படி இப்பொழுது மரோனி கட்டாயப்படுத்தப்பட்டான்; அவன் தான் லாமானியர் மேல் தாக்குதல் நடத்தும்போது, தன்னுடைய சேனைகள் அனைத்தும் இருக்கும்படி வாஞ்சித்தான்.

6 அந்தப்படியே, மரோனி இப்படியாக லாமானிய சேனைகளின் பெரிதான ஒன்றின் மேல் ஜெயம்கொண்டு, நேபியின் தேசத்திலிருந்த லாமானியரின் பெரிய கொத்தளங்களில் ஒன்றான மூலெக் பட்டணத்தையும் கைப்பற்றினான்; இப்படியாக அவன் தன்னுடைய கைதிகளை காவல் காக்க ஒரு கொத்தளத்தையும் எழுப்பியிருந்தான்.

7 அந்தப்படியே, அவன் லாமானியருடன் அந்த வருஷத்திலே போர் புரிய இனிமேலும் முற்படாமல், தன் மனுஷரை யுத்தத்திற்காக தாங்கள் ஆயத்தப்படுத்துவதிலும், ஆம், லாமானியரிடத்திலிருந்து காத்துக்கொள்ள அரண்களை எழுப்புவதிலும், ஆம், தங்கள் ஸ்திரீகளையும், சிறுபிள்ளைகளையும் பஞ்சத்திலிருந்தும் உபத்திரவத்திலிருந்தும் விடுவித்து, அவர்களின் சேனைகளுக்கு உணவு வழங்குவதிலும் ஈடுபடுத்தி வந்தான்.

8 இப்பொழுதும், அந்தப்படியே, லாமானியர்களின் சேனைகள் மரோனி இல்லாதபோது, நேபியர்கள் மத்தியிலே பிரிவினைகளை ஏற்படுத்திய சூழ்ச்சிகளினிமித்தம், மேற்கு சமுத்திரத்தின் தெற்கிலே, அப்பகுதியிலுள்ள அவர்களின் பட்டணங்கள் அநேகவற்றை வசப்படுத்திக்கொள்ளுமட்டும், நேபியர்களின் அந்த பகுதி மேல் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.

9 இப்படியாக தங்கள் மத்தியிலிருந்த அக்கிரமத்தினிமித்தமும், ஆம், தங்கள் மத்தியிலிருந்த பிரிவினைகள் மற்றும் சதியினிமித்தமும், அவர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் வைக்கப்பட்டார்கள்.

10 இப்பொழுதும் இதோ, ஆதியிலே லாமானியர்களாயிருந்த அம்மோனின் ஜனத்தைக் குறித்துச் சொல்ல எனக்கு சில காரியங்கள் உள்ளன. ஆனால் அம்மோனாலும், அவன் சகோதரராலும், அல்லது, தேவனுடைய வல்லமையினாலும், வார்த்தையினாலும் கர்த்தருக்குள்ளாக மனம் மாற்றப்பட்டார்கள். அவர்கள் சாரகெம்லா தேசத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டு அச்சமயமுதல் நேபியரால் காக்கப்பட்டார்கள்.

11 அவர்களுடைய வாக்குறுதியினிமித்தம் அவர்கள் தங்களுடைய சகோதரருக்கு விரோதமாக யுத்தக் கருவிகளை எடுப்பதிலிருந்து தவிர்க்கப்பட்டிருந்தார்கள்; ஏனெனில் தாங்கள் இனி ஒருபோதும் இரத்தம் சிந்தப்பண்ணுவதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்; அவர்கள் சத்தியம் செய்ததன்படி, அவர்கள் அழிக்கப்பட்டுப் போயிருப்பார்கள்; ஆம், அம்மோனும் அவன் சகோதரரும், அவர்கள் மேல் வைத்திருந்த இரக்கமும், மிகுந்த அன்பும் இல்லாமற்போயிருந்தால், அவர்கள் தங்கள் சகோதரரின் கைகளுக்குள் விழத் தங்களையே கொடுத்திருப்பார்கள்.

12 இக்காரணத்திற்காக அவர்கள் சாரகெம்லா தேசத்திற்குள் கொண்டு வரப்பட்டார்கள்; அவர்கள் நேபியர்களால் எப்போதும் காக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

13 ஆனால், அந்தப்படியே, அவர்கள் நேபியர்கள் தங்களுக்காக அனுபவித்த ஆபத்துக்களையும், அநேக உபத்திரவங்களையும், துன்பங்களையும் கண்டபோது, அவர்கள் மனதுருக்கத்தினால் நெகிழ்ந்து, தங்கள் தேசத்தை தற்காப்பதற்கென்று யுத்தக் கருவிகளை எடுக்க வாஞ்சித்தார்கள்.

14 ஆனால் இதோ, அவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தை உடைத்துப் போடவிருந்ததினால், தங்களின் யுத்தக் கருவிகளை எடுக்கவிருக்கும்போது அவர்கள் ஏலமன் மற்றும் அவனது சகோதரரின் வற்புறுத்தலினால் மேற்கொள்ளப்பட்டார்கள்.

15 அவர்கள் அப்படிச் செய்வதினால் தங்கள் ஆத்துமாக்களை இழந்து விடுவார்களோ என்று ஏலமன் பயந்தான்; ஆதலால் இந்த உடன்படிக்கையினுள் பிரவேசித்த யாவரும், தங்கள் சகோதரர் இச்சமயம் ஆபத்தான சூழ்நிலையில் தத்தளித்த அவர்களின் உபத்திரவங்களைக் காணும்படியாக கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

16 ஆனால், இதோ, அந்தப்படியே, அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாய்த் தங்களைத் தற்காத்துக் கொள்ள, தாங்கள் யுத்தக் கருவிகளை எடுக்கமாட்டோம் என்று, உடன்படிக்கையினுள் பிரவேசிக்காத, அநேக குமாரர்கள் அவர்களுக்குள் இருந்தார்கள். ஆதலால் யுத்தக் கருவிகளை எடுக்க முடிந்த அனைவரும் இச்சமயத்தில் ஏகமாய்க்கூடி தங்களை நேபியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்.

17 அவர்கள் நேபியர்களின் சுதந்திரத்திற்காகவும், ஆம், தேசத்தைக் காப்பதற்காகவும் தங்கள் ஜீவனை விடும்மட்டுமாய் போராடுவோம் என்ற, உடன்படிக்கையினுள் பிரவேசித்தார்கள்; ஆம், தங்கள் சுதந்திரத்தை எப்பொழுதும் விடாமல், எல்லா சூழ்நிலையிலும் நேபியர்களையும், தங்களையும், அடிமைத்தனத்திலிருந்து காக்கப் போராடுவோம், என்று உடன்படிக்கை பண்ணினார்கள்.

18 இப்பொழுதும் இதோ, இந்த உடன்படிக்கையினுள் பிரவேசித்து, தங்கள் தேசத்தைத் தற்காக்க யுத்தக் கருவிகளை எடுத்த அந்த வாலிபர், ஈராயிரம் பேராயிருந்தார்கள்.

19 இப்பொழுதும் இதோ, அவர்கள் இதுகாலம்வரை நேபியருக்கு இடையூறாய் இருந்ததில்லை. இச்சமயத்தில் அவர்கள் மிகவும் ஆதரவாயிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் யுத்தக் கருவிகளை எடுத்ததினால், ஏலமன் தங்களின் தலைவனாக இருக்கவேண்டுமென வாஞ்சித்தார்கள்.

20 அவர்கள் யாவரும் வாலிபராயிருந்து, தைரியத்திலும் பெலத்திலும் செயலிலும் மிகுந்த பராக்கிரமமுள்ளவர்களாயிருந்தார்கள். ஆனால் இதோ, இது மாத்திரமல்ல, எல்லா நேரத்திலும் தங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எக்காரியத்திலும் உண்மையுள்ள மனுஷர்களாயிருந்தார்கள்.

21 ஆம், அவர்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிக்கும், அவருக்கு முன்பாக தலைநிமிர்ந்து நடக்கவும் போதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் சத்தியமும் தெளிவுமுள்ள மனுஷராயிருந்தார்கள்.

22 இப்பொழுதும், அந்தப்படியே, தெற்கே மேற்கு சமுத்திரமோரமாய் அமைந்த தேசத்தின் எல்லைகளிலுள்ள ஜனங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படிக்கு, ஏலமன் தனது ஈராயிரம் இளம் போர்வீரர்களை முன்னின்று நடத்தி அணிவகுத்துப் போனான்.

23 இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி எட்டாம் வருஷமும் நிறைவுற்றது.