வேதங்கள்
ஆல்மா 55


அதிகாரம் 55

கைதிகளை பரிமாற்றம் செய்ய மரோனி மறுத்தல் – லாமானிய காவற்காரர் குடித்து வெறிக்கும்படி நயம் பண்ணப்பட்டு, நேபிய கைதிகள் விடுவிக்கப்படுதல் – கித் பட்டணம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் கைப்பற்றப்படுதல். ஏறக்குறைய கி.மு. 63–62.

1 இப்பொழுது, அந்தப்படியே, மரோனி இந்த நிருபத்தைப் பெற்றபோது, அவன் அதிகக் கோபமடைந்தான். ஏனெனில் அம்மோரோன் தன்னுடைய கபடத்தைப்பற்றி முழுமையாய் அறிந்திருந்தான், என்று அவன் அறிவான்; ஆம், நேபியின் ஜனத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ணும்படி, தன்னை ஏவின காரணம் நியாயமானதல்ல என்று, அம்மோரோன் அறிந்திருந்தான், என்று அவன் அறிவான்.

2 அவன்: இதோ, நான் என் நிருபத்தில் குறிப்பிட்டதைப்போல, அம்மோரோன் தன் திட்டத்தைக் கைவிடவில்லையெனில், நான் அவனோடு கைதிகளைப் பரிமாற்றம் செய்வதில்லை; ஏனெனில் நான் அவன் பெற்றிருக்கிற வலிமையிலும் அதிகமாய் பெறும்படி அவனை அனுமதிப்பதில்லை, என்றான்.

3 இதோ, லாமானியரால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுப்போன என் ஜனம், அவர்களால் காவல் வைக்கப்பட்டிருக்கிற இடத்தை நான் அறிவேன்; அம்மோரோன் என் நிருபத்திற்கு சம்மதிக்கவில்லையென்பதினால், இதோ, என் வார்த்தைகளின்படியே நான் அவனுக்குச் செய்வேன்; ஆம், அவர்கள் சமாதானம் வேண்டி கெஞ்சும் வரைக்குமாய் அவர்களுக்குள்ளே மரணத்தை நாடுவேன்.

4 இப்பொழுதும், அந்தப்படியே, மரோனி இவ்வார்த்தைகளைச் சொன்ன பின்பு, அவன் தன் ஜனங்களுக்குள்ளே, லாமான் சந்ததியில் ஒரு மனுஷனைக் கண்டுபிடிக்கும்படிக்கு அவர்களுக்குள்ளே தேடச் செய்தான்.

5 அந்தப்படியே, அவர்கள் லாமான் என்ற பெயருடைய ஒருவனைக் கண்டார்கள்; அவன் அமலேக்கியாவால் கொலை செய்யப்பட்ட ராஜாவின் வேலையாட்களில் ஒருவன்.

6 இப்பொழுது மரோனி, நேபியர்களைக் காவல் காத்து வந்த காவற்காரரிடம், லாமானும் அவனுடைய மனுஷரில் சிலரும் போகும்படிச் செய்தான்.

7 இப்பொழுது கித் பட்டணத்தில் நேபியர் காக்கப்பட்டு வந்தனர்; ஆதலால் மரோனி லாமானை நியமித்து, அவனோடு சில மனுஷரும் போகும்படிக் கட்டளையிட்டான்.

8 சாயங்காலமானபோது நேபியரைக் காவல் காத்திருந்த காவற்காரரிடம் லாமான் போனான். இதோ, அவர்கள் அவன் வருவதைக் கண்டு அவனை வாழ்த்தினார்கள்; ஆனால் அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, நான் ஒரு லாமானியன். இதோ, நாங்கள் நேபியரிடமிருந்து தப்பி வந்துள்ளோம். அவர்களோ உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்; இதோ, நாங்கள் அவர்களுடைய திராட்சை ரசத்தை, எங்களோடே கொண்டு வந்திருக்கிறோம், என்றான்.

9 இப்பொழுது லாமானியர் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்கள் அவனை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டார்கள்; அவர்கள் அவனை நோக்கி: நாங்கள் பருகும்படி உங்கள் திராட்சை ரசத்தை எங்களுக்குக் கொடுங்கள்; நாங்கள் களைத்துப் போயிருப்பதால், நீங்கள் திராட்சை ரசத்தை இப்படியாக எடுத்து வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது, என்றார்கள்.

10 லாமான் அவர்களை நோக்கி: நாம் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு போகும்வரைக்கும் நம்முடைய திராட்சை ரசத்தை வைத்திருப்போம், என்றான். ஆனால் இவ்வார்த்தை மட்டுமே திராட்சை ரசத்தைக் குடிக்க வேண்டுமென்ற அவர்களின் ஆசையை அதிகமாய் தூண்டிற்று.

11 ஏனெனில் அவர்களோ: நாங்கள் களைப்பாயிருக்கிறோம், ஆதலால் நாம் திராட்சை ரசத்தைப் பருகுவோம், நம்முடைய பங்குக்குத் தக்கதாக திராட்சை ரசத்தை நாம் அவ்வப்போது பெறுவோம், நேபியர்களுக்கு விரோதமாய்ப்போக, அது நம்மை பெலப்படுத்தும், என்றார்கள்.

12 லாமான் அவர்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய விருப்பங்களின்படியே செய்யலாம், என்றான்.

13 அந்தப்படியே, அவர்கள் திராட்சை ரசத்தை தாராளமாய்ப் பருகினார்கள். அது அவர்களின் சுவைக்கு இதமாயிருந்தபடியால் இன்னும் தாராளமாய் அதை அவர்கள் பருகினார்கள். அது அதனுடைய வீரியத்தின்படி தயாரிக்கப்பட்டிருந்ததால், அது வீரியமாயிருந்தது.

14 அந்தப்படியே, அவர்கள் குடித்துக் களித்தார்கள். விரைவிலே அவர்கள் யாவரும் வெறித்திருந்தார்கள்.

15 இப்பொழுது அவர்கள் யாவரும் வெறித்து, அயர்ந்த நித்திரையிலிருப்பதை லாமானும் அவனது மனுஷரும் கண்டபோது, மரோனியிடத்திற்குத் திரும்பி நடந்த எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னார்கள்.

16 இப்பொழுது இது மரோனியின் திட்டத்தின்படியே நடந்தேறியது. மரோனி தன் மனுஷருக்கு யுத்தக் கருவிகளைக் கொடுத்து, அவர்களை ஆயத்தப்படுத்தியிருந்தான்; லாமானியர் நித்திரையில் அயர்ந்து வெறித்திருக்கையில், அவன் கித் பட்டணத்திற்குப்போய், கைதிகள் யாவரும் எவ்வளவாய் போர்க்கவசம் தரிக்க முடியமோ, அவ்வளவாய் யுத்தக் கருவிகளைக் கொடுத்தான்.

17 ஆம், மரோனி அந்தக் கைதிகள் யாவரையும் போர்க்கவசம் தரிக்கச் செய்தபோது, அவன் அவர்களின் ஸ்திரீகளுக்கும், யுத்தக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய எல்லா பிள்ளைகளுக்கும், யுத்தக் கருவிகளைக் கொடுத்தான்; இவை யாவும் ஆழ்ந்த நிசப்தத்திலே நடப்பிக்கப்பட்டன.

18 அவர்கள் லாமானியரை விழிக்கச் செய்திருந்தார்களானால், இதோ, அவர்கள் வெறித்திருந்தபடியால், நேபியர் அவர்களைக் கொன்று போட்டிருக்கக்கூடும்.

19 ஆனால் இதோ, இது மரோனியின் விருப்பம் அல்ல; அவன் கொலை செய்வதிலோ அல்லது இரத்தம் சிந்துவதிலோ களிகூரவில்லை, ஆனால் அவன் அழிவிலிருந்து தன் ஜனத்தைக் காப்பதில் களிகூர்ந்தான்; தான் அநீதியைத் தன் மீது வரவழைத்துக் கொள்ளக்கூடாதென்பதினால், அவன் லாமானியர் மேல் விழுந்து, அவர்களை அவர்களுடைய குடிமயக்கத்திலே அழிக்கவில்லை.

20 ஆனால் அவன் தன் விருப்பங்களை நிறைவேற்றினான்; ஏனெனில் பட்டணத்தின் மதிலினுள்ளே இருந்த நேபியர்களின் கைதிகளை அவன் ஆயுதந்தரிக்கச் செய்து, அவர்கள் மதில்களினுள்ளே இருந்த அப்பகுதிகளைக் கைப்பற்றும்படி அவர்களுக்கு பெலன் கொடுத்தான்.

21 பின்பு அவன் தன்னோடு இருந்த மனுஷரை அவர்களிடமிருந்து சற்று பின்னே நிற்கச் செய்து, லாமானியர்களின் சேனைகளைச் சூழச் செய்தான்.

22 இப்பொழுது இதோ, இது இராக்காலத்தில் செய்யப்பட்டதால், லாமானியர் காலையில் எழுந்தபோது, வெளியே நேபியர்களால் தாங்கள் சூழப்பட்டிருப்பதையும், உள்ளே தங்கள் கைதிகள் ஆயுதந்தரித்திருப்பதையும் கண்டார்கள்.

23 இப்படியாக அவர்கள் நேபியர், தங்கள் மேல் வல்லமை கொண்டிருப்பதைக் கண்டார்கள்; இந்த சூழ்நிலைகளில் நேபியர்களோடு யுத்தம்பண்ணுவது கூடாத காரியம் என்று கண்டார்கள்; ஆதலால் அவர்களின் பிரதான சேர்வைக்காரர்கள் அவர்களுடைய யுத்தக் கருவிகளைக்கேட்டு வாங்கி, இரக்கத்திற்காகக் கெஞ்சி, அவைகளைக் கொண்டு வந்து நேபியரின் காலடியில் போட்டார்கள்.

24 இப்பொழுதும் இதோ, இதுவே மரோனியின் வாஞ்சையாயிருந்தது. அவன் அவர்களை யுத்தக் கைதிகளாகப் பிடித்து, பட்டணத்தைத் தங்கள் வசப்படுத்தினான். நேபியர்களான எல்லாக் கைதிகளும் விடுவிக்கப்படும்படிச் செய்தான்; அவர்கள் மரோனியின் சேனையைச் சேர்ந்துகொண்டு, அவன் சேனைக்கு மிகுந்த பெலனாய் இருந்தார்கள்.

25 அந்தப்படியே, அவன் தான் கைதிகளாகப் பிடித்த, லாமானியரை கித் பட்டணத்தைச் சுற்றிலும், அரண்களைப் பெலப்படுத்தும் பணியைத் துவங்கும்படிக் கட்டளையிட்டான்.

26 அந்தப்படியே, அவன் கித் பட்டணத்தை தனது விருப்பத்தின்படியே அரணித்த பின்பு, அவன் தன் கைதிகள் உதாரத்துவஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்படும்படியாகக் கட்டளையிட்டான்; அவன் அந்தப் பட்டணத்தையும் மிகவும் பெலமுள்ள படையினால் காத்துவந்தான்.

27 அந்தப்படியே, அவர்கள் லாமானியரின் சகல வஞ்சகத் திட்டங்களையும் பொருட்படுத்தாமல், தாங்கள் பிடித்துச் சென்றிருந்த கைதிகள் யாவரையும் பாதுகாத்து, தாங்கள் மறுபடியும் பெற்ற எல்லா நிலங்களையும், அனுகூலத்தையும் காத்து வந்தார்கள்.

28 அந்தப்படியே, நேபியர் மறுபடியும் ஜெயமுள்ளவர்களாகி, தங்கள் உரிமைகளையும், தங்கள் சிலாக்கியங்களையும் மறுபடியும் பெறத் துவங்கினார்கள்.

29 அநேக தடவைகளில் அவர்களை இரவில் சூழ்ந்துகொள்ளும்படி லாமானியர் முயற்சித்தார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் அவர்கள் அநேக கைதிகளை இழந்தார்கள்.

30 விஷத்தினாலோ அல்லது குடிவெறியினாலோ நேபியரை அழித்துப் போடும்படியாக, அநேக தடவைகளில் தங்களின் திராட்சை ரசத்தை அவர்களுக்குக் கொடுக்க முயற்சித்தார்கள்.

31 ஆனால் இதோ, நேபியர் தங்களின் இந்த உபத்திரவ காலத்திலே, தங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவுகூருவதில் தாமதமாயிருக்கவில்லை. அவர்களின் கண்ணியினால் அவர்கள் பிடிக்கப்பட முடியவில்லை; ஆம், முதலில் அவர்களின் திராட்சை ரசத்தை லாமானிய கைதிகளில் சிலருக்கு கொடுக்காமல், பருகுவதில்லை.

32 இப்படியாக அவர்கள் தங்களுக்கு விஷமொன்றும் கொடுக்கப்படாதபடி ஜாக்கிரதையாய் இருந்தார்கள்; ஏனெனில் அவர்களது திராட்சை ரசம் ஒரு லாமானியனுக்கு விஷம் கொடுக்குமானால் அது ஒரு நேபியனுக்கும் விஷம் கொடுக்கும். இப்படியாக அவர்கள் அவர்களது எல்லா மதுபானத்தையும் பரிசோதித்தார்கள்.

33 இப்பொழுதும், அந்தப்படியே, மோரியாந்தன் பட்டணத்தைத் தாக்க, மரோனி ஆயத்தங்கள் செய்வது அவசியமாயிற்று; ஏனெனில், இதோ, மோரியாந்தன் பட்டணம் மிகவும் பெலனுள்ளதாகும்படிக்கு, லாமானியர் தங்கள் பிரயாசங்களினால் அரண்களை எழுப்பியிருந்தார்கள்.

34 அவர்கள் அப்பட்டணத்தினுள் தொடர்ந்து புதிய படைகளையும், புதிய உணவுப் பொருட்களையும் கொண்டு வந்தார்கள்.

35 இப்படியாக நேபியின் ஜனத்தின்மேல், நியாயாதிபதிகளின் இருபத்தொன்பதாம் வருஷ ஆளுகை முடிவுற்றது.

அச்சிடவும்