வேதங்கள்
ஆல்மா 14


அதிகாரம் 14

ஆல்மாவும் அமுலேக்கும் சிறையிலே அடைக்கப்பட்டு, அடிக்கப்படுதல் – விசுவாசிகளும், அவர்களின் பரிசுத்த வேத புஸ்தகங்களும் அக்கினியில் எரிக்கப்படுதல் – அந்த இரத்தசாட்சிகள் கர்த்தரால் மகிமையில் ஏற்றுக்கொள்ளப்படுதல் – சிறை மதில்கள் இடிந்துவிழுதல் – ஆல்மாவும் அமுலேக்கும் தப்புவிக்கப்படுதல். அவர்களைத் துன்புறுத்தியவர்கள் கொல்லப்படுதல். ஏறக்குறைய கி,மு. 82–81.

1 அந்தப்படியே, அவன் ஜனங்களிடம் பேசுவதை முடித்த பின்பு, அநேகர் அவனுடைய வார்த்தையை விசுவாசித்து, மனந்திரும்பி வேதங்களை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

2 ஆகிலும் அவர்களில் அதிகமானோர் ஆல்மாவையும், அமுலேக்கையும் அழித்துப்போட வாஞ்சித்தார்கள்; ஆல்மா தெளிவாய் வார்த்தைகளை பிரயோகித்து சீஸ்ரமிடத்தில் பேசினதாலே, அவன்மேல் கோபம்கொண்டார்கள். அமுலேக்கும் தங்களிடத்தில் பொய்யுரைத்து தங்களுடைய சட்டங்களுக்கும், நியாயசாஸ்திரிகளுக்கும் நியாயாதிபதிகளுக்கும் விரோதமாய் தூஷித்தான், என்றார்கள்.

3 ஆல்மாவும் அமுலேக்கும் தங்களுடைய துன்மார்க்கத்தை எதிர்த்து வெளியரங்கமாய் சாட்சி கொடுத்ததினால், அவர்கள் மேல் கோபம்கொண்டு அவர்களை இரகசியமாய் கொல்ல வகை தேடினார்கள்.

4 ஆனால், அந்தப்படியே, அப்படிச் செய்யாமல் அவர்களைப் பிடித்து பலத்த கயிறுகளால் கட்டி, தேசத்தின் பிரதான நியாயாதிபதியின் முன்பு நிறுத்தினார்கள்.

5 அவர்கள் தேசத்தின் சட்டத்துக்கும், தங்கள் நியாயசாஸ்திரிகளுக்கும், நியாயாதிபதிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும் விரோதமாய் தூஷித்ததாகவும் சாட்சி சொல்லி, ஒரே தேவன் உண்டென்றும், அவர் தம் குமாரனை அனுப்புவார் என்றும், ஆனால் அவர் தங்களை இரட்சியார் என்றும் சொன்னதாக, அவர்களுக்கு விரோதமாய் சாட்சி கொடுத்தார்கள், ஜனங்கள் இன்னும் அநேக காரியங்களை ஆல்மாவிற்கும் அமுலேக்கிற்கும் விரோதமாய் சாட்சி கொடுத்தார்கள். இவை தேசத்தின் பிரதான நியாயாதிபதியின் முன்பு நடந்தது.

6 அந்தப்படியே, பேசப்பட்ட வார்த்தைகளைக் குறித்து சீஸ்ரம் திகைத்துப்போய், தன்னுடைய பொய்யான வார்த்தைகளினால் தான் ஜனங்களுடைய மனங்களை குருடாக்கிப்போட்டதை அவன் அறிந்திருந்தான்; அதனால் தன்னுடைய குற்றத்தினிமித்தம், அவன் மனச்சாட்சி அவன் ஆத்துமாவை குத்திற்று; ஆம், பாதாளத்தின் வேதனைகளினால் முற்றிலும் சூழப்பட்டான்.

7 அந்தப்படியே, அவன் ஜனங்களை நோக்கி: இதோ நான் குற்றவாளி, இவர்களோ தேவனுக்கு முன்பாக கறையற்றவர்கள் என்று கூக்குரலிட்டான் அதுமுதற்கொண்டு அவன் அவர்களுக்காய் பரிந்து பேசினான். ஆனால் அவர்கள் அவனை தூஷித்து, நீயும் பிசாசினாலே பிடிக்கப்பட்டிருக்கிறாயா என்று சொல்லி, அவன் மேல் உமிழ்ந்து, அவனையும், ஆல்மா மற்றும் அமுலேக்கின் வார்த்தைகளை விசுவாசித்தவர்களையும், தங்களுக்குள்ளிருந்து துரத்தினார்கள்; இப்படியாய் அவர்களை புறம்பே துரத்தி, அவர்கள் மீது கற்களை வீசும்படி ஆட்களை அனுப்பினார்கள்.

8 அவர்கள் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் ஏகமாய்க் கூட்டிவந்து, அவர்களில் தேவ வசனத்தை விசுவாசிக்க போதிக்கப்பட்டவர்களையும், விசுவாசித்தவர்களையும் அக்கினியிலே போடும்படிச் செய்தார்கள்; பரிசுத்த வேதங்கள் அடங்கிய பதிவேடுகள் அக்கினியிலே எரிந்து அழியும்பொருட்டு அவைகளையும் கொண்டுவந்து அக்கினியிலே போட்டார்கள்.

9 அந்தப்படியே, அவர்கள் ஆல்மாவையும் அமுலேக்கையும் பிடித்து, அக்கினியால் பட்சிக்கப்பட்டு, அழிந்து போகிறவர்களை அவர்கள் காணும்படிக்கே கொலைக்களத்துக்கு, கொண்டுபோனார்கள்.

10 அக்கினியிலே பட்சிக்கப்படுகிற ஸ்திரீகளும், பிள்ளைகளும் படுகிற வேதனைகளை அமுலேக் கண்டபோது, அவனும் வேதனைக்குள்ளாகி, ஆல்மாவை நோக்கி, இப்படிப்பட்ட கொடிய நிகழ்ச்சியை நாம் எப்படிப் பார்க்க முடியும்? ஆகவே நாம் நம்முடைய கரங்களை நீட்டி நமக்குள்ளிருக்கிற தேவ வல்லமையைப் பிரயோகித்து, அவர்களை அக்கினியிலிருந்து தப்புவிப்போமாக, என்றான்.

11 அதற்கு ஆல்மா அவனை நோக்கி: நான் என் கையை நீட்டவேண்டாமென்று, ஆவியானவர் என்னை நெருக்குகிறார்; ஏனெனில் இதோ கர்த்தர் அவர்களை தம்முடைய மகிமையில் ஏற்றுக்கொள்கிறார்; ஜனங்கள் மீது தமது உக்கிரத்தோடு அனுப்பும் நியாயத்தீர்ப்புகள் நியாயமுள்ளதாயிருக்கும்படிக்கும், குற்றமில்லாதவர்களுடைய இரத்தம், அவர்களுக்கு விரோதமாய் சாட்சியாயிருந்து, ஆம், கடைசிநாளின்போது அவர்களுக்கு விரோதமாக உரக்க சத்தமாய் கூக்குரலிடும்படிக்கும், அவர்கள் பாடனுபவிக்கும்படிக்கு, அல்லது இப்படிப்பட்ட பாடுகளை அவர்களுக்கு இவர்கள் தங்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் செய்யும்பொருட்டு, அவர் அனுமதிக்கிறார்.

12 இப்பொழுது அமுலேக் ஆல்மாவை நோக்கி: இதோ அவர்கள் நம்மையும் எரித்துப் போடக்கூடுமே, என்றான்.

13 அதற்கு ஆல்மா: கர்த்தருடைய சித்தத்தின்படியே நடக்கட்டும். ஆனால், இதோ, நம்முடைய வேலை முடிவு பெறவில்லை; எனவே நம்மை அவர்கள் எரித்துப் போடமாட்டார்கள், என்றான்.

14 இப்பொழுது, அந்தப்படியே, அக்கினிக்குள்ளே போடப்பட்டவர்களின் சரீரங்களும், அவர்களுடனே போடப்பட்ட பதிவேடுகளும் பட்சிக்கப்பட்ட பின்பு, கட்டப்பட்டிருந்த நிலையிலிருந்த ஆல்மா மற்றும் அமுலேக்கின் முன்பு, அத்தேசத்தின் பிரதான நியாயாதிபதி வந்து நின்று, அவர்களுடைய கன்னங்களில் தன் கையால் அறைந்து, அவர்களை நோக்கி: இவைகளை நீங்கள் பார்த்த பிறகும் இந்த ஜனங்கள் அக்கினியும், கந்தகமுமான கடலிலே தள்ளுண்டு போகும்படிக்கு, அவர்களுக்கு மறுபடியும் நீங்கள் போதிப்பீர்களா என்றான்.

15 இதோ, அக்கினியினுள்ளே போடப்பட்டவர்கள் உங்களுடைய விசுவாசத்தைச் சார்ந்தவராய் இருப்பினும், அவர்களைத் தப்புவிக்க உங்களுக்கு வல்லமையில்லாமல் போயிற்றென்றும், தேவனும் அவர்களை இரட்சிக்கவில்லை, என்றும் கண்டீர்கள். நியாயாதிபதி அவர்களுடைய கன்னங்களில் மறுபடியும் அடித்து, உங்களுக்குள்ளே என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்டான்.

16 இப்போது இந்த நியாயாதிபதி, கிதியோனைக் கொன்ற நிகோருடைய விசுவாசத்தையும் முறைமையையும் பின்பற்றுகிறவனாயிருந்தான்.

17 அந்தப்படியே, ஆல்மாவும் அமுலேக்கும், அவனுக்கு பிரதியுத்தரம் ஒன்றும் சொல்லாமலிருந்தார்கள்; பின்னும் அவன் அவர்களை அடித்து, சிறையினுள் போடும்படி அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தான்.

18 அவர்கள் மூன்று நாட்கள் சிறையில் அடைக்கப்படிருந்தபோது, நிகோரின் மார்க்கத்தாராகிய அநேக நியாயசாஸ்திரிகளும், நியாயாதிபதிகளும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் அங்கே வந்தார்கள்; அவர்கள் சிறையில் அவர்களைப் பார்க்க வந்து, அநேக வார்த்தைகளைக் குறித்து அவர்களை வினவினார்கள்; அவர்களோ எந்த பதிலும் அளிக்காமலிருந்தார்கள்.

19 அந்தப்படியே, நியாயாதிபதி அவர்கள் முன் நின்று, இந்த ஜனங்களின் வார்த்தைகளுக்கு நீங்கள் ஏன் பிரதியுத்தரமளிப்பதில்லை? உங்களை அக்கினியில் போட எனக்கு அதிகாரமுண்டென்று அறியீர்களா என்றான். அவர்களைப் பேசும்படி அவன் கட்டளையிட்டான்; அவர்களோ பதில் எதுவும் சொல்லவில்லை.

20 அந்தப்படியே, அவர்கள் அவ்விடத்தைவிட்டு தங்கள் வழிகளிலே போனார்கள். பின்னும் மறுதினம் வந்தார்கள்; நியாயாதிபதி அவர்களுடைய கன்னங்களில் மறுபடியும் அடித்தான். அநேகரும் அங்கே வந்து, அவர்களை அடித்து, மறுபடியும் நீங்கள் எழுந்து இந்த ஜனத்தை நியாயந்தீர்த்து எங்கள் சட்டத்தை குற்றப்படுத்துவீர்களோ? உங்களுக்கு அப்படிப்பட்ட அதிக வல்லமை இருக்குமாயின், ஏன் உங்களையே நீங்கள் விடுவித்துக் கொள்ளக் கூடாது? என்றார்கள்.

21 அவர்களிடத்தில் இவ்விதமாய் அநேகவற்றைச் சொல்லி, அவர்களைப் பார்த்து பற்கடித்து, அவர்கள்மீது உமிழ்ந்து, நாங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும்போது எப்படிக் காணப்படுவோம் என்றார்கள்.

22 இப்படியாக அநேக காரியங்களை அவ்விதமாய் அவர்களிடத்தில் பேசினார்கள்; இப்படியாய் அவர்களை பல நாட்கள் பரியாசம் பண்ணினார்கள். பசித்திருக்கும்படி ஆகாரத்தையும், விடாய்த்திருக்கும்படி தண்ணீரையும் அவர்களுக்கு கொடாதிருந்தார்கள்; அவர்கள் நிர்வாணமாய் இருக்கும்படிக்கு, வஸ்திரங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள்; இப்படிப்பட்ட நிலையில் கடினமான கயிறுகளால் கட்டப்பட்டவர்களாய் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

23 அந்தப்படியே, இப்படியாய் அவர்கள் அநேக நாட்கள் பாடுகளை அனுபவித்த பின்பு, (நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையினுடைய பத்தாம் வருஷத்தில், பத்தாம் மாதத்தின், பன்னிரண்டாவது நாளிலே) அம்மோனிகா தேசத்து பிரதான நியாயாதிபதியும், அவர்களுடைய ஆசிரியர்களிலும் நியாயசாஸ்திரிகளிலும் அநேகர், ஆல்மாவும் அமுலேக்கும் கயிறுகளாலே கட்டிவைக்கப்பட்டிருந்த சிறையினுள் போனார்கள்.

24 பிரதான நியாயாதிபதி அவர்கள் முன்னே நின்று, அவர்களை மறுபடியும் அடித்து, அவர்களை நோக்கி: தேவ வல்லமை உங்களில் இருக்குமேயானால், இந்தக் கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்களுடைய வார்த்தைக்குத் தக்கதாக, கர்த்தர் இந்த ஜனங்களை அழித்துப்போடுவார், என்று நாங்கள் விசுவாசிப்போம், என்றார்கள்.

25 அந்தப்படியே, அவர்களில் கடைசி மனுஷன் வரை, அவர்களிடம் போய், அநேக வார்த்தைகளைச் சொல்லி, அடித்தார்கள்: கடைசி மனுஷனும் அவர்களிடத்தில் பேசி முடித்த பின்பு, தேவ வல்லமை ஆல்மா மற்றும் அமுலேக்கின் மேல் இறங்கிற்று, உடனே அவர்கள் எழுந்து தங்கள் கால்களை ஊன்றி நின்றார்கள்.

26 ஆல்மா உரத்த சத்தமாய்: கர்த்தாவே இன்னும் எவ்வளவு காலம் இப்பாடுகளை சகித்திருப்போம்? கர்த்தாவே நாங்கள் விடுவிக்கப்படும்படியாக, கிறிஸ்துவின் மேலிருக்கும் எங்களின் விசுவாசத்திற்கேற்ற பெலத்தை எங்களுக்குத் தாரும், என்றான். அவர்கள் தாங்கள் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அறுத்துப்போட்டார்கள்; ஜனங்கள் இதைக் கண்டதும் அழிவின் திகில் அவர்கள் மேல் வந்ததால், ஓடினார்கள்.

27 அந்தப்படியே, திகில் அவர்களை ஆட்கொண்டிருந்தபடியால், அவர்கள் பூமியில் விழுந்தார்கள். அதனாலே அவர்கள் சிறையினுடைய வெளி வாசலுக்குப் போகமுடியவில்லை; பூமி பயங்கரமாய் நடுங்கினது. சிறைச்சாலையின் மதில்கள் இரண்டாய்ப் பிளந்து பூமியில் விழுந்தன; அவைகள் விழுந்ததினால் ஆல்மாவையும், அமுலேக்கையும் அடித்த பிரதான நியாயாதிபதிகளும், நியாயசாஸ்திரிகளும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் அவை விழுந்ததால் கொல்லப்பட்டார்கள்.

28 ஆல்மாவும், அமுலேக்கும், சிறையிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் சேதப்படாதிருந்தார்கள், கிறிஸ்துவிலே அவர்கள் வைத்த விசுவாசத்திற்குத்தக்கதாக, வல்லமை அவர்கள் மேலிருக்கும்படி கர்த்தர் அருளினார். அவர்கள் உடனே சிறையிலிருந்து வெளியேறினார்கள். அவர்கள் கட்டுக்களிலிருந்து அவிழ்க்கப்பட்டார்கள்; சிறைச்சாலை தரைமட்டமானபடியால், ஆல்மாவையும் அமுலேக்கையும் தவிர அதன் சுவரினுள்ளே இருந்த சகல ஆத்துமாக்களும் அழிந்துபோயின. உடனே அவர்கள் பட்டணத்திற்குப் போனார்கள்.

29 பெரும் சத்தத்தைக் கேட்ட ஜனங்கள் அது ஏற்பட்ட காரணத்தை அறிய திரள்கூட்டமாய் விரைந்தோடி வந்தார்கள்; சிறைச்சாலையிலிருந்து ஆல்மாவும் அமுலேக்கும் வெளிவருவதையும், அதன் மதில்கள் தரைமட்டமானதையும் கண்டு திகிலடைந்து, இரண்டு சிங்கங்களிடத்திலிருந்து, தன் குட்டிகளுடனே ஓடும் ஆட்டைப்போல அவர்கள் ஆல்மா மற்றும் அமுலேக்கின் சமுகத்தினின்று ஓடினார்கள். இவ்விதமாய் அவர்கள் ஆல்மா மற்றும் அமுலேக்கின் சமுகத்தினின்று ஓடிப்போனார்கள்.