அதிகாரம் 27
அந்தி-நேபி-லேகி ஜனத்தை பாதுகாப்புக்கு வழிநடத்தும்படி அம்மோனுக்குக் கர்த்தர் கட்டளையிடுதல் – ஆல்மாவைச் சந்தித்த சந்தோஷத்தினால் அம்மோனின் பெலன் தளர்ந்து போகுதல் – அந்தி-நேபி-லேகியருக்கு எருசோன் தேசத்தை நேபியர் கொடுத்தல் – அவர்கள் அம்மோன் ஜனங்கள் என்று அழைக்கப்படுதல். ஏறக்குறைய கி.மு. 90–77.
1 இப்பொழுது, அந்தப்படியே, நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்குப்போய் அவர்களை அழித்துப்போட அநேக போராட்டங்களை மேற்கொண்ட பின்னர், அவர்களுடைய அழிவை நாடுவது பிரயோஜனமற்றது என்று லாமானியர் கண்டபோது, அவர்கள் நேபியின் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள்.
2 அந்தப்படியே, அமலேக்கியர், தங்களுடைய இழப்பினிமித்தம் மிகவும் கோபமாயிருந்தார்கள். தாங்கள் நேபியரைப் பழிதீர்க்க முடியாதெனக் கண்டபோது, அவர்கள் ஜனங்களை அவர்களுடைய சகோதரர்களான அந்தி-நேபி-லேகி ஜனத்துக்கு விரோதமாய் கோபம் கொள்ளும்படி தூண்டிவிட்டார்கள்; ஆதலால் அவர்களை மறுபடியும் அழிக்கத் துவங்கினார்கள்.
3 இப்பொழுது, இந்த ஜனங்களோ தங்கள் ஆயுதங்களை மறுபடியும் எடுக்க மறுத்து, தங்களுடைய சத்துருக்களின் விருப்பத்தின்படியே தாங்கள் மடிந்துபோக முன்வந்தார்கள்.
4 இப்பொழுது அம்மோனும் அவன் சகோதரரும் தாங்கள் மிகவும் அன்பாய் நேசித்த பிரியமானவர்களுக்குள்ளேயும், அவர்களை மிகவும் பிரியமாய் நேசித்தவர்களுக்குள்ளேயும், அழிவின் கிரியையைக் கண்டபோது, ஏனெனில் தங்களை நித்திய அழிவிலிருந்து காத்துக்கொள்ள, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்களைப்போல அவர்கள் பாவிக்கப்பட்டார்கள், ஆகவே அம்மோனும் அவன் சகோதரரும் அந்த பயங்கர சங்கரிப்பின் கிரியைகளைக் கண்டபோது, அவர்கள் மேல் மனதுருகி, ராஜாவை நோக்கி:
5 கர்த்தருடைய ஜனமாகிய இவர்களை ஏகமாய்க் கூடிவரச்செய்து, நம்முடைய சகோதரராகிய நேபியர் இருக்கும் சாரகெம்லா தேசத்திற்குப்போய், நாம் நிர்மூலமாகாதபடிக்கு நம் சத்துருக்களின் கைகளுக்கு தப்பியோடுவோமாக, என்றார்கள்.
6 ஆனால் ராஜா அவர்களை நோக்கி: இதோ, நாம் நேபியருக்கு விரோதமாய்ச் செய்த அநேக கொலைகள், மற்றும் பாவங்களினிமித்தம் அவர்கள் நம்மை அழித்துப்போடுவார்கள், என்று சொன்னான்.
7 அதற்கு அம்மோன்: நான் போய் கர்த்தரிடத்தில் விசாரிக்கிறேன். அவர் நம்மை நம்முடைய சகோதரரிடத்திற்கு கீழிறங்கிப் போகச் சொன்னால், நீங்கள் போவீர்களோ என்று கேட்டான்.
8 ராஜா அவனை நோக்கி: ஆம், கர்த்தர் போகச் சொன்னால், நாம் நம்முடைய சகோதரரிடத்திற்கு கீழிறங்கிப் போய், அவர்களுக்கு விரோதமாய் நாம் செய்த அநேக கொலைகளையும் பாவங்களையும் சரிசெய்யுமளவும் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்போம், என்றான்.
9 ஆனால் அம்மோன் அவனை நோக்கி: அவர்களுக்குள்ளே அடிமைகள் இருக்கக்கூடாது என, என் தகப்பனால் ஏற்படுத்தப்பட்ட நம்முடைய சகோதரரின் சட்டத்திற்கு விரோதமாயிருக்கிறது; ஆதலால் நாம் கீழிறங்கிப்போய் நம்முடைய சகோதரரின் இரக்கங்களை சார்ந்திருப்போமாக, என்று சொன்னான்.
10 ஆனால் ராஜா அவனை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரி, அவர் நம்மைப் போகச் சொன்னால் போவோம், இல்லாவிடில் தேசத்திலே அழிந்து போவோம், என்றான்.
11 அந்தப்படியே, அம்மோன் போய் கர்த்தரிடத்தில் விசாரித்தான், கர்த்தர் அவனை நோக்கி:
12 இந்த ஜனம் அழிந்து போகாதபடிக்கு அவர்களை இந்த தேசத்திலிருந்து வழிநடத்திக்கொண்டுபோ; ஏனெனில் அமலேக்கியரின் இருதயங்களை சாத்தான் வசமாக்கிக் கொண்டான். அவர்கள் லாமானியரைக் கோபமடையச் செய்து, அவர்களுடைய சகோதரரைக் கொன்றுபோடும்படி ஏவி விடுகிறார்கள்; ஆதலால் இவர்களை இத்தேசத்திலிருந்து வழிநடத்திப் போ; இந்த தலைமுறையில் இந்த ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நான் அவர்களைப் பாதுகாப்பேன், என்றார்.
13 இப்பொழுது, அந்தப்படியே, அம்மோன் போய் கர்த்தர் தனக்கு அறிவித்த வார்த்தைகள் யாவையும் ராஜாவினிடத்தில் சொன்னான்.
14 அவர்கள் கர்த்தருடைய ஜனமாகிய, தங்களுடைய சகல ஜனங்களையும் ஏகமாய்க் கூட்டினார்கள். அவர்கள் தங்களுடைய ஆடுகளையும், மந்தைகளையும் கூடிவரப்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, சாரகெம்லா தேசத்தை, நேபி தேசத்திலிருந்து பிரிக்கும் வனாந்தரத்தித்தினுள் தேசத்தின் எல்லைகள் ஓரமாய் வந்தடைந்தார்கள்.
15 அந்தப்படியே, அம்மோன் அவர்களை நோக்கி: இதோ, நானும் என் சகோதரரும் சாரகெம்லா தேசத்தினுள் போவோம், நாங்கள் திரும்பும்மட்டும் நீங்கள் இங்கே தரித்திருங்கள், நம்முடைய சகோதரர் அவர்களுடைய தேசத்திற்குள், நீங்கள் வர சித்தமாயிருக்கிறார்களா என்று அவர்களின் இருதயத்தை சோதித்தறிவோம், என்றான்.
16 அந்தப்படியே, அம்மோன் தேசத்திற்குள்ளே போய்க் கொண்டிருக்கையில், அவனும் அவன் சகோதரரும் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்த இடத்தில் ஆல்மாவை சந்தித்தார்கள், இதோ, இது ஒரு சந்தோஷம் நிறைந்த சந்திப்பாய் இருந்தது.
17 அம்மோன் பூரணமாய் சந்தோஷத்தினால் நிறைக்கப்பட்டிருக்கும்படிக்கு அவன் சந்தோஷம் மிகுதியாயிருந்தது; ஆம், அவன் பெலன் தளர்ந்து போகுமட்டுமாய், அவனுடைய தேவனில் அவன் கொண்டிருந்த சந்தோஷத்தினால் விழுங்கப்பட்டுப் போனான்; அவன் மறுபடியும் பூமியில் விழுந்தான்.
18 இப்பொழுது இது மிகுந்த சந்தோஷம் இல்லையா? இதோ, உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு, மகிழ்ச்சியை தாழ்மையாகத் தேடுகிறவர்களே அல்லாமல், வேறொருவரும் இந்த சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வதில்லை.
19 இப்பொழுது ஆல்மாவுக்கு தன் சகோதரரைச் சந்தித்ததில் உண்டான சந்தோஷம் மெய்யாகவே மிகுதியாயிருந்தது. அப்படியே ஆரோனும், ஓம்னரும், ஈம்னியும் பெற்ற சந்தோஷமும் மிகுதியாயிருந்தது. ஆனால் இதோ, அவர்களுடைய பெலத்தை மிஞ்சுமளவிற்கு அவர்களுக்கு சந்தோஷம் உண்டாயிருக்கவில்லை.
20 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா தன் சகோதரரை சாரகெம்லா தேசத்திலிருக்கும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்; அவர்கள் போய் நேபியின் தேசத்தில் தங்கள் சகோதரராகிய லாமானியருக்குள்ளே தங்களுக்கு ஏற்பட்ட சகல காரியங்களையும் பிரதான நியாயாதிபதியிடம் சொன்னார்கள்.
21 அந்தப்படியே, தங்கள் சகோதரராகிய, அந்தி-நேபி-லேகி ஜனத்தாரை அனுமதிப்பதைப்பற்றி ஜனங்களுடைய விருப்பத்தை அறிய ஆவலாய் தேசம் முழுவதிலும் பிரதான நியாயாதிபதி ஒரு பிரகடனத்தை அனுப்பினான்.
22 அந்தப்படியே, ஜனங்கள் விருப்பம் தெரிவித்ததாவது: இதோ, உதாரத்துவஸ்தலத்தை இணைக்கிற, சமுத்திரத்திற்கு கிழக்கேயும், உதாரத்துவஸ்தலத்திற்கு தெற்கேயுமுள்ள எருசோன் தேசத்தை நாம் கொடுத்து விடுவோம்; நமது சகோதரர் சுதந்தரித்துக் கொள்ளும் பொருட்டு நாங்கள் கொடுக்கும் தேசம் இந்த எருசோன் தேசமே.
23 இதோ, எருசோன் தேசத்திலிருக்கும் நம்முடைய சகோதரரை காக்கும்படிக்கு, எருசோன் தேசத்திற்கும் நேபி தேசத்திற்குமிடையே, நம்முடைய சேனைகளை நிறுத்துவோம். தங்களுடைய சகோதரருக்கு விரோதமாய்ப் படைக்கலன்களை எடுத்தால் பாவம் செய்வோமே, என்று நம்முடைய சகோதரர் அஞ்சுவதினிமித்தம் அவர்களுக்காக இப்படிச் செய்கிறோம்; அவர்களுடைய பொல்லாத துன்மார்க்கத்தினாலும், அநேக கொலைகளைப் புரிந்ததினிமித்தமும், அவர்களில் உண்டான உருக்கமான மனந்திரும்புதலின் காரணமாகவே, இந்த மிகுந்த பயம் அவர்கள் மேல் வந்தது.
24 இப்பொழுதும் இதோ, நம்முடைய சகோதரர் எருசோன் தேசத்தை சுதந்தரிக்கும் பொருட்டே நாம் இதைச் செய்வோம்; நாம் நம்முடைய சேனைகளை பராமரிக்கும்படிக்கு, அவர்கள் தங்கள் பொருட்களில் ஒரு பங்கைக் கொடுக்கவேண்டுமென்ற நிபந்தனையோடு, அவர்களை அவர்களுடைய விரோதிகளிடமிருந்து நமது சேனைகளைக்கொண்டு காப்பாற்றுவோம்.
25 இப்பொழுது, அந்தப்படியே, அம்மோன் இதைக் கேட்டபோது, அவனும் ஆல்மாவும், அந்தி-நேபி-லேகி ஜனத்தார் பாளயமிறங்கின வனாந்தரத்தினுள் போய், அவர்களுக்கு இந்தக் காரியங்கள் யாவையும் அறிவித்தார்கள். அம்மோனுடனும், ஆரோனுடனும், மற்றும் தன் சகோதரரோடும், ஆல்மா தான் மனமாறியதை அவர்களுக்கு விவரித்தான்.
26 அந்தப்படியே, அது அவர்களுக்குள்ளே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினது. அவர்கள் எருசோன் தேசத்திற்குப் போய் எருசோன் தேசத்தில் குடியேறினார்கள்; அவர்கள் நேபியரால் அம்மோன் ஜனம் என்று அழைக்கப்பட்டனர்; ஆதலால் அச்சமயம் முதல் என்றென்றுமாய், அவர்கள் அப்பெயரால் வேறுபடுத்தப்பட்டனர்.
27 அவர்கள் நேபி ஜனத்திற்குள்ளும், தேவ சபையாருக்குள்ளும் எண்ணப்பட்டார்கள். அவர்கள் சகலத்திலும் பூரண உத்தமர்களாயும், சன்மார்க்கர்களாயுமிருந்து முடிவுபரியந்தமும், கிறிஸ்துவின் மீதிருந்த விசுவாசத்தில் உறுதியாயிருந்ததாலும், தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் அவர்கள் கொண்டிருந்த வைராக்கியத்தினிமித்தமும் தனித்துவம் பெற்றார்கள்.
28 அவர்கள் தங்களுடைய சகோதரரின் இரத்தத்தைச் சிந்துதலை மிகுந்த அருவருப்பானதென்று கருதினார்கள்; அவர்களுடைய சகோதரருக்கு விரோதமாய் அவர்களை ஆயுதம் தரிக்கச் செய்வது கூடாத காரியமாயிருந்தது; அவர்களுடைய நம்பிக்கையும், எண்ணங்களும் கிறிஸ்துவைப்பற்றியும், உயிர்த்தெழுதலைப்பற்றியும் இருக்கிறதாலே அவர்கள் மரணத்தை சிறிதளவும் பயங்கரமாகக் கருதவில்லை. ஆதலால் அவர்களைப் பொறுத்தமட்டிலும் மரணம், கிறிஸ்து அதன்மீது கொண்ட ஜெயத்தால் விழுங்கப்பட்டுப் போயிற்று.
29 ஆதலால், அவர்களை அடிக்க பட்டயத்தையோ அல்லது உடைவாளையோ எடுப்பதைவிட, தங்கள் சகோதரர்களால் திணிக்கப்படுகிற மிகவும் கொடூரமான, வேதனைமிக்க மரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
30 இப்படியாக, அவர்கள் ஆர்வமுள்ளவர்களாயும், நேசிக்கப்படத்தக்க ஜனமாயும், கர்த்தருக்கு மிகுந்த பிரியமான ஜனமாயுமிருந்தார்கள்.