தன் குமாரனாகிய கொரியாந்தனுக்கு ஆல்மா கொடுத்த கட்டளைகள்.
அதிகாரங்கள் 39 முதல் 42 உள்ளிட்டவை.
அதிகாரம் 39
உடலுறவுப் பாவம் அருவருப்பானது – கொரியாந்தனுடைய பாவங்கள் சோரமியர் வார்த்தையைப் பெறுவதிலிருந்து தடுத்தது – கிறிஸ்துவின் மீட்பு, அதற்கு முன்னமே விசுவாசிகளாய் ஜீவித்திருந்தோரை இரட்சிக்க வல்லமையுடையது. ஏறக்குறைய கி.மு. 74.
1 இப்பொழுதும் என் குமாரனே, நான் உன் சகோதரனுக்குச் சொன்னதைக் காட்டிலும் உன்னிடம் சற்று அதிகமாய் சொல்ல வேண்டியுள்ளது; ஏனெனில் இதோ, உன் சகோதரன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில், விசுவாசமாயும், கருத்தாயும் இருப்பதில் உறுதியாயிருந்தை நீ கவனிக்கவில்லையா? இதோ அவன் உனக்கு நல் உதாரணமாய் இருக்கவில்லையா?
2 ஏனெனில், சோரமியருக்கு மத்தியிலே, உன் சகோதரன் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்ததைப் போல், நீ செவிகொடுக்கவில்லையே. இப்போது உனக்கு விரோதமாய் நினைக்க ஒரு காரியம் உண்டு, நீ உன் பெலத்திலும், உன் ஞானத்திலும் மேன்மை பாராட்டிக் கொண்டிருந்தாய்.
3 என் குமாரனே, இது மாத்திரமல்ல, எனக்கு சஞ்சலம் ஏற்படுத்தும்படியான காரியத்தையும் செய்தாய்; நீ ஊழியத்தை விட்டுவிட்டு, இசபெல் என்ற வேசியைத் தேடி லாமானியரின் எல்லைகளில் அமைந்துள்ள சீரோன் தேசத்தினுள் போனாய்.
4 ஆம், அவள் அநேகருடைய உள்ளங்களை தன் வசப்படுத்தினாள்; ஆனால் என் குமாரனே, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை. உன்னிடத்தில் பொறுப்பளிக்கப்பட்ட ஊழியத்தில் நீ பணியாற்றியிருக்கவேண்டும்.
5 என் குமாரனே, இக்காரியங்கள் தேவனுடைய பார்வைக்கு அருவருப்பானவை என்று நீ அறிந்திருக்கவில்லையா; ஆம், இது குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துதல், மற்றும் பரிசுத்த ஆவியை மறுதலித்தல் தவிர, பிற எல்லா பாவங்களையும் விட மிக அருவருப்பானது.
6 ஏனெனில் இதோ, உன்னிடம் ஒரு முறை பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்த பின்பு, நீ தெரிந்தே அதை மறுதலித்தால், இதோ, இது மன்னிக்கப்படமுடியாத பாவமாகும்; ஆம், தேவனுடைய ஒளிக்கும், ஞானத்திற்கும் விரோதமாய் கொலை செய்கிறவன் மன்னிப்பைப் பெறுவது சுலபமான காரியமல்ல; ஆம், என் குமாரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், அவன் சுலபமாய் மன்னிப்பைப் பெறவே முடியாது.
7 இப்பொழுது என் குமாரனே, அப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருக்கக் கூடாதென்று நான் தேவனிடம் ஜெபிப்பேன். உன் நன்மைக்கேதுவாய் இராவிட்டால், உன் ஆத்துமா வேதனைப்படும்படியாக, உன் குற்றங்களைக் குறித்தே சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்.
8 ஆனால் இதோ, நீ உன் குற்றங்களை தேவனிடத்திலிருந்து மறைக்க முடியாது; நீ மனந்திரும்பாமற் போனால், அவை கடைசி நாளில் உனக்கு விரோதமாய் சாட்சியமாய் நிற்கும்.
9 இப்பொழுதும் என் குமாரனே, நீ மனந்திரும்பி, உன் பாவங்களை விட்டுவிட்டு, உன் கண்களின் இச்சைகளின் பின்னே இனி ஒருபோதும் போகாமல், அப்பேர்ப்பட்ட எல்லா காரியங்களையும் நீ கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன்; இதைச் செய்யவில்லையெனில், நீ தேவ ராஜ்யத்தை சுதந்தரிக்கவே முடியாது. நினைவுகூர். இந்தக் காரியங்களை நீ கட்டுப்படுத்தி இதை ஏற்றுக்கொள்.
10 நீ மேற்கொள்ளும் காரியங்களைக் குறித்து உன் மூத்த சகோதரர்களிடம் ஆலோசிக்கும் எண்ணம் கொள்ளவேண்டுமென்று, உனக்குக் கட்டளையிடுகிறேன். ஏனெனில் இதோ, நீ உன் வாலிபப்பிராயத்தில் இருக்கிறாய். நீ உன் சகோதரர்களால் போஷிக்கப்பட வேண்டியவனாய் இருக்கிறாய். அவர்களுடைய ஆலோசனைக்குச் செவிகொடு.
11 வீணானதும், புத்தியீனமுமான காரியம் எதுவாகிலும், அதனால் வழிநடத்தப்பட அனுமதியாதே. அந்த துன்மார்க்க வேசிகளுக்குப் பின்னே உன் இருதயம் பிசாசினால் மறுபடியும் வழிநடத்தப்படும்படிக்கு அவனுக்கு இடங்கொடாதே. இதோ, என் குமாரனே சோரமியர் மேல் எவ்வளவு கொடிய அக்கிரமத்தை வரவழைத்தாய்; அவர்கள் உன் நடவடிக்கையைப் பார்த்து, என் வார்த்தைகளை விசுவாசியாமற் போனார்கள்.
12 உன் பிள்ளைகள், அநேக ஜனங்களினுடைய இருதயங்களை அழிவிற்குள்ளாக வழிநடத்தாதபடி அவர்கள் நன்மையைச் செய்யக் கட்டளையிடு, என்று கர்த்தருடைய ஆவி என்னிடம் சொல்கிறது. ஆகவே, என் குமாரனே நீ உன் அக்கிரமங்களை விட்டுவிட வேண்டுமென்று தேவ பயத்தோடுகூட உனக்குக் கட்டளையிடுகிறேன்;
13 உன் முழுமனதோடும், ஊக்கத்தோடும், பெலத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பவேண்டுமென்றும், இனி யாருடைய இருதயத்தையும் துன்மார்க்கம் செய்யும்படி வழிநடத்தாமல், அதற்குப் பதிலாக அவர்களிடத்தில் திரும்பிப்போய், நீ செய்த தப்பிதங்களையும், தவறுகளையும் ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும், உனக்குக் கட்டளையிடுகிறேன்.
14 இவ்வுலகத்தினுடைய ஐஸ்வரியத்தையோ, வீணானவைகளையோ தேடிப்போகாதே; ஏனெனில் இதோ அவைகளை உன்னோடுகூட நீ எடுத்துக் கொண்டு போக முடியாது.
15 இப்பொழுதும், என் குமாரனே, கிறிஸ்துவினுடைய வரவைக் குறித்து உன்னிடத்தில் சிலவற்றைச் சொல்ல வாஞ்சிக்கிறேன். இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன். மெய்யாகவே உலகத்தினுடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படி வருகிறவர் அவரே; ஆம், அவர் தம்முடைய ஜனத்திற்கு இரட்சிப்பைப் பற்றிய நற்செய்திகளை அறிவிக்க வருகிறார்.
16 இப்பொழுதும் என் குமாரனே, இந்த ஜனங்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும், அவர்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்த, அழைக்கப்பட்ட ஊழியம் இதுவே. அல்லது அவருடைய வருகையின்போது, அவர்கள் இரட்சிக்கப்படவும், வார்த்தையைக் கேட்கும்படியாக தங்கள் பிள்ளைகளின் மனங்களை ஆயத்தப்படுத்தவுமே.
17 இப்பொழுது இதைக் குறித்து உன் மனதை சற்று இலகுவாக்குவேன். இதோ, இவைகள் ஏன் அதிக முன்னமே அறியப்படுத்தப்பட வேண்டுமென்று நீ ஆச்சரியப்படுகிறாய்; இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், அவருடைய வருகையின்போது இருக்கும் ஆத்துமா போலவே இக்காலத்திலிருக்கும் ஒரு ஆத்துமாவும் தேவனுக்கு விலையேறப்பெற்றது அல்லவா?
18 இந்த ஜனங்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும், இந்த மீட்பின் திட்டம் அறிவிக்கப்படுவது அவசியமன்றோ?
19 இந்த நற்செய்தியை நமது பிள்ளைகளைப்போல, நமக்கும் அறிவிக்க, கர்த்தர் தமது தூதனை இச்சமயத்தில் அனுப்புவது சுலபமா, அல்லது அவருடைய வருகையின் பின்புள்ள சமயத்திலா?